பக்கங்கள்

வியாழன், 4 ஜூலை, 2013

தேவதூதனின்.......... காதலன்........{ நிறைவு பகுதி}


கீழ்வானத்தில் புறப்பட்ட போது இன்முகத்துடன்  இளவெயிலை இறைத்து கொண்டு இருந்த கதிரவன், சற்றே மாறி மெல்ல மேலேறி வன்கதிர்களால் முறைத்து கொண்டிருந்த அந்த காலை பொழுதில் பறவைகளின் இனிய ஓசை அந்த பகுதியையே சொர்க்கம் போல மாற்றியிருந்தது. பல ஏக்கர் அளவில் பயிரிட பட்டிருந்த யூகலிப்டஸ் மரங்களும், சவுக்கு மரங்களும் போதிய இடைவெளியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து பார்க்கும் போது அடர்வனமாக காட்சி அளித்தாலும் . உள்ளே வந்தால் மிகவும் ரம்மியமாக காட்சி அளித்ததோடு தைலவாசனையும் தூக்கலாக பரப்பி கொண்டு இருந்தது அந்த காடு. யூகலிப்டஸ் மரங்கள் எவ்வளவு நீர் இருந்தாலும் உறிஞ்சி கொள்ளும் திறன் பெற்றிருப்பதால் தரை மிகவும் காய்ந்து காணப்பட்டது. தன்னை நாடி வருபவர்களின் பாதங்களை காய்ந்த தரை நோக செய்யுமோ என்று மரங்கள் நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை உதிர்ந்த தன் சருகுகளால் வைக்கும் அடி தரையில் படா வண்ணம் மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தது. அழகுக்கு அழகு சேர்ப்பது போல ஆங்காங்கே உதிர்ந்த மயில்களின் இறகுகளும் கிடந்தன. இந்த ரம்மியமான சூழலை ரசிக்க மாட்டதவனாய் அங்கிருக்கும் அமைதியை குலைத்து கொண்டு காய்ந்த சருகுகளுக்கிடையே “சர சர” என்று ஓசை எழுப்பியவாறு ஓடி வந்து கொண்டிருந்தான்  அகஸ்டீன். இந்த ஓசையால் பயந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆண் மயில்கள் தெறித்து பறந்தன.
“அகஸ்சு டேய் நில்லுடா....... டேய்,,,,,,,,,” நான் சொல்லுறத கேளுடா என் மேல எந்த தப்பும் இல்லடா புரிஞ்சிக்கடா ப்ளீஸ்டா” என்று கத்தியவாறே பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தான் வினய்.
என்ன நோக்கத்தில் ஓடுகிறான் என்று அவனுக்கே தெரியாமல் தான் ஏமாற்றபட்டு விட்டோம் என்ற எண்ணத்திலும், தனக்கே உரிமையான வினய்யின் உடலை வேறொருவன் தீண்டிய ஆற்றாமையாலும் வேகமாக கண்ணீரை காற்றில் கரைய விட்டு ஓடினான் அகஸ்டீன். இருந்தாலும் அவனை விட வேகமாக ஓடிவந்து அகஸ்டினின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“ ச்சீ என்ன தொடாத அவன தொட்ட அந்த கையாள என்ன தொடாத” ஐயோ எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கே நான் என்ன பண்ணுறதுன்னு தெரியலையே இப்புடி ஏமாந்துட்டனே என்னனமோ கற்பனை பண்ணிக்கிட்டு திருச்சி வந்தனே இப்புடி ஏமாந்துட்டனே? என்று வினய்யின் கையை உதறி தள்ளி விட்டு தலையில் அடித்து கொண்டு அழதுவங்கியவன். “பொளேர்” என்று ஒரு அரை கன்னத்தில் விழவும் அதை தாங்க மாட்டாதவனாய் ஓடிசென்று சருகுகளுக்கிடையில் விழுந்து எழுந்தான்.
மிகுந்த கோபத்துடனும் ஓடிவந்த வேகத்திலும் ஒரு சேர விட்ட அரை காரணமாக கையில் ஏற்பட்ட விரு விருப்பை குறைக்கும் வண்ணம் கையை உதறிகொண்டே பேச துவங்கினான் வினய்.
“உன்னைய என்னனமோ நெனச்சனேடா!! நீயும் ஒரு சராசரி ஆளுங்குரத நிரூபிச்சிட்டடா. என்ன போய் எப்டிடா உனக்கு சந்தேக பட தோணுது? அதும் ஹரீஷோட போய் நான் அப்டி செய்ய முடியுமாடா அவன் என் பிரண்டா.
“ ச்சீ வாய மூடு அதான் உங்க லீலயலாம் கண்ணால பாத்தனே இதுக்கப்பறம் என் போய் சொல்லுற? நீ ஜட்டியோட படுத்திருந்ததும் அவன் கீழ உக்கந்திருந்ததும் நெனைக்கவே அருவருப்பா இருக்கு/? இனிமேல் என் மூஞ்சிலியே முழிக்காத மொதல்லஇங்கருந்து போ”
என்ன பேசுகிறோம் என்பதை உணர கூட இயலாதவனாய் ஆத்திரம் கண்களை மறைத்தது அகஸ்டீனுக்கு. விழிகளில் வழியும் நீரை துடைத்து கொண்டே வினய் பேச துவங்கினான். அளவு கடந்த ஆத்திரத்தால் வார்த்தை குழறியது.
“டேய் ரொம்ப பேசுறடா நீ....... நான் பேசுனா தாங்க மாட்டடா” இவ்ளோ பேசுறியே அவன் கீழ உக்காந்துருக்கும் போது அவன் கையில என்ன இருந்துதுன்னு பாத்தியாடா? என்று தான் போட்டிருந்த லோவேரை கழட்டினான்.
“பாருடா என் தொடைய பாரு”
தொடையில் உள்ளங்கை அகலத்தில் கொப்பளித்து இருந்தது.
