பக்கங்கள்

வியாழன், 27 மார்ச், 2014

“சென்னையில் ஒருநாள்” – சிறுகதை





“வொய்ங்...”“வொய்ங்...”“வொய்ங்...” “வொய்ங்...” என்று எங்கிருந்தோ கேட்ட ஆம்புலன்ஸ் ஒசை சத்யாவின் கவனத்தை அந்த நீலசட்டை காரனிடம் இருந்து திருப்பியது. “கடவுளே!! அந்த உயிர் காப்பாத்த பட்டிடனும்” கண்களை மூடி மனதுக்குள் வேண்டினான். தூரத்தில் கேட்கும் ஆம்புலன்ஸ் ஓசை சிறிது சிறிதாக அதிகரித்து பெருத்த சத்தத்தோடு கடந்து மீண்டும் சிறிது சிறிதாக அடங்கி தூரமாக போய்விடும். இதுதானே வழக்கமான நடைமுறை, ஆனால் அப்படி இல்லாமல் இந்த ஆம்புலன்ஸ் சத்தம் வெகு அருகில் ஒலித்து கொண்டே இருந்தது சத்யாவுக்கு மனதை பிசைந்தது. அவன் உக்கார்ந்திருக்கும் இருக்கையில் இருந்து மெலிதாக எழுந்து பேருந்தின் பின்புற கண்ணாடி வழியே எட்டி பார்த்தான். “108” ஒன்று வாகன நெரிசல்களுக்கிடையே ஆமைபோல நகர்ந்து கொண்டிருந்தது. “அடப்பாவிங்களா!! ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிட மட்டுறானுங்களே!!” என்று தமிழகத்தின் தலைநகரமான “ஜிகு” “ஜிகு” சென்னையின் மறுபக்கம், நேர்பக்கம் போன்ற பக்கங்களை நினைத்து வருந்தினான் சத்யா.

இவன் ஒரு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன், பார்த்ததும் பிடிக்க வில்லை என்றாலும் பார்க்க பார்க்க பிடிக்கும் ரகத்திலுள்ள ஒரு விடலை. பள்ளியில் படிக்கும் காலங்களில் சக நண்பர்களுடன் வளரிளம் பெண்கள் முதல் வளராத இளம்பெண்கள் வரை சைட் அடித்து கொண்டும் அதன் விளைவாய் பலவித கனவுகள் மூலம் படுக்கையை நனைத்து கொண்டும்தான் இருந்தான். கல்லூரியில் அடியெடுத்து வைத்த பின்தான் பட்டுகோட்டை பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி வரவேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டுபோய் அவனது ரசனையே மாறிப்போய்விட்டது. தினம் தினம் காலைநேர கூட்ட நெரிசலில் சிக்கி சொந்த ஊரிலிருந்து பட்டுகோட்டைக்கு வந்து வேறு பேருந்து பிடித்து அங்கிருந்து ஐந்து கல் தொலைவில் இருக்கும் கல்லூரிக்கு போவான். அப்போதைய ஒரு நாளில்தான் கூட்ட நெரிசலில் ஒருவனின் உரசல் மட்டும் இயல்புக்கு மீறியதாய் தோன்றியது அவனுக்கு. எதிர்புறம் நின்று கொண்டிருந்தவனின் பின்புறப்பகுதி வழக்கத்துக்கு மாறாக இவனது முன்புறப்பகுதியை உரசி கொண்டு இருந்தது. முதலில் இயல்பாக எடுத்து கொண்டவன் தொடர்ச்சியான அவனது மயக்க பார்வையில் கிளர்ச்சி அடைய துவங்கினாலும் உடனிருக்கும் நண்பர்கள் கவனித்தால் என்ன செய்வது என்ற பயம் காரணமாக கொஞ்சம் சிரமபட்டு வேறுபக்கம் திரும்பி கொண்டான். இது போன்ற நிகழ்வு அவனுக்கு இதுவரை நிகழ்ந்ததில்லையாகையால் அன்று முழுவதும் குழப்பமாக இருந்தது. “இப்புடிலாம் நடக்குமா?? ஒரு வேளை எதேச்சயா நடந்தத நாமதான் கற்பனை பண்ணிக்கிறமா?? இல்லையே அவன் ஒருமாதிரி நம்மளைதானே பாத்தான்” என்று பல கேள்விகள் குடைந்தெடுத்தாலும் கல்லூரியின் அலுவல்கள் காரணமாக அந்த சம்பவத்தை அடியோடு மறந்து போனான்.

