பக்கங்கள்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

உளியின் ஓசை (பாகம் மூன்று)

   

                                 11
                             கடாக்களிறு


வானத்தில் வெள்ளிதட்டு ஒன்றிலிருந்து கற்கண்டு சிதறி கிடப்பதை போன்ற பிம்பத்தை வெண்ணிலவும் விண்மீன்களும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் அந்த இரவு வேலையில், மாறனை கட்டி தழுவி இன்பம் கண்டதால் அவனது உடல் மணம் தன் உடலிலும், உதட்டின் மணம் தன் உதட்டிலும் வீசுவதை உணர்ந்து .உள்ளுக்குள் சிலிர்த்த படியே பாசறையை அடைந்தான் சொக்கன்.
அருகிலுள்ள யானை கொட்டகையில் இருந்து அவற்றின் மணியோசை காற்றை கிழித்து கொண்டிருந்தது. வழக்கத்தை விட இன்று கூடுதலாகவே அந்த சத்தம் கேட்டது சிறிய ஐயூரை ஏற்படுத்தினாலும். மருத்துவ முகாமுக்கு சென்று வந்த உற்சாகம் போல என்று எண்ணி கொண்டான்.
 தொடர்ந்து அறைக்குள் சென்றவனுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. சக வீரர்களெல்லாம் உறங்கி கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தவனுக்கு, அங்கு அனைவரும் அமர்ந்து எதை பற்றியோ தீவிரமாக் வாதம் புரிந்து கொண்டிருப்பது வியப்பாக இருந்தது. இவனை கண்டதும் தீபச்சந்திரன் ஓடி வந்து
“சொக்கா... இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய்?”
“நம் வாழ்நாளில் நாளை மறக்கமுடியாத நாளாய் அமைய போகிறதடா..!!” என்றான்.
வியப்பு மேலிட, “என்னடா விஷயம் கூறும்போதே ஆவலாய் இருக்கிறது சொல்” என்றான் சொக்கன்.
“நந்தியெம்பெருமான் அமைக்க கொண்டு வரபட்டிருக்கும் கல்லையும், ஆலய பணிகளையும் பார்வையிட நாளை அரன்மனையிலிருந்து மகளீர்கள் ஆலயத்திற்கு வர போகிறார்களாம்!!!”
“ச்சே இதுதானா? இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன இருகிறதடா? ஏண்டா இப்படி பெண்கள் என்றால் அலைகிறீர்கள்?” என்று சலிப்புடன் கூறிய படி தனது படுக்கைக்கு சென்ற சொக்கனை தடுத்து நிறுத்தினான் சந்திரன்.
“வாயை கழுவுடா பாவி, அந்தபுரத்தில் இருந்து நாட்டிய தாரகைகளும், நடன சிகாமணிகளும் ஒன்றும் நாளை வர போவதில்லையடா, பட்டத்தரசியாரும், பெரிய பிராட்டியாரும், கூடவே இளைய நாச்சியாரும் எழுந்தருள போகிறார்களாம்.” என்று அவன் கூறியவுடன் சொக்கன்
“ஆஹா.... என்ன பிழை செய்துவிட்டேன்!!?, சரி சரி பொருத்து கொள்ளடா. “ அப்படியானால் சிறப்பு நிகழ்ச்சி ஏதேனும் இருக்குமே?”
“ஆமாமடா பலவித வரவேற்பிற்கு ஏற்பாடு செய்ய பட்டிருக்கிறதடா. அவர்கள் வரும் பொழுது வாயிலில் நமது யானைப்படை கூட அணிவகுத்து நிற்க வேண்டுமாம், அதற்கு நமது குழுமத்தை தான் தேர்ந்தெடுத்திருகிறார்கள்.”
“அப்படியா...!!! நிச்சயம் படை பிரிவில் சேர்ந்த பின் நமக்கு கிடைக்க போகும் முதல் பெருமையடா இது” உண்மையாகவே ஆனந்தித்தான் சொக்கன்.
“ஆமாமடா சூரியோதயத்திற்கு பின் மூன்று நாழிகை கழித்து வருவார்களாம், நாமெல்லாம் முன்பே சென்று ஒதுக்க பட்ட இடத்தில் யானைகளுடன் நின்று விட வேண்டும், மேலும் நமக்கு அளிக்க பட்டுள்ள சகலவித ஆபரண அணிகலன்களுடன், முறையான சீருடையில் இருக்க வேண்டுமாம். அதை பற்றித்தான் இத்துணை நேரம் பேசிகொண்டிருந்தோம் எல்லோரும்.”
“ ஆமாம் நீ எங்கு சென்றிருந்தாய்?” இதற்கு சற்றே தடுமாறிய சொக்கன்.
“அது! அது!! அதுவந்து..... நண்பனை பார்க்க போயிருந்தேன்!!”
“ம்ம்.... நண்பனா? இல்லை அந்த மோர்க்காரியா?” மருத்துவ முகாமில் அந்த பெண் தனியாக உன்னிடம் ஏதோ கூறினாள் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறதே!! ஒரு வேளை அது சம்பந்தமாக ஏதேனும்...”
“என்னடா உளறுற?.... “ என்று அவனை தள்ளி விட்டு சமாளித்து அங்கிருந்து அகன்று விட்டான் சொக்கன், மனதில் சந்திரன் கூறியது சிறிய குழப்பத்தை ஏற்படுத்தினாலும், நாளைய தினத்தை பற்றிய எதிர்பார்ப்புகளுடனும், மாறனை பற்றிய நினைவுகளுடனும் படுக்கையில் சாய்ந்து கடந்த மூன்று நாள் உறக்கத்தையும் சேர்த்து உறங்கினான் சொக்கன்.
இரவில் “சந்திரன்” கூறிய தகவல்களை கடல் கடந்து எங்கேயோ உதித்து கொண்டிருந்த “சூரியன்” கேட்டிருப்பான் போல, தஞ்சையில் நடக்க போகும் விந்தையான நிகழ்ச்சிகளை காணும் ஆவலுடன் எழுகதிர் செல்வன் தன் கனகமணி பொற்கிரணங்களை நகரின் மீது விழும்படி செய்து கொண்டிருந்த அந்த புலர் காலை வேளையில் ஆலய பணியாளர்கள் வழக்கத்தை விட முன்னதாகவே வந்து பணிகளை துவங்கி இருந்தனர்.
அரசர் வருகை அடிக்கடி நிகழும் ஒன்றாக இருப்பதால் , சலித்து போன பணியாளர்களும், மக்களும் அரசிகளின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்தனர், பணியாளர்கள் கூடுதல் உற்சாகத்துடன் பணி புரிந்து கொண்டிருந்தனர், காலையிலேயே பணிக்கு வந்த மாறனிடம் தலைமை சிற்பி
“மாறா காலை வரும் பொழுதுதான் கவனித்தேன் முதல் திருவாயிலின் இடது ஓரத்தில் முதல் நிலையில் சிறிய இடம் மொட்டையாக இருப்பது போல இருக்கிறது நீ சென்று ஏதேனும் சிற்பம் வடித்து விட்டு வருகிறாயா?” என்று கேட்டார்
“சரி பிரபு என்று மறுப்பேதும் கூறாமல் சாரங்களை பிடித்து கற்றுளிகளுடன் மேலே ஏறி வாகாக அமர்ந்து கொண்டான் மாறன்.
அங்கிருந்து பார்க்கும் பொழுது தஞ்சை நகரின் தனிப்பெருமை அவனுக்கு விளங்கியது, மாட மாளிகைகள் கூட கோபுரங்கள், அரண்மனை, அதனை அரவணைத்த படி தூரத்தில் ஓடும் காவிரி என்று கண் கொள்ளா காட்சியாக இருந்தது அவனுக்கு, அப்படியே கீழே நோக்கும் பொழுது ராஜ வீதியின் அருகே அரசிகளை வரவேற்கும் ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது,
சாலையை ஒட்டி
பெருமுரசு, சிறுமுரசு, பேரிகை, சந்திர வளையம், மொந்தை, பாகம், உபாங்கம், துடி, தூம்பு, பேரிமத்தளம், கணப்பறை, கண்டிகை, கல்லல், கிரிகட்டி போன்ற தோற்கருவிகளை இசைக்கும் கலைஞர்களும்,
சங்கு, தாரை, நாதசுவரம், கொம்பு, எக்காளம், கொக்கறை, நமரி, திருச்சின்னம் போன்ற நாதகருவிகளை இசைக்கும் கலைஞர்களும்,
கைமணி, தாளம், நட்டுவாங்க தாளம், கஞ்ச தாளம், கொண்டி, கடம், சேமக்கலம், தட்டுக்கழி போன்ற தாள கருவிகளை இசைக்கும் கலைஞர்களும், வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.
 அதனை தொடர்ந்து பூக்களை வாரி இறைக்கும் பொருட்டு கையில் உதிரி பூக்களை கொண்ட தட்டுகளை தாங்கிய படி பாங்குற பெண்கள் வரிசை கட்டி நின்றிருந்தனர்,
அதனை தொடர்ந்து யானை படை வீரர்கள் தத்தமது யானைகளுடன் அணிவகுத்து நின்றிருந்தனர்,
அதனை தொடர்ந்து இருக்கும் வாயிற் மண்டபத்தை ஒட்டி சிவாச்சார்யர்கள் பூரண கும்பங்களுடன் நின்று கொண்டிருந்தனர். இவற்றை மேலிருந்து பார்க்கும் மாறனுக்கு மனம் எல்லையில்லா ஆனந்த பட்டது இருந்தாலும் யானை படையின் அணி வகுப்பில் பொக்கை விழுந்தது போல இடையில் ஒரு யானை இல்லாமல் இருந்தது அவனுக்கு முகம் சுளிக்க வைத்தது. அதை எண்ணி யோசித்த வண்ணம் நிமிர்ந்தவனக்கு சாலையின் மீது
தோள்களில் தோற்பட்டை, மார்பில் கவசம், தலையில் பாகை, அதன் மீது கோரை பூவுடன் புலிச்சின்னம், முதுகில் அம்பூரா தூளி, பளபளக்கும் பட்டாடை,
கையில் தனுசு, கதை. வீச்சு வாள், கட்டாரி, குறுவாள் போன்ற ஆயுதங்கள், இடுப்பில் சங்கு அதனோடு உள்ள சிறிய தோல்பை என்று போர் வீரனுக்குரிய சகல வித ஆபரணங்களுடன் ஆனை மீது ஆரோகணித்து வந்து கொண்டிருந்த சொக்கனை கண்டதும்
ஒருவேளை அந்த சிறை காத்த அய்யனார் தான் ஆனை வாகனத்தில் வீதியுலா வருகிறாரோ என்று கூட தோன்றியது மாறனுக்கு. மூன்று நாள் தொலைத்த உறக்கத்தால் அசந்து தூங்கிய சொக்கன் சற்றே தாமதமாகத்தான் புறப்பட்டு வந்தான். வந்த உடன் அவனுக்கு என்று ஒதுக்க பட்டு பொக்கையாக இருக்கும் அந்த இடத்தையும் நிரப்பினான்.
இதனை மேலிருந்து பார்த்த மாறனுக்கு நிலை கொள்ள வில்லை
“ஆஹா இவனை எப்படி மேலே பார்க்க வைப்பது? நாம் இவனை பார்த்து கொண்டிருக்கிறோம் என்று எப்படி அறிய வைப்பது? என்று யோசித்து கொண்டிருந்தாலும், சொக்கனின் கம்பீரமும், அழகும் அவனை பெரும் பாடு படுத்தியது.
இருந்தாலும் சமாளித்து கொண்டு அங்கு சிதறி கிடக்கும் கல் துண்டுகளில் ஒன்றை எடுத்து குறிபார்த்து சொக்கனின் மீது வீசினான் மாறன். கல் பட்டு விண்ணென்று தெரித்ததால் அனிச்சையாக மேலே பார்த்த சொக்கன் மாறனை கண்டதும் மனதை பறி கொடுத்தான்.
உடனே மேலிருந்து மாறன், பாட்டிகள் திருஷ்ட்டி கழிப்பது போல தன கையை முன்னோக்கி நீட்டி சுத்தி தலையில் வைத்து முறித்து கொண்டான், மட மட என்று நெட்டி முறிந்தது . மாறனின் இச்செய்கையால் சொக்கனுக்கு வெக்கமும், ஆசையும் பிடுங்கி தின்றது.
ஆனால் இந்த இன்ப வேளையில் ஏதோ தவறு இருப்பது போல சொக்கனுக்கு மனம் எதையோ உணர்த்தியது
 சட்டென கண்களை மூடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு அங்கு வீசி கொண்டிருக்கும் வித்தியாசமான புளித்த மணம் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. மூச்சை நன்றாக இழுத்து பார்த்தான் விளங்கி விட்டது.
“ஆஹா இது மத நீரின் வாடை ஆயிற்றே!!?” எந்த யானையிடம் இருந்து வருகிறது என்று தெரிய வில்லையே!!??” என்று கால்களால் தன் யானையின் முகப்படாமை விளக்கி குனிந்து பார்த்தான். யானையின் மதக்குழியில் மத நீர் வழிய வில்லை என்பதை ஊர்ஜித படுத்தி கொண்டான்.
பின் மற்ற யானைகளை பார்த்தான்; அனைத்து யானைகளின் முகமும் முகபடாம் போட்டு மறைக்க பட்டிருந்தது. அதனால் சரியாக உணர முடிய வில்லை சொக்கனால். மதம் கொண்ட யானை காதுகளை அசைக்காது, என்ற வகையில் யோசித்தாலும் கடைசியில் நிற்கும் யானிகளின் நிலைமை கண்களுக்கு புலப்பட வில்லை, என்ன செய்வது என்று யோசித்தவன் ஒரு முடிவை எடுத்த படி இடுப்பில் இருக்கும் தோற்பையை திறந்து பார்த்து மனதை திட படுத்தி கொண்டான், பூக்களை வாரி இறைக்க காத்திருக்கும் பெண்கள் வைத்திருக்கும் பூக்களிலிருந்து நறுமணம் வீசுவதால் சரிவர அது மதநீரின் மணம் தானா என்று கூட ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தான் சொக்கன். அந்த பூக்களின் வாசனையாலோ என்னவோ மற்றவர்களின் நாசிக்கு அந்த மணம் புலப்பட வில்லை போலும்.
சிறிது நேரத்தில் பட்டத்து யானை முன் வர அரண்மனையின் ஆஸ்த்தான வாத்திய காரர்கள் முன்னிசைக்க மூன்று சிவிகைகள் (பல்லக்கு) பலத்த பரிவாரங்கள் சூழ ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆலய வளாகமும் அங்கு கூடி இருக்கும் மக்களும் ஆவலுடன், பரபரப்பாய் காட்சி அளித்தனர். சாலையை ஒட்டி ஆலயத்தின் வாசலுக்கு நேர் எதிரே அமைக்க பட்டிருந்த மேடையில் முதல் பல்லக்கு இறக்கி வைக்க பட்டதும் அங்குள்ள கட்டியங்காரன்
வாணர்குல தலைவன் வந்தியத்தேவரின் வம்ச விளக்கு.........,
சுந்தர சோழர் ஈன்றெடுத்த சொல்லின் செல்வி.............,
ஆதித்த கரிகாலனின் தங்கை.......,
ஆகமங்கள் காக்கும் அருன்மொழித்தேவரின் அருகிருந்து காக்கும் அக்காள்..............
மும்மதம் காத்து பெரும்பேறு பெற்ற *
பெரிய குந்தவை பிராட்டியார் வருகிறார்...! வருகிறார்....!! என்றான்
தொடர்ந்து இரண்டாவது பல்லக்கு இறக்க பட்டதும்
திருவையாறில் உத்திர கயிலாயம் அமைத்து........,
திருவிசலூரில்இரணிய கர்ப்பம்* புகுந்து.........,
இடர் நீக்கும் ராசராசனின் இடப்பாகம் அமரும்....., உலகமாதேவி.....,
பட்டத்தரசி ஸ்ரீமதி தந்தி சக்தி விடங்கி தேவியார் வருகிறார் வருகிறார்....! வருகிறார்.....!!. என்று கூவினான் பின் தொடர்ந்து மூன்றாவது பல்லக்கும் இறக்க பட்டவுடன்
சோழதேசத்தின் செல்வத்திருமகள்......,
 சுந்தர சோழந்தெரிந்த வில்லி........,
மும்முடி சோழர் ஈன்றெடுத்த முத்து செல்வி.......,
தஞ்சை மாநகரின் பட்டத்து இளவரசி.....
 இளைய குந்தவை நாச்சியார் வருகிறார்...! வருகிறார்.......!! என்று கூவினான்.
தொடர்ந்து மூன்று அரச குல மாதர்களும் அங்கு விரிக்க பட்டிருந்த ரத்தின கம்பளத்தில் நடக்க துவங்கியதும் இசைக்கருவிகள் விண்ணதிர முழங்கின. அடுத்து பூமாரி பொழிய யானை படையை சேர்ந்த யானைகள் ஒரு சேர பிளிறி தங்களது வரவேற்பை நல்கின. அங்கு நின்றிருந்த அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க அவர்களுக்கு மங்கள ஆரத்தி காட்டி, பூரண கும்ப மரியாதையை கொடுக்க அதனை பெற்று கொண்டவர்கள் ஆஸ்த்தான மண்டபத்தில் எழுந்தருளி அமர்ந்தனர்.
உடனே மீண்டும் ஒரு முறை வாத்திய கருவிகள் விண்ணதிர முழங்கியது தான் தாமதம்,
அணிவகுப்பில் நின்றிருந்த யானை ஒன்று துதிக்கையை தூக்கி “ஓ” வென்று பிளிறிய படி அந்த கூட்டத்தில் புகுந்து அங்குள்ளவர்களை துவம்சம் செய்ய துவங்கியது. இசைக்கலைஞர்கள் எல்லாம் கருவிகளை போட்டு விட்டு ஓட, யானை அவற்றை மிதித்து நாசமாக்கி விட்டு, அதன் மீது அமர்ந்திருக்கும் தீபச்சந்திரனையும் சுமந்துகொண்டே சாலையில் உள்ள கடைகளையும், மக்களையும் அடித்து கலங்கடிக்க துவங்கியது. கணப்பொழுதில் நடந்த சம்பவத்தால் அனைவரும் அங்கு கதி கலங்கி போயிருந்தனர்.
இக்காட்சியை மேலிருந்து பார்க்கும் மாறனுக்கு சொக்கன் அந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டுமே என்று சிந்தித்தான், மேலும் காதலனின் பாதுகாப்பை பற்றிய ஐயமும் ஏற்படவே பதற்றத்துடன் சொக்கனை பார்த்து கொண்டிருந்தான். ஆனால் சொக்கனோ தனது யானையை விட்டு இறங்கி மதம் கொண்ட யானையை நோக்கி ஓடி கொண்டிருந்தான்.
மைந்துற்ற யானை* மீது அமர்ந்திருந்த தீபசந்திரனை காப்பற்ற வேண்டுமே!! என்ற நோக்கில் சொக்கன் யானையை நெருங்குவதற்குள் யனையை கட்டு படுத்த முயற்சித்த சந்திரனை யானை துதிக்கையால் வளைத்து பிடித்து இழுத்து விசிறி அடித்தது. அங்கு இருந்த மரம் ஒன்றின் மீது மோதி விழுந்தவனை தேடி கண்டு பிடித்து அவன் தலையில் பாதங்களை வைத்து மிதித்து தீபச்சந்திரனின் கதையை முடித்தது அந்த தேமுற்ற யானை.*
இருந்தும் வெறி அடங்காமல் மக்கள் கூட்டத்தை நோக்கி யானை நெருங்கி வரவே சிறிதும் தாமதிக்காமல் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு குதிரையின் மீது ஏறி யானைக்கு அருகில் சென்றான் சொக்கன். யானையின் பின் பக்கமாக சென்று இடுப்பில் இருந்த சங்கை எடுத்து சத்தமாக முழக்கினான் சொக்கன். அந்த சத்தத்தில் மேலும் கிளர்ச்சியுற்ற அந்த வேழம் தன் பருத்த உடலை திருப்பி சொக்கனை துரத்த துவங்கியது.
சொக்கன் குதிரையில் முன் செல்ல அவனை துரத்தி கொண்டு யானை வெறியுடன் பின் தொடர்ந்தது.
இக்காட்சியை மேலிருந்து பார்த்த மாறனுக்கு படபடப்பில் இதயத்தின் ஓசை இடிபோல கேட்டது.
“ஐயோ சொக்கா உனக்கு ஏனடா இந்த வேலை? எனக்கு உயிரே போவது போல இருக்கிறதே!!!, தேமுற்ற யானையை தேடிச்சென்று மல்லுக்கு இழுக்கிறாயே!! என்று மேலிருந்து தன்னை மறந்து கதறி கொண்டிருந்தான்.
யானை சொக்கனை கொன்றதா? சொக்கன் யானையை வென்றானா? இவற்றில் எது நடந்தாலும் மாறனின் மண நிலை எப்படி இருக்க போகிறது ?

