பக்கங்கள்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

"விடுதலை" - சிறுகதை






                       

 

வந்தேமாதரம்! வந்தேமாதரம்!!

இந்த வார்த்தய நீங்க ஒருதரம் சொல்லி பாருங்களேன். அப்டியே தேகம் பூரா ஒருதடவ சிலுத்துக்கல? அப்டி சிலுத்ததுனாலதான் நாங்கலாம் சுதந்திர போராட்டத்துலயே கலந்துகிட்டோம், உங்களுக்கு ஒன்னு தெரியுமா? எங்க ஊருக்கு ஒரு தடவ பாபுஜி வந்தப்ப நான்லாம் ரொம்ப கிட்ட போய் நின்னுருக்கேன். அப்ப எனக்கு பதினேழு பதினெட்டு வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறேன் வயசாயிட்டு பாருங்க!! ஒன்னும் நாபகம் வெச்சுக்க முடியருதில்லே இப்பலாம். எங்க அப்பா அப்போ அரசாங்க காரியதரிசியா இருந்தாருஅதுனால எப்ப பாத்தாலும் வெள்ளகாரனுக்கு சலாம் போட்டுட்டே இருப்பாரு எனக்கு அதுல மனசு ஒப்பவே ஒப்பாது. அப்ப்ப்பா.. சலாம் போடுற அளவுக்கா வெள்ளகாரன் நடத்தை இருக்கும்!!?? எங்க ஜில்லாவுக்கு அப்ப ஒரு கலெக்டர் இருந்தான் பாருங்க!! அடாடா......!! பாரத கொடிய புடிச்சவங்கள பாத்தாலே அடிக்கிறதுக்கு ஆணை போட்டுருந்தான் அப்ப. அவன்ட்ட சிக்கிகிட்டு ஜனம் பட்ட பாடு இருக்கே சொல்லி மாளாது போங்க!! இப்ப யாரு iகலேக்டருன்னு தெரில??

 அப்புடி இப்புடின்னு சுதந்திர போர்ல கலந்துக்கணும்ங்கற முடிவுல வீட்ட விட்டு வெளியேறிட்டேன் அப்போ. தீவிர அஹிம்சா வாதியா இருந்த என்ன என் செல்லா தான் தீவிரவாதியா மாத்துனான் தெரியுமா!!??

இந்த செல்லா இருக்கானே! எனக்கு ஒரு சத்ய பிரமாணம் செஞ்சி குடுத்துண்டு போயிருக்கான் அதுனாலதான் நான் இவ்ளோ கஷ்ட்டத்த தாங்கிகிட்டு இந்த செறச்சாலைகுள்ள கிடக்குறன். ஆனா முன்னாடி மாறி இல்ல இப்பலாம் வெள்ளக்காரன். நெறைய வைத்தியகாரவா, தாதிமாருங்களலாம் நியமிச்சி அடிக்கடி இங்க உள்ள சுதந்திர போரளிகளுக்கு வைத்தியம் லாம் பாக்குறான்

ஆனா நான் யார்ட்டயும் அதிகமா வெச்சுக்க மாட்டேன் எம் மனசுல தேங்கி இருக்குற ஆசயலாம் என் செல்லா வந்ததும் கொட்டி தீக்கனும். அவன்ட வருஷம் பூரா பேசிட்டே இருக்கணும் அவனுக்காகவே சுதத்திரமான பாரதத்துல வாழனும், யார பத்தியும் கவலை படாம எங்கியானும் போய் ரெண்டு பேரும் தனியா போய் வாசம் பண்ணணும், அங்க இருக்குற சுதந்திர காத்த நிம்மதியா சுவாசம் பண்ணனும் அதான் எங்களோட கனவு ஆசை எல்லாம்.

ஆமா...!! கனா கண்டு என்ன பிரயோசனம் சொல்லுங்க? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணாம? ஆனா என்ட்ட சொல்லிட்டு போன மாதிரி கூடிய சீக்கிரமா செல்லா வந்துடுவான் நாட்டுக்கும் சொதந்திரம் கெடச்சிடும்னுடுதான இவ்ளோ நாளா காத்திட்டு இருக்கேன்!! பாத்தீங்களா!! இப்புடித்தான் நான் எப்போதும் எதையாவது சொல்ல போயி வேற எதையாது பேசிட்டு இருப்பேன். ரொம்ப நாள் கழிச்சு உங்கள்ட்டதான் பேசுறேணா அதான் புத்தி அங்கயும் இங்கயும் போயிட்டிருக்கு.