அன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வழக்கமாக நண்பர்களுடன் அமர்ந்து உரையாடும் மதகடிக்கு சென்ற பொழுது அவனது உயிர் தோழர்கள், உடல் தோழர்களெல்லாம் அமர்ந்து ஒரு செல்போனை உற்று நோக்கி கொண்டிருந்தனர். அதிலிருந்து “ஆங்” “ஆங்” “ஹாய்!! ஹை!! ஐ!! ஐ!!” என்று ஒரு பெண் கதறி கொண்டிக்கும் குரல் கேட்கிறது



“வாடா சத்தி!! நம்ம கணேசு மெம்மரில அம்பது “சாமிபடம்” ஏத்திட்டு வந்துருக்கண்டா” என்றான் அந்த கூட்டத்தில் ஒருவன்.

“ஐ!! எங்கடா ஏத்துனான்?”

“அதாண்டா முத்துபேட்டையிலடா, அவனுங்க பாக்குறானுங்க நீயும் போய் ஜோதில கலந்துக்க” வழி காட்டிய குருநாதருக்கு ஒரு சிரிப்பை காணிக்கியாக்கி விட்டு ஜோதி தரிசனம் பார்க்க துவங்கிவிட்டான் சத்யா.

மறுநாள் கல்லூரி செல்லும் போதும் அந்த இயல்புக்கு மீறிய உரசலை மெலிதாக உணர துவங்கினான். அதோடு நேற்றிரவு செல்போன் வழியே அருள்பாலித்த “சாமிகளின்” கைங்கரியம் வேறு சேர்ந்து கொண்டதால், அவனுக்கு அது இன்னும் வேண்டும் என்பது போல தோன்றியது, இந்தமுறை சத்யா திரும்பி கொள்ளவில்லை. அந்த உரசல் பேர்வழிக்கும் அடுத்த கட்ட செயல்களில் ஈடுபடுவதற்கு கூட்ட நெரிசல் நல்ல வாய்ப்பை வழங்கியிருந்தது.

அதன் பிறகு தொடர்ந்த சில செல்போன் பேச்சுகளுக்கு பின் ஒரு சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் ஏதோ ஒரு கைவிடப்பட்ட அரசு கட்டிடத்தில், முதலிரவோ இல்லை முதல் பகலோ அல்லது முதல் சாயந்திரமோ நிகழ்ந்ததாக அறிய முடிகிறது. இதுவரை சொப்பனஸ்கலிதம் மட்டுமே கண்டு கொண்டிருந்த சத்யாவுக்கு இந்த சந்திப்பிற்கு பிறகு அவன் மூலமாகவே நான்கைந்து நபர்கள் பழக்கமானார்கள், அவர்கள் மூலமாக அவர்களின் நண்பர்கள் என்று நேரிலேயே ஸ்கலிதம் செய்ய துவங்கி விட்டான். அதோடு மட்டுமல்லாமல் பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் ௦௦௦எதிர்பாராமல் சில உரசல் பேர்வழிகளும், உரசாமல் பிகுபண்ணும் பேர்வழிகளும் அடிக்கடி கிடைப்பதால். அவனுக்கு இந்த சுகம் எளிதில் வசபட்டத்தோடு, ஒருவனை பார்த்ததும் இது “தேறுமா தேறாதா” என்று சிந்திக்கும் வகையில் தேறியும் விட்டான் என்றால் அது மிகையாகாது.

தொடக்கத்தில் பட்டுகோட்டை, பேருந்து, உரசல், ஏதேனும் மறைவிடம் என்று இருந்தவனுக்கு கல்லூரி மாணவர்களின் சேர்க்கையால் அறிமுகமானதுதான் கணினியும் இணையதளமும். கல்லூரி அசைன்மென்ட்களுக்காக மட்டுமே கம்ப்யூட்டர் செண்டர் சென்று கொண்டிருந்தவன் இச்சைக்கு இணங்கவந்த நவநாகரீக இளைஞன் ஒருவன் மூலம் இணையத்திலேயே எளிதாக நபர்களை பிடிக்கலாம் என்று அறிந்து கொண்டான். அன்றைய தினத்தின் மாலையிலேயே கூகுளில் இது குறித்து தேடியவனுக்கு பல்வேறு தளங்கள் உதவ வந்தாலும் அவற்றின் விதிமுறைகளும் நடைமுறைகளும் சரியாக விளங்காததால் சலித்துப்போய் கடைசி முறையாக முயற்சித்த பொழுதுதான் நீலநிற திரையில் ஒரு வெள்ளைகார ஆடவன் கவர்ச்சியாக நிற்கும் பிரபலமான அந்த தளம் வசப்பட்டது. ஏற்கனவே அந்த நண்பன் கொடுத்தருளிய சில குறிப்புகள் துணையுடன் தன் பெயரை வெளிக்காட்டாமல் கவர்ச்சியான ஒரு பெயருடன், இந்தி நடிகன் ஒருவன் மேல்சட்டையின்றி நிற்பது போல் ஒரு படத்தை வைத்துகொண்டு இணைய உலகத்துக்குள் நுழைந்தான் சத்யா.