சில தகவல்கள்

தேம், மைந்து- மதம்
மதநீர்- மதம் கொண்ட யானைக்கு கண்ணுக்கு பின் இருக்கும் சிறிய துவாரத்தில் இருந்து வழியும், புளித்த மணம் கொண்ட திரவம்
மும்மதம் காத்து பெரும்பேறு பெற்ற - தாராசுரத்தில் சைவ, வைணவ, ஜைன சமய கோயில்களை கட்டி கொடுத்ததால் இப்பட்டத்தை குந்தவை பெற்றிருந்தார்.
இரணிய கர்ப்பம்- இது ஒருவகை தானமாகும், வெங்கலத்தில் பசு உருவம் செய்து அதன் வயிற்றில் ஒரு திறப்பு வைத்து உள்ளே அமர்ந்து கொள்வர். பின் சங்குகள் முடிந்ததும் பசுவின் பிறப்புறுப்பு வழியே வெளியேறுவர் இதனால் இச்சடங்கை செய்தவர் புதிய பிறவி எடுத்தவராகிறார். இப்பிறவியில் செய்த பாவங்கள் இந்த பிறவியிலேயே தீர்ந்துவிடுவதாக இச்சடங்கின் மூலம் கருதினர். இச்சடங்கை திருவிசலூரில் மன்னன் துலாபாரம் எய்திய பொழுது அரசியார் செய்திருக்கிறார்.



                                     12                                          
                                   காதல் படகு’


