பக்கங்கள்

திங்கள், 9 மே, 2016

ஆலம்பரை கோட்டை நிறைவுப்பகுதி


முன்குறிப்பு: இந்த பகுதியில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் கற்பனையே. அதோடு தமிழகத்தின் வீரவரலாற்றில் நடந்த உண்மை சம்பவமொன்றை கதையின் போக்கில் புனைந்து எழுதியுள்ளேன். வாசகர்கள் விவேகத்துடன் செயல்படுவீர்களாக.



   ஆலம்பரை கோட்டையை சூழ்ந்திருக்கும் ஆங்கிலேயப்படையினர் அனுப்பிய கடிதத்தை தாங்கிவந்த அம்பானது சீறிவந்து மண்தரையில் குத்தி ஆடிக்கொண்டு நின்றது. ஏற்கனவே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற டிசோசாவுக்கும் அவனை சுற்றிநின்ற கோட்டையின் முக்கிய காரியாலோசகர்களுக்கும் அம்பின்வரவு மிகுந்த எதிர்பார்ப்பையும் பீதியையும் கூட்டியிருந்தது.

நாடகமேடையின் பின்புற ஒப்பனை அறையில் இருக்கும் நடிகர்களை எப்போதும் கலகலவென்று இருக்கும் ஆலம்பரை கோட்டைவாசிகளும் அதிகாரிகளின் குடும்பதினரும், வீறுகொண்டு போராடவந்த படைவீரர்களும் உச்சகட்ட பரபரப்பில் இருந்தனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அவ்வளவாக ஒன்றும் பீதிஏற்பட்டு விடவில்லை. அவர்களில் பெரும்பாலோனோருக்கு ஆங்கிலேயரின் தற்போதைய நேரடிக்கோபம் பிரெஞ்சுக்காரர்களின் மீதுதானே அன்றி தமிழர்களின் மீதல்ல என்று தெரிந்திருந்தது

இருந்தாலும் போர்நடக்க போகும் இடமல்லவா அவர்களும் ஒருவித உயிர்பயத்தில்தான் இருக்கவேண்டியிருந்தது.
கோட்டையை சேர்ந்த குட்டிபீரங்கிகள் பத்தும் கோட்டையின் மதிலின் மீது ஏற்றபடாமல் அதற்குரிய பாதையில் தயாராக நிறுத்தி வைக்கபட்டிருந்தது. உயரமான கோட்டைமதிலின் மீதிருந்து பீரங்கியால் ஆங்கிலேயர்களை கீழ்நோக்கி தாக்கும் சந்தர்ப்பம் பிரெஞ்சுகாரர்களுக்கு வாய்த்தால் ஆங்கிலேய படையினரை எளிதில் வெல்லும் வாய்ப்பு ஆலம்பரையினருக்கு உண்டு. ஆனால் அதற்கு பீரங்கிகள் இந்நேரம் தயாராக ஏற்றி நிறுத்திவைக்கபட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே கோட்டையை சுற்றி ஆங்கிலேயர்கள் சூழ்ந்திருக்க இனி அப்படி ஒரு சந்தர்ப்பம் நிகழுவது சந்தேகம்தான்.
எனில் இந்த பிரெஞ்சுகார மடையர்கள் வெல்லப்போவதுதான் எப்படி என்று அங்கு ஓரமாய் அமர்ந்திருந்த நல்லனும் சாம்பானும் நினைத்துபார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டனர். அவர்கள் இருவரும் மரக்கானத்திலிருந்து கோட்டையின் லாயத்தில் பணிபுரிபவர்க்கள். ஏற்கனவே என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து போயிருந்த டிசோசாவுக்கு அந்த சிரிப்பு சத்தம் பேரிடியாய் கேக்கவே அவர்களை அழைத்து வந்து சுரீரென்று முதுகில் சாட்டையால் அடித்து கைகட்டி நிற்க பணித்தான். கைகள் பின்புறம் கட்டபட்ட்டிருப்பதால் அவர்களால் முதுகை தேய்த்து கொள்ளகூட முடியாமல் தரையில் புரண்டு கதறினர்.
அம்பிலிருந்து கடிதம் விடுவிக்கப்பட்டு டிசோசாவிடம் கொடுக்க பட்டிருந்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்த கடிதத்தின் சாராம்சம் என்னவென்றால்.