அன்றைய தினம் முதல் இன்றுவரை சத்யா பல்விளக்குவதற்கு மறந்த நாட்கள் கூட ஒன்றிரண்டு உண்டு என்றாலும், அந்த தளத்தை பார்வையிடாத நாள் என்று ஒன்றுகூட இல்லை. ஆனால் இவனது கணக்கிற்கு அங்கு வரவேற்பு இல்லையோ!! என்னவென்று தெரிய வில்லை வாரத்திற்கு ஒரு செய்தி வந்தாலே ஆச்சர்யம் என்ற அளவில்தான் போய் கொண்டிருந்தது. ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவன் அங்குள்ள மற்ற கணக்குளுக்கு “ஹாய்” “ “ஹாய்” “ என்று செய்தி அனுப்பி கொண்டுதான் இருப்பான். சில நேரங்களில் புகைப்படம் கேட்டு பதில்வரும், புகைப்படத்தை அனுப்பும் நுட்பம் இவனுக்கு கைகூடவில்லையாதலால் அவர்களிடம் மின்னஞ்சல் முகவரி கேட்பான். அதோடு அந்த பக்கத்திலிருந்து கொஞ்சம் நஞ்சம் கேட்ட ஓசையும் அடங்கிவிடும். ஆனால் எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை இல்லையா? அவ்வகையான ஒரு நாளில்தான் அழகிய முகத்துடனும், அம்சமான அங்கத்துடனும் புன்னகைக்கும் புகைப்படம் ஒன்றை தாங்கி செய்தி ஒன்று அவனுக்கு வந்திருந்தது. அந்த செய்தியின் தமிழாக்கம் பின்வருமாறு. “ஹாய் டூட் இது நவீன், நாளைக்கு நான் திருத்துறைப்பூண்டி பூண்டி வரேன். விருப்பம்னா கால் பண்ணுங்க” “  என்று ஒரு கைபேசி எண்னும் வழங்க பட்டிருந்தது. ஆனால் விதி என்பது வலியது ஆயிற்றே!! சத்யாவின் துரதிர்ஷ்டம் குறிப்பிட்ட அந்த நாளன்று அவனை அத்தை மகளின் சடங்கிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளி சரியான நேரத்தில் அந்த செய்தியை கைக்கு கிடைக்காமல் செய்து விட்டது.

மறுநாள் மாலை வழக்கம்போல சென்றவன் அந்த செய்தியை கண்டு ஆனந்த கூத்தாடினான். கைகால்கள் எல்லாம் அதீத மகிழ்ச்சியில் உதற துவங்கியது. அவசர அவசரமாக தன்னுடைய கைபேசியில் அந்த எண்ணை குறித்து கொண்டு வெளியில் வந்து தொடர்பு கொண்டான். முதல் முயற்சிக்கு பதில் இல்லை என்றாலும் இரண்டாம் முயற்சியில் பலன் கிடைத்தது. தன்னுடைய கணக்கின் பெயரை சொல்லி அறிமுகபடுத்திய படி பேச துவங்கியவனுக்கு அந்த முனையிலிருந்து அவ்வளவாக இனிப்பான செய்தி கிடைக்கவில்லை. அந்த நவீன் நேற்று முழுவதும் திருத்துறைபூண்டியில்தான் இருந்தானாம். ஆனால் இரவே புறப்பட்டு சென்னை வந்து விட்டானாம். “சென்னை வந்தா கால் பண்ணுங்க பாஸ்” “ என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்தான்.

இருந்து இருந்து கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பை கூட தவற விட்டு விட்டாயே என்று தன்னையே நொந்து கொண்டான் சத்யா. மனது குழப்பமாக இருந்தது, ஒருவாறு அதனை தேற்றி கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றவனுக்கு சென்னை செல்லும் பேருந்து ஒன்று கண்ணில் படவே மின்னலென ஒரு யோசனை வெட்டியது. “சென்னை வந்தா கால் பண்ணுங்கன்னு சொன்னானே, அப்பனா சென்னை போனா என்ன??’ “ என்று யோசித்தவன் அப்படியே பேருந்து ஏறி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்க வில்லை என்றாலும். வீட்டிற்கு போய் “முக்கியமான வேலையா படிப்பு சம்பந்தமா சென்னைக்கு போகணும், என்னோட படிக்கிற பசங்க நாலு பேரு வரானுங்கப்பா” “ என்று அனுமதியோடு கணிசமான ஒரு தொகையும் தேர்த்தி கொண்டு சென்னைக்கு அன்றிரவே தன் புனிதபயணத்தை துவங்கினான்.  அம்பத்தூரில் இருக்கும் தன் தங்கைக்கு தகவல் தெரிவித்த அவனது தகப்பனார் மறுநாள் காலை கோயம்பேட்டில் வந்து “மச்சானை அழைசிக்க சொல்லுமா, பாவம் ஒன்னும் தெரியாத பிள்ளை” “ என்று கூறி பேருந்துநிலையம் வரை வந்து வழி அனுப்பி வைத்த பொழுது பரிதாபமாகத்தான் இருந்தது. இதில் கவனிக்கபட வேண்டிய செய்தி என்னவெனில் திரைப்படங்களிலும், நெடுந்தொடர்களிலும், செவிவழி செய்திகளும் கேள்விப்பட்ட சென்னையை நாளைதான் சத்யா முதன்முறை சந்திக்க போகிறான் என்பதுதான்.