மூற்பகலா அல்லது பொற்பகலா என்று வியக்கும் வண்ணம் ஏறுமுகத்தில் இருந்த கதிரவன் ஒளி பட்டு தென் இமயம் (தக்ஷினமேரு) என்று தஞ்சை மக்கள் போற்றும் பெரிய கோயிலின் உத்தம விமானம் ஜொலித்து கொண்டிருந்த அந்த காலை வேளையில் அங்கு கூடி இருந்த அனைவரும் முகங்களில் வியப்பு மேலிட, அவர்தம் புருவங்களோ அதைவிட மேலே செல்ல, அந்த காட்சியை பதைபதைப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.
ஆஸ்த்தான மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் அரசகுல மகளீர் கூட தம் நாட்டு வீரன் ஒருவன் மதயானையை வலுச்சண்டைக்கு இழுக்கும் காட்சியை பெருமிதத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.
ஆனால் ஆவலுடன் அனைவரும் பார்க்கும் அக்காட்சி மாறனுக்கோ உயிர் போகும் வேதனை எப்படி இருக்கும் என்று காட்டி கொண்டிருந்தது. சொக்கனின் இந்த தீரசெயலை கண்டவன்
“சொக்கா உனக்கு அந்த வேழத்தால் ஏதும் ஆபத்து நேர்ந்து விட்டால் நான் என்னடா செய்வேன்? அந்த யானை பாகன் போல உன்னயும் யானை மிறித்து கொன்று விட்டால்? ஐயோ!! இந்த காட்சியை பார்க்கவா இவ்வளவு உயரத்தில் வந்து அமர்ந்து கொண்டேன்?”. என்று தன்னை மறந்து புலம்பினான்
தாயே!! உரையூர் வெக்காளி!!! உன் கருணை மழையை பொழி தாயே!!! அந்த யானையால் என் சொக்கனுக்கு ஏதும் நேராத படி நீ தான் காக்க வேண்டும் அம்மா!! அவனை இந்த பேராபத்தில் இருந்து காத்து விட்டால் வரும் கடக கடைவெள்ளியில் உன் சன்னதியை 108 முறை பிரதட்சிணம் செய்கிறேன், அதோடு மட்டுமல்லாமல் சொக்கனோடு சேர்ந்து வந்து உன்னை தரிசிக்கிறேன் அம்மா!! சொக்கனை காப்பாத்து!! என்று வான்நோக்கி கரம்தூக்கி தொழுதவன், கண் திறந்து சொக்கனை பார்த்த பொழுது அந்த தேமுற்ற யானை சொக்கன் ஏறி சென்ற குதிரையை நெருங்கி, துதிக்கையால் பிடிக்கும் முயற்சியில் பின் தொடர்ந்தது.
ஆனால் சொக்கனோ இடுப்பில் இருந்த சங்கை எடுத்து இன்னொரு முறைமுழக்கி யானைக்கு மேலும் கிளர்ச்சியை பெருக்கிய படியே வேகமெடுத்தான்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த பரந்த வீதியில் ஒரே நேராக செல்லமால் குதிரையை சாலையின் இரண்டு பக்க விளிம்பையும் தொடுமாறு வளைத்து வளைத்து செலுத்தினான் இதனால் குதிரையை பின் தொடர்ந்த அந்த வேழமும் நேராக செல்லாமல் தன் பருத்த உடல் கொடுக்கும் சிரமத்தையும் பொருட் படுத்தாமல் குதிரையை போலவே விளிம்பிற்கு சென்று சென்று பின் தொடர்ந்தது. குதிரையின் மீது வேங்கை செல்லுவது போல தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கும் சொக்கனோ சாலையை ஒட்டி ஆலயத்தின் தென் பகுதியில் இருக்கும் அந்த பரந்த திடலில் நுழைந்தான். பின் தொடர்ந்த யானையும் தன்னை அலை கழிக்கும் குதிரையையும் சொக்கனையும் கிழித்து வானில் எரியும் நோக்கத்துடன் திடலுக்குள் நுழைந்தது.
அதன் நீண்ட தந்தங்கள் முற்றிய வாழை தண்டை கூர்பார்த்து செருகியது போன்ற வென்மயுடனும், இரண்டு கரங்களின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு பற்றினாலும் பிடிக்குள் சிக்காதபடி பெருத்த வடிவுடனும் இருந்தது. இன்பம் கொடுக்கும் ஆனை எழுப்பும் மணியோசை போலல்லாமல் அந்த வேழத்தின் கழுத்து மணிகளும், காற் சதங்கைகளும் இடி போன்ற ஓசையை எழுப்பி கொண்டிருந்தது, கொலைவெறியில் செல்லும் ஆனையின் மென் பாதம் படும் இடமெல்லாம் மண்மகள் உள்வாங்கி போயிருந்தாள். குழவிகளுக்கு கூட இன்பம் நல்கும் குறும்பு கார யானை போலல்லாமல், கொடூர வேகத்தை கொண்ட அந்த யானையை கண்டு அஞ்சாமல் சொக்கன் அதனை அழகாக மக்கள் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றதை கண்டு அனைவரும் வியக்கும் வேளையில்
சொக்கன் அந்த பரந்த வெளியில் அங்கும் இங்கும் குறுக்கும் நெடுக்கும், சடாரென பல திருப்பங்களையும் ஏற்படுத்திய வண்ணம் குதிரையை செலுத்த அந்த வேழமும் அதே போல அதன் பருத்த உடலை திருப்பி திருப்பி சொக்கனை கண் மூடி தனமாக துரத்தி கொண்டிருந்தது. அளவில் சிறியதாய் இருந்தாலும் குதிரையின் வேகத்துக்கோ அல்லது அதன் ஓடும் ஆற்றலுக்கோ ஈடு கொடுக்க முடியுமா யானையால்? தொடர்ந்து சொக்கனை சுற்றி சுற்றி வந்த ஆனை சிறிது சிறிதாக தன் வேகத்தை குறைக்க துவங்கியது, கால்களில் ஏற்பட்ட குடைச்சலும், ஓடியபடியே இருந்ததால் ஏற்பட்ட மூச்சிரைப்பும் அந்த வேழத்திற்கு வேதனையை தரவே அது வானத்தை கிழிக்கும் படி பிளிறி கொண்டே மிதமான வேகத்தில் விடாமல் சொக்கனை தொடர்ந்தது. வேகத்தில் சோர்வடைந்ததே தவிர இத்தனை நேரம் அலைகழிக்க பட்டதில் சொக்கனை கொல்லும் வெறியும், மதத்தின் செறிவும் அந்த யானைக்கு கூடித்தான் போயிருந்தது.
தன் எண்ணப்படி யானை சோர்வடைந்து விட்டதை உறுதி செய்து கொண்ட சொக்கன். குதிரையை யானைக்கு வெகு சமீபமாக செலுத்தினான். பின் சற்றே யோசித்த வண்ணம் விலகி வந்து இடது தோளில் குடி கொண்டிருந்த தனுசை எடுத்து அதில் வலது தோளில் குடிகொண்டிருந்த அம்பூராதூளியில் இருந்து பானத்தை எடுத்து பூட்டினான். யானை ஓடிக்கொண்டு இருப்பதால் அவனுக்கு நினைத்த வண்ணம் குறி பார்ப்பது சிறிதே சிரமத்தை கொடுத்தது. அந்த கனபொழுதில் கண்களை மூடி மனதை ஒருநிலை படுத்தி பூட்டியிருந்த அம்பிற்கு விடுதலை கொடுக்க, அது காற்றை கிழித்து கொண்டு போய் யானையின் துதிகையில் தைத்தது.
மெல்லிய பாதத்தில் கருவேல முள் குத்தினாலே வேதனையால் யானைகள் துடிக்கும் என்ற நிலையில், நாற்பதாயிரம் வகை தசை பிரிவால் வடிமைந்த துதிக்கையில் தைத்த அம்பு பெரும் வேதனையை யானைக்கு கொடுத்தது. அம்பு தைத்த துதிக்கையை பக்க வாட்டில் அசைக்க முடிந்தாலும், மேல்நோக்கி தூக்க அதனால் முடியவில்லை. துதிக்கையை தூக்கி பிளிருவதற்கே யானை மிகவும் சிரமப்பட்டது.
தீபசந்திரனை துதிக்கையால் வளைத்து பிடித்து விசிறி அடித்தார் போல இனி யானையால் செய்ய முடியாது என்று உறுதி படுத்தி கொண்ட சொக்கன் கையிலிருந்த தனுசை கண்களில் ஒற்றி அதற்கு மரியாதையை செய்து விட்டு அதனையும் அம்பூரா துளியையும் கழற்றி தரையில் எறிந்தான்
பின் யானைக்கு வெகு சமீபமாக சென்று அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடியே அதனை சுற்றி சுற்றி வந்தான். யானையும் நின்ற இடத்திலேயே சுழன்ற படி அவனை பிடிக்க முயன்றது. ஒரு கட்டத்தில் சுழற்சி காரணமாக யானைக்கு அழற்சி ஏற்பட துவங்கவே இதுதான் சமயம் என்று, அது சுதாரிப்பதற்குள் மின்னலென குதிரையில் இருந்து தாவி யானையின் மத்தகத்தில் கால் வைத்து கழுத்தில் கட்டபட்டிருந்த கயிறை பிடித்து அதன் பிடரியில் ஏறி அமர்ந்தான் சொக்கன்.
யானை ஒரு கனம் திகைத்தாலும் அங்கு சுற்றி கொண்டிருந்த குதிரையை துத்திக்கையால் ஒரு தட்டு தட்டவே அது தூரத்தில் தூக்கி எறிய பட்டு கனைத்த படியே எழுந்தோடி சென்று மறைந்தது. அதற்குள் சொக்கன் தன் மேல் அமர்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்த யானை துதிக்கையை தூக்கி அவனை பிடிக்க முயற்சித்தது ஆனால் அம்பு கொடுத்த வலியால் அதனால் சொக்கனை பிடிக்க முடிய வில்லை.
இதுதான் தக்க சமயம் என்று உணர்ந்த சொக்கன் தன் இடுப்பில் இருந்த தோல்பையில் கை விட்டு அதிலிருந்த குப்பிகளில் ஒன்றை எடுத்தான் ஆனால் அது இடுகளி* உண்டாக்கும் மருந்து என்பதால் பின் யானையின் மதத்தை கட்டுபடுத்தும் மருந்தை எடுத்தான்.
இந்த இடத்தில் மேற்சொன்ன மருந்துகளை பற்றி விளக்க வேண்டியது காதாசிரியனாக நமது கடமை ஆகிறது. போர்களத்தில் எதிரிகள் எய்யும் அம்பு முதலான ஆயுதங்கள் கொடுக்கும் வேதனையை பொருட்படுத்தாமல் களிறுகள் முன்னேற “குளுகு” எனும் தழையால் செயற்கையாக மதத்தை (இடுகளி) உண்டாக்கும் மருந்துதான் முதலில் சொக்கன் எடுத்த மருந்து.
இடுகளி ஏற்படுத்த பட்ட யானைகளின் மதத்தையும், இணை சேர்க்கை திமிரால் உண்டாகும் இயற்கை மதத்தையும் கட்டுபடுத்த “வாழை குருத்து” கொண்டு செய்யபட்ட மருந்துதான் சொக்கன் எடுத்த இரண்டாவது மருந்து.சரி இதனை கொண்டு சொக்கன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம் வாருங்கள்.
 அந்த மதம் தெளிய வைக்கும் மருந்தை இடுப்பில் இருந்த குறுவாளில் ஊற்றி தோய்த்து யானையின் தலை பகுதியில் உள்ள பள்ளமான பகுதியி ஓங்கி செருகினான் சொக்கன். ஒருமுறையோடு நிறுத்தாமல் மேலும் மேலும் அந்த மருந்தை உட்செலுத்தும் பொழுது ஏற்பட்ட காயம் கொடுத்த வேதனையையும், அதில் இருந்து பெருக்கெடுத்த குருதியாலும், ஏற்கனவே துதிக்கையில் தைத்த அம்பு கொடுத்த வேதனையாலும் துடித்து கொண்டே தன் வேகத்தை குறைத்தது யானை. பின் மேலிருக்கும் சொக்கனை மறந்து விட்டு மெல்ல தள்ளாடிய படியே நடந்து கரிய குன்று ஒன்று சூறாவளியால் பெயர்ந்து விழுந்தது போல தரையில் மயக்கமுற்று சாய்ந்தது அந்த யானை. அது சாய்வதற்குள் சொக்கன் அதன் மேலிருந்து குதித்து வீசியெறிந்த தனுசை போய் எடுத்து கொண்டான்.
இந்த காட்சியை வாய்மூடாமல் பார்த்த தஞ்சை மக்களும், கண்மூடாமல் பார்த்த மாறனும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தன் காதலனின் வீரத்தையும் ஆற்றலையும் குறைத்து மதிப்பிட்ட குற்ற உணர்வில் தவித்தாலும், இத்தகைய வீரமகன் தனக்கே உரியவன், அவனது நெஞ்சம் தன் தலை சாய்க்கும் மஞ்சம், அவனது உள்ளம் கொண்டிருக்கும் வெள்ளம் தன் மீதுள்ள காதல் பிரவாகம், அவனது வலிமை பொருந்திய தோள்கள் தான் தலை சாய்க்கும் தலையனை, என்று எண்ணிய பொழுது மாறனுக்கு காதல் உணர்ச்சி பிடுங்கி தின்றது.
இப்பொழுதே ஓடி சென்று சொக்கனை அனைத்து கொள்ள வேண்டும் அவனது வீரமிக்க கழல்களுக்கும் தீரமிக்க கைகளுக்கும், தர்மசாஸ்தாவை போன்ற அழகிய முகத்துக்கும், முருகனின் கரவேல் போன்ற கண்களுக்கும் தன் உதடுகளால் ஒற்றடம் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய படி கோபுரத்தில் இருந்து இறங்க துவங்கினான்
அதற்குள் சொக்கனின் சக வீரர்களும் தஞ்சைவாழ் மக்களும் ஓடி சென்று ஆனையை கொல்லாமல் வென்ற சொக்கனை தங்கள் தோள் மீது சுமந்து கொண்டு அரசிகள் எழுதருளி இருக்கும் மண்டபத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதற்குள் மற்றைய வீரர்கள் கனமான இரும்பு சங்கிலிகள் கொண்டு மயக்க முற்ற யானையை பிணைத்து கொண்டிருந்தனர், மேலும் கால்நடை மருத்துவரான மதுசூதனருக்கு தகவல் தெரிவிக்க பட்டிருந்ததால் அவரும் யானைக்கு மருத்துவம் பார்க்க வந்து விட்டிருந்தார் அவருடன் அரசிகளை காணும் ஆவலுடன் வந்திருந்த யசோதையும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்த படி சொக்கனை சுமந்து வரும் கூட்டத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டிருந்தாள்.
ஆணையின் மீது ஐய்யனார் போல, பின் குதிரை மீது கள்ளழகர் போல ஆரோகணித்த சொக்கன் இப்பொழுது மனிதர்களின் தோள் மீது ஆரோகனித்து வந்து கொண்டிருந்தாலும் அவன் கண்களோ கோபுரத்தின் மீது வீற்றிருந்த தன் காதலன் மாறனை தான் தேடின. நமது இந்த வீர பிரதாபத்தை மாறன் பார்த்திருப்பானா? அவன் இதனை கண் கொண்டு எப்படி பட்ட உணர்ச்சியுடன் இருப்பான்? என்று அறியும் ஆவலுடன் அவன் அமர்ந்திருந்த இடத்தை பார்த்தான் சொக்கன். ஆனால் அவன் அங்கு இல்லாதது கண்டு அவன் முகம் சுண்டி போய்விட்டது
நாடாளும் ராணிகளே தன் வீரத்தை கவுரவிக்க போகிறார்கள் என்று பெருமித படாமல் தன் மனதாளும் நாயகனின் பார்வைக்காக ஏங்கினான் சொக்கன். அதற்குள் சொக்கன் மேடையில் ஏறிவிட, கோபுரத்தில் இருந்து இறங்கிய மாறன் சொக்கனை நெருங்க கூட முடியாமல் இறங்கிய இடத்திலேயே தவித்து நின்றான், எப்படியாவது முன்னேறி முன்னுக்கு செல்லலாம் என்று எண்ணினாலும் அவனுக்கு முன் நின்ற பெண்ணொருத்தியால் இயலாமல் அங்கேயே நின்று விட்டான் மாறன். அவனுக்கு முன் நின்ற பெண்தான் யசோதை என்பதை குறிப்பிடவும் நாம் இங்கு கடமை பட்டுள்ளோம்.
மேடையில் இருக்கும் சொக்கன் அரசிகளை பணிவுடன் வணங்கி விட்டு கூட்டத்தில் எங்காவது மாறன் நிற்கிறானா என்று சுற்றும் முற்றும் யாரும் அறியாத படி தேடிக்கொண்டு இருந்தான், சொக்கன் நம்மைத்தான் தேடுகிறான் என்று உணர்ந்த மாறன் எப்படியாவது தன் இருப்பை உணர்த்த தவித்து கொண்டிருந்தான், ஆனால் யசோதையோ தன்னைத்தான் சொக்கன் தேடுகிறான் நாம் இங்குதான் இருக்கிறோம் என்பதை அவருக்கு எப்படி உணர்த்துவது என்று எண்ணி கொண்டிருந்தாள். காதல் கொண்ட மூவரின் ஆறு கண்களும் ஒன்றை ஒன்று சந்திக்க தவிக்கும் அந்த வேலையில்
குந்தவை பிராட்டியார் பேச துவங்கினார்.
“எனதருமை தஞ்சை வாழ் மக்களே!! எனது தமயன் பார் போற்ற ஆட்சி செய்யும் இந்த சோழ வள நாட்டில் அநியாயமாக ஒரு உயிர் போய்விட கூடாது என்ற எண்ணத்தில் வேழத்தை கொல்லுவதற்கு வாய்ப்பிருந்தும் தன் சமயோசித அறிவுடன் கூடிய வீரத்தால் மதயானையை அடக்கிய இந்த வீரனை எத்தனை பாராட்டினாலும் தகும்,
“உனது பெயர் என்ன அப்பா?”
“சொக்கநாதன் தாயே!!” பணிவுடன் கூறினான் சொக்கன்
“ஆஹா..!!! என்னப்பன் ஈசனின் நாமம்!! எனதருமை சோழவளநாட்டின் குடிகளே!!....... தேமுற்ற ஆனையை தேடிச்சென்று மல்லுகிழுத்து அதனை அடக்கியதால் இந்த வீரனுக்கு “ஆனையடக்கி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பிக்கிறேன். இன்றுமுதல் “ஆனையடக்கி சொக்கநாதன்” என்று நீ அழைக்க படுவாய் அப்பனே!!” என்று அவர் கூறி தனது கழுத்தில் இருந்த விலை மதிப்பில்லாத ரத்தின மாலையை கழற்றி சொக்கனுக்கு பரிசாக வழங்கினார். அதோடு நில்லாமல் அருகில் இருந்த பட்டத்தரசி தன் கையிலிருந்த விலை மதிப்பில்லாத மரகதகல் பதித்த மோதிரத்தை கழற்றி பரிசாக கொடுத்தார். அவைகளை பணிவுடன் பெற்று கொண்டு அவர்களுக்கு உரிய வணக்கத்தை செலுத்திய படி கூட்டத்தை நோக்கிய சொக்கன் மாறனை கண்டு கொண்டு விட்டான்.
மாறன், சொக்கன் நம்மை கண்டு விட்டான் என்பதை உணர்ந்த வுடன் ஆனந்த கண்ணீரில் நனைந்தான். சொக்கன் ஆனையை அடக்கிய போது இருந்ததை விட தற்பொழுது அரசிமார்களின் திருகரங்களால் பரிசு பெற்றது கண்டு அவன் மனம் ஆனந்த கூத்தாடியது. மாறனை கண்ட சொக்கனோ மரியாதையை மிகு இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து மாறனின் கண்களில் வழியும் நீரை கண்டு பெருமித உணர்வில் கண்ணீர் சிந்தினான். ஆனால் மாறனை கண்டு கண்ணீர் விடும் சொக்கன் நம்மை பார்த்துதான் ஆனந்தத்தில் அழுகிறான் “ஆகா.!! இவருக்குத்தான் நம் மீது எத்துனை காதல் இவரிடம் எப்படியாவது காதலை தெரியபடுத்தி அவரது நெஞ்சில் குடி புகுந்து விட வேண்டும்” என்று எண்ணிய பொழுது யசோதைக்கும் அங்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்நிலையில்
மாமன்னர் அருன்மொழித்தேவர்!! வாழ்க! வாழ்க!!
பெரிய குந்தவை பிராட்டியார்!! வாழ்க!! வாழ்க!!
ஆனையடக்கி சொக்கநாதன்!! வாழ்க!! வாழ்க!!
என்று கோஷங்கள் எழ சொக்கன் மேடையிலிருந்து இறங்கினான். இறங்கியவனை சக வீரர்கள் தூக்கி கொண்டு பாசறை நோக்கி நடக்க அங்கு இருந்த அணுக்க தொண்டர்கள் கூடியிருக்கும் மக்களை அப்புற படுத்த மூன்று தேவிமார்களும் ஆலயத்தின் பணிகளை பார்வையிட உள்ளே நுழைந்தனர்.
சொக்கனை காண நெருங்கி செல்ல முடியாத வேதனையுடன் எப்படியும் இன்று இலுப்பை தோப்பில் பார்க்கத்தானே போகிறோம் என்று மனதை தேற்றி கொண்டு கோபுரத்தின் மீது ஏறினான் மாறன், மொட்டையாக இருந்த இடத்தில் என்ன சிற்பம் செதுக்கலாம் என்று காலையில் எண்ணி கொண்டிருந்தவன் இப்பொழுது புத்துணர்ச்சியுடன் பொளிய துவங்கினான்.
தஞ்சையின் அழகை எவ்வளவு நேரம்தான் நீயே கண்டு கொண்டிருப்பாய்? நான் பார்க்க வேண்டாமா? என்று நிலவு சூரியனை கடிந்து கொண்டதா என்னவென்று தெரிய வில்லை, ஆதவன் விரைவாக மறைய சந்திரன் பால் மழை துவங்கி விட்டான். இன்பம் தரும் அந்த இரவில் இலுப்பை தோப்பில் காதல் புறா இரண்டும் களித்து கொண்டிருந்தது.
காலையில் அரசியார் தனக்கு அளித்த மோதிரத்தை மாறனின் கரம் பற்றி அவன் விரல்களில் போட்டு அழகு படுத்தினான் சொக்கன்
“என்ன சொக்கா எனக்கு போடுகிறாய் இது உனக்கு கிடைத்த பரிசல்லவா?”
“சொக்கன் சட்டென கண்கள் குளமாக பேச துவங்கினான்
“மாறா நீ வேறு நான் வேறென்றா இது வரை நினைத்து கொண்டிருக்கிறாய் இதுவே நீ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அந்த ரத்தின மாலையை உனக்கு பூட்டி அழகு பார்த்திருப்பேனடா’ ஆனால் எனக்குதான் காதலி வாய்பதற்கு பதில் காதலன் வைத்து விட்டானே!! அதனால்தான் இந்த மோதிரத்தை உனக்கு அணிவிக்கிறேன், இனி காலம் முழுவதும் இது உன் விரல்களில் என் நினைவாக இருக்க வேண்டும் என்ற பொழுது மாறன் சொக்கனை கட்டி பிடித்து கொண்டு அழுத படியே
“சொக்கா என்னை மன்னித்து விடடா உனது மேன்மையான அன்பை புரிந்து கொள்ளாமல் பேசி விட்டேன்”. என்றான்
பின் “சொக்கா நீயும் நானும் ஒருமுறை சேர்ந்து உறையூர் வெக்காளியம்மனை தரிசனம் செய்வதாக வேண்டியுள்ளேன் எப்பொழுது செல்லலாம்” என்று கேட்டான் மாறன்
“அப்படியா.!!! சரிதான் நான் எங்கள் படைக்குழு தலைவரிடம் அனுமதி வங்கி கொண்டு சொல்கிறேன் எத்தனை நாட்கள் ஆகும் நாம் சென்று வர?
“எப்படியும் முழுதாக ஒரு வார காலம் பிடிக்கும் நாளை கேட்டு விட்டு சொல்லடா, நானும் தலைமை சிற்பியிடம் அனுமதி வாங்கி விடுகிறேன் நாளை ஆலயத்தில் இதனை பற்றி முழுதாக விவாதித்து கொள்வோம்.”
“சரி மாறா உனக்கு இத்தனை விலை மதிப்பில்லாத பரிசை அளித்துள்ளேனே எனக்கு என்ன தர போகிறாய் என்று கேட்டான் சொக்கன்”
“அதுதான் நானும் யோசிக்கிறேன் என்னிடம் என்ன இருக்கிறது? உனக்கு கொடுக்க என்று சோகமாக தலை குனிந்த மாறனின் நாடியை பிடித்து தூக்கி உன்னிடம் என்ன இல்லையா? சரிதான் இந்த கோவை பழம் போன்ற உதடுகளுக்கு ஈடு இணை செய்யுமா அந்த விலை மதிப்பில்லாத ரத்தினங்கள்? என்று மாறனின் இதழ்களை கவ்வி சுவைக்க துவங்கினான்
காதல் கொண்ட பறவைகள் காம தேவனின் கூட்டுக்குள் அடைக்கலம் புக துவங்கிய இதே வேலையில் அங்கு யசோதையும் சொக்கன் காலையில் தன்னை தேடியதை எண்ணியும் பின் கண்ணீர் விட்டதை நினைத்தும் காதல் உணர்வில் தூக்கத்தை தொலைத்து கொண்டிருந்தால்.
ஆனால் காதலின் கடலில் படகோட்டும் சொக்கனும், யசோதையும் உண்மை தெரிய வரும் பொழுது அவர்களின் இதயம் சுக்கு நூறாக வெடிக்க போகிறது என்பதை அறியாமல் அந்த இரவுக்கு விடை கொடுத்து கொண்டிருந்தனர்.