பிரெஞ்சு கலெக்டர் அவர்களுக்கு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியார் எழுதும் கடைசி எச்சரிக்கை கடிதம். ஆலம்பரை கோட்டையை காலிசெய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இருமுறை கடிதம் அனுப்பியும் உங்கள தரப்பில் இருந்து எந்தபதிலும் வராத காரணத்தால் படைபலம் கொண்டு கோட்டையை கைபற்ற எண்ணம் கொண்டுள்ளோம். எனினும் கடைசிவாய்ப்பாக ஒரு சலுகை உண்டு. அதுஎன்னவென்றால் கோட்டையை தற்பொழுதாவது காலிசெய்து அனைத்து பிரெஞ்சுக்காரர்களும் வெளியேறினால் உயிராவது மிஞ்சும். இன்னும் ஒருமணிநேரத்திற்குள் தகுந்த பதில் தரப்படவில்லை என்றால் போருக்கு தாயார் என முடிவெடுத்து கோட்டை தகர்க்கப்படும். என்பதாகும்.
கடிதத்தை படித்த உடன் டிசோசா பிராங்க்ளினை நோக்கி பிரஞ்சு மொழியில் பேசினான்.


ஆங்கிலேயர்களிடம் இருந்து ஒருமுறைதானே கடிதம் வந்தது அதனால் தான் ஆயிரம் படைவீரர்களை காரைகாலிலிருந்து தருவித்துள்ளோம் அவர்கள் இரண்டு முறை என்கிறார்களே இதென்ன புதுக்கதை பிராங்க்ளின்?
பிரான்க்ளினுக்கு ஒன்றும் தலைகால் புரியவில்லை. கடந்த காலத்தை சற்று தூசிதட்டி பார்த்தான் எதோ ஒரு கடிதம் ஒன்று தன் கைக்கு வந்தது போலவும் அதனை பிரித்து படிக்க நினைத்து அறைக்குள் கொண்டு சென்றதும் நினைவுக்கு வந்தது. உண்மையை சொல்வதா வேணாமா என்று அவன் திக்கி தினறியத்தை எண்ணி அவனது கள்ளத்தனத்தை புரிந்து கொண்ட டிசோசா அணிவகுப்பில் நின்றிருந்த செபாஸ்டியனை அழைத்து பிராங்க்ளினின் அறைமுழுவதையும் சோதனை செய்துபார்த்து வரப்பணித்தான்.

இந்த சம்பாசனைகள் எல்லாம் பிரெஞ்சு மொழியிலேயே இருந்ததால் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருக்கும் தமிழர்களுக்கோ அதில் செபாஸ்டியனை கூர்ந்து நோக்கி கொண்டிருக்கும் முருகனுக்கோ நிச்சயம் புரியவில்லை. ஆனால் தன் ஆசைகாதலன் இந்த இக்கட்டிலும் எதோ வேலையாக தனிப்பட்டு பணிக்கபடுகிறான் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
மேலும் இந்த போரைபற்றி மிகுந்த வேதனை கொண்டிருந்தான் நமது முருகன்.

அதில் முதலாவது என்னவென்றால் செபாஸ்டியனுடன் பிரான்ஸ் தேசம் போவது கனவாய் போய்விடுமோ என்பதாகும். அதையும் தாண்டி இன்னொரு கவலை அவனது மனத்தை பிடுங்கி தின்றது. அதுன்னவேன்றால் வீரத்துக்கு பெயர்பெற்ற தமிழனாய் பிறந்து இப்படி அன்னியர் இருவர் அடித்து கொள்ளும் நிலையில் அடிமையாய் அமர்ந்திருக்கிறோமே என்பதே ஆகும். நெஞ்சில் மலையளவு கவலைகள் இருந்தாலும் அனைத்தையும் தூக்கி விழுங்கும் ஆறுதலாக காதல் என்பது இருக்கும் ஆனால் அந்த காதலே கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் இனஉணர்வு பெரிதாக முன்னேறவில்லை முருகனுக்கு.