அப்ப்ப்பா..... எத்தன பேரு பொண்டாட்டி, புள்ள குட்டியலாம் பாக்காம கூட போராடுனாங்க தெரியுமா எவ்ளோ அடி, ஒதை வாங்கிருக்கோம் தெரியுமா? ஒருநாள் இப்புடித்தான் அந்த ஜில்லா கலெக்டர், அவன் பேரு கூட என்னுமோ வருமே ஜா..... ஜானோ...? மானோ....!! என்னனு ஒன்னும் நெகா வர மாட்டுது போங்க, சரி அது கெடக்கட்டும், அவன் போற வழில நின்னுட்டு நாங்கலாம்,

வெள்ளையனே வெளியேறு,

வந்தே மாதரம், ன்னு

கோஷம் போட்டுட்டு சத்யா கிரகம் பண்ணிட்டு இருந்தோம் போராட்டத்துக்கு பாத்யதை வாங்கிண்டுதான் பண்ணிடு இருந்தோம் அதுனால அவனால ஒன்னும் பண்ண முடில, ஆனா இந்த சீமாச்சு இருக்கானே அவன் அப்பவே இங்க்லீஷுல்லம் நால்லா படிப்பான் வாய வெச்சிட்டு சும்மா இருக்க கூடாது,!! சரியா அந்த கலெக்டர் வண்டி எங்கள தண்டுரச்ச

“ஹே..... ஒயிட் டாங்கிஸ் கெட் அவுட் பிரோம் மை மதர் லேண்ட் ன்னு நால்லா கத்திட்டான் “சாரட்ட நெறுத்த சொல்லி இறங்கி வந்து அந்த ஜானோ? மானோ? அவன்   

“ஹூஸ் தட் இந்தியன் டாங்கி ன்னு கேட்டான் பாருங்க உடனே நம்ம சீமாச்சு முன்னாலே போயி

“எஸ் iஐ அம தட் இண்டியன், ஒன்லி இண்டியன் “ ன்னு சொன்னான்னு நெனைக்கிறேன் அதுக்கு மேல இன்னும் என்னனமோ இங்க்லீஷுலதான் பேசுனான் ஆனா எனக்குத்தான் நாபகம் வர மாட்டுறது.

“நீ சொன்னத திரும்ப சொல்லுன்னு கலெக்டர் சொல்லியிருப்பான்னு நெனைக்கிறேன்

சீமாச்சு “வெள்ளையனே வெளியேறு ன்னு சொன்னான் ஒரு அரை நாளும் பலமான அறையா விழுந்துது சீமாச்சுக்கு நாங்களும் சும்மா இல்ல கையில இருந்த கொடிய தூக்கிகிட்டு “வந்தே மாதரம்! “வந்தே மாதரம்!! “வெள்ளையனே வெளியேறு!! ன்னு கோஷம் போட்டோம் நாங்க போட்ட ஒவ்வொரு கோஷத்துக்கும் ஒவ்வொரு அடி முதுகுல விழுந்துது. எங்களுக்காவது பரவால்ல சீமாச்சுவ கீழ தள்ளி அவன் வாயில பூட்ஸ் காலால மிரிச்சான் அந்த கலெக்டர். அப்பவும் இந்த சீமாச்சு விடலையே வாயிலருந்து வந்த உதிரத்த தொடச்சிட்டே சொன்னான் “வந்தே மாதரம் ன்னு ஆனா நாங்க யாரும் எழுத்து கேக்கல எல்லா அடியையும் வாங்கிகிட்டோம் நாங்கதான் அகிம்சா வாதியாச்சே!!