இரவுநேர நெடுந்தூர பயணத்தின் பொழுது ஒருமுறை அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு சென்னைக்கு வந்துகொண்டிருப்பதாகவும், அவனைக்காண ஆவலாய் இருப்பதாகவும் கூறி அவனுடைய இல்லத்திற்கு எப்படி வர வேண்டும் என்றும் விசாரித்தான்.

“நீங்க கோயம்பேடு வந்து கால் பண்ணுங்க” “ என்று பதில் வந்தது.

லேசாக திறந்திருந்த சன்னல் வழியே கிழக்கு கடற்கரை காற்று சில சமயம் மெலிதாகவும், சில சமயம் வேகமாகவும் தாலாட்டியதில் தூக்கத்தின் பிடிக்குள் தள்ளப்பட்டவன் “ஏர்போர்ட்” “ஏர்போர்ட்” என்ற நடத்துனர் ஒலி கேட்டு விழித்த பொழுது அதிகாலை 04.30 என்றது கடிகாரம். இருட்டுக்குள் தெரியும் விதவிதமான கட்டிடங்களை வேடிக்கை பார்த்த வாறே வந்தவனை மாமா கைபேசியில் அழைத்து “எங்க வந்துகிட்டு இருக்க??” என்றார். எழுந்து போய் நடத்துனரிடம் விசாரித்து “இன்னும் அஞ்சு நிமிஷத்துல இறங்கனுமாம் மாமா” என்றான். மஞ்சள் விளக்கொளியில் பெரிய கூரையுடன் தென்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை பார்த்து வாயை பிளந்து கொண்டே இறங்கியவனை “எங்கடா உன்னோட வந்த மத்த பசங்க” என்ற மாமாவின் கேள்விதான் வரவேற்றது.

இது எதிர்பார்த்த கேள்விதான் என்பதால் வரும் வழியிலேயே தயாரித்து வைத்திருந்த பதிலை சுட சுட எடுத்து வீசினான். “அவனுங்க பிரண்ட்ஸ் ரூம்க்கு போவுறதுக்காக கிண்டி கிட்ட இறங்கிட்டானுங்க மாமா”

சத்யாவை முழுமனதாக நம்பியவர் வண்டியில் ஏற்றிக்கொண்டு பெரிய சாலை, தொடர்ந்த சிறிய சாலை, அதைவிட ஒரு சிறிய சாலை, பிறகு ஒரு பெரிய சந்து, அதற்குள் ஒரு சிறிய சந்து, பிறகு ஒரு குட்டி சந்து என்று ஏழுகடல் ஏழுமலை தாண்டி வாசல் முழுவதும் குடம், குண்டான், வாளி என்று நீர் நிரப்பி வைக்கப்படிருந்த வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு அத்தையின் அதீத பாசம், அத்தைபெற்ற வாரிசுகளின் விசித்திர பார்வைகள், குளியல், சிலபல இட்லிகள் என்று இயங்கி கொண்டிருந்தவன் அப்படி இப்படி என்று பல வித பொய்களை அடுக்கி மீண்டும் கோயம்பேடு வந்த பொழுது மணி பதினொன்றை தொட்டிருந்தது.

 மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட பொழுது ஒரு குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தை கூறி “நான் ஆவடில இருக்கேன்ங்க, நீங்க இப்ப பஸ் ஸ்டாண்ட் வாசல்லதானே இருக்கீங்க, அங்கதான் தேர்ட் பிளாட்பார்ம் கிட்ட பஸ் வரும் ஏறி வாங்க” என்று இறங்க வேண்டிய நிறுத்ததையும் அடையாள படுத்தினான் அவன்.