அறைக்குள் சென்ற செபாஸ்டியன் எப்பொழுது வருவான் என்று அந்த அறையின் வாசலை எதிர்நோக்கி இருந்தவனுக்கு செபாஸ்டியன் எதோ ஒரு குழலை கொண்டுவந்து டிசோசாவிதம் பணிவுடன் கொடுப்பது தெரிந்தது.
அதனை பிரித்து படித்த டிசோசாவுக்கு கோவத்தில் கண்கள் இரண்டும் தீபிழம்பாய் போகவே பிரான்க்ளினை ஓங்கி ஒரு அரைவிட்டான். காரணம் யாதெனில் பிரெஞ்சுக்கரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒருசில உடன்படிக்கைகளை ஏற்படுத்தி போரை தவிர்க்கும் பொருட்டு  ஆங்கிலேயர்கள் அனுப்பிய கடிதம் அது.
அன்று கடற்கரையில் முருகனை கண்டபிறகு கோட்டையில் செபாஸ்டியனின் உடலில் ஒட்டியிருந்த கடல்மனலையும் பார்த்து குழம்பி இருந்த பிராங்க்ளின் இந்த கடிதத்தை பிரிக்காமலேயே மறந்துபோனக் காரணம் இன்று ஆலம்பரை கோட்டை எமலோகத்தின் வாயிலை எட்டிபார்த்து கொண்டு நிற்கிறது.


கடிதத்தை கசக்கி எறிந்துவிட்டு சிறிதுநேரம் குறுக்கும் நெருக்குமாக நடந்த டிசோசா அங்கு கைகட்டி நிருத்தபட்டிருக்கும் இரண்டு பணியாளர்களில் ஒருவனை அழைத்து கோட்டை மதிலின் மீதேறி ஆங்கிலேயே படையின் நிலை எத்தகையது என்று பார்த்துகூற சொல்லி உத்தரவிட்டான்.
ஏற்கனவே வெறியோடு இருக்கும் ஆங்கிலேயர்கள் கோட்டையின்மேல் தெரியும் முதல் தலைக்கு என்ன பதில் தருகின்றனர் என்று சோதிப்பதே அவனது நோக்கம் என்று அங்கு யாருக்கும் புரியாமல் இல்லை. செபாஸ்டியனுக்கு இந்நோக்கம் புரிந்து மனம் சஞ்சலப்பட்டு போகவே அவன் முன்னோக்கி வந்து தானே மேலே ஏறி படைபலத்தை பார்த்து வருவதாக கூறினான்.

அதனை கேட்ட முருகனுக்கு உயிர்போவது போல இருந்தது. ஆனால் டிசோசா அதற்கு மிகுந்த கடுமையுடன் மறுமொழிக்கூறி செபாஸ்டைனை நிராகரித்து நல்லன் என்பவனை மதிலின் மீது ஏறும்படி உத்தரவிட்டான்.
வேறுவழியின்றி மதிலின் மீது பூனை போன்று தவழ்ந்து சென்று ஒரு மறைப்பில் நின்று பார்த்தான் அவன். ஒருபக்கம் வங்கக்கடல் விரிந்திருக்க மறுபக்கம் ஐயாயிரம் வீரர்கள் துப்பாக்கிகளுடனும் இருபத்தி ஐந்து பீரங்கிகளுடனும் ஐம்பதுக்கும் மேற்பட்ட யானைகளுடனும் என்னதொலையாத குதிரைகளுடனும் ஆங்கிலேய சைன்யம் விரிந்துகிடந்தது.

 பிறகு கோட்டைக்குள் இருக்கும் பிரெஞ்சு சைன்யத்தை ஒப்பிட்டு பார்த்த நல்லனுக்கு மீண்டும் சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது. அதனை மீறி சாட்டை வீச்சில் பிய்ந்து போன முதுகு வேதனை கொடுக்கவே அந்த நொடியில் பிரஞ்சுக்கரர்களை பழி வாங்க நினைத்தவன் ஆயிரகணக்கான ஆட்கள், பத்து பீரங்கிகள், பத்து யானைகள் என்று உரக்க கத்தியபடி உற்சாகமாய் எழுந்து நின்றான் கோட்டையின் வெளிப்புறத்தில் இருந்து சீறிக்கொண்டு வந்த ஆங்கிலேய துப்பாக்கி குண்டு ஒன்று நல்லனின் முதுகை துளைத்து மார்பின் வழியே வெளியேறியது. அவன் மேலிருந்து மடார் என்று தரையில் விழுந்தான்.