“என்ன பாக்குற ஒன்னும் புரியலையா முந்தாநாள் ப்ராக்டீஸ் பண்ணும் போது கையிலிருந்து நெருப்பு பந்து தவறி என் தொடையில விழுந்துட்டு. உடனே பேன்ட் எரிஞ்சி தொடை புண் ஆய்ட்டு. இந்த விஷயம் உனக்கு தெரிஞ்சா இந்த திருச்சி வர ப்ரோக்ராமே நீ கேன்சல் பண்ணிடுவனுதான் மறைச்சேன். இந்த ப்ரோக்ராம்னால் நீ எவ்ளோ எதிர் பார்ப்போட இருந்திருப்பனுதான் மறைச்சேன். அதுனாலதான் மொத நாள்லேருந்து உன்ட்ட சரியா பேசுல. இன்னும் சொல்ல போன நைட் நடக்க போற காம்பெடிஷன்ல நான் ஆட போறதும் இல்ல நான் உனக்காகத்தான்டா வந்தன் உன்னோட ப்ரோக்ராம் முடிஞ்சதும் உண்ட சொல்லலாம்னு இருந்தாண்டா என்ன போய் இப்டி சந்தேக படுரியேடா? அந்த ஹரீஷுக்கு இருக்குற அக்கறை கூட உனக்கு இல்லையேடா. புன்னு சீக்கிரம் ஆரனும்னு கிச்சன்ல போய் நெய் வாங்கிட்டு வந்து மயிலிறகால தடவிகொடுத்தான்டா. அப்ப கூட அவன் உனக்காக தாண்டா வருத்த பட்டான் இவ்ளோ பெருசா கொப்புளிசிருக்கே நீ எப்புடி தாங்க போறன்னு? எங்கள போய் சேத்து வெச்சு சந்தேக படுரியேடா?”..
ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிட்டான் வினய் ஆனால் இனி எந்த மூஞ்சை வைத்து கொண்டு அகஸ்டீனால் பேச முடியும். கொட்டிய நெல்லை கூட்டி அள்ளி விடலாம், ஆனால் யோசிக்காமல் கொட்டிய சொல்லை அல்ல முடியுமா....? அகஸ்க்கு தலை சுற்றுவது போல இருந்தது. வினய்யின் காலை நினைத்து வேதனை படுவதா, தனது அறியாமையை நினைத்து வெம்புவதா, இல்லை இந்த பிரச்சனயில் கூட தனக்கு சாதகமாக காய் நகர்த்தி இருக்கும் ஹரீசை நோகுவதா? பத்து தலை கொல்லி எறும்பாக தவித்தான் அகஸ்ட்டீன். இருந்தாலும் மனதை தேற்றி கொண்டு ஒருவாறாக பேச துவங்கினான்
” சாரிடா வினய் நான் யோசிக்காம தப்பு செஞ்சிட்டண்டா என்ன உன் செருப்ப கழட்டி அடிடா வாங்கிக்கிரன் என்று குனிந்து வினய்யின் புண் பட்ட இடத்தை தழுவ முயன்றான்”
அதற்குள் விலகி கொண்ட வினய் மன்னிப்பா.... உன் மூஞ்சிலையே முழிக்காதனு சொல்லிட்டு மன்னிப்பா கேக்குற மன்னிப்பு..... இதுக்குலாம் தகுந்த தண்டணைய நீ அனுபவிக்க வேணாம்?. உன் மூஞ்சிலையே இனிமே முழிக்க நான் தயார இல்ல நான் போறன் நீ இருந்து நல்லா திருச்சிய சுத்தி பாத்துட்டு வா என்று கூறி விட்டு திரும்பவும் அங்கு ஹரீஷ் வரவும் சரியாக இருந்தது. அவனை கடந்து வேகமாக அரை நோக்கி நடக்க தொடங்கிவிட்டான் வினய்.
பேச்சு குரல் கேக்காத தொலைவை அவன் கடந்ததும் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்த அகஸ்டீனுடன் பேச துவஙகினான் ஹரீஷ்.
“என்னடா ஹீரோ பெரிய பூகம்பமே வெடிசுட்டு போல எப்புடி உன்னாலயே உன்ன கெட வச்சன் பாத்தியா........? உனக்கு ஒரு போன் கால் வந்திருக்குமே வினய்யை விட்டு போன்னு!! அத கேக்காம இன்னும் ஆட்டம் போட்டில அதுக்குதான் இந்த சாம்பிள்.” ரெண்டுநாளா வினய் உண்ட சரியா பேசலங்கற விஷயமே நேத்தி ட்ரைன்ல வரும்போதுதான் எனக்கு தெரிஞ்சிது. அவன்ட்ட விசாரிச்சப்பத்தான் புன்னு பட்ட விஷயத்த அவன உண்ட சொல்லலனு எனக்கு தெரிஞ்சிது இது போதாதா எனக்கு. அப்பவே இந்த அசைன்மெண்டுக்கு பிளான் போட்டன் வெற்றிகரமா முடிச்சிட்டன்” இப்பவும் சொல்லுறன் கேட்டுக்க நீ என்னதான் இதுக்குமேல என்ன பத்தி வினய்கிட்ட சொன்னாலும்’ சொல்றது என்ன அவன்தான் இனிமேல் உன் மூஞ்சிலையே முழிக்க மாட்டானே சோ நான் என்ன சொல்றன்னா போய் உன் பெட்டி படுக்கயலாம் கட்டிக்கிட்டு மரியாதையா காரைகாளுக்கே நடைய கட்டு நான் போய்ட்டு வாரன் “ அவனும் சொல்லி விட்டு கிளம்பினான்.