எனக்கு மட்டும் கையில ஒரு துப்பாக்கி இருந்தா அப்டியே அந்த கலெக்டர சுட்டு பொசுக்கி இருப்பேன். ஆனா அந்த நேரத்துலதான் கரெக்டா அந்த கலெக்டர் க்கு குறி வெச்ச குண்டுங்க சில  அவனோட சாரட்டுல பட்டு தெறிச்சிது குறி தப்பி

துப்பாக்கி வெடிச்ச சத்தம் கேட்ட எடத்துலருந்து எங்கள மாதிரி கொஞ்சம் பசங்க ஓடினது தெரிஞ்சிது அவங்கள புடிக்க அந்த பட்டாளத்தனுவோ ஒடுனதும் நாங்களாம் தப்பிச்சு அங்கங்க போய் பதுங்கிட்டோம்

அங்க இருந்த ஒரு மாட்டு கொட்டாயில தான் ஓடி போய் நான் பதுங்குனன் தொழுவத்துல பாதிக்கு மேல வைக்கபோர் மறச்சிருந்துது அதுக்கு அந்தாண்ட போய் உக்காந்ததும் தான் தெரிஞ்சிது அங்க இன்னொரு ஆள் இருக்குறது. அது யார் தெரியுமா? அதான் நான் முன்னாடி சொன்னேன்ல்ல என் செல்லான்னு அவன்தான். அவன அப்பத்தான் நான் மொத மொத பாத்தேன் அப்பவே அவன்ட பேசணும் , அவன் கூடவே இருக்கணும் போல இருந்துது மொதல்ல அமைதியா இருந்த நான்தான் அவன்ட்ட பேச்சு கொடுத்தேன்

“நீங்க தீவிர வாதியா? ஒரு மொறைப்புத்தான் பதிலா வந்துது.

 நான் விடுவேனா? தொடந்து கேட்டுகிட்டே இருந்தன், தீவிரவாதம் தப்பு இல்லையா? காந்திஜிய உங்களுக்குலாம் புடிக்காதா? துப்பக்கிலாம் எங்க வாங்குவீங்க? ஆனா எதுக்குமே பதில் இல்ல எல்லாத்துக்கும் மொரச்சான்

அப்ப்பா..... . அவனோட பார்வை இருக்கே அதுவே ஆயிரம் வார்த்தை பேசிடும் போங்க அப்புடியே திங்கிறது போல பாப்பான், அதும் அவன் கோவத்துல மொரைக்கும் போது அவன் மீசை அப்டியே துடிக்கும் தெரியுமா? இப்புடியே பேசிட்டே இருக்கும் போது அப்பத்தான் அங்க ஒரு பூட்ஸ் காலு சத்தம் கேட்டுது ஒடனே என் வாய அவன் கையால பொத்திட்டான் அப்ப்பா........ என்ன அழுத்தம் தெரியுமா? அந்தம் சத்தம் நின்னதும் “உனக்கு வாய் ஓயவே ஓயாதா? ன்னு கேட்டான். எனக்கு சிரிப்பா வந்துது ஆனா அதுக்கப்றம் கொஞ்ச நேரம் கழிச்சு மெல்ல எழுந்து ரெண்டு பேரும் பாத்தோம் தூரத்துல பட்டளத்தனுவோ நின்னுட்டுதான் இருந்தான்கள்.