ஒருமுறைதான் பார்த்திருந்தாலும் அவனது புகைப்படம் நெஞ்சில் பதிந்து விட்ட படியால், நவீனின் உருவம் அவனது கண்முன் தோன்றி சத்யாவை திக்கு முக்காட வைத்து கொண்டிருந்தது. அவனுடன் எப்படி எப்படியெல்லாம் இன்பம் காணலாம், என்னென செய்யலாம் என்று யோசித்த வாறே மிகுந்த எதிர்பார்ப்புடன் ஓடும் பேருந்தின் சன்னல் வழியே சென்னையை நோக்கி கொண்டிருந்தான். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் அழகாகவே தென்பட்டனர் இவனது கண்களுக்கு, உடலுக்கு ஏற்ற உடை, உடையின் அளவுக்கே செய்ய பட்டது போன்ற உடலமைப்பு என்று அவனது கண்களில் படும் ஆண்கள் எல்லோரும் விருந்து வைத்து கொண்டிருந்தனர். சன்னலின் வழியே தெரியும் பெரிய பெரிய  கட்டிடங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் கட்டுமானங்கள், கடைகள், கோயில்கள், வாகனங்கள் என்று இதுவரை சென்னையை பற்றிய அவனது உருவகங்களை எல்லாம் தூள் தூளாக்கி பிரமாண்டமாய் காட்சி அளித்தது சென்னை. வேடிக்கை பார்த்து கொடிருந்தவன் எதேச்சையாக பேருந்தின் உள்ளே நோக்கிய பொழுது நீலநிற சட்டை அணிந்து அழகே உருவாய் ஒரு யுவன், அவனுக்கு வெகு அருகில் நின்று கொண்டு அகன்ற திரைகொண்ட அலைபேசியை அமுக்கி கொண்டிருந்தை கண்டான். அவனை பார்த்ததிலிருந்து சத்யாவுக்கு அவன் மீதிருந்து பார்வையை விலக்கவே இயலவில்லை என்ற போதிலும் நாம் கதையின் துவக்கத்தில் ஒரு ஆம்புலன்ஸ் ஓசையை கேட்டோமல்லவா?! அந்த ஓசை அவனது கவனத்தை திருப்பியது.

அருகில் இருப்பவரிடம் தான் இறங்கவேண்டிய நிறுத்தத்தை கூறி இன்னும் எவ்வளவு தூரம் என்று விசாரித்தான். சற்றுநேர மவுன யோசனைக்கு பிறகு “இன்னும் ஐந்து ஸ்டாப் தாண்டி” என்று பதில் வந்தது.

குறிப்பிட்ட நிறுத்தத்தில் பையுடன் இறங்கி முதல் வேலையாக அவனுக்கு தொடர்பு கொண்டான். “ஹலோ வந்துடீங்களா?? வைட் பண்ணுங்க அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்” என்றான் அவன். சத்யாவுக்கு மனம் வேகமாக அடிக்க துவங்கி இருந்தது. பூரிப்பில் உடல் மயிரெல்லாம் குத்திட்டு நின்றது. ஆனால் ஐந்து நிமிடம் கடந்து விட்டபடியால் மீண்டும் தொடர்பு கொண்டான். இரண்டொரு அழைப்புகளுக்கு எந்த பதிலும் இல்லை. ஐந்து நிமிடம் பத்து நிமிடமாகியது. இன்ப படபடப்பு மெலிதாக துன்ப படபடப்பாக மாற மீண்டும் தொடர்பு கொண்டவனுக்கு இந்த முறை பதில் கிடைத்தது.

“ஹலோ நவீன் எங்கருகிங்க?”

“ம்ம் நான் வந்துட்டேன், நீங்க என்ன கலர் டிரெஸ் போட்டு இருக்கீங்க”

“பச்சை கலர் டீ சர்ட்ங்க”

“ம்ம் கைல பேக் வச்சிக்கிட்டு நிக்கிறீங்களே!! ப்ளாக் ஜீன்ஸ்??”

“ஆமாங்க!! நீங்க எங்க இருக்கீங்க..??”