ஏற்கனவே சபரிமலை கற்பூர ஆழி போல கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அகஸ்டினின் மனது இப்போ ஹரீஷ் குடம் குடமாக கொட்டிய நெய்யின்  பொருட்டு வானளாவி வளர்ந்தது. அந்த தீயின் வேகம் காலுக்கு பரவி எப்படியாவது வினய்யை சமாதான படுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் வேகமாக ஓட துவங்கினான். ஆனால் என்ன பயன் அதற்குள் வினய் அறையை காலி செய்து விட்டு கிளம்பி விட்டான்
ஏதோ ஒரு நம்பிக்கையில் அகஸ்டீன் வினய்யின் செல்லுக்கு தொடர்பு கொண்டான் ஆனால் அது எதிர்பார்த்த மாதிரியே அனைத்து வைக்க பட்டிருந்தது. உடன் சற்றும்
தாமதிக்காமல் தன குழுவினரிடம் சென்று தன்னுடைய இயலாமையை கூறி விட்டு அறைக்கு வந்து வாரி சுருட்டி கொண்டு கிளம்பினான். எப்படி இருந்தாலும் மாயவரம்தான் போயிருப்பான் என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு கல்லிளிட்ட எழுத்து போல நம்பிக்கையாக இருந்தது. மிகுந்த மனவலியுடனும் ஏக்கத்துடனும் சுய வெறுப்பின் காரணமாகவும் கண்களை குளமாக்கிய வண்ணம் இரவு பத்து மணி அளவில் மயிலாடுதுறை வந்து இறங்கினான். திருச்சியில் புறப்பட்டு மயிலை வரும் வரை ஒரு நிமிடம் விடாமல் வினய்யின் போனுக்கு தொடர்பு கொண்டதில் அந்த செல்லுக்கு வாயிருந்தால் அழுதிருக்கும்.!!!!! மனிதர்களிடம் மாட்டிகொண்டு தவிக்கும் சில பொருட்களில் இந்த செல் போனுக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். காதல் ஆரம்பிக்கும் பொழுது கன்னம் சூடாகும் வரை பேச வேண்டியது, ஊடல் பொழுதுகளில் தரையில் வீசி கோபத்தை தணிப்பது, படுக்கையில் அருகில் வைத்து கொண்டு மேலே ஏறி உருண்டு நசுக்குவது, மெசேஜ் அனுப்புகிறேன் பேர்வழி என்று பாக்கு போடுபவனின் பல் போல இருக்கும் விசை பலகையை தேய்த்தே பச்சிளம் குழந்தையின் பல் போல வெள்ளையாக்கி வைப்பது என்று எத்தனை அநீதிகளை இழைத்தாலும் இருந்தாலும் எப்படி  தாங்கி கொண்டு நமக்காக உழைக்கிறது இந்த செல்போன்கள்’
சரி கதைக்கு வருவோம்!! வினய் இங்குதான் வந்திருப்பான் என்று மனம் சொன்னாலும் அறிவு ஏன் அவன் தஞ்சாவூர் போயிருந்தா என்ன பண்ணுவ? வீடு பூட்டி இருந்தா இப்ப நாடு ரோட்டுலதான் நிக்கனுமா? என்ற கேள்விகளுடன் நடந்தே மாடிபடியருகில் வந்தான். மேலே லைட்  எரிந்து கொண்டு இருந்தது. மெல்லிதாக
“அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன்  எனையே படைத்து விட்டான்” என்று பீபி ஸ்ரீனிவாஸ் பாடிகொடிருந்தார்.
“அப்பா,,,,,,,,, வீட்லதான் இருக்கான்!!! என்ன  இருந்தாலும் அவனுக்கு நான் கஷ்ட்டபடக் கூடாதுங்குற எண்ணம் இருக்கு அதான் இவ்ளோ போராட்டதுலயும் வீட்டுக்கு கரக்டா  வந்துட்டான் என்று எண்ணி கொண்டே உள்ளே சென்றான்.”  உள்ளறையில் எட்டி பார்த்தான் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு லேப்டாப்பில் எதையோ நோண்டி கொண்டு இருந்தான் வினய்.
எப்படியாவது சமாதான படுத்திடணும் அவன் கால்ல விழுந்தாவது இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்து கொண்டு மெல்ல வினய்யின் அருகில் நெருங்கினான் அகஸ்டீன்.
அருகில் வரும்வரை காத்திருந்து விட்டு  பிடிப்பதற்கு வாலருகே கையை கொண்டு செல்லும் போது விருட்டென்று பறக்கும் தட்டான் பூச்சி போல அகஸ்டீன் அருகில் வந்ததும் வாயை பிளந்து கொண்டிருந்த லேப்டாப்பின் தலையில் படீரென்று அறைந்து மூடிவிட்டு எழுந்து சென்று விட்டான் வினய். உடனே தன முயற்சியில் சற்றும் மனம் தளராமல் பின் தொடர்ந்து சென்று வினய்யின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான்.
“டேய் வினு என்ன எவ்ளோ வேணாலும் அடிச்சிக்க திட்டிக்கடா.ஆனா பேசாம மட்டும் இருக்காதடா ப்ளீஸ்டா.......!!!!!!!!” கெஞ்சினான்
”..........”
“நான் பண்ணது தப்புதாண்டா அதுக்குதான் விட்டுடு வந்துட்டியே இந்த தண்டன போதும்டா என்ட தயவு செஞ்சி பேசுடா..........”
“..............”
வினய் இப்பொழுது அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். உடனே அவனது காலை தொட்ட வண்ணம் தரயில் அமர்ந்து கொண்டு பேசதொடங்கினான்.
” ச்ச்சச்ச்ச்ஸ் எவ்ளோ பெரிய கொப்பளம் எப்டிடா தங்கம் தாங்குண? நல்ல வேளை கொப்பலத்தோட போனுதே....!!!!! என்று ஆறுதலாக தடவ முயன்றான்.