சில தகவல்கள்
                             
இடுகளி- யானைகளுக்கு குளகு தழையிட்டு செயற்கையாக மதம் விளைவிப்பது.
குளகின் மூலம் மதம் உண்டாகும் என்பதற்கு சான்றுகள்:
காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
குளகுமென் றாண்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுனர் பெறினே(136) என்ற புறநானூற்று பாடல்
மற்றும்
சிந்தாமணியில் " குளகுபோல் மதத்தை விளைவிப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரிதென்றான்"(சிந்தமணி உரை 750) என்று குளகு பற்றிக் குறிப்பு உள்ளது.
வாழை குருத்தால் மதம் தெளியும் என்பதற்கு சான்றுகள்:
" சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்கு துயருற்ற மையல் வேழம்"( குறுந்தொகை 308)
யானைக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பை (அகம் 302-1-4),அகம் 8- 9-11) என்னும் சங்க நூல் வரிகளாலும் உறுதிசெய்துகொள்ளலாம்.
" யானைக்கு வாழைத்தண்டு,ஆளுக்குக் கீரைத்தண்டு" என்று கிராமங்களில் வழங்கும் பழமொழியாலும் உணரலாம் என்று உ.வே.சா குறிப்பிட்டுள்ளார்
தகவல்களுக்கு நன்றி: http://muelangovan.blogspot.in/2010_12_01_archive.html