“இருங்க வரேன்!!” என்று தொடர்பை துண்டித்தான் அவன். நொடிகள் நிமிடங்களாய் கரைந்ததே தவிர அவன் வருவது போல தெரியவில்லை. சலிப்புடன் மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டான். இந்தமுறை ஒரு பெண் அந்த எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி மாறி கூறினாள். சத்யாவுக்கு இதயம் ஒரு கணம் நின்று விடும்போல இருந்தது. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டான், சிக்னல் இல்லை போலும் என நினைத்து கொண்டான், பிறகு சார்ஜ் இல்லை போலும் என நினைத்து கொண்டான் அங்கேயே இரண்டு மணி நேரம் நின்றான், ஆனால் திரும்ப திரும்ப அந்த பெண்தான் பேசினாள். அவன் ஏமாற்ற பட்டதை வெகுநேரம் கழித்துதான் உணர்ந்தான் சத்யா. அவன் நேரில் கிடைத்தால் என்னவெல்லாம் சொல்லி திட்டுவானோ எல்லாவற்றையும் மெசேஜாக  எழுதி அவனது எண்னுக்கு aஅனுப்பி வைத்து விட்டு, அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்குள் நுழைந்து சென்னை பகுதியில் வேறு யாரேனும் கிடைப்பார்களா என்று தேடினான். அனைவரும் புகைப்படம் கேட்டனர், கருணை கொண்டு ஏதோ ஒன்றிரண்டு நல்ல உள்ளங்கள் பேச்சு கொடுத்தாலும் அவர்களிடம் சரியான இடம் இல்லை என்று பதில் வந்தது. ஒருவன் மட்டும் குறிப்பிட்ட திரையரங்கிற்கு வரமுடியுமா என்று கேட்டான், ஆனால் அதற்குள் மணி நான்கை தொட்டு விட்டது, இனிமேல் முதல் காட்சிக்குதான் செல்ல முடியும் என்பதால் அதுவும் ஒத்து வராது என்று கூறி விட்டு விரக்தியுடன் அங்கிருந்து வெளியேறினான். பசி வயிற்றை கிள்ளியது, ஒரு கடையில் அது கிள்ளாமல் இருக்க வழி செய்து விட்டு ஊருக்கு போய்விடும் நோக்குடன் மீண்டும் கோயம்பேடு வந்த பொழுது மணி ஆறை தொட்டிருந்தது.

பேருந்து நிலையத்தின் பிரமாண்டம் அவனது மனதின் விரக்தியை போக்கி இருந்தது. வேடிக்கை பார்த்து கொண்டே அங்கிருப்பவர்களிடம் விசாரித்து தஞ்சாவூர் மார்க்க பேருந்துகள் நிற்கும் நடைமேடையை கண்டறிந்தான். வரிசையாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெயர் பலகைகளை தாண்டி திருத்துறைபூண்டி பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு வந்தபொழுது அவனுக்கு சிறுநீர் உபாதை ஏற்படவே கழிவறை நோக்கி நடக்கலானான்.

திருவிழா நடக்கும் கோயில்போல பலர் உள்ளேயும் வெளியேயும் சென்ற வண்ணம் இருக்கும் கழிவறைக்குள் நுழைந்தான். சிறுநீர் கழிக்கும் பொழுது அருகில் நிற்பவனின் வெறித்த பார்வையிலிருந்து தப்பிக்க வேறு பக்கம் திரும்பியவன் பிறகுதான் உணர்ந்தான் அங்கு ஏராளமானோர் இந்த நோக்குடன் நடமாடுவதை. ஓரத்தில் ஒதுங்கி இருந்த காமம் மெல்ல முளைவிட்டு மீண்டும் பெருக்கெடுத்தது.

பிறகு அந்த கழிவறையின் வாசலில் நின்றான், உள்ளே நின்றான், நீரிழிவு வந்தவன் போல ஐந்து நிமிடத்தில் பத்தாவது முறையாக சிறுநீர் கழித்தான், அவனை சந்தேக படுவதற்கு அங்கு ஆள்தான் இல்லை. சிலர் தானாகவே பேச்சு கொடுத்தனர், சிலர் நேராகவே கூப்பிட்டனர், அதில் ஒருவனை இவனுக்கு மிகவும் பிடித்து போகவே.. அவனுடன் பேச்சு கொடுத்தான். பாதுகாப்பான இடம் ஒன்று இருப்பதாக கூறி பின்புற பகுதியில் இருக்கும் கழிவறைகளில் ஒன்றுக்கு அழைத்து சென்றான் புதியவன். அது வெளிமாநில பேருந்துகள் நிற்கும் இடம் என்பதால் கூட்டம் ஒன்றும் அவ்வளவாக இல்லை ஆனால் கணிசமான நடமாட்டம் இருந்தது. சத்யாவை கூட்டி கொண்டு கழிவறைக்குள் நுழைய முற்பட்டான் அவன்.

“ஏங்க இருங்க.. !! என்ன? இங்க கூட்டிட்டு போறீங்க!!?” “ ஏதோ நல்ல இடம் இருக்குனு சொன்னீங்க,”

“ம்ம் இதான் அது, இங்கலாம் அவ்வளவா யாரும் வர மாட்டாங்க, ஏதாவது ஒரு டாய்லெட் குள்ள போனோம்னா அஞ்சு நிமிஷத்துல முடிச்சிட்டு கெளம்பிடலாம்”

“அய்யோ வேணாங்க, எனக்கு பயமாருக்கு அதெப்புடிங்க ஒரு டாய்லெட்குள்ள ரெண்டு பேர் போமுடியும் யாரவது பாத்தா அவ்ளோதான்” மறுத்தான் சத்யா

“சரிங்க அப்பனா வேணாம், நான் போறேன்!!” என்று உண்மையாகவே புறப்பட்டவனை கைவிட அவனுக்கு மனம் வரவில்லை, காலையில் ஏமாற்றபட்டதின் வலியுடன், தேக்கி வைத்திருந்த காமமும் பீறிட்டு எழவே,