இதனை சற்றும் விரும்பாத வினய் அவனை பிடித்து தள்ளி விட்டு மேசையின் மீது கிடந்த பேனாவை எடுத்து தொடையில் உள்ள கொப்பளத்தை குத்தி கிழித்தான். உடனே அதிலிருந்து நீர் வழிந்து ஓடியது, அதன் மீது போர்த்தி இருந்த மெல்லிய தோலை பிய்த்து எடுத்தான் பின் எரிச்சலில் துடித்த படி பேச துவங்கினான்
”இன்னொரு வார்த்தை என்ட பேசுன.? கத்திய பழுக்க வெச்சு இது மேலே வெச்சுப்பன் மரியாதையா எழுந்து போய்டு” கோபம் கண்களை மறைத்தது. கண்களில் வழியும் நீரை துடைத்த படியே தேம்பிய வண்ணம் மாடி படியில் சென்று அமர்ந்தான்  அகஸ்டீன். அழுது பிரயோஜனம் ஒன்றும் இல்லை காலையில் ஒருகணம் நின்று யோசித்திருந்தால் இந்நேரம் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து அதில் திருச்சியையே விலைக்கு வாங்கி இருக்கலாம் விதி யாரை விட்டது?
நேரம் ஆனது பதினொன்று, பனிரெண்டு என்று. நிமிடத்திற்கு பத்து வண்டிகள் கடக்கும் சாலை ஆளரவமின்றி கிடந்தது. மெல்லிய தூறல் விழுவது போல் இருந்தது. விளக்குகள் அணைக்க படாமல் எரிந்தன அழுது அழுது கண்களுக்கே அலுத்து போயிருக்கும். இனி நடப்பது தானே நடக்கட்டும் உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும் தப்பு செஞ்சவன் அனுபவிக்கனும் அவன் கோவத்துலயும் நியாயம் இருக்கு என்று நினைத்த வண்ணம் விளக்கை அனைத்து விட்டு படுக்கை அறைக்கு வந்தான். சுவற்றை பார்த்த வண்ணம் தன் அகன்ற முதுகை காட்டிக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தான் வினய்.
அருகில் சென்று சந்தடியில்லாமல் படுத்தான். வினய் மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது. ‘’ஓஹோ நீயும் இன்னும் தூங்கலையா அழுதுட்டு வேற இருக்க போல” என்று நினைத்த கொண்டே தன்னை அறியாமல் வினய்யை தொட சென்ற கையை இழுத்து கொண்டான் கோவமா இருக்கான் திரும்ப எதுக்கு பிரச்சன பன்ணிகிட்டு என்று நினைத்து கொண்டான். வெளியில் மழை அடித்து பெய்ய துவங்கியது.
நாளைய பொழுது இருவருக்கும் மறக்க முடியாத பொழுதாக விடிய போவதை அறியாமல் இருவரும் உறங்கினர்.
மறுநாள் காலை அகஸ்சை விட விரைவக எழுந்து அவனுடைய முகத்தை கூட பார்க்காமல் சீக்கிரமாக கிளம்பி பேருந்தில் கல்லூரிக்கு சென்று விட்டான் வினய். வண்டியில் சென்றால் அகஸ்ச்சை விட்டு செல்ல முடியாது என்பதால்தான் வினய் பேருந்தில் சென்றான் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை!!
பலவாறு யோசித்த வண்ணம் மெதுவாக கிளம்பி கல்லூரிக்கு போய் சேர்ந்தான் அகஸ். போட்டிக்கு சென்றவர்களெல்லாம் மதியம்தான் வருவார்கள் எனும் பொழுது இவர்கள் இருவரும் முன் கூட்டியே வந்திருப்பது அவரவர் நட்ப்பு வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பினாலும் ஒருவாறு சமாளித்தனர். அகஸ்டீன் சிலம்புவிடம் நடந்தெதெல்லாம் கூறி ஒருவாறு ஆறுதல் அடைந்தான்.
அன்று மாலை பங்கிற்கு விடுப்பு சொல்லி விட்டு எப்படியாவது சமாதன படுத்தி விட வேண்டுமென்ற நோக்கில் அகஸ் வீட்டிற்கு சென்று விட்டான் ஆனால் வினய் இரவு எட்டு மணி ஆன பின்பும் வரவில்லை.
“ ஏ.!!! அப்பா இவனுக்கு என்ன இவ்ளோ கோவம் வருது காலம்பூரா எப்புடி சமாளிக்க போரனு தெரியல என்று தன்னை நொந்து கொண்டு டிவி ரிமோட்டை அழுத்தி டீவீ பார்த்து கொண்டு இருந்தான் அகஸ்டீன் அன்று இரவு நடக்க போகும் விபரீதத்தை அறியாதவனாய்.
 இதே நேரம் எல்லாம் கணித்த படி சரியாக போய் கொண்டு இருக்கிறது இன்னும் ஒரே ஒரு முயற்சிதான் அதுவும் முடிந்தால் சரியாக வினய் நமக்குத்தான். என்று நினைத்துக்கொண்டே திருச்சியிலிருந்து வந்த உடன் வினய்க்கு கால் பண்ணினான் ஹரீஷ்
”ஹலோ சொல்லு ஹரி வீட்டுக்கு வந்த்ட்டியா?”
“ம்ம்  வந்துட்டன்டா நீ எங்கருக்க?”
“நான் காலேஜ் போய்ட்டு பஸ்ஸ்டான்ட்லருந்து ரூமுக்கு நடந்து போய்டிருக்காண்டா”
“ஏன்டா வண்டி என்னாச்சுடா?”
“சும்மாதான் அகஸோட சண்டை போட்டண்டா அதான் கொண்டு வரல”
“ஓகே. அப்பனா நீ அன்னா செலை கிட்ட வைட் பண்ணுடா நான் தொ வந்துகிட்டே இருக்கன்” சொன்ன படி இரண்டு நிமிடங்களுக்குள் ஹரீஷ் வந்தான்>
“என்ன மச்சான் இப்புடி இருக்க? சாப்டியா இல்லையா?”
:இல்லடா மனசு கஷ்ட்டமா இருக்குடா அவனோட பேசவும் முடியல, பேசாம இருக்கவும் முடியல. இப்ப கூட நானே பேசிடுவண்டா ஆனா என்னஅவன்  மூஞ்சிலையே முழிக்காதனு சொல்லிட்டான்டா அதாண்டா தாங்க முடில என்று விம்மினான்” சரி சரி வா சாப்பிடலாம் வேணாம்டா அவனும் ரெண்டு நாலா சாபிடுலடா.