மதிய நேரத்துல வந்து போருக்குள்ள உக்காந்தோம் பொழுது போற வரைக்கும் அந்த பட்டாளத்து காரன்கள் போவாததால வெளில போவ முடில. செல்லாவுக்கே கடுப்பாயி என்கிட்ட பேச்சு குடுத்தான். அவன் பேரு செல்லத்துரை, பட்டுகோட்டை பக்கம் அது இதுன்னு பேச ஆரம்பிச்ச அவனோட வார்த்தைலருந்து தான் சொதந்திர போராட்டத்தோட வீரியம் தெரிஞ்சிது எனக்கு. அதுவரைக்கும் எனகென்ன ஒனகென்னணு கொடிய புடிச்சமா, கோஷத்த போட்டமா, ஓதய வாங்குனமா, ஒடுனமான்னு தான் இருந்துது என்னோட போராட்டம். அந்த கொஞ்ச நேரத்துலயே அவனோட அறிவும், அழகும் பிரமிக்க வெச்சுது என்ன. அதுனாலேயே அந்த பட்டாளத்து காரன்கள் போவ கூடாதுன்னு பெருமாள வேண்டிகிட்டன். அதுக்கு ஏத்தா போல பொழுது இருட்டுற வரைக்கும் அவனுங்களும் போகல அவனுங்க போனதுக்கப்றம் நல்ல மழை புடிச்சிகிட்டு. அப்ப ராத்திரி முச்சூடும் ஒன்னதான் இருந்தோம் அந்த இருட்டு குள்ள என் மனசுல தப்பானா என்னம் இருந்தது என்னமோ வாஸ்தவம் தான். ஆனா குளுருக்கு என்ன கட்டி புடிச்சிகிட்டு தூங்குன அவன்ட்ட எந்த தப்பான எண்ணமும் இல்ல. அதுவரைக்கும் சும்மா சுதந்திர போராட்டத்துல கலந்துக்கனும்ன்னு இருந்த என்ன அவனோட சமீபமா இருந்த அந்த ஒரு ராத்திரி மாத்திட்டு!! அப்ப்பா............. நேதாஜிலருந்து, கோபால கிருஷ்ண கோகலே, காங்கிரஸ், இந்திய தேசிய ராணுவம், ரௌலட் சட்டம், உப்பு சத்யாகிரகம், காந்தி, நேரு, பெரியார், செல்லுலார் செறன்னு எல்லாத்தையும் அந்த ஒரு ராத்திரில புரிய வெச்சான்.

பொழுது விடிஞ்சதும் இனிமே சொதந்திரத்துக்காக உயிர் போர் வரைக்கும் போரடனும்ன்னு முடிவெடுத்தேன். அதும் செல்லாவோட சேந்துதான் போராடனும், இனிமே இவன் கூட தான் நம்ம உயிர் போரவரைக்கும் இருக்கணும், இவன் இதயத்துல நமக்குன்னு ஒரு இடத்த புடிச்சிக்கணும், சொதந்திர இந்தியாவுல இவனுக்காக இவனோட வாழனும் ன்னு முடிவெடுத்து; உங்களோட என்ன கூப்ட்டு ;போறிங்களா ன்னு எப்புடி கேக்குறதுன்னு தயங்கி நின்னப்பத்தான் அவனே “என்னோட வந்துடுறியா எனக்கும் யாரும் இல்ல!! நாம ஒண்ணா இருக்கலாம் உயிர் போறவரைக்கும் நாட்டுக்காக போரடுலாம் ன்னு கேட்டான். கெளம்பிட்டோம்

அங்க அங்க எங்கள மாதிரி தீவிரவாதிங்கலாம் கூடுவோம் திட்டம் போடுவோம், ஆங்கிலேய அதிகாரிங்களையும், அதுல அடக்கு முறைய கைய்யாளுரவங்களையும், போராட்ட தியாகிகள கொடுமை படுதுரவங்களையும் கண்டிச்சோம், தண்டிச்சோம் பல நேரத்துல எங்க முயற்சி தோல்வில முடியும், சில நேரத்துல ஜெயிப்போம், எங்களுக்கு இதுக்குலாம் எங்கருந்து ஆயுதம், ஆதரவு வந்துது ன்னுலாம் கேக்காதிங்க அதுலாம் ரகசியம்.

நான் மட்டும் அப்பப்ப வீட்டுக்கு போய்ட்டு வருவன் எங்கப்பா இருந்தா மரியாதை இருக்காது. ஆனா எங்க அம்மா அண்ணன் அண்ணி  எல்லாம் ரொம்ப பெரும பட்டுப்பாங்க யாருக்கும் தெரியாம சாப்பாடு போட்டு அனுப்புவாங்க ஏன்னா நாங்கதான் தேட படுற குற்றவாளிகளாச்சே!! திருத்துறைப்பூண்டி நானும் செல்லாவும் தனியா தங்கியிருந்தோம்.