“சரி வாங்க” என்று அவனுக்கு சம்மதக்கொடி காட்டினான், இருவரும் ஒரு கடைகோடி கழிவறையில் யாரும் அறியாமல் புகுந்தனர். ஏதோ ஒரு வேகத்தில் நுழைந்து விட்டானே தவிர பயத்தில் சத்யாவுக்கு இதயத்தின் ஓசை காதுக்கு கேட்டது. ஆனால் அழைத்து வந்தவன் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. வெளியில் யார் யாரோ வருவதும் போவதுமாக இருந்தனர். அடைக்க பட்ட கதவில் “ஆயிட்டம் நம்பர் வேணுமா??” என்று அகலமாக எழுத பட்டிருந்ததோடு மட்டுமல்லாது, அனைத்து மொழிகளிலும் சில வாசகங்களோடு பல கைபேசி எண்கள் அணிவகுத்து நின்றன. சுத்தமில்லாத கழிவறை நாற்றம் குடலை பிடுங்கவே அதோடு சிகரெட் புகை நாற்றமும் அதிகமாக வீசியது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு இருவரும் முதற்கட்ட செயல்களில் ஈடுப்பட துவங்கிய பொழுது

“யாரவது சீக்கிரம் வெளிய வாங்களேன்!! பஸ்க்கு இன்னும் அஞ்சி நிமிஷம்தான் இருக்கு வயிறுவலி தாங்க முடில!!” “ என்று ஒருவன் வெளியிலிருந்து கத்தும் குரல் அந்த இக்கட்டிலும் சத்யாவுக்கு சிரிப்பை  வரவழைத்தது.

தோளில் மாட்டியிருந்த பை கழன்று விடாமல் இருக்க ஒரு கை, அவிழ்க்க பட்ட பேன்ட் ஈரத்தரையில் விழாமல் இருக்க ஒரு கை என்று இரு கைகளுக்கும் வேலை இருந்ததால் சத்யா முழு ஈடுபாடு காட்ட முடியாமல் தவித்த பொழுதுதான்

“இந்த டாய்லெட் குள்ள ஒரு பிக்பாக்கெட் ஓடிவந்து நுழஞ்சிட்டான், அவன் கண்டிப்பா ஏதோ ஒரு டாய்லெட் குள்ளதான் கதவ சாத்திகிட்டு இருக்கணும், எல்லாரும் சீக்கிரம் கதவ தொறந்து வெளில வாங்க, நான் பஸ்ஸ்டான்ட் ஸ்டேஷன் எஸ்.ஐ பேசுறேன்”  ஒரு குரல் கணீர் என்று கேட்டது.

அவ்வளவுதான் சத்யாவுக்கும், அவனுக்கும் இதயம் நின்றுவிட்டதை போலிருந்தது, அவசர அவசரமாக பேண்டை அணிந்து கொண்டனர் இருவரும், படபடப்பில் செய்வது அறியாது திகைத்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழி பிதுங்கினார்.

அதற்குள் எஸ்.ஐ யின் குரலுக்கு மதிப்பளித்த அனைவரும் தங்களது காரியங்களை சீக்கிரம் முடித்து கொண்டு வெளியே வரவே, அந்த மூலையில் ஒரு கதவும், நடுவில் ஒருகதவும், இந்த மூலையில் நம் நாயகர்கள் இருக்கும் அறையின் கதவும் மட்டுமே சாத்த பட்டிருந்தது.

சிறிது நேரத்தில் நடுவிலுள்ள கதவு திறக்கபட்டது. மீதமிருந்தது இரண்டு புறமும் கடைக்கோடியில் இருந்த கழிவறைகள்தாம், எஸ்.ஐ மீண்டும் குரல் கொடுத்தார் “யோவ்.. இந்த ரெண்டுலதான் எதிலேயோ இருக்கான், போலருக்கு போய் தட்டுங்கய்யா..!!”” “ கோபம் கொப்பளித்தது அவரது குரலில். உடன் வந்திருந்த காவலர்கள் இரண்டு குழுவாக பிரிந்து இரண்டு கதவுகளையும் தட்ட துவங்கினர்.

சத்யாவுக்கு மூச்சு நிற்பது போல இருந்தது, கண்ணீர் முட்டியது, அவனையே திட்டி கொண்டான், அந்த நவீன் சாக வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்தான், ஆனால் உடனிருந்தவன் அந்த அளவுக்கு பயப்பட்டது போல தெரியவில்லை. கதவு வேகமாக “”படார்” ““”படார்” “ என்று தட்டபட்டது. “தொறக்க போறீங்களா.. இல்லையா??” மிரட்டல்கள் வேறு கடுமையாக இருந்தது.