                                      13
         காலத்தைவென்ற காதல்பரிசு



பொழுது புலர்ந்து ஒரு நாழிகை கடந்திருந்தாலும் ஆதவன் எழும்பியதை கூட கவனிக்காமல் சந்திரனும் போட்டிபோட்டு கொண்டு தஞ்சையின் அழகை ரசித்து கொண்டிருந்தான். காலை வேளையில் பாட சாலைகளுக்கு புறப்படும் முன் தெருவில் விளையடி கொண்டிருந்த சிறுவர்கள் கூட “டேய் அங்கே பாருங்களடா நிலாவும் சூரியனும் ஒன்னாவே இருக்கு”” என்று வானத்தை பார்த்து பேசிகொண்டிருந்தனர். கிருஷ்ணபட்சம்* (தேய்பிறை நாட்கள்) என்பதால் நிலவு மறைய சிறிது காலம் பிடிக்கும் அந்த இனிய காலை பொழுதில் வானை முட்டி கொண்டு எழும்பி இருக்கும் பெரிய கோயிலின் முதல் வாயிலில் கரும சிரத்தயாக மாறன் நேற்று பாதியில் விட்டு சென்ற சிற்பத்தை பொளிந்து கொண்டிருந்தான். “நேற்று இட்ட சிறிய வேலையை இன்னுமா முடிக்க வில்லை”” என்ற தலைமை சிற்பியின் கடிதலுக்கு இடம் கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் காலையிலேயே வந்து மாறன் பணியை தொடங்கியிருந்தாலும் அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கும் என்பது போலவும் தெரிகிறது.’
கூர்ந்த சிந்தனையுடன் கல்லை கலை ஆக்கி கொண்டிருக்கும் மாறனின் கவனத்தை “ஜல் ஜல் ஜல்”” என்ற சலங்கை ஓசையும், மாடுகளை விரட்டும் வண்டிக்காரனின் சத்தமும் சிதறடிக்கவே என்னவென்று குனிந்து பார்த்தான்.. நான்கு ஐந்து மாட்டு வண்டிகள் துணியை கொண்டு வாய் கட்டபட்ட பானைகளை சுமந்து கொண்டும், மூட்டை மூட்டையாக எதையோ .ஏற்றி கொண்டும் ஆலயத்திற்குள் நுழைந்தன.
“பணியாளர்கள் அனைவரும் வருவதற்கு இன்னும் ஒரு நாழிகை நேரம் இருக்கிறது என்றாலும் இது என்ன புதியதாக மாட்டு வண்டிகள் வருகின்றன”” என்று யோசித்த வாறே அதனை பற்றிய கவனத்தை விடுத்து தன் வேலையில் ஈடுபடலானான் மாறன்.
“பார்த்தடா கீழே போட்டு விடாதீர்கள்!!! எல்லாம் விலைமதிப்பு மிக்கவை!!” என்று ஒருவன் அதட்டி வேலை வாங்கி கொண்டிருக்க சில பணியாளர்கள் அந்த பானைகளை கவனமாக இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.
“நினைத்தேன் ஒரு சிறிய வேலையை செய்ய கூட இப்படி தடுமாருகிறீர்களே மடையர்களே!!!” என்று அவன் யாரையோ வசை பாடும் சத்தம் கேட்டு மாறன் அங்கு நோக்கிய பொழுது இறக்க பட்ட மூட்டைகளில் ஒன்று கீழே விழுந்து தெறித்ததில் பை கிழிந்து அதிலிருந்து வெண்மை நிற பொடி போல எதோ கொட்டியிருந்தது. சற்று யோசித்த மாறன் பிறகு அந்த பானைகளில் கட்ட பட்டிருந்த துணிகளை பார்த்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் இருந்தன. அவை சற்றே ஈரமாகவும் இருந்தது.
“ஒஹ்ஹ்ஹ ஓவியங்கள் தீட்டுவதற்கான தளவாடங்களா?” என்று தனக்குள் நினைத்து கொண்டே வேலையில் கவனம் செலுத்தினான்.
சிறிது நேரத்தில் கொண்டு வந்த பொருட்களை இறக்கி விட்டு அந்த வண்டி புறப்பட்டு விட்டது. இதமாக இருந்த கதிரவனின் கிரணங்கள் மெல்ல சூடாக உரைக்க துவங்கும் நேரத்தில் பணியாளர்கள் அனைவரும் சாரை சாரையாக் வர துவங்கி இருந்தனர். அவர்களில் ஒருவனாக சொக்கநாதனும் வந்து கொண்டிருந்தான். நேற்று நடந்த சம்பவங்களால் சொக்கநாதன் நகர் முழுவதும் பிராபல்யமாகி இருந்தான். ஆங்காங்கு கூடி இருக்கும் மக்கள் அவனை நோக்கி புன்னகைத்த படியும், சிறுவர்களும் இளஞர்களும் கைகளை உயர்த்தி ஆங்கங்கு ஆரவாரம் செய்து கொண்டும் இருந்தனர். இவர்களை கடந்து ஆலயத்தின் உள்ளே சொக்கன் நுழைந்த பொழுதுதான் மாறன் அவனை கவனித்தான். ஆனால் சிறிய புன்முறுவலுடன், அவனை கூப்பிட்டு தன் இருப்பை உணர்த்தாமல் வேலையில் லயிக்கலானான் மாறன்.
பேராலய பணிகள் சுமூகமாக துவங்கி விட்ட படியால் அனைவரும் வேலையில் கவனமாக இருந்தனர். சிலர் பாரங்களை ஏற்றுவது, சிலர் சங்கிலிகளை இழுப்பது, சிலர் ஆங்கங்கு இருக்கும் குடிநீர் தொட்டிகளில் நீரை நிரப்புவது, கல்தச்சர்கள் பொளிவது, சில சிற்பிகள் ஏற்கனவே செதுக்கிய சிற்பங்களில் இறுதி வேலைகளை பார்ப்பது, யானை பாகர்கள் அவர்களுக்கு உதவுவது, அந்த யானைகள் போடும் இலண்டங்களை (சானங்களை) உடனே சிலர் அள்ளுவது பின் நீரிட்டு துடைப்பது என அந்த வளாகமே மும்முரமாக் இருந்தது.
மாறன் அமர்ந்திருப்பது முதற் வாயில். அங்கிருந்து பார்க்கும் பொழுது வராகி அம்மன் சன்னதி அமைந்திருக்கும் இடமும் அதற்கு பின்னல் இருக்கும் பகுதிகளும் தெளிவாக் தெரிந்தன. கொஞ்சம் இந்த பக்கம் எட்டி பார்த்தால் தற்காலத்தில் பெரியநாயகி அம்மன் சன்னதி இருக்கும் இடம் தெரிந்தது. ஏன் அப்பொழுது இல்லையா? என்று நினைக்க வேண்டாம் சைவம், வைணவம், சாக்தம், காந்தாரம்.கானபத்தியம், கௌமாரம் என்ற அறுவகை சமயங்களில் சைவ சமயத்தை பின்பற்றிய சோழர்கள் “ஈசனே” முழுமுதற் கடவுள், அவனுடைய “சக்தி” அவனுள்ளேயே ஒடுங்கி இருக்கிறது. எனவே காமகோட்டம் (அம்மன் சன்னதி) தேவை இல்லை என்று எண்ணியதாலும், பெண்மையை பறை சாற்றும் சாக்தத்தின் கடவுளான அம்பிகைக்கு தனி சன்னதி எழுப்ப வேண்டாம் என்ற எண்ணத்திலும் அம்மன் சன்னதி அமைக்காமல் விட்டிருந்ததால் அக்காலத்தில் அது வெற்றிடமாகத்தான் இருந்தது. இப்பொழுது அனுக்ரக வீசனத்தில்* இருக்கும் பிரஹன்நாயகி அம்மன் ஆலயம் பிற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. ஆனால் இப்படி எண்ணிய அக்கால சோழர்கள் ஆலய வளாகத்தில் வராகிக்கு சன்னதி எழுப்பி இருப்பது அவள் மீது இருக்கும் அளவு கடந்த பக்தியையும் காட்டுகிறது.* சரி கதைக்கு வருவோம்
அம்மன் சன்னதி அமைய உள்ள இடத்தில்தான் ஓவியங்களுக்கான தளவாடங்கள் இறக்க பட்டுள்ளன. அந்த இடத்தில் பணியாளர்கள் மூட்டைகளில் இருந்த சுண்ணாம்பை கொட்டி அதில் வேறு சில பொருட்களை கலந்து நீரில் குழைத்து கொண்டிருந்தனர். மேலும் சில ஆண்கள் துணியில் தீட்ட பட்ட வண்ண ஓவியங்களை விரித்து வைத்து அதை பற்றி தீர்க்கமாக விவாதித்து கொண்டிருந்தனர்’. நாம் இங்கிருந்து பார்ப்பதால் அதில் என்ன ஓவியம் இருக்கிறது என்று புலப்படவில்லை பல வண்ணங்களில் தெரிகிறது அவ்வளவுதான். இதற்கிடையில்
பணியில் ஈடு பட்டிருக்கும் சொக்கன் இதோடு நான்கு ஐந்து முறை கண்ணில் பட்டு விட்டான் மாறனுக்கு. வேலை நேரத்தில் அங்கும் இங்கும் அவன் அலைந்து கொண்டிருப்பது தன்னை தேடித்தான் என்பது அவனுக்கு புரியாமலும் இல்லை.
“நேற்றுதான் இங்கு நம்மை பார்த்தான் அதற்குள் நாம் இங்குதான் இருப்போம் என்பதை மறந்து விட்டு தேடுகிறான் திருடன்” என்று தனக்குள் எண்ணியபடி மெலிதாக சிரித்து கொண்டு வேலையில் ஈடுபடலானான். சிறிது நேரத்தில் மோர்கார பெண்மணிகள் வரத்துவங்கி இருந்தனர்.
“பணியாளர்கள் அனைவரும் வந்து தகை ஆற்றிகொள்ளுங்கள்” என்று யாரோ கூவும் சத்தம் கேட்டு அவரவர் பணிகளை விட்டு விட்டு இறங்கி போய் கொண்டிருந்தனர். நேற்று மதியத்திலிருந்து இடைவிடாது பொளிந்ததில் எண்ணத்தில் இருந்த வடிவம் உளியின் வழியே இறங்கி கல்லில் நிலை கொண்டு விட்டதில் மாறனுக்கு மனம் ஆனந்த பட்டது. உளியை கீழே வைத்து விட்டு ஒருமுறை தொட்டு தடவி பார்த்து அகமகிழ்ந்தவனாக கீழே இறங்கி சொக்கனை தேடி சென்றான்.
ஆங்காங்கு பணியாளர்கள் மோர் பருகி கொண்டிருந்தனர். மோர்கார பெண்கள் இடுப்பில் இருக்கும் தவளையிலிருந்து கலயத்தில் மொண்டு வழங்கி கொண்டிருந்தனர். தென்முக கடவுள் சன்னதி அருகே சொக்கன் யானையின் மேலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தான். அவனருகே ஒரு மோர்கார பெண்மணியும் நின்று கொண்டிருந்தாள் அவள் சொக்கனுடன் எதையோ தீவிரமாக் பேசிகொண்டிருகிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. சொக்கன் இவனை பார்த்து விட்டான் ஆனால் முகத்தில் மலர்ச்சி இல்லை மாறாக குழப்ப ரேகை படிந்துள்ளது. “என்னவாக இருக்கும்?” என்று சிந்தித்த படியே நெருங்கி சென்று கொண்டிருந்தான். அந்த பெண் யாராக இருக்கும் என்று வாசகர்களுக்கு சொல்ல தேவை இல்லை, வாருங்கள் மாறனுக்கு முன்பே அங்கு என்ன நடக்கிறது என்று நாம் பார்த்து விடுவோம்.
ஆலய வளாகத்திற்குள் வந்ததிலிருந்தே இந்த மாறன் எங்கு போனான் என்று தான் தேடிகொண்டிருந்தான் சொக்கன். ஆங்காங்கு ஒரு சில பணிகளை செய்தாலும் அவனை யாரும் அதை செய்யுங்கள் இதை செய்யுங்கள் என்று கோர வில்லை. நேற்று அரசியற் கையால் பரிசு பெற்றதிலிருந்து அவனது மரியாதையை அங்கு பெருகி இருந்தது. அதனால் மாறனை தேடுவதில் அவனுக்கு சிரமம் இல்லாமல் போயிற்று. நான்கு முறை ஆலயத்தை சுற்றிய பின்தான் அவன் முதற்கோபுரத்தில் நேற்று பொளிந்தது நினைவுக்கு வரவே அவனை நோக்கி வாயிலுக்கு செல்ல எத்தனித்த பொழுது மோர்கார பெண்கள் வந்திருந்தனர் “சரி பருகி விட்டு போவோமே” என்று அங்கு நிற்கும் ஒரு பெண்ணிடம் போக எத்தனித்தவனை யசோதை ஓடி வந்து மறைத்து ஒரு கலயத்தில் மோரை மொண்டு கொடுத்தாள். அதனை சிரித்த படி வாங்கி பருகி கொண்டே
“தாங்கள் மருத்துவரின் மகள் தானே!!! ஏன் இங்கு மோர் விற்க வந்துள்ளீர்கள். அன்றைக்கு கூட என்னை தெரிய வில்லையா என்று கேட்டீர்களே நினைவிருக்கிறதா?” என்று கேட்டு வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு கொண்டான் சொக்கன்.
“அப்பாடா இப்பொழுதாவது கேட்டீர்களே !! என் முகம் கூட உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இத்துணை நாட்களாக நான் தங்களையே சுற்றி சுற்றி வருகிறேன் அதுகூட உங்களுக்கு தெரிய வில்லையா?” ஒருவகையான ஆனந்தமும், படபடப்பும் கலந்த குரலில் பேசினாள் யசோதை.
“ஆங்.. என்னது? என்னை ஏன் தாங்கள் பின் தொடர வேண்டும் ?” உண்மையாகவே குழப்பத்துடன் கேட்டான் சொக்கன்.
தன்னை அவனும் காதலிக்கிறான் அதனை சரியான நேரத்தில் வெளிபடுத்துவான் என்று கனவு கண்டு கொண்டிருந்த அந்த பேதை பெண்ணிற்கு சொக்கனின் இந்த அதிர்ச்சி கலந்த விசாரணை மனதில் நெருஞ்சி முள்ளாய் தைத்தது. கண் கலங்க பேசத்துவங்கினாள்.
“என்ன வீரரே இப்படி கூறுகிறீர்கள். உண்மையில் நான் தங்களை பின் தொடர்வதையும், தங்கள் மீது கொண்டுள்ள விருப்பத்தையும் அறியாமல்தான் என்னை பார்த்து கொண்டும், நான் இருக்கும் இடத்தை சுற்றி சுற்றி வந்தும் தேடினீர்களா?
“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு புரிய வில்லை பெண்ணே!!! நான் எப்பொழுது உன்னை தேடினேன் என்ன உளறுகிறாய்?, உன்னை யானைக்கு மருத்துவம் பார்க்கும் பொழுது பார்த்தேன் அதன் பின் இன்றுதான் பார்கிறேன்” என்று ஒரேடியாக சொல்லி முடித்தான் சொக்கன். அவனது குரலில் கொஞ்சம் கோவமும் தூக்கலாக இருந்தது.
கண்களில் இபோழுது நீர் வழிய துவங்கி விட்டது யசோதைக்கு
“ஐயோ!!! இதென்ன வேதனை? ஏன் இப்படி ஈட்டி போன்ற சொற்களால் என் இதயத்தை துளைக்கிறீர்கள்?. உண்மையில் தாங்கள் என்னை காதலிக்க வில்லையா? இதற்கு பதில் அந்த யானையை விட்டு என்னை மிதிக்க செய்து கொன்று விடுங்கள்!!. தங்களது அன்பும் காதலும் எனக்கு கிடைக்காத பொழுது இனி இந்த உலகத்தில் நான் இருந்தென்ன பயன்!!???”
‘இதோ பார் பெண்ணே இது ஆலயம். நீ இவ்வாறு என்னிடம் பேசுவதே பெருங்குற்றம், யாரேனும் பார்த்தால் நம் இருவருக்குமே அவப்பெயர். நான் உன்னை காதலிக்க வில்லை வீணாக கற்பனை செய்து கொண்டு கவலை படாதே என்னை விட வேறொரு திறமையான ஆடவன் உனக்கு துணையாக அமைவான் தயவு செய்து உன்ன மனதை மாற்றி கொள்”
“போதும் போதும் நிறுத்துங்கள்!! இனி நான் வேறொரு ஆண் மகனை நினைத்து கூட பார்க்க இயலுமா? அப்படி நினைத்தால் நானும் ஒரு தமிழ் குல பெண்ணா? என் உயிர் போனாலும் போகுமே தவிர உங்களை அன்றி வேறொருவனை நான் இனி நினைக்க வாய்ப்பு இல்லை” என்று அவள் கூறும் பொழுது மாறன் வந்து கொண்டிருப்பதை சொக்கன் பார்த்தான்.
“அவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை தவறாக் எண்ணுவானோ? இந்த பெண்ணிடம் தேவை இல்லாமல் ஆசையை வளர்த்து விட்டோம் என்று எண்ணி நம்மிடம் பேசாமல் போய் விட்டால் என்ன செய்வது” என்று குழம்பிய படியே
“இது சரியாக வராது நீ முதலில் புறப்படு”என்று முன்னோக்கி நடக்கவும்
“எல்லாம் சரியாகத்தான் வரும் அடுத்த முறை நாம் சந்திக்கும் பொழுது எனக்கான நற்செய்திக்காக காத்திருப்பேன் இல்லை என்றால் எமனுக்கு என் உயிரை படைத்திருப்பேன்” என்று அழுத படி கூறி விட்டு யசோதை அங்கிருந்து நகரவும் மாறன் அங்கு வரவும் சரியாக இருந்தது.
“என்ன சொக்கா ஏன் அந்த பெண் அழுகிறாள் அவளிடம் ஏதும் வம்பு செய்து விட்டாயா?” என்று மாறன் கேட்டான்
“இல்லை... ம்ம்,.... கும்...!! அன்ஹ்க்!!!! இல்லை.... அதெல்லாம் ஒன்றும் இல்லையே மோரில் ஏன் இவ்வளவு உப்பு போட்டிருக்கிறாய் என்று கேட்டேன் அதற்குள் அந்த பெண்ணுக்கு அழுகை வந்து விட்டது அவ்வவளவுதான்” தடுமாறிய படி சமாளித்தான் சொக்கன்.
“இவ்வளவுதானா நான் என்னவோ? ஏதோ? என்று அஞ்சி விட்டேன்’புலியை முறத்தால் அடித்த பெண்கள் வாழ்ந்த இந்த மண்ணில் சிறு சொல்லை கூட பொறுக்க முடியாத பெண்கள். பாவம்!!!, நீதான் கொடுமை காரனாயிற்றே உன்னை பார்த்தே பயந்திருப்பாள் அவள். சரி வா உனக்கு ஒரு பரிசு காத்திருகிறது “ என்று ஆசை நாயகனின் அகன்ற தோளில் கையை போட்டு இழுத்து சென்றான் மாறன்.
“ஆஹா என்மீது இவனுக்கு எவ்வளவு நம்பிக்கை” என்று வியந்த படியே தாய் ஆட்டின் பின்னால் ஓடும் குட்டியை போல அவன் பின் சென்றான் சொக்கன்
“என்ன பரிசு மாறா எனக்கு தாள வில்லை உடனே கூறு என்று அவனை அவசர படுத்தினான் சொக்கன்”
“பொறு பொறு உன்னிடம் தானே முதலில் காட்ட போகிறேன் அந்த பரிசு உயரமான் இடத்தில் இருக்கிறது. வா வா என்று அவனை அழைத்து சென்றான் மாறன். அவர்கள் இருவரும் இரண்டாம் திருவாயிலை கடந்து வெளியேறிய பொழுது அங்கு எதிர் பட்ட ஒருவன் சொக்கனை அடையாளம் கண்டு அழைத்தான்.
“டேய் சொக்கா!!” சத்தம் கேட்டு திரும்பிய சொக்கன் முகம் மகிழ்ச்சியில் விரிய மாறனின் முகம் ஆச்சர்யத்தில் விரிந்தது.
“அட நரேந்திரா!! என்ன ஆச்ச்சர்யம் நேற்று கூட உன்னை நினைத்து கொண்டேனடா!! இன்று பார்ப்பேன் என்று கருத வில்லை. “என்றான் ஆச்சர்யம் விலகாத சொக்கன்.
“ஆஹா அப்படியா? ஆமாம் நீ என்ன இங்கு சுற்றுகிறாய்?”
“நாங்கள் ஆலய பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளோம். நீ என்ன திடீர் விஜயம்”
“நானும் ஆலய பணிக்கு தானடா வந்திருக்கிறேன். சாந்தார நாழியில்* ஓவியம் தீட்டும் பணி துவங்க விருக்கிறதல்லவா? அங்கு தீட்ட போகும் ஓவியர்களில் நானும் ஒருவன்”
இவர்கள் பேசிகொண்டிருக்கும் இடைவெளியில் மாறன் சொக்கனின் கையை பிடித்து புதியவன் கவனிக்காத மாதிரி கிள்ளினான். என்னவென்று திரும்பிய சொக்கனை பரத்ததும். “வா போவோம் எவ்வளவு நேரம் இன்னும் அளப்பாய்?’” என்று கண்களாலேயே கடிந்தான் மாறன்
“சரிடா நீ எங்கு தங்கி இருக்கிறாய்”
“படைவீரர் பாசறைக்கு அருகில் எங்களுக்கு இடம் ஒதுக்க பட்டுள்ளதடா” அங்குதான் தங்குவோம்”
“ஆஹா!! நாங்களும் அங்குதான் தங்குவோம் அப்படியானால் நாம் பிறகு சந்திப்போம் இபோழுது வேறு வேலை இருக்கிறது நான் வரட்டுமாடா?” என்று நாசூக்காக கழன்றான் சொக்கன்.
புதியவனோ மாறனை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்து விட்டு”ம்ம்ம்ம் சரி கிளம்பு பார்க்கலாம்” என்று அங்கிருந்து அகன்றான்
“யாரவன்? பார்வையே சரி இல்லையே?” இது மாறன்
“அவனா? அவன் வீரநரேந்திரன் எனது நண்பன் எங்களது ஊர் அருகே தான் அவனுக்கும் இல்லம். சிறந்த ஓவியன், ஓவியம் பயின்று சோழ தேச ஓவியர்களின் தலை சிறந்த ஓவிய குழுமத்தில் பணி புரிகிறான் இங்கு பணி புரிய வந்திருக்கிறான் போலும்” என்று சொக்கன் முடிப்பதற்குள்
“ம்ம் போதும் போதும் வர்ணனையெல்லாம் பலமாகத்தான் இருக்கிறது மூடி கொண்டு வா” என்று பொய்யாக அதட்டிய படி நடந்தான் மாறன்
“சொக்கன் சிரித்த படியே மாறனுக்கு தன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பின் வெளிபாடு இது என்று நினைத்த வாறே பின் தொடர்ந்தான். பின் இருவரும் முதற் கோபுரத்தின் மீது ஏறி ஏற்கனவே மாறன் சிலை வடித்த இடத்தை அடைந்தனர்’
“சொக்கா நேற்றிரவு எனக்கு என்ன பரிசு தர போகிறாய் என்று கேட்டாயே அதன் படி நான் உனக்கு வழங்க போகும்பரிசு இதுதான்” என்று மாறன் கை நீட்டிய இடத்தை பார்த்த பொழுது அங்கு கஜசம்ஹார மூர்த்தியின் (யானையின் தோலை உரித்து போர்த்தி கொண்டு அதன் தலை மீது நடனம் புரியும் சிவனின் ஒரு வடிவம்) உருவமும் அதன் அருகில் ஒரு வீரன் யானையின் மீது அமர்ந்து அதனை அடக்கும் காட்சியும் வடிக்க பட்டு இருந்தது. அந்த யானையின் தும்பிக்கையில் ஒரு அம்பு தைத்திருப்பது தத்ரூபமாக் இருந்தது. மேலும் அருகில் ஒரு கோபுரத்தின் மீது ஒரு சிற்பி ஆனையடக்கும் காட்சியை வடிப்பது போலவும் தத்ரூபமாக வடித்திருந்தான் மாறன். ஆனால் சிற்பியின் முகம் தெரியாமல் பின்புறம் மட்டும் தெரியும் படி இருந்தது.
மிக சிறிய சிற்பம் தான். ஆனால் மிக தெளிவாக நுணுக்கமாக வடிக்க பட்டிருந்தது. முதலில் சாதரணமாக எண்ணிய சொக்கனுக்கு, அந்த மூர்த்தியின் முகமும் வீரனின் முகமும் ஏற்கனவே பார்த்த முகம் போல தோன்றிற்று. நன்கு யோசித்து பார்த்தான். அது ஆடியில் அடிக்கடி பார்க்கும் அவனது முகம் தான் என்பது விளங்கியது. இரண்டு சிற்பங்களில் இருக்கும் முகமும் அச்சு அசலாக சொக்கனை ஒத்திருக்கும் படி செதுக்கி இருந்தான் மாறன். கீழிருந்து பார்பவர்களுக்கு கஜசம்கார மூர்த்தியின் உருவம் பெரியதாக தெரியும்படியும் யானை வீரன் தெரியாத படியும் நுணுக்கமாக வடித்திருந்தான் மாறன்.
ஆச்சரியம் விலகாத சொக்கனின் காதுகளில் மாறன் பேசுவது கேட்டது.
“சொக்கா மாமன்னர்..... எழுப்பும் இந்த பார் போற்றும் கற்றளி இருக்கும் வரை இந்த சிற்பமும் இருக்கும். இந்த சிற்பம் இருக்கும் வரை நம் காதலும் இருக்கும். சாதரணமாக பார்பவர்களுக்கு இது வெறும் சிற்பம் தான் ஆனால் நமக்கு இது நம் காதல் சின்னம். இது தான் நான் உனக்கு அளிக்கும் பரிசு போதுமாடா? என்று கேட்டான்
சொக்கனுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது வார்த்தைகள் எழ வில்லை
“மாறா என்னை மன்னித்து விடடா நேற்று அற்ப பொருளை உணக்கு வழங்கி விட்டு பெருமிதம் அடைந்திருந்தேன் ஆனால் இன்றைக்கு உன் காதல் கடலினும் பெரிதுன்னு சொல்லாம சொல்லி விட்டயடா? நீ எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்று கூறி கொண்டே அவனை அணைக்க முற்பட்டான் சொக்கன் தன்னை மறந்து.”
“ம்ம்... அய்யா இது பள்ளியறை அல்ல கோபுரம், நமது உறவு இந்த தஞ்சைக்கே தெரிந்து விடும் பார்த்து என்று பொய்யாக அதட்டி அவனை சுய நினைவுக்கு கொண்டு வந்தான். பின் இருவரும் கீழே இறங்கினர்.
“ஆம் சொக்கா உறையூர் செல்வது பற்றி அனுமதி வாங்கி விட்டாயா??”
“ம்ம் இன்னும் இல்லை தங்கம் மாலையில் தான் குழுத்தலைவர் வருவார் அவரிடம் கேட்கிறேன் முடிந்த அளவு நாளை புறப்படலாம் தயாராக இரு!!
மாறன் தனக்களித்த பரிசை நினைத்தும் நாள் முழுதும் மாறனுடன் இருப்பதை நினைத்தும் நாளை புறப்பட இருக்கும் உறையூர் பயணத்தை நினைத்தும் சொக்கன் சொக்கி போயிருந்தான். ஆனால் காலையில் ஒரு பெண்ணின் மனதை காய படுத்தியதையோ, அவள் காயப்பட்ட மனதை பற்றியோ, அவளது காதலை பற்றியோ அவன் நினைத்து கூட பார்க்க தயாராக இல்லை.
குறிப்பிட்ட வேலையை மிக சிறப்பாக முடித்துள்ளதாக தலைமை சிற்பி வழங்கிய பாரட்டாலும் உறையூர் சென்று வர கொடுத்த அனுமதியை நினைத்தும் நாள் முழுவதும் சொக்கனுடன் இருப்பது மட்டுமல்லாமல் இரவில் இலுப்பை தோப்பில் நடக்க போகும் லீலைகளை நினைத்தும் மாறனும் ஆனந்தத்தில் இருந்தான்.