 எனக்கு தெரியும் அவனுக்கு என் மேல காதல் இருக்குன்னு அவனுக்கும் தெரியும் நான் அவன விரும்புரன்னு. ஆனா நாட்டுக்காக போராடுற நமக்குள்ள ஆசா பாசங்களுக்கு இடம் இல்லன்னு அடிக்கடி நாங்கலாம் போடுற கூட்டத்துல செல்லா சொல்லுவான் அதுநால அவனும் காட்டிக்க மாட்டான் நானும் அத வெளி படுத்துறது இல்ல. என்கிட்டே சகல விதமான உரிமையும் எடுத்துப்பான் இரவுல தூங்கும் போது ஒன்ணாத்தான் தூங்குவோம் ஆனா எங்களுக்குள்ள ஒன்னும் நடந்தது இல்ல. எங்க குழுவுல நான் செல்லா.பாஸ்கர்,ரவி,வேணுகோபால், ராஜகுமார், பிரமோத், சிவசங்கர், பாரதி, நிரஞ்சன் ன்னு பத்து பேரு இருந்தோம்.

இதுல அங்கங்க நடந்த போராட்டத்துல அந்த பாஸ்கர், நிரஞ்சன் நான் செல்லா தவிர மீதி பேருல்லாம் மாட்டிகிட்டு நாட்டுக்காக தூக்குல தொங்கிடாங்க. எல்லாருக்குமே சின்ன வயசுதான் அப்ப அப்டி போராடுனோம் உயிரை கூட மதிக்காம. ஆனா இப்ப இருக்குரவங்கலாம் அப்டியா இருக்காங்க?

ஆனா முன்னாடி மாதிரி இல்ல இப்ப வெள்ளகார கவர்மென்ட். நம்ம நாட்டு பிரஜைகளுக்கு அதிகமா வேலை தருது, இந்த ஜெயில்லையே அதிகமா நம்ம நாட்டு ஆளுங்கதான் இருக்காங்க வேலையில. பாத்திங்களா மறுபடியும் பேச்ச மாத்திட்டன் ம்ம்ம்ம் என்ன சொன்னேன்? ம்ம் போராட்டம்!!

நாங்க ஒரு பக்கம் போரடுனாலும் இந்த அகிம்சா வழி போராட்டத்துக்கு வெள்ளக்காரன் கொஞ்சம் படிய ஆரம்பிச்சுட்டான். 1945ம் வருஷம் ஆகஸ்ட் 17 அன்னைக்கு நேதாஜி செத்துட்டருன்னு பொராளிய கெளப்பி விட்டுருந்தாங்க அப்ப. அதுலருந்து தீவிரவாத போராட்டம் கொஞ்சம் கொஞ்சமா தனியவும் ஆரம்பிச்சுது. எங்களுக்கு ஒரே கொழப்பமா இருந்துது ஆனா அப்ப

“அவரு போனா என்னடா அவரோட வீரியம் மிக்க வார்த்தைகள் இல்லையா? அவர் காட்டி குடுத்த வழி இல்லையா? அவரு இருந்தாலும் இல்லைனாலும் நம்மோட போராட்டம் ஓய கூடாது; நம்ம ஒடம்புல ஓடுற ரத்த ஆறு சுதந்திர கடல்ல கலக்குற வரைக்கும் நாம் போராட்டம் ஓய கூடாது; பாரத தாயோட முந்தானைய புடிச்சுருக்குற ஆங்கிலேயர்களோட கைகளை தரையில் துண்டாக்கி விழ வைக்கிற வரைக்கும் நம்ம போராட்டம் ஓய கூடாது. அவரு செத்து போயிருந்தா நாட்டுக்காக உயிர் விடுற பாக்கியம் அவருக்கு சீக்கிரம் கெடச்சிருக்கே நமக்கு கெடைக்குலையே ன்னு நெனச்சு வருத்த படுங்க, அவர் செத்துட்டருன்னு வருத்த படாதிங்க. ஏன்னா அவரோட கொள்கைகள் நம்ம கூடத்தான் இருக்கு ன்னு செல்லா சொன்ன வார்த்தைகள் எங்க மூணு பேருக்கும் புத்துயிர் கொடுத்த மாதிரி இருந்துது.