ஹரீஷுக்கு எரிச்சல் பொத்து கொண்டு வந்தது இருந்தாலும் அடக்கி கொண்டு “ஹே அவனுக்கும் வாங்கிட்டு போய் நீயே குடு சமாதானம் ஆகுடா என்று அந்த பாருடன் கூடிய பெரிய ஹோட்டலுக்கு கூட்டி சென்றான்
குளிரூட்டப்பட்ட அறையில் இவர்கள் இரண்டு பேரை தவிர்த்து மேலும் சில கல்லூரி மாணவர்களும் சற்று தள்ளி இருந்த மேசையில் அமர்ந்து மதுவை ருசித்து கொண்டு இருந்தனர்.
“மச்சான் ஒரு சின்ன பெக் போடேண்டா மனசு லேசாயிடும்”
“ அதுலாம் வேணாம்டா  எங்கம்மா போனதுலருந்து எல்லாத்தையும் விட்டன்டா”
“ ஹே எனக்காகடா அதுமில்லாம சண்ட போட்டு சமாதானம் ஆகபோற நைட் ஜாலியா இருக்கும்டா ஒரே ஒரு ஆப் சொல்லுரண்டா”
இருக்குற வேதனையில் வினய்க்கும் அந்த போதை தேவை பட்டதால் சரி என்றான்
கண்ணாடி குவளையில் மதுவை ஊற்றி கொடுத்தான் ஹரீஷ்.  அகஸ் மீதுள்ள கோவத்தில் முழுதும் குடித்து முடித்து விட்டான்வினய். ஆனால் முதலில் ஊற்றிய மதுவையே உதட்டில் வைத்து வைத்து எடுத்து லாவகமாக சமாளித்து கொண்டிருந்தான் ஹரீஷ்
“ டேய் ஹரீசு நான் உன்னை என் பிரண்டா தாண்ட பாக்குறன் ஆனா இந்த அகஸ்சு பய தாண்டா என்ன புரிஞ்சிக்காம சந்தேக படுறான் நான் அவன் மேல எவ்ளோ லவ் வேசிருக்க்ர்னு அவனுக்கே தெரியாதுடா” .ஏன் எனக்கே தெரியாதுடா. போதை ஏறிவிட்டது என்றாலும் நிதானத்துடன் பேசினான் வினய்.
“ சரி விடுடா கண்ணுக்கு தெரியாத இடத்துல மச்சம் இருக்கவங்களுக்கே சந்தேக புத்தி அதிகமாதான் இருக்குமாம்டா” ஹரீஷ் தனது பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க தொடங்கி இருந்தான்.
“என்னடா சொல்லுற அவனுக்கு எங்கடா இருக்கு மச்சம்?”
“அப்புடியே தெரியாத மாதிரி நடிக்காதடா, அகஸ்க்கு அவனோட லெப்ட் தொடையில பின் பக்கம் ஒரு ரூபா அகலத்துல ஒரு மச்சம் இருக்குமே நீ பாத்தது இல்லையா?”
அதுவரை ஏனோதானோ என்று இருந்த வினய்க்கு இந்த புள்ளி விவரம் சுர்ரென்று இருந்தது
:’’டே அவனுக்கு அங்க மச்சம் இருக்குனு உனக்கு எப்டிடா தெரியும் “ கடுப்பும் கோவமும் கலந்த வாறே பேசினான்  வினய்
திட்டம் கைகூடுவதை என்னி மகிழ்ந்த வாறே அதை காட்டி கொள்ளாமல் தவித்தான் ஹரீஷ்.
அதுவந்து அது சும்மா சொன்னான் மச்சான்  ஒரு யூகம்தான்”
“யாராட்டடா கத விடுற? நீ சொன்ன அதே இடத்துல அதே மச்சம் அவனுக்கு இருக்கு.” கண்டிப்பா இது யூகமா இருக்க முடியாது ஒழுங்கா சொல்ல போறியா? இல்ல ஓத வாங்க போறியா? சட்டை பிடித்து கேட்டான்”
“சரி சரி சொல்லிடுரண்டா விடுடா. மச்சான் தப்பா எடுத்துக்காதடா நானும் உன்னமாதிரி கே தாண்டா. பர்ஸ்ட் இயர் படிக்கும் போது நானும் அகஸும் தப்பு பன்னிருக்கோம்டா அப்ப பாத்ததுதாண்டா சொல்லுறன். சும்மா சொல்ல கூடாதுடா உனக்கு செம கம்பனிடா அவன் சும்மா வழதண்டு மாதிரி இருக்கும்டா அவன் உடம்பு.”
“” ச்ச்சே நிறுத்து நீயெல்லாம் ஒரு மனுசனாடா ஏன்டா இவ்ளோ நாலா எண்ட இத சொல்லுல?” என்று ஆத்திரம் பொங்க கேட்டவன் சற்றே நிறுத்தி பின் தொடர்ந்தான்
“இருடி உனக்கு அப்பறம் வெச்சுகிரன் மொதல்ல சார போய் பாத்துட்டு வறேன்” என்று கூறி விட்டு கோவமும் ஆத்திரமும் கொப்பளிக்க வீடு நோக்கி விரைந்தான். மணி பத்தை நெருங்கி கொண்டு இருந்தது.