அனைவரும் அதிர்ச்சியாக அந்த காட்சியை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சாம்பன் எனும் இன்னொருவனை மேலே சென்று நல்லனின் கூற்றை ஊர்ஜித படுத்துமாறு டிசொசா கட்டாய படுத்தினான். வேறுவழியின்றி மரணத்தை நோக்கியபடி கோட்டயின்மீது ஏறினான் அவன். கடல்போன்ற ஆங்கிலேய சைன்யம் அவனை வியப்பில் ஆழ்த்தியது நல்லனின் உள்ளம் ஒருகணத்தில் புரிந்தது அவனுக்கு.

தமிழனின் காலதனை தமிழனே அறிவான் என்பது போல அவனும் சைன்யத்தை குறைவாக மதிப்பளித்து கூறினான். குண்டடிபட்டான் கீழே விழுந்து இறந்தான்.
அவ்வளவுதான் டிசோசாவுக்கு உற்சாகம் பொங்கியது. ஆங்கிலேய சைன்யத்துடன் சண்டையிடுவது என முட்டள்தனமாக முடிவெடுத்தான்.

ஒருகணத்தில் கோட்டை பரபரப்பானது. வீரர்கள் தவழ்ந்த படியே கோட்டையின் மீது ஏறினார்கள். செபாஸ்டியன் குழுவினர் கோட்டையின் உள்தளத்தில் இருந்து பீரங்கிகளை இயக்கும் பொருட்டு வளாகத்தில் நின்றனர். ஒருவேளை கோட்டையின் உள்ளே ஆங்கிலேயர்கள் நுழையும் பொழுது வாள்ப்போர் செய்யும் பொருட்டு பலவீரர்கள் வாட்களுடன் வாசலருகே அணிவகுத்து நின்றனர்.


பிரெஞ்சு பீரங்கியின் குண்டு ஒன்று மிகுந்த சத்தத்துடன் எழுந்து ஆங்கிலேயர்களை நோக்கி சென்று விழுந்து வெடித்தது. கோட்டை மதிலின் மீதிருந்த பிரெஞ்சுக்கரார்கள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். ஆங்கிலேயர்கள் பதிலுக்கு கொண்டு மழை பொழிந்தனர். ஏறத்தாழ ஒருமணி நேரம் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சண்டையில் பெரும்பாலான பிரெஞ்சு வீரர்கள் இரத்தகளரியாய் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் விழுந்தனர். பீரங்கி குண்டுகளும் செபாஸ்டியன குழுவினரால் தொடர்ந்து செலுத்த பட்டு கொண்டிருந்தது.

ஆனால் சாமர்த்தியமான ஆங்கிலேயர்கள் கோட்டைக்கு அதிக சேதம் உண்டாகக்கூடாது என பீரங்கிகளை பயன் படுத்தாமல் பின்வாங்கி கத்திருந்தனர் அதனால் மிகுந்த சேதம் பிரெஞ்சுகாரர்களுக்கு. உயிருக்கு போராடும் வீரர்களை தமிழக பணியாளர்கள் பரபரப்புடன் கவனித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு மருந்துகள் வைக்கப்பட்டு கட்டபட்டது. முருகன் இத்துணை அவசரத்திலும் செபாஸ்டியனை கவனிப்பதை மட்டும் விடவில்லை, அவனோ கடமையே கண்ணாக பீரங்கியை செலுத்தி கொண்டிருந்தான்,
மேல்தளத்தில் இருந்த பிரெஞ்சு வீரர்கள் அனைவரும் சுருண்டுவிழுந்தவுடன் சிறிது நேரம் பிரஞ்சுகாரர்கள் இடைவெளி விட்டிருந்தனர் இதனை பயன்படுத்திகொண்ட ஆங்கிலேய படையினர் யானைகளை ஒட்டிவந்து கோட்டை வாசலை மூடியிருந்த பெருங்கதவுகளை முட்டசெய்தனர்.