தேய்பிறை நிலவு மங்கிய ஒளியை பாய்ச்சி கொண்டிருக்கும் இரவு வேலையில் இலுப்பை தோப்பில் சொக்கன் கூறிய செய்தி மாறனுக்கு அவ்வளவாக உவப்பாக இல்லை.
“என்ன சொக்கா நாளை புறப்படுவதில் என்ன குழப்பம் ஏன் நாளை வேலை?”
“எனக்கும் குழப்பமாக தான் இருக்கிறது கடந்த வாரம் தான் யானைக்கு பரிசோதனை செய்ய பட்டது ஆனால் அதனுடைய ஓலை குறிப்பில் நாளைய தினம் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று குறிப்பு உள்ளது”
“போன முறை சென்ற பொழுது குறிக்க பட்டுள்ளது. அதனால் தவிர்க்க முடிய வில்லை எப்படியும் மதியத்திற்குள் முடிந்து விடும் மாலை வேலையில் புறப்பட்டு விடலாமடா”. என்று கூறிய சொக்கன் மனது மிகவும் குழப்பமாக இருந்தது. அது நாளை குறித்த நேரத்தில் உறையூர் புறப்பட முடியாதோ என்ற ஏக்கமாக இருக்கும் என மாறன் எண்ணினான்.
ஆனால் சொக்கன் அங்கு போனால் யசோதையை பார்க்க நேரிடுமே என்றுதான் குழம்பி உள்ளான் என்பது மாறனுக்கு தெரிய வில்லை. எது எப்படியோ நாளைய பொழுது ஒரு மறக்க முடியாத நாளாக விடிய போகிறது. ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஏன் யானைக்கு பரிசோதனை? சொக்கன் போகும் பொழுது யசோதையின் மனநிலை என்ன? அறிந்து கொள்ள காத்திருங்கள் அடுத்த வாரம் வரை
                                     


                                                                                                       14              
                                                                                                          உறை  யூர் பயணம்



ஆசை நாயகனுடன் ஆவலாய் ஊர் சுற்றலாம் என்று இருந்த சொக்கன் மிகுந்த சலிப்புடனும் குழப்பத்துடனும் யானையை ஒட்டி கொண்டு மருத்துவர் இல்லம் நோக்கி போய்கொண்டிருந்தான். எப்படி இருந்தாலும் மாலைக்குள் உறையூர் கிளம்பி விடலாம் என்றாலும் அவனது குழப்பத்திற்கு சில காரணங்களும் இருந்தது. கடந்த முறை அவனுடன் பரிசோதனைக்கு சக வீரர்கள் பலர் வந்திருந்தார்கள். ஆனால் இன்றோ அவன் மட்டும் தான் போய் கொண்டிருந்தான். கடந்த முறை உடன் வந்தவர்களில் சிலருக்கு மறு வருகை நாள் குறிப்பிட பட்டிருந்தாலும் தனக்கு மட்டும் இவ்வளவு விரைவாக அதுவும் தனியாக தியதி குறிப்பிட்டிருப்பதை என்னும் பொழுது அவனுக்கு மேலும் குழப்பங்கள் கூடின. மாறன், உறையூர், யசோதை, யானை என்று சிந்தித்து கொண்டிருந்த மாறன் சாலையில் சென்று கொண்டிருந்த சில மொட்டை தலை மனிதர்களை பார்த்து வியந்தான்.
“ஒஹ் சமண சமய துறவிகளா??” ஆஹா நமது மன்னருக்குத்தான் எத்தனை பரந்த உள்ளம். முழுக்க முழுக்க சைவ சமயத்தை பின்பற்றும் நாட்டுக்குள் வேற்று மதத்தினர் எத்தனை சுதந்திரமாக நடமாடுகிறார்கள்!!! என்ன நமது சோழ தேசத்தின் பெருமை வாழ்க சோழம்!!! வாழ்க சோழம்!!! என்று மனதிற்குள் எண்ணிய பொழுது சல சலத்து ஓடும் காவிரியை அதன் மீது உள்ள கற்பாலத்தில் ஏறி கடந்து கொண்டிருந்தான் சொக்கன். கடந்த முறை இவ்வழியே வந்த பொழுது யானைகளால் சிறிது நெரிசல் ஏற்பட்டது. அதனால் நதியின் ஓட்டத்தை ரசிக்க முடிய வில்லை சொக்கனால். ஆனால் இன்று ஆர்ப்பரித்து ஓடும் காவிரியின் போக்கை பார்த்த பொழுது அவனது மனம் சொல்லவொண்ண உற்சாகத்தில் துள்ளி குதித்தது.
“சோழ தேசம் இத்தனை செழிப்புடன் உள்ளதென்றால் அது இந்த நதியால் தான், மாடமாளிகை கூட கோபுரங்களால் இன்று தஞ்சை மிளிர்கிறது என்றால் அது இந்த நதியால் தான், பசி என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு இன்று மக்களும் ஏனைய உயிரினங்களும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்றால் அதுவும் இந்த நதியால்தான், குடத்திலிட்ட விளக்காய் இருந்த சோழ தேசம் இன்று குன்றிலிட்ட விளக்காய் கடல் கடந்தும் விரிவடைந்துள்ளது என்றால் அதுவும் இந்த நதியால்தான் , இத்தகைய வளம் கொழிக்கும் நாட்டில் நான் வந்து பிறக்க என்ன தவம் செய்தேனோ தெரிய வில்லை, அம்மா காவிரி தாயே!! உன்னை வணங்குகிறேன்!! என்று மானசீகமாய் வணங்கிய பொழுது மருத்துவரின் மனையை நெருங்கி கொண்டிருந்தான் சொக்கன்.
கடந்த முறையை போல இன்றும் ஆங்காங்கு மருத்துவர்களும், அவர்தம் உதவியாளர்களும்,கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க வந்த மக்களும், குழுமி இருப்பார்கள் என்று நினைத்தவனுக்கு அந்த இடமே வெறிச்சோடி கிடந்ததது வியப்பாக இருந்தது. “என்ன ஆச்சர்யம் இந்த இடமே வெறிச்சோடி இருக்கிறது?” சொக்கன் தன்னை தானே கேட்டு கொண்டான்.
பட்டிகளில் அடைக்க பட்டிருந்த ஆடுகளும், தொழுவத்தில் அடைக்க பட்டிருந்த மாடுகளும் மேய்ச்சலுக்கு ஒட்டி செல்ல பட்டிருந்தன. அங்கிருந்த மரத்தடியில் ஒருவர் காலுடைந்த ஆடு ஒன்றிற்கு கட்டு போட்டு கொண்டிருந்தார் அருகில் ஒரு பெண்மணியும் நின்றிருந்தாள். மருத்துவரின் இல்லத்தில் மட்டும் பெண்கள் சிலர் அளவளாவி கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண்மணி மட்டும் விரைந்து இல்லத்திற்குள் நுழைந்ததும் தெரிந்தது.
யானையின் மணி ஓசை கேட்டு கவனம் திரும்பிய அந்த மருத்துவர் நிமிர்ந்து நோக்கிய பொழுது நேற்று ஆனையை அடக்கிய வீரன் என்று அடையாளம் கண்டு எழுந்து வந்தார். அதற்குள் சொக்கனும் இறங்கிவிட்டிருந்தான்.
“வணக்கம் வீரரே!! யானைக்கு ஏதும் உடல் நல குறைவா??”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா!! இன்று பரிசோதனைக்கு வரும்படி குறிப்பு உள்ளது அதான் யானையை ஓட்டிகொண்டு வந்தேன்?”
“என்ன?? இன்று வர சொல்லி குறிப்பு உள்ளதா?? என்ன சொல்லுகிறீர் நன்றாக பாருங்கள் இன்று யாரையும் வர சொல்லி இருக்க மாட்டார்களே”
“இதோ பாருங்கள்” என்று அந்த ஓலை நறுக்கினை எடுத்து காட்டினான் சொக்கன் அதனை வாங்கி பார்த்த மருத்துவனும்
“ஆம் இன்றுதான் வர சொல்லி இருக்கிறது ஆனால் இன்று துவாதசி ஆயிற்றே மருத்துவர் மாதா மாதம் இந்த நாளில் திருவரங்கம் போய்விடுவாறே அவருடன் மற்ற மருத்துவர்களும் சென்றுள்ளனர் நான் மட்டும் தான் அவசர பணிகளுக்காக இருக்கிறேன். பிறகு எப்படி இன்று வர சொல்லி இருப்பார்? இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது தயவு செய்து பொறுத்தருள்க. மருத்துவர் வந்ததும் அவரிடம் தெரிவித்து தங்களின் மறுவருகை நாளினை தெரிவிக்கிறோம்” என்று கூறி கொண்டிருந்த பொழுது அங்கு யசோதை வந்து விட்டிருந்தாள்.
“பொறுங்கள் மருத்துவரே!! அவர் சரியாகத்தான் வந்திருக்கிறார். இவரை இன்று வர சொல்லி இருப்பதாக தந்தை என்னிடம் கூறி சென்றுள்ளார். சில மருந்துகளை வழங்க சொல்லி கொடுத்துள்ளார், தாங்கள் புதியவர் ஆதலால் இந்த பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார். தாங்கள் சென்று பணியை தொடருங்கள்.” என்றாள் யசோதை.
“அப்படியா சரி தாயே!! நான் வருகிறேன்” என்று அந்த கட்டு போடும் பணிக்கு திரும்பினார் அவர்.
“இவ்வளவு அதிகாரத்துடன் பேசும் பெண்ணா நேற்று நம்மிடம் அழுது விட்டு சென்றாள்?” என்று நினைத்து கொண்டிருந்த சொக்கன் வேறு எங்கோ பார்த்து கொண்டிருந்தான்.
“வாருங்கள் வீரரே!! என்ன முடிவு செய்துள்ளீர்கள்? என் காதலை ஏற்று கொண்டு விட்டீர்களா?” மிகுந்த ஆவலுடன் அவள் கேட்டாலும் அந்த குரலில் ஒரு இனம் புரியாத சோகம் குடி கொண்டிருந்தது.
“இதோ பார் பெண்ணே!! உன் தந்தை குறிப்பிட்ட மருந்துகளை கொடுத்தால் நான் புறப்பட்டு விடுவேன். அதை விடுத்து வேறெதுவும் நான் இங்கு பேச வர வில்லை. நீ சென்று அந்த பொருட்களை கொண்டுவா நான் இங்கேயே காத்திருக்கிறேன். எனக்கு பல வேலைகள் உள்ளது.”
“என்னை புரிந்து கொள்ளுங்கள் சுவாமி!! ஏன் என்னை நிராகறிக்கிரீர்கள் உங்கள் உள்ள கோயிலில் இடம் பெயரும் வாய்ப்பு எனக்கு கிடைக்காதா?” நான் அழகாயில்லை என்று கருதுகிறீர்களா? இல்லை வேறு எதுவும் காரணமா?”
“நீ இவ்வாறு பேசுவது மற்றவர்களுக்கு தெரிந்தால் நம் நிலைமை என்ன வென்று தெரியுமா? உன் தந்தையின் மானம் கப்பலேறி விடும் போய் அந்த மருந்துகளை........”” அவன் முடிப்பதற்குள் யசோதை குறுக்கிட்டாள்.
“சுவாமி!! என்னை மன்னித்து விடுங்கள் தங்களை தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் நான்தான் இன்று பரிசோதனைக்கு வரவேண்டும் என்று தங்கள் ஓலையில் எழுதி விட்டேன். இது எனது தந்தைக்கு தெரியாது.
அவர் எந்த மருந்தும் கொடுக்க வில்லை.”
(இந்த இடத்தில கடந்த முறை பரிசோதனைக்கு வந்த பொழுது சொக்கனுக்கான ஓலையை யசோதை தான் எழுதினாள் என்பதை வாசகர்ளுக்கு நினைவூட்ட வேண்டியது நமது கடமை ஆகிறது.)
யசோதையின் கூற்றை கேட்டதும் சொக்கனுக்கு ஆத்திரம் பீறிட்டுகொண்டு வந்தது. “ச்சே நீயெல்லாம் ஒரு பெண்ணா?? உனக்கு எத்தனை உரம் இருந்திருந்தால் இப்படி நடந்து கொண்டிருப்பாய். இந்த செய்தி உன் தந்தைக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்தால் என்னையும் அல்லவா குற்றம் சொல்லுவார்கள்” சொக்கன் பொரிந்து தள்ளினான் யசோதைக்கு கண்கள் குளமாகி வழிந்தோடியது.
“இல்லை சுவாமி தங்களை சந்திக்கும் ஆவலில் தான் செய்து விட்டேன் தவறுதான் என்னை மன்னித்து ஏற்று கொள்ள மாட்டீர்களா??” உங்களுக்காக இத்தனை துணிச்சலாக நான் செயல் பட்டிருப்பதில் கூட என் காதல் உங்களுக்கு விளங்க வில்லையா? ஏன் உங்களுக்கு என்னை பிடிக்க வில்லை சொல்லுங்கள்?”
“தேவை இல்லாமல் மனதில் ஆசையை வளர்க்காதே பெண்ணே!! உனது காதல் எனக்கு புரிகிறது!! ஆனால் என்னால் அதனை ஏற்று கொள்ள முடியாது புரிந்துகொள்”
“ஏன் ஏற்று கொள்ள முடியாது சொல்லுங்கள் சொல்லுங்கள்”
“நான் வேறொருவரை விரும்புகிறேன் பெண்ணே!!! என் உடல் பொருள் ஆவி எல்லாம் அவருக்குத்தான் சொந்தம், நான் வேறொருவருக்கு உரிமையான பொருள். புரிந்து கொள்” என்று சொக்கன் கூறிய வார்த்தைகள் அவளது காதுகளில் இரும்பை காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் யசோதையின் பதிலை பொருட்படுத்தாதவனாய் சொக்கன் யானையை குனிய சொல்லி மேலேறி அமர்ந்து கொண்டு புறப்பட்டு விட்டான். அதற்குள் தூரத்தில் இருந்து பார்த்த ருக்மணிக்கு யசோதை அழுவது தெரிய, அவளும் அருகில் வந்து விட்டாள். யசோதையின் தோழிகள் தவிர வேறெவரும் அங்கு இல்லை என்பதாலும் மருத்துவரும் அவருடன் நிற்கும் பெண்ணும் மருத்துவத்தில் கவனமாக இருந்ததாலும் இங்கு நடந்தவற்றை யாரும் கவனிக்கவில்லை.
“என்னடி என்ன ஆயிற்று? அழாதே யசோதை!!” அருகில் வந்து அவள் தோளை பற்றி உலுக்கினாள் ருக்மணி.
கண்களில் வழியும் நீரை துடைக்காமல் அவளை பார்த்து ஒன்றும் பேசாமல் அழுதுகொண்டே வீட்டினுள் சென்று மறைந்தாள்.