“ ஏற்கனவே இருந்த கோவமும், ஹரீஷுடன் ஏற்கனவே அவன் உறவு வைத்திருந்ததை மறைத்து விட்டு தன்னையே அகஸ் சந்தேக படுவதையும் நினைத்து வினய்க்கு ஆத்திரம் கண்களை என்ன வாய், மூக்கு, காது எல்லாத்தையும் மறைத்தது. அதிலும் வாழைதண்டு போன்ற உடம்பு என்று அவன் கூறியதுதான் வினய்யின் காதுகளில் வந்து வந்து சென்றது. வேகமாக வீட்டை அடைந்தவன் படி ஏறும்போதே
“ அகஸ்டீன் .............டே அகஸ்டீன் என்று கத்திகொண்டே ஏறினான்
மூன்று நாட்களுக்கு பிறகு ஆசை காதலன் அன்போடு அழைக்கிறான் என்று வாசல் நோக்கி ஓடோடி வந்தான் அகஸ். இருவரும் நிலைப்படி அருகே சந்தித்து  கொண்டனர். நேரடியாக கேள்வி கனைகளை தொடுத்தான் வினய்.
“ ஹரீஷ் கே நு உனக்கு ஏற்கனவே தெரியுமா தெரியாதா”?
“ என்னது?”
“ என்ன முழிக்கிற தெரியுமா தெரியாதா?”
“ஆமா தெரியும்” இப்ப அதுக்கென்ன”
“பொளேர் என்று ஒரு அரை கன்னத்தை தழுவியது அகஸ்க்கு”
“ ஏன் என்ட சொல்லல?”
கன்னத்தை தடவி கொண்டே பேச துவங்கினான். “ சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுல சொல்லல” அப்டியே சொன்னாலும் நீ என்ன நம்பவா போற அதுக்கும் உன்ன சந்தேக படுறன்னு சண்ட போடுவ”
“ ஹே சும்மா சமாளிக்காதடா நான் சொல்லட்டா நீ ஏன் சொல்லலன்னு? ஏன்னா? அத என்ட சொன்னா உங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த உறவு எனக்கு தெரிஞ்சிடும்ல அதான்”
“என்ன உளர்ற “?
“எவன்டா உலருறது உங்க ரெண்டு பேருக்கும் ஏதும் இல்லாம எப்டிடா உன் தொடையில இருக்குற மச்சம் அவனுக்கு தெரியும்? இதற்கு பதில் சொல்ல தெரியாமல் ஒருகணம் திணறித்தான் போனான் அகஸ்.
“என்ன பதில் சொல்ல முடியலையா........?”
“தங்கம் இல்லடா அவன் எதோ சூழ்ச்சி பண்றாண்டா, ஏற்கனவே எனக்கு போன பண்ணி உன்ன விட்டு போகணும்னு மெரட்டினாண்டா திருச்சில நமக்குள்ள சண்ட வந்ததுக்கு கூட அவனும் காரணம்டா.
“சீ வாய மூடு. பொய் வேற சொல்லுறியா இல்லாத லீலஎல்லாம் நீ பண்ணிட்டு என்ன சந்தேக படுரியா நீ?, உன் புத்தியே எல்லாருக்கும் இறுக்கும்னு நெனச்சியா?
“ வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடி போல் இறங்கியது. இதனை கேட்ட அகஸ் புழுவாக துடித்து போனான்
“இல்ல வினு நான் எந்த தப்பும் பண்ணலடா உண்மையில அவனுக்கு எப்படி மச்சம் தெரிஞ்சிதுன்னு தெரிலடா, கெஞ்சினான்
“ உண்ட்ட்ட கேக்க வேண்டியது கேட்டுட்டன். உன்ன பாத்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு மொத்தல்ல எங்கியாது போய் தொல” ஈயத்தை காய்ச்சு துப்புவது போல இருந்தது வினய்யின் ஒவ்வொரு சொல்லும்’
“நான் எங்கடா போறது செத்துதான் போகணும்” மொதல்ல அத செய்யி நானாவது நிம்மதியா இருப்பன்”
சொல்லிவிட்டு பைக்கை கிளப்பி கொண்டு எங்கோ சென்று விட்டான். சென்றவன் ஹரீஷை தேடி பார்த்தான். இருந்த ஆத்திரத்துக்கு அவன் மூஞ்சில் நாலூ குத்து விட வேண்டும் போல இருந்தது வினய்க்கு. அவன் கிடைக்காதால் வீட்டிக்கு விரைந்தான், கதவிரண்டும் ஆவென திறந்து கிடந்தது அனைத்து விளக்குகளும் எரிந்தன. நடு கூடத்தில் அகஸ் எழுதிய கடிதமும் அதன் மீது அவனுடைய செல்போனும் வைக்க பட்டிருந்தது.
என் உயிருக்கு உயிரான வினு குட்டிக்கு
                  சத்தியமா நான் எந்த தப்பும் செய்யலடா. நீ செத்து தொலைனு சொல்லிட்ட. எதுக்கு சொன்னியோ தெரியல ஆனா நான் போறான்டா. அனேகமா நீ இந்த லெட்டர் படிக்கும் போது நான் போயிருப்பண்டா. ஐ லவ் யூடா. மிஸ் யூ டா.
                                உன்னோட அகஸ் குட்டி
படித்து முடித்த வினய்க்கு கை காலெல்லாம் உதர தொடங்கி விட்டது. அவன் கையிலிருந்த அகஸ்சின் போன் அதிர்ந்திருந்தது. ஹரீஷ் காலிங் என்று வந்தது. “இவன் ஏன் இவனுக்கு கால் பண்றான்.?” மனக்குழப்பத்துடன் அட்டன்ட் பண்ணி காதுக்கு கொடுத்தான்.
“என்னடா ஹீரோ...... நீ சொல்லுறதையே கேக்க மாடியாடா? நேத்து நடந்ததுக்கே இந்நேரம் நீ ஓடி போயிருக்கனும்.!!! ஆனா போகல. அந்த வினய் பயலும் எவ்ளோ சண்ட போட்டாலும் அப்புடியே உருகுறான்......? அதுக்குத்தான் இன்னைக்கு வேற வெடிய போட்டு அனுப்பிருக்கேன் என்ன புரியலையா? உனக்கும் எனக்கும் பர்ஸ்ட் இயர் படிக்கும் போதே எல்லாம் நடந்துட்டுன்னு அளந்து விட்டேன். அந்த முட்டா பயலும் நம்பிட்டான். எப்டின்னு கேக்குறியா? என் எஸ் எஸ் கேம்ப் ல ஒரு தடவ உன் மேல சாக்கடை தண்ணிய ஊத்துனேன் நாபகம் இருக்கா......? அப்ப கூட என் கண்ணு முன்னாடியே ட்ரெஸ்லாம் கழட்டிட்டு ஜட்டியோட நின்னு அலசுனியே...? அப்ப எதேச்சையா கண்ணுல பட்ட அந்த மச்சம் இப்ப கை குடுத்துட்டு தட்ஸ் ஆள்.