கோட்டையினுள் பெரிய பெரிய மரத்துண்டங்களை தமிழர்கள் சுமந்து கொண்டு பின்பக்கமாக கதவினை முட்டுகொடுத்து காத்து நின்றனர். மடார் மடார் என்று யானைகள் அந்த கதவுகளை முட்டித்தோற்று போய் பிளிறிக்கொண்டு பின்வாங்கின.
இனி பயனில்லை என்று முடிவெடுத்த ஆங்கிலேயர்கள் மருந்து திணித்து தயாராக நிறுத்தி வைக்க பட்டிருந்த பீரங்கிகளை கொண்டு கோட்டை கதவை தாக்கவே அந்த கதவுகள் தூள்தூளாய் பறந்து போயின. வெளியே தயராய் இருந்த ஆங்கிலேய வீரர்கள் கேடயத்துணையுடன் வெகுவேகமாக வாள்வீச்சு செய்து கொண்டு உள்ளேறினர். ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு வாட்கள் கலீர் கலீர் என்று அங்கு மோதிக்கொண்டு ஆலம்பரை கோட்டை உள்தரையை இரத்த சகதியாக்கியது.


செபாஸ்டியன் தனது இடுப்பு வாளை உருவி பயங்கரமாக சுழற்றி எதிர்படும் ஆங்கிலேய வீரர்கள் துவம்சம் செய்தான். இக்காட்சியை கண்ட தமிழக பணியாளர்கள் எல்லோரும் முடிந்த மட்டும் பதுங்கி இருக்க முருகன் தன் காதலனை காப்பற்றும் பொருட்டு ஒரு வாளை எடுத்து கொண்டு ஓடினான். ஆவேசமாக எதிர்படும் ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினான். இருவரும் முடிந்த மட்டும் போராடினர் ஆனால் செபாஸ்டியன் அளவுக்கு முருகனிடம் வாள்வீச்சு பயிற்சி இல்லாமையால் முருகன் கைவாளை தவறவிட்டான். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்பதால் வேறுவாள் எடுக்கும் பொருட்டு பின்னோக்கி நடந்து ஓடவும் நான்கைந்து ஆங்கிலேய வீரர்கள் அவனை மடக்கிபிடிக்கவும் சரியாக இருந்தது. முயன்ற மட்டும் திமிறிப்பார்த்தான் ஆனால் அவர்கள் முருகனை விடாப்பிடியாக பிடித்து மாற்ற பணியாளர்களை கைது செய்து அமர்த்தியிருக்கும் இடத்தில் சென்று துப்பாக்கி முன்னையில் அமர வைத்தனர்.

அதற்குள் அங்கு இருக்கும் பெரும்பாலான பிரெஞ்சுவீரர்கள் கொல்லப்பட்டு ஆங்கிலேயர்கள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தனர். எத்துனை ஆங்கிலேய வீரர்கள் இறந்தாலும் அதற்கீடாக அங்குபுதியவர்கள் வந்து கொண்டே இருந்தனர்.

பெரும்பான்மை ஆங்கிலேயர்களுடன் போரிட்டு கொண்டிருந்த சொற்ப பிரெஞ்சு வீரர்களில் நமது செபாஸ்டியனும் ஒருவன் என்பதால் நிர்கதியாய் நிற்கும் அவர்களும் கனபொழுதில் சுற்றி வளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். இதற்கிடையே கோட்டைக்குள் பதுங்கியிருந்த டிசோசா கலெக்டரும் கண்டறியப்ட்டு கைதுசெய்து கொண்டுவந்து நிறுத்தபட்டான். சூரியன் சாய்ந்து இருள் கவ்வதுவங்கிய நேரத்தில் அந்த போர் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. கைது செய்யப்படிருக்கும் தமிழக பணியாளர்களை கொண்டு கோட்டை முழுவது தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன.

