பக்கங்கள்

சனி, 20 ஜூலை, 2013

வாலி எனும் இறவா புகழ் கொண்ட ஏந்தல்





    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் 

என்ற தேவகானம் கேட்காதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் அரிது.

ஒரு அஞ்சல் அட்டையில் மேற்கண்ட படலை எழுதி டிஎம்எஸ்க்கு அனுப்பி விட்டு காத்திருந்தாராம் கவிஞர்.

அப்பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டு விட்டு அதற்கான

சன்மானம் பதினைத்து ரூபாயுடன் சேர்த்து சென்னைக்கு வர

சொல்லி கடிதம் எழுதினாராம் பாடகர்.


        அன்று திருவரங்கத்தை விட்டு கிளம்பி திரையுலகத்திற்கு வந்தவர்

இன்று தரையுலகம் தவிர்த்து இறையுலகம் சென்றுவிட்டார். அவர்தான்

என்றும் அழியா புகழை கொண்ட கவிஞர் வாலி அவர்கள். 


" வெள்ளுடை தரித்து வெளிர் மயிர் தாடியோன் சொல்லுடைத்து எழுத
துவங்கினால்; கல்லுடையும் அதிலிருந்து கனிச்சாறு கொட்டும்,
எள்ளுடையும் அதிலிருந்து எண்ணெய்க்கு பதில் எண்ணங்கள் கொட்டும்,
கொட்டியதை கோர்த்தெடுத்தால்! கள்ளுடைய பானை போன்ற மயக்கம் தரும்.!"

ஒன்றுமே அறியாத எனக்கே இத்தனை எதுகை மோனையுடன்

எழுத்து வருகிறதென்றால் அதற்கு காரணம் கவிஞர் வாலி அவர்களின்

எழுத்துக்கள்தான். கவிஞர் வாலி போல தமிழின்

எதுகை மோனைகளை அதிகம் பயன் படுத்தியவர்கள் இருக்க முடியாது.

உடலுக்கு வயதாகும் உள்ளத்திற்கு வயதாகாது என்று நிரூபித்தவர் அவர். 

இளமையில் கற்பனை என்றாலும் என்று முருகனை புகழவும் தெரியும்,

முதுமையில்

கலாசலா கலசலா என்று மல்லிகா செராவத்தை வர்ணிக்கவும்  தெரியும்

அவருக்கு.

     பெரிய பெரிய காண்டங்களாக சாமானியர் படிக்க முடியாத

ராமாயணத்தையும் பாகவதத்தையும் மகாபாரதத்தயும் சாத்திரம் 

அறிந்த சாதகர் முதல் பாத்திரம் திருடும் பாதகர் வரை தன்

பேனா முனையால் கட்டி இழுத்து படிக்க வைத்த பெருமையும் கவிஞர்

வாலி அவர்களையே சாரும்,

ஆனந்த விகடனில் எளிய தமிழில் கிருஷ்ண விஜயம் எழுதினர் அதனால்

ஆத்திகர் இல்லம் முதல் நாத்திகர் இல்லம் வரை கிருஷ்ணனே விஜயம்

செய்தார்.ரகுராமன் கதையை அவதார புருஷனாக்கினார்,

பாரதத்தை பாண்டவர் பூமியாக்கினார்.  வாலியின்

எதுகை மோனைகளை கையாளும் விதத்தையும் அவ்ருக்கிருந்த

சொற்புலமையும் மேற்கண்ட நூல்களில் இருந்து அறிந்து கொள்ள

முடியும், உதாரணமாக சுருங்க சொல்லி விளங்க வைப்பதில்

அவருக்கு இணை அவர் மட்டுமே..... பாண்டவர் பூமியில்

பாஞ்சாலி துகிலுரியப்படும் சமயம் கண்ணனை அழைக்கும் காட்சியில்

திருமாலின் அவதாரங்களை அழகாக வரிசை படுத்தி இருப்பார். அந்த

பத்தியை உங்களுக்காக போடுகிறேன் படியுங்கள் பின் களியுங்கள்.
  
  கண்ணா! கண்ணா! கமலபூங்கண்ணா!

  வண்ணா! வண்ணா! வானமழை வண்ணா!

  உண்ணா உலர்ந்திட உன்பேர் அழைத்தேன் (உண்ணா – உள் நாக்கு )

  அண்ணா! அண்ணா! அபயம்! அபயம்!.

 

  தூணை பிளந்து ஒரு தூய நரசிங்கமாகி (நரசிம்ம அவதாரம்)

  ஆணை பிளந்தவனே! அபயம்! அபயம்!. (இரண்யகசிபு மார்பை பிளத்தல்)



  நெடியான் என நின்று நீனிலத்தை ஒருமூன்று (வாமன அவதாரம்)

  அடியால் அளந்தவனே! அபயம்! அபயம்!. (உலகை மூன்றடிய்ல் அளந்தது)



  தூமையாய் கிடந்த கடல் தயிராய் கடைவதற்கு (கூர்ம அவதாரம்)

  ஆமையாய் கிடந்தவனே! அபயம்! அபயம்!. 



  ஊனம் குடிபுகுந்த உள்ளத்தால் சொல்கேட்டு (கைகேயி)

  மீனம் குடிபுகுந்த மைவிழியால் கைபற்றி (சீதை)

  கானம் குடிபுகுந்த காகுந்தா! (வனவாசம்)

  கற்புடையாள் மானம் குடிபுகுந்த மேனியினை காவாயோ!
 

இது ஒரு உதாரணம் தான் படிக்க படிக்க தமிழின் மீது காதலை உருவாக்கும் எழுத்துக்கள் கவிஞர் வாலியினுடயது.

கற்பகம் திரைப்படத்தில்

“கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போவதில்லை“
“மண்ணை விட்டு போனாலும் மனதை விட்டு போவதில்லை

என்று அவர் எழுதிய வரிகள் அவருக்கே பொருந்தி விட்டது. இன்று இந்த
மண்ணுலகை விட்டு அவர் விடை பெற்றாலும் அவர் கொடுத்த படைப்புகள் தமிழுள்ள வரை நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இறுதியாக!
அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம்  
பெருமை!
  இவர் வீழ்ந்த காரணத்தால் தமிழுக்கே ஏற்பட்டது தீராத
  வறுமை!

அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி அவரது படைப்புகளை படிப்பதும் பாதுகாப்பதும்தான் 


என்றும் நட்புடன் 

ராஜ்குட்டி காதலன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..