யசோதையால் ஏற்பட்ட மன சஞ்சலத்தில் இருந்த மாறன் நேராக மாறனை காண ஆலயத்திற்கு வந்து கொண்டிருந்தான். ஆலயத்தின் கட்டுமான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில் பெரிய கோயில் வளாகம் குடமுழுக்கிற்கு தயாராகி கொண்டு இருந்தது. ஆலயத்தின் வெளிப்புறம் தென்புறத்தில் இருந்த பெரிய திடலில் வேள்வி சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு பெரிய அளவில் கொட்டகைகள் அமைக்க பட்டு கொண்டு இருந்தன. அதனருகே சூளையில் வைத்து சுடப்டாத பச்சை கற்கள் அடுக்க பட்டு இருந்தது. அருகில் சதுர்வேதி மங்கலத்தில் இருந்து வந்த அந்தணர்கள் வேள்வி சாலையின் நீள,அகலம், அதில் அமைக்க பட வேண்டிய குண்டங்கள், இறை ஆசனங்கள், வாசல்கள் போன்றவற்றை பணியாளர்களுக்கு விளக்கி கொண்டிருந்தனர்..
அவர்களை தாண்டி உள்ளே நுழையும் பொழுது பொற்கொல்லர்கள் பலர் சிறு சிறு ஆணிகளை வைத்து தட்டி கொண்டு இருந்தனர் அருகில் ஆலய விமானத்தில் பதிக்க பட வேண்டிய தங்க தகடுகள் அடுக்க பட்டிருந்தன. இவற்றை கண்டதும் சொக்கனுக்கு எதுவும் விளங்க வில்லை. அவர்களை கடந்து சென்ற பொழுது அங்கு மாறனும் ஏனைய சிற்பிகள் பலரும் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர். சொக்கனை கண்டதும் மாறன் அவர்களிடும் இருந்து எழுந்து வந்தான்.
“என்ன சொக்கா!! ஏன் முகம் வெளிறி காணப்படுகிறாய் என்ன விஷயம் ?” அவனது முகத்தை பார்த்ததும் மாறன் அவனிடம் குடி கொண்டிருந்த குழப்பத்தயும், சோகத்தையும் கண்டு கொண்டான்,
“அதெல்லாம் ஒன்றும் இல்லை!! தலை வலிப்பது போல உள்ளது!!”
“ஆஹா வா! மருத்துவரிடம் சென்று வருவோம்!!”
“இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம் மாறா இப்பொழுது குறைந்து விட்டது”
“எனக்கு ஒன்றும் அப்படி தெரிய வில்லையே.!! சரி யானைக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததா?? மாலை உறையூர் புறப்படலாமா??”
“”புறப்படலமடா!!! அந்தி சாயும் பொழுது நான் ஆலய வாசலில் காத்திருக்கிறேன் நீயும் முன்னதகாவே சென்று தயாராகி வந்து விடு குதிரை இருகிறதல்லாவா?”
“ம்ம் இருக்கிறது. சரி நீ போய் ஓய்வெடுத்துக்கொள் மாலை பார்க்கலாம்” என்று மாறன் கூறியதை கேட்டு திரும்பி யானையை நோக்கி நடக்க துவங்கியவன் திரும்பி
“மாறா.!!” என்று அவனை அழைத்து ஏதோ சொல்ல வந்தவனாய் தயங்கி நின்றான்
“என்ன்ன சொக்கா?? என்ன விஷயம் சொல் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?”
“ஆஹ!! அது! அது!! ஒன்றும் இல்லை!! ஆமாம் இதென்ன பொற்கொல்லர்கள் ??
இவர்களுக்கு இங்கென்ன வேலை?” பேச்சை மாற்றினான்
“இதற்குத்தான் இப்படி மென்று முழுங்கினாயா? விண்முட்டும் இந்த கோபுரம் முழுவதும் மாமன்னர் தங்க தகடுகளால் போர்த்தி பொன் வேய போகிறார் அல்லவா?/ அதான் அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளனர் கொல்லர்கள். குடமுழுக்கிற்கு இன்னும் சில நாட்கள் தானே இருக்கிறது? அநேகமாக நாம் தஞ்சை திரும்பும் பொழுது தஞ்சை விழாகோலம் பூண்டிருக்கும் விமானமும் பொன் வேய பட்டிருக்கும். கும்பாபிஷேக தினத்தன்று நாமிருவரும் இன்பமாக ஊர் சுற்றலாம் இல்லையா சொக்கா?”
நிகழ்ச்சிக்காக எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய பட்டிருக்கிறதாம். அனைத்தையும் நீயும் நானும் சேர்ந்து கண்டு களித்து இன்புற வேண்டும் சொக்கா, என் மனம் இன்றே அந்த நாட்களை எண்ணி மகிழ்கிறது.”.
“ஆமாம் ஆமாம் உண்மைதான், சரி நான் புறப்படுகிறேன் நீ மாலை தயாராக இரு. வருகிறேன் என்று கூறி விட்டு சொக்கன் அங்கிருந்து புறபட்டான்.

மறுநாள் காலை சொக்கனும் மாறனும் தஞ்சையில் இருந்து அரைநாள் பயண தொலைவில் உள்ள ஒரு ஊரின் ஒதுக்கு புறமாக இருந்த மண்டபத்தில் கண்விழித்தனர். அவர்களின் குதிரை அருகில் உள்ள மரங்களில் கட்ட பட்டிருந்தது. நேற்று மாலை திட்டமிட்ட படி தஞ்சையில் இருந்து புறப்பட்ட இருவரும் உறையூர் செல்லும் ராஜ பாட்டையில் மக்கள் குடி இருக்கும் பகுதிகளில் வேகமாகவும் யாரும் இல்லாத இடங்களில் மிக மெதுவாகவும் பயணித்து பேசி கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் அடர்ந்த வனம் போன்ற பகுதி வந்ததும், இதற்கு மேல் இரவில் பயணம் செய்தலாகாது என்றெண்ணி மேற்சொன்ன மண்டபத்தில் கையோடு கொண்டு வந்திருக்கும் சில பழங்களை உண்டு விட்டு படுத்துகொண்டனர். இருவரும் ஒன்றாக இருக்கும் முதல் இரவு என்பதால் இருவருக்கும் அன்று முதல் இரவுதான்,. வெகுநேரம் கூடி பின் பேசி மகிழ்ந்தனர். இதில் சொக்கன் யசோதை பற்றிய சிந்தனைகளை அடியோடு மறந்தும் விட்டான்.
நேற்றிரவு வெகு நேரம் விழித்திருந்ததில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த சொக்கனை எழுப்பாமல் அவனது நெறியில் ஒரு முத்தத்தை பதித்து விட்டு எழுந்து போய் காலைகடன்களை முடித்து அருகில் ஓடிய காவிரியில் நீராடிவிட்டு வந்து சொக்கனை எழுப்பினான் மாறன்.
“சொக்கா.. சொக்கா... எழுந்திரு!! சொக்க!!’
“ம்ம்ம் என்னடா அதற்குள் எழுப்புகிறீர்கள் இருங்களடா” என்று கண்களை விழித்தவன் முழுமதி போன்ற மாறனின் முகத்தை கண்டு; தான் பாசறையில் இல்லை என்பதை உணர்ந்து சிரித்தான். பின் சொக்கனை இழுத்து அணைக்க முயன்றான்.
“ம்ம் முதலில் போய் நீராடி விட்டு வாருங்கள் அய்யா!! நாம் அருகில் இருக்கும் ஆலயம் எதிலாவது சென்று பூஜை முடிக்க வேண்டும் பிறகு துவங்கலாம் உங்கள் லீலைகளை” என்று கூறி சிரித்தான் மாறன்.
“ம்ம்ஹ்ஹும் ம்ம்ஹும்” என்று சிணுங்கியவாறே எழுந்து சென்றான் சொக்கன்.
இருவரும் நீராடி நெற்றி நிறைய திருநீறு அணிந்து அங்கிருந்து புறப்பட்டனர்.
செல்லும் வழியிலேயே ஒரு வேம்பின் அடியில் ஒரு சிவலிங்கம் ஆவாகனம் செய்ய பட்டிருப்பது கண்டு. அங்கு இறங்கி வழிபட்டனர். மாறன் யாழை பழிக்கும் வகையில் திருமுறை பாடல் ஒன்றை பாடினான். அதனை பாடும் பொழுது அவனது கண்களில் நீர் வழிந்தோடியது. சொக்கனுக்கு தன் நாயகனின் குரல் வளமும், அவனது பக்தியும் மிகுந்த பெருமையையும் வியப்பையும் வழங்கியது. பின் இருவரும் நிலத்தில் விழுந்து வணங்கி விட்டு குதிரையில் ஏறி பயண பட்டார்கள்.
“மாறா அருமையாக பாடினாயடா!!! இத்துணை நாட்களாக என்னிடம் சொல்லவே இல்லை நீ பாடுவாய் என்று!!. ஏழிசைமாறன் என்று உனக்கு பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருகிறார்கள் உன் இல்லத்தில்.”
அவன் இல்லத்தில் என்றதும் மாறனின் மலர்ந்த முகத்தில் ஒரு குழப்ப ரேகை படிந்தது.
“என்ன மாறா என்ன யோசனை?”
“இல்லை! இல்லை!! அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக்கு மிகவும் பசிக்கிறதடா சொக்கா”
“ஹோ அதான் முகம் வாடி போயிருகிறதா? என் செல்வத்துக்கு. சரி இதோ!! மக்கள் வசிக்கும் பகுதி வந்து விட்டது ஏதேனும் சத்திரம் இருக்கும் நல்ல உணவாய் உண்ணலாம்” என்றான் சொக்கன்.
பின் இருவரும் சோழ பேரரசி செம்பியன் மாதேவியார் பெயரால் அந்த ஊரில் அமைக்க பட்டிருந்த அன்னசத்திரம் ஒன்றில் போய் அங்கு வழங்கப்பட்ட நீராகாரம், அரிசி கஞ்சி, முருங்கை கீரை துவட்டல், என்று எளிமையாக சிற்றுண்டியை முடித்து கொண்டு புறப்பட்டனர்.
“அப்பா........ இப்பொழுது தானடா!! நிறைவாக இருக்கிறது!! பசி வந்திட பத்தும் பறக்கும் என்பார்களே!! அது சரியாகத்தான் இருக்கிறது!! என்றான் மாறன்.
“ம்ம் சரிதான் மாறா!! நேற்றிரவு வேறு பழம் மட்டும்தான் உண்டோம் இல்லையா?” அதனால் இந்த உணவும் சாப்பிடவில்லை என்றால் கட்டி இருக்கும் கோவனம் கூட பறந்தால் ஆச்சர்ய படுவதற்கில்லை!! என்று சொக்கன் கூறியதை கேட்டதும் மாறன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.
காதல் கொண்ட நாள் முதலே இலுப்பை தோப்பு தவிர வேறு எங்கும் தங்கள் காதலை வெளிபடுத்தி கொள்ளாததால்; இந்த பயணம் அவர்களுக்கு மேலும் இனிதாகவே இருந்தது. காலையில் சத்திரத்தில் இருந்து புறப்பட்டவர்கள் மேற்கு நோக்கி பயணித்ததால் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருந்தது சூரியன் உச்சிக்கு வந்துவிட்ட இந்நிலையில் பசியோடு எதிர்வெயிலும் சேர்ந்து கொண்டதால் கொஞ்சம் வாடி காணபட்டான் மாறன்.
“என்ன மாறா!! மீண்டும் பசிக்கிறதா??” எப்படியும் சிறிது தூரத்தில் ஏதேனும் சத்திரம் இருக்கும் இரு சாப்பிடலாம் “ என்றான் சொக்கன்
“பசி அதிகமாக இல்லை சொக்கா!! ஆனால் வெயில் வாட்டுகிறது” என்று அவன் கூறி கொண்டிருக்கும் பொழுதே கருமேகம் சூழதுவங்கி இருந்தது.
“அடிசக்கை!!! உனக்கு வெயில் தாள வில்லை என்ற உடனேயே சூரியன் கூட மூடி கொள்கிறதே!! என்று சீண்டினான் சொக்கன்.
இன்னும் மேலும் அவர்கள் பேசிக்கொண்டே சிறிது தூரம் கடப்பதற்குள் மழை தூற துவங்கி விட்டது.
“ஆஹா!! மழையும் வந்து விட்டதடா மாறா!! நனைந்து கொண்டே போக வேண்டும் போலிருக்கிறதே!!!”
“சரி சரி விரைந்து வா! அங்கு ஒரு மண்டபம் இருக்கிறது அங்கு போய் விடுவோம்.”
இருவரும் நுழைந்த அந்த பாழடைந்த மண்டபம் இருள் சூழ்ந்ததாக இருந்தது அந்த மண்டபத்திற்கு இரண்டு புறம் இருந்தது. சாலையை ஒட்டிய படி இருந்த பகுதியை விடுத்து பின் புறம் இருக்கும் அடர்ந்த காட்டை நோக்கிய மண்டபத்தின் மற்றொரு பகுதியில் இருவரும் நுழைந்தனர்.
 சாரல் அடிக்காத பகுதியில் குதிரைகளை கட்டினர். பின் அங்கிருந்த ஒரு மரத்தின் தழையை புடுங்கி தரையில் படிந்திருந்த தூசி, குப்பைகளை சுத்த படுத்தினான் சொக்கன். நீண்ட நாட்களாய் மக்கள் உபயோக படுத்தி இருப்பதற்கான அடையாளம் எதுவும் இன்றி காணப்பட்டது அந்த இடம். ஆங்கங்கு மூலையில் ஆட்டு பிழுக்கைகள் மட்டும் கிடந்தன. ஆட்டுகிடாயின் மீது வீசும் மொச்சை வீச்சமும் வீசி கொண்டிருந்தது அந்த மண்டபத்தில்.
“சொக்கா!! இந்த மண்டபம் எனக்கு மிகவும் பிடித்திருகிறதடா; நாம் மழை விட்டாலும் இன்றிரவை இங்கேயே கழித்து விட்டு செல்வோமடா!!”
“தங்கள் உத்தரவு எனது பாக்கியம், உங்களது அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்த அடிமை காத்திருக்கிறேன்’” என்றான் சொக்கன்
“ம்ம் உனக்கு எப்பொழுதும் அதே நினைப்புதானடா!! சரி!! மழை விட்டதும் அருகில் எங்காவது போய் சாப்பிட்டு விட்டு இரவுக்கு தேவையான உணவையும் சேகரித்து வந்து விடுவோமடா” என்று மாறன் கூற சொக்கன் அதற்கு பதில் கூற. வெளியில் சாரல் மழை வீச, உள்ளே காதல் மழை வீசி கொண்டிருந்தது.
உலகத்தை மறந்து உறவாடும் இந்த உல்லாச பறவைகளுக்கு தெரிய போவதில்லை மறைக்க பட்ட உண்மைகள் தெரிய வரும் பொழுது காட்சிகள் மாற போகின்றன என்று.
                                                 
 