இத்துணை கவரத்திலும் செபாஸ்டியன் உயிரோடு இருக்கிறானே  என்று முருகன் மனநிறைவோடு பொன்மாரியம்மனுக்கு நன்றி கூறினான்.
பிரெஞ்சுகைதிகளை என்னசெய்யலாம் என்பதைப்பற்றி வெற்றி விருந்துக்கு பிறகு முடிவுசெய்து கொள்ளலாம் என ஆங்கிலேய தரப்பு முடிவு செய்து ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆங்கிலேயர்கள் அவர்களுடனேயே கொண்டுவந்திருந்த உணவு பொருட்கள் சீமை சாரயங்கள் என ஆங்கிலேய சமையல் காரர்களின் கைவண்ணத்திலேயே அந்த விருந்து தாயராகி கொண்டிருந்தது.

போரில் மரணமடைந்து ரத்த சகதியாக கிடக்கும் உடல்களை பிரெஞ்சுப்பிணங்கள் தனியாக ஆங்கிலேயப்பிணங்கள் தனியாக என வகை பிரித்து குமிக்கும் வேலை தமிழக பணியாளர்களுக்கு ஒதுக்கபட்டிருந்தது.
முருகன் சகத்தமிழர்களுடன் இணைந்து பிணங்களை தரத்தரவென்று இழுத்து குமித்து கொண்டிருந்தான். ஆனால் அவனது மனம் முழுவதும் செபாஸ்டியனை சுற்றியே இருந்தது.

கோட்டையின் நடுமைதானத்தில் அவர்கள் வெறும் மணலில் அமரவைக்க பட்டிருந்தனர். மொத்தம் இருபது பேர் மிச்சம். அதில் செபாஸ்டியனும் ஒருவன். குத்துகால் இட்டபடி கையிரண்டையும் முட்டியில் சேர்த்துகட்டிகொண்டு வேதனையும் விரக்தியும் கலந்த பார்வையை அவன் முருகன் மீது செலுத்திகொண்டிருந்தான்.

எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இங்குவந்து உன்னை ஏன் நான் பார்க்க வேண்டும்? உன்னுடன் காலம் முழுதும் சேர்ந்து வாழ ஏன் நான் ஆசைப்பட வேண்டும்? ஆசைபட்டவாழ்க்கை நமக்கு கிடைக்குமா? என அடுத்த நொடியில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நேரத்திலும் செபாஸ்டியன் முருகனை நினைத்து பொருமினான்.

இரவும் பகலும் அனைத்து கிடந்து அன்பில் திளைத்த அந்த உடல்களுக்கு ஒரு தொடுதலேனும் கிடைக்குமா இனி!?. அடேய் என் செம்பு உன்ன என்ன பண்ண போறாங்கனு தெரியலியேடா இந்த பாவிங்க? கடல்தாண்டி கப்பலேறி என்ன இப்புடி ஒரு வேதணைக்கு ஆளாக்கதான் வந்தியாடா? செம்பு உன்ன கட்டி பிடிச்சுக்கணும் போல இருக்கேடா ஆனா கிட்டகூட நெருங்க முடியாத பாவியா இருக்கேனேடா! என்று முருகனும் தன் மன்கேதத்தை நினைத்து கண்ணீர் சொறிந்தான்.

ஒருவழியாக பிணங்கள் குவிக்கும் வேலை முடிவுக்கு வந்தது. அங்கு இருக்கும் பெரியநீர் தொட்டிக்கு சென்று தன் உடல் இரத்தக்கறைகளை கழுவி கொண்டான் முருகன். அதே சமயம் பிரெஞ்சுகைதி ஒருவன் தைரியமாக எழுந்து மிகுந்த தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் வேண்டும் என ஆங்கிலத்தில் உரக்க கத்தினான்.
இந்த செய்தி உடனேயே தளபதியின் காதுகளுக்கு போய் சேர்ந்தது. பரவாயில்லை போனால் போகிறது தண்ணீர் கொடுங்கள் என்று அனுமதியளித்தான் அந்த கொடுமைக்கார மகராஜன்.