“இன்னொரு டாய்லெட் மூடிருக்கே அதுகுள்ளதாண்டா திருடன் இருக்கனும் அங்க போய் தட்டுங்கடா...”  மெல்லிய குரலில் உடன் இருப்பவன் தன் வீராவேசத்தை காட்டியது சத்யாவுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது நல்லவேளை சத்தம் வெளியில் கேட்கவில்லை. அவனது வாயை பொத்தி அடிப்பது போல் கையை ஓங்கினான். ஆனால் இவர்கள் துரதிர்ஷ்டம் பூட்டியிருந்த மற்றொரு கதவினுள்ளிருந்து “சார் ரெண்டு நிமிஷம் சார், தோ வந்துடுறேன் நேத்து வேற கோழிக்கறி தின்னுட்டேன் சூட்ட கெளப்பிட்டு போல..”  என்று குரல் வரவே அனைவரின் கவனமும் இந்த கழிவறைக்கு திரும்பியது.

“யோவ்.. போய் பூத்லருந்து கன் எடுத்துட்டு வாங்கையா கதவை ஒடச்சிடுவோம் அவன் இது உள்ளதான் இருக்கான் போல”, எஸ் ஐ” உறுமினார்.

அடுத்த அரை நிமிடத்தில் பெருத்த சத்தத்துடன் கதவு உடைக்கும் பணி துவங்கியது. ஓரளவுக்கு கணிசமான கூட்டம் வேறு சூழ துவங்கியது, தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நிகழ போகிறது, எதையும் எதிர் கொண்டு விட வேண்டியதுதான் இருக்குற கஷ்ட்டதுல பொய் சொல்லிட்டு மெட்ராஸ் வந்தில்ல உனக்கு வேணும்டா”   என்று தன்னையே நொந்து கொண்டு வீச போகும் புயலை எதிர்கொள்ள கண்களை மூடி காத்திருந்தான் சத்யா. "மடார்..." "மடார்...." என்று மோதிய சத்தத்தில் மரக்கதவு சில்லு சில்லாக நொறுங்கி விழ துவங்கியது.

“நாளைக்கு உலகம் பூரா நம்ம கதை சிரிக்க போவுது, ஒரே டாய்லெட் குள்ள இரண்டு பேர், அப்படி என்ன செய்திருப்பார்கள்??”“  ன்னு எல்லா டீவி லையும் நாலஞ்சிபேரு கூடி உக்காந்துவேற பேசுவானுங்களே” என்று அவன் எண்ணி கொண்டிருந்த பொழுதில்

சமயோசிதமாக யோசித்து அனைவரின் கவனத்தையும் இங்கு திருப்பி விட்ட அந்த திருடன் படீரென்று கதவை திறந்து வெளியேறவே.. “தோ ஓடுறான்!!, தோ ஓடுறான்!! புடிங்கய்யா!! புடிங்கய்யா!!.. என்று பலவித குரல்கள் ஒலித்தது. சிறிதுநேர சலசலப்புக்கு பிறகு வழக்கமான அமைதி நிலவியது அங்கு..

“அப்பாடா...” என்றிருந்தது சத்யாவுக்கும் அவனுக்கும்.. மெலிதாக கதவை திறந்த போது யாரும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது அந்த இடம், பெருத்த மகிழ்வோடு வெளியேறினான் சத்யா..

“ஏங்க இருங்க போலீஸ்தான் போயிட்டுள்ள இனிமே ஒன்னும் பிராப்லம் இல்லை முடிச்சிட்டு போயிடலாம்” வாங்க”

என்று மீண்டும் அழைத்தவனை பார்த்து கையை வேகமாக அறைந்து ஒரு கும்பிடு போட்டவன் விட்டாபோதும் என்று வெளியேறி “திருபூண்டி“ “திருபூண்டி“ “திருபூண்டி“ என்று நடத்துனர்கள் ஒலிகேட்கும் திசைநோக்கி வேகமாக ஓடி, தோதான ஒரு பேருந்தில் ஏறி வாகாக அமர்ந்து கண்களை மூடி சாய்ந்தான். நெஞ்சின் படபடப்பு இன்னும் ஓயவில்லை. ஆனால் நெருப்பாற்றை தாண்டியது போல இருந்தது அவனுக்கு, கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது. பேருந்து பொறுமையாக கிளம்பி சிறிது தூரம் நகர்ந்த பொழுது, சன்னல் வழியே ஆசியாவிலேயே பெரிய புறநகர் பேருந்து நிலையத்தின் கூரை, மஞ்சள் ஒளியில் மின்னியது. கைகளை தூக்கி அந்த திசைக்கு பெரிதாக ஒரு கும்பிடு போட்டு மீண்டும் சாய்ந்தான் பெருமூச்சு விட்டபடி.



                                                                                                                                           -                                                                                          -நிறைந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..