அந்த வேட்கையோட எங்க ஜில்லா கலெக்டர், அந்த “ஜான கொல்லனும் அவன சுட்டு பொசுக்கனும்ங்கற முடிவோட தஞ்சாவூர் போனோம். அன்னைக்கு கலெக்டர் அலுவலகம் முன்னாடி அகிம்சா வாதிங்க ஏதோ போராட்டம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அந்த கூட்டத்த அடக்க எப்டி இருந்தாலும் அந்த கலெக்டர் வருவான் அவன சுடணும்னு முடிவு பன்னிருந்தோம். அதுக்காகவே நாங்களும் அஹிம்சா வாதிங்க மாதிரி தலைல தொப்பி, கதர் துணின்னு மாட்டிகிட்டு கூட்டத்தோட கூட்டமா கலந்து நின்னோம். சரியான சமயத்துல போராட்ட காரவங்க கலெக்டர் அலுவலகத்த முற்றுகை இட நெனச்சப்ப எல்லாரையும் அடிச்சு தொரத்த உத்தரவு போட்டான் அந்த கலெக்டர். மக்கள் தெறிச்சி ஓடுறத பாக்க வெளில வந்தவன நாங்க நாலு பேரும் குறி பாத்து வெச்சிருந்த துப்பாகியால சுட்டோம். சரியா நாலு குண்டும் போயி அவன சுட்டு பொசுக்குச்சு. அதுக்குள்ளே போலீஸ் காரன் துப்பாக்கிலாம் வெடிக்க ஆரம்பிச்சுட்டு. அதுல பல பேர் செத்தாங்க அதுல பாஸ்கர் நிரஞ்சனும் அடக்கம். அப்ப அத பாத்துகிட்டே இருக்கும் பொழுது என் தலைல போலிஸ் காரனோட தடி ஒன்னு “மடார் “மடார் ன்னு அடிச்சிது கண்ணுல பொறி கலங்கிட்டு போங்க. ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா மூஞ்சில வழிய ஆரம்பிச்சுது சாஞ்சிட்டேன். அந்த அலறல் சத்தத்துக்கு இடையிலையும் செல்லாவோட குரல் எனக்கு கேட்டுது ஆனா கண்ண தொறக்க முடில. அழுதுகிட்டே பேசுனான்

“ மணி எந்திரி மணி வாடா போலாம் என்னடா இப்புடி படுத்துகிட்ட? ஐயோ ரத்தம் வேற ஒழுகுதே? அவனோட பழகுன அந்த பதினோரு மாசத்துல அவன் அழறத அப்பத்தான் பாத்தன் இல்ல இல்ல கேட்டன்.

“வாடா போலாம் இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள எப்டி இருந்தாலும் நாடு விடுதல அடைஞ்சிடும். அப்ப உன்னோட தனியா வாழணும்னு ஆசையா இருக்குடா என்ன விட்டு போயிடாதடா? மணி மணி எந்திரிடா மணி

நான் எந்திரிக்க முயற்சி பண்ணுனன் ஆனா கண்ண கூட தொறக்க முடியல. அதுக்குள்ள பட்டாளத்து காரங்க அவன புடிச்சிட்டாங்க ன்னு நெனைக்கிரன். அடிக்கிறாங்க போல வலி தங்க முடியாம கத்துறான். கொஞ்ச கொஞ்சமா அவனோட சத்தம் என் காதுலருந்து விலகுது

ஆனா அவன் சொன்ன அந்த கடைசி வார்த்தை மட்டும் இன்னும் என் காதுல கேக்குது

“மணி இன்னும் ஒரு வருஷம் தண்டா சொதந்திரம் கெடச்சதும் வந்துடுவன் நீ எங்கருந்தலும் தேடி வருவேன். கண்டிப்பா வருவேன் எழுந்திருடா!!! எழுந்திருடா!! “ ஆனா அதுக்கப்றம் வேற எந்த சத்தமும் எனக்கு கேக்கல

அப்புறம் கண்ணு முழிச்சப்ப ஏதோ ஒரு ஆஸ்பத்திரின்னு நெனைக்கிறேன் எங்க அம்மா அண்ணன் அண்ணி எல்லாம் இருந்தாங்க. ஆனா மணி இல்ல.