வெளியேறிய ஆங்கேலேயே அதிகாரி தண்ணீர் தொட்டியருகே நிற்கும் முருகனிடம் அவர்களுக்கு குடிக்க தண்ணீர்கொடு என்று தமிழில் உத்தரவிட்டான்.
செபாஸ்டியனை அருகில் சென்று பார்ப்பதற்கு இப்படி ஒரு வாய்ப்பா? என ஆனந்த பட்டான் முருகன். அருகில் இருந்த தோண்டியில் தண்ணீர் சேந்திகொண்டு பிரெஞ்சுகைதிகளிடம் சென்றான் முருகன். அவர்கள் ஒவ்வொருவராக கையை குவித்து காத்திருக்க தண்ணீரை சாய்த்தான். திட்டமிட்டே கடைசியாக செபாஸ்டியனிடம் சென்றான்.

செபாஸ்டியன் கைகளை குவித்தான் அதில் தண்ணீருக்கு பதில் கண்ணீர் விழுந்தது.
அழாத முருகா!! இவ்வளவு நேரம் எங்கள ஒன்னும் செய்யல எப்படியும் வெளிய விட்ருவாங்க நீ கவலைப்படாம இரு நாம கண்டிப்பா பிரான்ஸ் போய்டுவோம் என்றான்.
முருகனுக்கு பேச நா எழவில்லை தண்ணீரை ஊற்றினான். உனக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனா ஒரு பறங்கியனையும் சும்மா விட மாட்டேன். என்று ஆவேசமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் முருகன். அதில் காதலின் வெறி நிரம்பி வழிந்தது.

அதே சமயம் தளபதி தன் அறையில் இருந்து வெளியேறினான். அவனுக்கு நிற்கும் இடத்திலேயே நாற்காலி போடப்பட்டிருந்தது.
அவனுக்கு நேரெதிராக இருபது சிறிய பீரங்கிகள் கொண்டுவந்து நிறுத்த பட்டன. ஆங்கிலேய வீரர்கள் தமிழக பணியாளர்களை ஒருங்கிணைத்து ஒரு தனியிடத்தில் துப்பாக்கி முனையில் நிறுத்தினர்.
செபாஸ்டியன் உட்பட பிரெஞ்சுவீரர்கள் இருபது பேரும் இருபது பீரங்கி குழாய்களுக்கு முன்பு கொண்டுவந்து நிறுத்தப்பட்டனர். அங்கு என்ன நடக்கபோகிறது என்று தோராயமாக அனைவருக்கும் புரிந்து போயிற்று. துப்பாக்கி முனையில் நிற்கும் முருகன் புழுவாய் துடித்தான்.

தமிழக பணியாளர்கள் வாய்விட்டு வேண்டாம் வேண்டாம் என்று கூவினர். முருகன் வாய்விட்டு செம்பு போபோறியாடா?! என்னைவிட்டு போவபோறியாடா?  நீ சாவுறத பக்கவாடா இப்புடி விழுந்து விழுந்து உன்ன விரும்புனேன்? அதுக்கு நானே செத்துருக்கலாமேடா என வாய்விட்டு கதறினான் முருகன். செபாஸ்டியன் கூட்டத்தில் முருகனை தேடவில்லை. இத்தகு சூழ்நிலையில் முருகன் படும் வேதனையை காண அவன் மனம் ஒப்பவில்லைபோல.
கதறிகொண்டிருந்த முருகன் செய்வதறியாது தகித்தபடி கோட்டை வளாகத்தை ஒருமுறை சுற்றி பார்த்தான்.

கனபொழுதில் அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நடக்க போகும் கோரக்கட்சியை காண இயலாதவன் போலமெல்ல பின்வாங்கினான். ஆங்கிலேய வீரர்கள் சற்று கவனக்குறைவாக இருந்தனர். பின்வாங்கிய முருகன் கோட்டையின் உள்சுற்று வராண்டாவை அடைந்தான் தூண்களில் வரிசையாக தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. ஒருத்தூணுக்கு கீழே குடம் ஒன்று இருந்தது. அதனை ஆர்வமாய் தோளில் தாங்கி கொண்டான் முருகன். சட்டென கோட்டையின் கீழ்திசைக்கு மறைந்து மறைந்து நடை போட்டான் அவன்.

இருபது உயிர்கள் சிதறபோகும் ஆவலில் அமைதியாக இருந்தது அந்த கோட்டை. ஆங்கிலேய தளபதி தமிழும் ஆங்கிலமும் கலந்து ஆங்கிலேயரை எதிர்பவர்களுக்கு இதுதான் நிலை என்பது போல ஒரு உரையாற்றிகொண்டிருந்தான். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தன் திட்டம் பாழ்பட வாய்ப்பிருப்பதை எண்ணிய முருகன் வேகமாக ஓடினான்.