இங்கபார்.. இனி என்னதான் அவன்ட்ட நீ கெஞ்சினாலும் அவன் உன்ன நம்ப மாட்டான் மரியாதையா பெட்டி படுக்கைய கட்டிக்கிட்டு கெளம்பு. இல்லனா வினய்யே உன்ன அனுப்பிடுவான்” என்ன நான் சொல்றது?
“அனுப்பதாண்டா போறன் அவன இல்ல உன்னதான். நம்பிக்க துரோகி உன்ன போய் நம்புணன் பாரு என்ன செருப்பால அடிச்சா கூட தகாதுடா, உன்ன அப்புறம் பாத்துக்கிறன். இப்ப என் உயிர் என்ன விட்டு போய்ட்டு. அத தேடி கண்டு பிடிக்கணும்” னு சொல்லிட்டு வைத்தான் வினய்
 “அய்யோ அறிவு கெட்ட நாயே கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாமேடா. இப்ப உன்னோட கோவத்தால அவனயே இழந்துடுவ போலயேடா என்று தலையில் அடித்து கொண்டு அழுதவன் சற்றும் தாமதிக்காமல் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.
“ஊரையே கத்தி எழுப்பி கொண்டு படு வேகமாக 108 ஒன்று கடந்து சென்றது. அதை பார்த்ததும் வினய்க்கு உடலெல்லாம் படபடக்க தொடங்கியது. நேரம் இரவு பதினொன்றை தாண்டி விட்டிருந்தது நகரில் ஆங்காங்கு துரித உணவு கடைகள் மட்டும் மூடும் தருவாயில் இருந்தது. அது வரை சிறிய நகரமாக தெரிந்த மயிலை இன்றுதான் பெரிய நகரமாக தோன்றியது. எத்தனை தெருக்கள், எத்தனை சந்துகள் எல்லா வற்றிலும் புகுந்து பார்த்தான்., இரண்டு பேருந்து நிலையங்களிலும் பார்த்தான். அங்கு தள்ளுவண்டி பழக்கடைகாரரகள் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தனர் அவர்களை விசாரித்தான் எங்கும் கிடைக்க வில்லை அகஸ்டீன்.
“ ஐயோ அகஸ்சு நான் தெரியாம பண்ணிட்டனடா போறதா இருந்தா என்னையும் கூட்டி போயிருக்கலாமேடா. நீ இல்லாம நான் என்னடா பண்ணுவன் எங்கடா போயிருக்க?” என்று தன்னை நொந்து அழுத போது ஒரு யோசனை தோன்றியது. “ ஒரு ஆம்புலன்ஸ் போனுதே , ஒரு வேளை ஏதாவது வண்டில அடிபட்டுருப்பானோ? உடனே நகரின் அனைத்து மருத்துவ மனைகளுக்கும் விரைந்தான். ஏமாற்றத்தோடு திருபியவன் இறுதியாக அரசு மருத்துவ மனை நோக்கி சென்றான் அங்கு அவன் எதிர்பார்த்த 108 நின்று கொண்டு இருந்தது. கை காலெல்லாம் உதறியது, பயத்தில் இதயம் துடிப்பது காதுக்கு கேட்டது. ஆம்புலன்சை நெருங்கி உள்ளே எட்டி பார்த்தான். உள்ளே சில வாழை இலைகளும், எரிந்து போன துணி துண்டுகளும், கருகி போன சதை பகுதிகளும்  கிடந்தது. ஒருவாறு மனதை தேற்றி கொண்டு அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் விசாரித்தான்
“ அண்ணே என்ன கேசுன்னே?
“ ஒரு பொண்ணு தீக்க்குளிசுட்டு தம்பி அதான்”
“எதோ ஆக்ஸிடென்ட்னு கேள்வி பட்டன்?” சும்மா போட்டு பார்த்தான்.
“ ஆமாம் தம்பி ரயில்ல யாரோ அடிபட்டாங்கலாம் ஸ்பாட்அவுட்டாம் ஆம்பலயாம் அதான் மேம்பாலத்துகிட்ட ட்ராபிக் ஆய்ட்டு.” சொல்லி விட்டு நகர்ந்து விட்டார் அவர். வெயிலில் தூக்கி எரிய பட்ட புழு போல துடித்தான் வினய், பைக்கை  எடுத்து கொண்டு ஜங்க்ஷன் நோக்கி விரைந்தான். கண்ணீர் காற்றில் கலந்தது, காற்றுக்கே ஆச்சர்யம் நம்மை விட வேகமாக செல்லுகிறான் என்று. ரயில் நிலையத்தின் பிரதான வாசல் வழியே உள்ளே நுழைந்தான் விபத்தை ஏற்படுத்திய அந்த ரயில் வராததால் அதற்காக காத்திருந்த அனைவரும் குழுமி இருந்தனர்.  விபத்து நிகழ்ந்தது நிலையத்தின் அருகில்தான் என்பதால் நிகழ்விடத்திற்கு மக்கள் சாரை சாரையாக சென்று வந்த வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவன் பேசும் குரல் வினய்க்கு கேட்டது.
 “ தலையே இல்லடா, பாவம்ப்பா அவருக்கு என்ன பிரச்சனையோ? ,” உடனே அவர்களை நிறுத்தி கேட்டான்
“அண்ணே அவரு என்ன டிரஸ் போட்டிருக்கருன்னே? ஆள் குண்டா ஒல்லியா?”