நாட்டுக்கு இன்னும் சுதந்திரம் கெடைக்கில போலன்னு நெனச்சிகிட்டேன். வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க போற வழில பாத்தேன் முன்னாடி மாதிரி போராட்டம்லாம் காணும் அஹிம்சாவாதி தீவிரவாதி யாரையும் காணும். என்ன சொதந்திர போராட்டம்லாம் ஒன்னும் நடக்குலன்னு எங்க அண்ணிகிட்ட கேட்டேன்

“என்ன தம்பி நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சி ஆறு மாசம் ஆயிட்டு இப்ப எப்புடி போராடுவாங்க சிரித்தாள்

“என்ன அண்ணி சுதந்திரம் கெடச்சா செல்லா வந்திருப்பானே!! அப்பனா இன்னும் சொதந்திரம் கெடைக்கில பொய் சொல்றீங்கன்னு சிரிச்சன்

ஆனா அதுக்கப்றம் எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சொதந்திரம் கெடச்சிட்டு கெடச்சிட்டுன்னு. நீங்களே சொல்லுங்க சொதந்திரம் கெடச்சா என் செல்லா வரன்னு சொல்லிருக்கன்ல அப்ப இந்நேரம் வந்துருக்கணும்ல்ல?

 அப்புறம் ஒரு கட்டத்துல சொதந்திரம் கெடச்சிட்டுன்னு சொல்றவங்கள பாத்தாலே எனக்கு புடிக்காது இப்படித்தான் ஒரு தடவ எங்கண்ணன போட்டு அடிச்சிட்டன்

அப்பத்தான் எங்க அண்ணனும் அண்ணி யும் சொன்னங்க தம்பி உங்கள மாதிரி போரடுரவங்கலாம் கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்தா சொதந்திரம் குடுத்துடுறதா வெள்ளகாரன் சொல்லிருக்கான் நீங்களும் போனீங்கன்ணா உங்க செல்லாவ சீக்கிரம் பாக்கலாம்ன்னு

ஆஹா..... இத விடவா பெரிய பாக்கியம் வேணும் நான் தயார் ன்னு சொன்னேன். அப்பத்தான் இந்த ஜெயில்ல கொண்டு வந்து என்ன போட்டாங்க

அதாங்க முன்னாடி சொன்னேன்ல வைத்திய காரவங்க தாதிமாருங்கலாம் அதிகமா இருக்காங்கனு சொன்னேன்ல அந்த ஜெயில்தான்.

என்ன? இங்கயும் யாரும் சொதந்திரத்துக்கு போராடுறது இல்ல நான் போய் எல்லாரையும் கூப்ட்டு பாப்பேன் வரமாட்டங்க. நேத்திக்கூட கூப்டன் நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சி அறுபத்தி ஆறு வருஷம் ஆயிட்டு இப்ப போய் போராட கூப்டுற ன்னு சொன்னான் ஒருத்தன். எனக்கு வந்துது பாருங்க கோவம் கையில இருந்த கம்பாலையே போட்டு அடிச்சிட்டேன். முன்னாடிலாம் எல்லாருகிட்டயும் நல்லாத்தான் பேசுவேன் ஆனா எல்லாரும் தேசபக்தி பைத்தியம் தேசபக்தி பைத்தியம்னு சொல்லுவாங்க அதுனால நான் யார்ட்டையும் அதிகம் வெச்சிக்கிறது இல்ல. எல்லாம் கொஞ்ச நாள் தான் இன்னும் ஒரு வருஷத்த்துல நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சிடும். என் செல்லாவும் வந்துடுவான் அப்புறம் எனக்கு இந்த ஜெயிள்ளருந்து விடுதலைதான்.   

                                                                                                              -நிறைந்தது 



புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை, சுதந்திரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை, அந்த சுதந்திரத்திற்காக எங்களுக்கு வழங்கப்பட கூடிய தண்டனைகளால் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் வரவேற்கவே செய்கிறோம். புரட்சியின் பலி பீடத்தில் எங்களது இளமையை காணிக்கையாக்குகிறோம்

                                                                                                                -மாவீரன் பகத்சிங்

                                                       வந்தே மாதரம்