இங்கு பீரங்கிகள் முழங்க தயாராய் இருந்தன. முருகன் தான்நிற்கும் இடத்தில் இருந்து எட்டிபார்த்தான் பீரங்கிகள் வெடிக்க ஏதுவாக விசைகள் இழுக்கப்படுவது தெரிந்தது. அவன் மனம் இப்பொழுது கல்லை போல இறுகியிருந்தது. தன்னுடைய செபாஸ்டியனை நினைத்து கொண்டு குடத்திலிருந்த நல்லெண்ணையை தலையில் ஊற்றினான். அருகிலிருந்த தீப்பந்தத்தில் தன் முண்டாசை அவிழ்த்து பிழிந்து பற்றவைத்து இடுப்பில் கட்டினான். தீ மளமளவென்று வேட்டியில் பிடித்தது.

 அங்கு பீரங்கிகள் வெடிக்கும் சத்தம் படார் என்று முருகனின் காதுகளில் ஒலித்தது. இடுப்பில் எரியும் தீ அவனை ஒன்றும் செய்யவில்லை ஆனால் பீரங்கி வெடித்த ஓசை காதுகளை சுட்டது. தாமதிக்காமல் ஓடினான். அது பீரங்கிகளுக்கு திணிக்கப்படும் வெடிமருந்து தொட்டிகள் இருக்கும் இடம். தொட்டிகள் எந்தவித பாதுகாப்பின்றி திறந்துகிடந்தது.

மளமளவென்று எம்பி ஒரு தொட்டியில் ஏறி நின்று பீரங்கி வெடித்தப்பகுதியை பார்த்தான் சுவர்களெல்லாம் இரத்தமாய்தெறித்து இருந்தது. செபாஸ்டியனை நினைத்து கொண்டு தொட்டிக்குள் குதித்தான் முருகன்.

அந்த வெடிமருந்து தொட்டி பயங்கர ஓசையுடன் வெடித்து அருகிலுள்ள தொட்டிகளையும் வெடித்தது. அந்த மாபெரும் வெடிப்பின் அதிர்வை தாங்காமல் ஆலம்பரை கோட்டையின் சுவர்கள் அடியோடு ஆடியது.

ஒரு காதலின் சக்தியாய் வெளிப்பட்ட அந்த தீப்பிழம்பு அங்கிருந்த ஆங்கிலேயர்கள் அனைவரையும் சுட்டுபொசுக்கியது. மிச்சசொச்சமாய் இருந்த அனைவரும் அந்த மாபெரும் வெடிப்பில் மாண்டு போயினர். ஆலம்பரை கோட்டையின் கொத்தளங்கள் கூறு கூறாய் சிதறி வெறும் செங்கல் மேடாய் சிதைந்து போனது.

அங்கு ஆங்கிலேயனும் வெல்லவில்லை பிரெஞ்சுகாரனும் வெல்லவில்லை முருகன் செபாஸ்டியனின் காதல் வென்றிருந்தது. மாபெரும் மாளிகை மண்மேடாய் போனாலும் காதலனிடம் கடைசியாக கொடுத்த உறுதியை செயல்படுத்திய முருகனின் ஆத்மா அங்கு தனியே தவிக்கும் செபாஸ்டியனின் உயிரோடு கலந்தது.

காலங்கள் பல உருண்டு ஓடினாலும் அங்கு வீசும் காற்றும், அடிக்கும் அலையும், கிடக்கும் மணலும் யாருமறியா இந்த அற்புத காதலுக்கு சாட்சியாய் நிற்கிறது. ஒருமுறை சென்று பார்த்து வாருங்கள் ஆலம்பரை கோட்டையின் இடிபாடுகளை. முருகனும் செபாஸ்டியனும் கைகளை கோர்த்தபடி அங்குதான் மணல்வெளியில் நடமாடி கொண்டிருப்பார்கள்


ஆலம்பரை கோட்டையின் கதை முடிந்தது.