“வேட்டி கட்டி கருப்பு சட்ட போட்ருக்காரு தம்பி நல்ல வாட்ட சாட்டமா இருக்காரு என் தம்பி உனக்கு தெரிஞ்சவரா”?
“இல்லன்னே சும்மாதான் கேட்டான்” வினய்ய்க்கு போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது. அப்பனா நீஎங்கடாபோன? ஒரு வேளை காரைக்காலுக்கு போயிருப்பானோ சரி உடனே போய் பாத்துடுவோம். என்று நினைத்து கொண்டு ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியதிலிருந்து அங்கு  எதிர் பட்ட கோயிலுக்கெல்லாம் அகஸ் கிடைத்ததும் அவனை கூட்டி கொண்டு வருவதாக வேண்டி கொண்டே கடை தெருவை அலசி கொண்டும் சென்றான்.
 “எனக்கு மனசு கஷ்ட்டமா இருந்தா இங்கதாண்டா வந்து அழுவேன் சக்தி வாய்ந்த சார்ச்டா” என்று அகஸ் ஒருமுறை வினய்யிடம் கூறிய புனித சவேரியார் ஆலயம் தென்பட்டது. எதோ ஒரு நம்பிக்கையில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான். வினய்க்கு புத்துயிர் பிறந்தது போல இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மின்சாரம் தடை பட்டதால் அந்த பகுதியே இருண்ட கண்டமாகி விட்டது. கதவு அறைந்து சாத்த பட்டிருந்தது. இருந்தாலும் அந்த கும்மிருட்டின் இடையில் ஒரு உருவ சலனம் தென் பட்டது. “கடவுளே அது கண்டிப்பா என் அகஸ்சா இருக்கணும் என்று அவனுக்கு தெரிந்த, தெரியாதா தெய்வங்களை எல்லாம் வேண்டி கொண்டு மொபைலை எடுத்து அங்கு சூழ்ந்திருந்த இருட்டுக்கு விடை கொடுத்தான்.
“ திடீர் வெளிச்சம் கொடுத்த கண் கூச்சத்தால் அழுது கொண்டு இருந்த அகஸ்டீன் நிமிர்ந்தான்.”
“டேய் அகஸ்சு.............!!!!!!!! செல்லம் தவிக்க விட்டுடியேடா என்ன நான்தாண்டா தப்பு பண்ணிட்டேன் அந்த ஹரீசு பயல பத்தி எல்லாம் தெரிஞ்சி கிட்டண்டா........” எனக்கு நீ தாண்டா முக்கியம்  என்று கட்டி பிடித்து கொண்டு அழுதான் வினய்.
ஓ........ வென்று கதறியழுதபடி வினய்யை கட்டி பிடித்த அகஸ், “எனக்கு தெரியும்டா நீ வருவன்னு, நம்ம காதல் நிஜமாருந்தா கண்டிப்பா நீ வருவன்னு காத்திருந்தண்டா, சாகுற முடிவோடதாண்டா வந்தன், செத்துட்டா உன்ன பாக்க முடியாதேடா . அதாண்டா முடிவ மாத்திகிட்டு இங்க வந்துட்டன்.” என்று கூறும்போது மின்சாரம் வந்ததால் அதுவரை அவர்களை சூழ்ந்திருந்த இருள் மறைந்து ஒளி வெள்ளம் பொங்கியது.
இனி ஆயிரம் ஹரீஷ் வந்தாலும் அவர்களை பிரிக்க முடியாது. சந்தேகம் என்ற தீ பொறி ஏற்படுத்திய பெருந்தீ இப்பொழுதான் அணைந்து, அவர்களை அணைக்க வைத்திருக்கிறது. இந்த இரவு நேரத்தில் இனி நாம் ஏன் அவர்களுக்கு இடையில் நந்தியாய்? வாருங்கள் உறங்க செல்லுவோம்.
                              -நிறைந்தது.
















































































































































































  

5 கருத்துகள்:

  1. சிறப்பான முடிவு நண்பா...

    அந்த முடிவை நோக்கி கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு... கதையின் முதல் பாகத்தை படித்ததற்கும், இறுதி பாகத்தை படிப்பதற்குமே நிறைய முதிர்ச்சி தெரியுது... இனியும் விடாமல், தொடர்ந்து எழுதுங்க.... சித்திரமும் கை பழக்கம்.... குறிப்பாக செல்போன் பற்றிய ஒரு சின்ன விஷயம், அதை நீங்கள் சொல்லியிருப்பது ரசிக்கும்படி உள்ளது... நிறைய இடங்களில் உவமைகள் சிறப்பாக அமைந்திருக்கு.... முதல் படைப்பென்று நிச்சயம் நம்பமுடியாது... அடுத்த படைப்பையும் இதே சூட்டோடு தொடங்கிடுங்க.... என்றும் என் வாழ்த்து உங்களுக்கு நிறைந்து இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே எல்லாம் தங்களிடம் இருந்தது கற்று கொண்டது தான். உங்கள் வாழ்த்துகளுடன் வளர விரும்பும் அன்பு நண்பன்

      நீக்கு
  2. nanba super kangal kulamaga aagivittadhu.....enna oru kadhai sathiyamma chance eh illa neenga unmayiliye great......

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே தங்களின் கருத்துக்கு தொடர்ந்து ஆதரவு தாறுங்கள்

    பதிலளிநீக்கு
  4. இறுதி பகுதியயை படிக்கும்போது கண்கள் பனித்தன.. நல்ல முடிவு ராஜ்குட்டி... :)

    பதிலளிநீக்கு

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..