                                15
                 அத்தான் வந்திருக்கிறார்


பூலோக வைகுண்டமா? இல்லை பொன்னார் மேனியனின் கையிலாயமா? அல்லது ஆறுகாலமும் ஆடல் பாடல் நிகழும் அமராபதியா? என்று காண்போர் வியக்க, காணதவர் திகைக்க தரணிக்கெல்லாம் சோறிட்ட தஞ்சையம்பதி தன்னிகரில்லாத விழா ஒன்றிற்கு தயாராகி கொண்டிருந்தது.
ஆறேழு ஆண்டுகளாக அரும்பாடு பட்டு கட்டிய பெரியகோயிலின் கும்பாபிஷேகத்தை விண்ணோரும் வியக்கும் படி நிகழ்த்த எண்ணிய மும்முடி சோழன், முதற்கட்ட வேலைகளாக தஞ்சை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண வைத்தான்.
வீதியெங்கும் பந்தல், வாயிலெங்கும் தோரணம், நாதியில்லா மக்களுக்குக் கூட நாலுவேளை சோறு என திருவிழா கோலம் பூண்டது தஞ்சை. நகரின் எல்லை முதல் முக்கிய வீதிகளின் சந்திப்பெல்லாம் அலங்கார வளைவுகளும், நீள நீள புடவைகளில் வண்ண குழம்பால் பெரிய கோவில் விமானத்தை வரைந்து கும்பாபிஷேக திதியையும், என்னென்ன திதிகளில் என்னென்ன பூசைகள் நடக்க போகின்றன என்றும், அந்த அந்த பூசை வேளைகளில் மக்கள் எங்கு எங்கு நிற்க வேண்டும் என்றும் அறிவிப்பு பலகைகளும் வைக்க பட்டன. விழா நாட்களில் எந்தெந்த சந்திகளில் என்னென்ன கலைநிகழ்ச்சிகள் நடக்க போகின்றன என்றும் அறிவிப்புகள் வைக்க பட்டன.
மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு அவரவர் இல்லத்தில் கமுகங்கூந்தல், தென்னங்கூந்தல், மாவிலை, பனங்குலை, ஈச்சங்குலை, இளநீர் குலை, துணியால் ஆன தோரணம், வாழைகன்று, குலைவாழை, மல்லிகை சரம், சம்பங்கி சரம் என்று அலங்காரம் செய்தனர். முதல்நாள் பூசையில் துவங்கி பதினோரு கால யாகபூஜை முடிந்து கும்பாபிஷேகம் நிகழ இருப்பதால் இந்த ஆறு நாட்களும் மக்கள் இந்த அலங்காரங்களை புதுபித்து கொண்டே இருப்பார்.
தனபண்டாரம், தானியபண்டாரம், அரசு அங்காடிகள், மருத்துவமனைகள், காவல் மன்றங்கள், நீதி மன்றங்கள் முதலான அத்தியாவசிய நிறுவனங்கள் தவிர மற்ற அரசு வாரியங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க பட்டது, சோழ தேசத்தின் நட்பு நாடுகளுக்கும், அதற்கு திறை, கப்பம் முதலானவை செலுத்தும் நாடுகளுக்கும் அதிகார பூர்வமாக அரச முத்திரையுடன் விழாவிற்கு அழைப்பு அனுப்ப பட்டது. தஞ்சை மட்டுமல்லாது தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் விழாவின் அழைப்பிதழ் பெரிய பெரிய புடவைகளில் எழுதி வைக்க பட்டது. அதில் மக்களை விழாவில் கலந்து கொள்ளுமாறு மன்னரே நேரடியாக அழைத்திருந்தார். அதுமட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் தண்டோரா போட்டும், பறை அறைந்தும் நாடு முழுவதும் மக்களுக்கு விளங்கும் படி நிகழ்ச்சி நிரல்கள் வாசிக்க பட்டன. விழாவினை காண வெளியூர்களில் இருந்தும், வெளி தேசங்களில் இருந்தும் வரும் மக்களுக்கெல்லாம் தஞ்சை நகர மக்கள் தத்தமது வீடுகளில் தேங்காய் தாளிதம், எலுமிச்சை தாளிதம், தயிர் தாளிதம், நெய் சோறு, போன்ற சைவ உணவுகளை வழங்கினர். விழா காலம் முழுவதும் ஊரை சேர்த்து ரக்ஷாபந்தனம் (காப்பு) செய்யபட்டிருந்ததால் மக்கள் அனைவரும் பாயில் படுக்காமல், பதி பத்தினி கூடாமல், கறி உணவு சேர்க்காமல் விரதம் பூண்டிருந்தனர்.
எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளே இத்தனை விழாகோலம் பூண்டிருக்கிறது என்றால் தனவந்தர்களும், அரண்மனை பணியாளர்களும் வசிக்கும் பிரமகுட்டத்து தெரு, ஜய பீமதளித் தெரு, ஆனைக்காடுவார் தெரு, பன்மையார்தெரு, வீர சோழப் பெருந்தெரு, இராசராச வித்யாதரப் பெருந்தெரு போன்ற தெருக்களில் இந்த வீட்டை பார்க்கலாமா!! இல்லை அடுத்த வீட்டை பார்கலாமா!! என்று வீதியில் போவோரெல்லாம் வாயை பிளந்து கொண்டு பார்த்து சென்றனர். தனவந்தர்கள் வசிக்கும் தெருக்களே இப்படி என்றால் தஞ்சை மன்னன் வசிக்கும் அரண்மனையோ! சொர்க்கலோகம் இதுதானோ,!! சுவர்ண லோகம்இதுதானா!!? என்று வியக்கும் வகையில் அலங்காரம் செய்ய பட்டு இருந்தது.
 மாமன்னனின் அறுபத்தி ஏழாம் அகவை ஆண்டில் நிகழும் இந்த சித்திரை மாதத்தில் சுக்கில பட்சத்தில் எதிர்வரும் ஷஷ்டி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ இருப்பதால் அமாவாசை நாளான இன்று துவக்க பூசைகளில் கலந்து கொள்வதற்காக மன்னனும், அவரது பதினைந்து மனைவி மார்களும் அவர்கள் பெற்ற பெண்டு, பிள்ளைகளும் அரண்மனையில் இருந்து புறப்பட்டு ஆலயத்திற்கு எழுந்தருளி விட்டனர். வடக்கே வேங்கியை கைப்பற்ற நிகழும் போருக்கு படை தலைமை ஏற்று சென்றிருக்கும் இளவரசர் இராஜேந்திர சோழர் மட்டும், விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வருவதாக ஓலை அனுப்பி விட்டார்.
ஆலயவளாகம் முழுவதும் பரபரப்புடனும், ஜனக்கூட்டம் நிறைந்ததாகவும் காணப்பட்டது. விமானத்தின் பாதி அளவிற்கு பொன் வேய பட்டிருந்தது, மற்ற பகுதிகளில் மும்முரமாக பணிகள் நடந்து கொண்டிருந்தன. விமானத்தை சுற்றி பொற்கொல்லர்கள் ஏறி இறங்குவதற்கும், கும்பாபிஷேகத்தின் பொழுது கலசத்தை கொண்டு செல்வதற்கும் ஏற்ற வகையில் சாரம் அமைக்க பட்டிருந்தது. ஆலயம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய பட்டு, வெளிப்புறம் லட்ச்சக்கணக்கான மக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பெரிய பந்தல் அமைக்க பட்டு அதன் அருகிலேயே பெரிய கொட்டகையில் வேள்வி சாலை அமைக்க பட்டிருந்தது.
“சிவாகமம்” சொல்லும் விதிகளின்படி “ருத்ரசூத்ரக்கிரமம்” என்ற வடிவமைப்பில் முப்பத்திமூன்று குண்டங்கள் அமைக்க பட்டு, நூறு தூண்களுடன் எழிலுற உருவாக்க பட்டிருந்தது அந்த வேள்விசாலை. பூமியை ஒரு முழஆழத்திற்கு வெட்டி, புதுமண் பரப்பி, கீழே ரத்னங்களிட்டு, மட்டம் செய்து பூசி, அதன் மீது தாமரை ஆசனம், , கூர்மாசனம், சிம்மாசனம், நாகாசனம், இடபாசனம் முதலான ஐந்து வகையான ஆசனங்கள் அமைக்க பட்டு அதன் மீது வெட்டிவேர் பந்தல் இட்டு வாழை மர தோரணம் கட்டப்பட்டு “பெருவுடையார்” கும்பத்தில் எழுந்தருளுவதற்கான மேடை அமைக்க பட்டிருந்தது. மேற்சொன்ன விதிகளின் படியே மற்ற பரிவார தெய்வங்களுக்கும் இறையாசனங்களும், குண்டங்களும் அமைக்க பட்டு தயார் நிலையில் இருந்தன. அந்த யாக சாலை முழுவதும் சதுர்வேதி மங்கலத்து அந்தணர்கள் குடங்களில் முப்புரிநூல் சுற்றிகொண்டும், நானற் புல்லால் கயிறு திரித்து கொண்டும் இன்ன பிற பணிகளை மேற்கொண்டும் இருந்தனர். ஆலயத்தின் உள்ளே மங்கள வாத்தியங்கள் முழங்க சில முதற்கட்ட பூசைகள் துவங்கி இருந்தன.
அரசனின் முன்னிலையில் பிராதான அந்தணர் “அனுஞை” எனப்படும் விநாயகர், மற்றும் பரிவார தெய்வங்கள் முதலானவர்களிடம் விழாவிற்கான அனுமதி கேட்கும் பூஜையை துவங்கினார்.
தொடர்ந்து கணபதி ஹோமம் முடித்து “கிராம சாந்தி” எனும் பூஜை மேற்கொள்ள பட்டது. இதில் பைரவ பெருமானை வேண்டி தஞ்சை நகர் முழுவதும் விழா முடியும் வரை காவல் இருக்கும் படி நகரின் எல்லைகளில் பலிகள் கொடுக்க பட்டன. தொடர்ந்து “பிரவேசபலி” எனப்படும் கிரியையில். ஆலயத்தைச் சுற்றி எண்திசைகளிலும் இன்னும் பிரம்மஸ்தானம் என்ற இடத்திலுமாக சேர்த்து ஒன்பது இடங்களில் (நவசந்திகளில்) நீற்று பூசுனைக்காய் வெட்டி பலி கொடுத்து, ராஷஸர்களை அழிக்கும் ரஷோக்னதேவரை முன்னிறுத்திப் போற்றி “ரஷோக்ன ஹோமம்” செய்து.
சிவாஸ்திரம் (சிவனின் ஆயுதம்), அகோராஸ்திரம் (ருத்திர ஆயுதம்), பிரத்தியங்கிராஸ்திரம் (எரிசின கொற்றவையின் ஆயுதம்), பாசுபதாஸ்திரம் (சிவனின் மழு) ஆகிய நாற்பெரும் ஆயுதங்களைப் போற்றி திசாஹோமம் (திசைகளுக்காண வேள்வி) செய்து சிறப்பாக கோபூஜை, கஜபூஜை ஆகியவற்றையும் செய்தனர்.
தொடர்ந்து வாஸ்து சாந்தி எனப்படும் பூசையில் பூமியின் அடியில் உறங்குவதாக கருதப்படும் “வாஸ்து புருஷன்” அசையாமல் (அசைந்தால் பூகம்பம் ஏற்படுமாம்) இருக்க அவனை நாகபந்தனம் (நாகத்தால் கட்டுதல்) செய்தனர். பின் வைக்கோலால் ஒரு ஆளுருவம் செய்து அதில் வாஸ்து புருஷனை ஆவாகித்து அதன் மீது பிரம்மன் உட்பட ஐம்பத்தி மூன்று தேவர்களை ஆவாகனம் செய்து அதன் தலையில் ஹோமத்தீயை கொளுத்தி ஆலயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இழுத்து வந்து அதன் மீது சாந்தி நீர் தெளித்தனர் .
பின்னர் நவகிரகங்களையும் அவற்றிற்கு உரிய வண்ண துணி, தானியம், ரத்தினம் முதலானவைகளுடன் அவற்றின் திசைகளில் இருத்தி நவகிரக மகா யாகம் செய்தனர்.
தொடர்ந்து அனைவரும் யாக சாலை நோக்கி வந்து அங்கு அங்குரார்ப்பணம் (முளைபாலிகை) எனப்படும் சடங்கை நிகழ்த்தினர். இதில் “பூ சுக்தம்” (மண்ணின் பெருமைகளை சொல்லும் வேதமந்திரம்)என்ற மந்திரம் ஓதபெற்று எடுக்கப்பட்ட மண்ணை வேள்விசாலையின் வடமேற்கு மூலையில் இட்டு அதன் மீது பாலில் ஊறவைத்த நவதானியங்களை விதைத்தனர்.
பின்னர் ரக்க்ஷாபந்தனம் எனப்படும் காப்புகட்டும் நிகழ்ச்சியில், அரசனுக்கும் அவனது மற்றொரு மகனுக்கும் இன்ன பிற முக்கிய அதிகாரிகளுக்கும், வேள்வியில் கலந்து கொள்ள இருக்கும் அந்தணர்களுக்கும் மஞ்சளில் நனைத்த பருத்தி நூலை வலக்கை மணிக்கட்டில் கட்டினர். இந்த ரக்ஷாபந்தனம் என்ற நிகழ்ச்சியுடன் முதற்கட்ட கிரியைகள் அனைத்தும் முடிவடைந்து யாகசாலை பூஜைகள் துவங்க இருந்தன. ஆனால் அமாவசை முடிந்து பிரதமை திதி துவங்கி இருந்ததால் மறுநாள் மாலையில் இருந்து வேள்விசாலை பூஜைகள் துவங்கும் என அறிவிக்க பட்டது.
                                *****
தஞ்சை இப்படி விழாக்கோலம் பூண்டிருக்க, மழைக்காக மண்டபத்தில் ஒதுங்கி இருந்த நமது நாயகர்கள் இருவரும் அன்று இரவை ஆனந்தமாக கழித்தனர். கோடைநாளில் பெய்த மழை ஆதலால் கொசுக்களும் கொண்டாட்டமாகத்தான் இருந்தன. ஆனால் வேம்பு, நொச்சி போன்ற தழைகளையும், அருகில் கிடந்த ஒரு வைக்கோல் போரில் இருந்து சிறிது ஈர வைக்கோலையும் கொண்டு தீமூட்டி புகைமூட்டம் போட்டு கொசுக்களை விரட்டினான் சொக்கன். திரயோதசி இரவு, எதிரில் உள்ளோர் முகம் தெரியாத இருட்டு, இனிமையான தனிமை எல்லாம் காதல் வயப்பட்ட காளைகளுக்கு கசக்கவா செய்யும்?
இன்பம் தந்த இரவிற்கு விடையளித்து புலர்ந்த பொழுதில், குளித்து முடித்து வேகமாக பயணித்து கல்லணையை அடைந்தனர் இருவரும். மாறன், ஏற்கனவே பலமுறை கல்லணையை பார்த்திருந்தாலும் சொக்கன் பார்க்க விருப்ப பட்டதால்தான் இருவரும் கல்லணைக்கு சென்றனர். சொக்கனுக்கு பிறந்த ஊர் திருவாரூர் அருகே குடவாயில். அவனது குடும்பமே வீரவரலாறு நிரம்பிய ஒன்று. சொக்கனுடைய பாட்டனார் ஈழமண்டலத்து போரிலும், அவனது தகப்பனார் கேரளப்போரிலும் சோழதேசத்திற்காக இன்னுயிரை ஈந்தவ்ர்கள். சொக்கனுக்கு ஒரு சகோதரி உண்டு அவளை மன்னார்குடியில் மணம் முடித்துள்ளனர். சிறு வயதில் இருந்தே போர் பயிற்சி, உடற்பயிற்சி, மல்யுத்தம், என்று வீரத்தை வளர்க்கும் பயிற்சிகளிலேயே சொக்கன் தன்னை ஈடுபடுத்தி கொண்டதால் அவன் அதிகமாக வெளியூர் பயணமெல்லாம் சென்றதில்லை. அவனது அதிகபட்ச பயணமே ஒரு முறை தில்லை வரை சென்று ஆடல்வல்லானை தரிசித்ததும், தஞ்சையும் தான். ஒருமுறை நாகபட்டினம் சென்றிருப்பதாக கூட அறிய முடிகிறது. ஆனால் வெளியூர்களில் உள்ள ஆலயங்களை பற்றியும், அங்கு உள்ள மற்றைய புராதான இடங்களை பற்றியும் பிறர் சொல்ல அடிக்கடி ஆரவமுடன் கேட்டிருக்கிறான். அவ்வகையில் சோழ மன்னர்கள் மீதும், சோழ பரம்பரை மீதும் மாறாத காதலும், பக்தியும், பற்றும் கொண்ட சொக்கனுக்கு கரிகால் சோழவளவன் எழுப்பிய கல்லணையை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஏக்கம் என்றே சொல்லலாம்.
   சித்திரை மாதம் என்பதால் அவ்வளவாக நீர்வரத்து இன்றி காணப்பட்டது கல்லணை. ஓரளவிற்கு கேள்விப்பட்டதை வைத்து கல்லணையின் தோற்றத்தை மனதிற்குள் கற்பனை செய்து வைத்திருந்த சொக்கனுக்கு மிகுந்த ஏமாற்றமும் ஆச்சரியமும் தான் மிஞ்சியது. ஏனெனில் சொக்கன் எண்ணியதை விட பலமடங்கு பிரமாண்டமாக இருந்தது கல்லணை.
“என்ன? மாறா!! எப்படிப்பட்ட கட்டமைப்படா இது? எத்தனை அறிவும், உடல் வலுவும், பொருளும் இருந்தால் இப்படி பட்ட அணையை அவர் கட்டி இருப்பார்?” என்று விழி விரிந்தான் சொக்கன்.
“ஆமடா சொக்கா!! நமது மாமன்னர் இராசராசர் கட்டும் ஆலயம் கூட இத்தனை பிரமாண்டமானது தானடா, இன்று நாமெல்லாம் ஆலயமாக பார்க்கும் அதனை பிற்கால மக்கள் அதிசயங்கள் பல நிறைந்த ஒன்றாக பார்ப்பர். இதிலிருந்தே நம்மவர்களின் திறத்தை விளங்கி கொள்ளலாம்.”
“பூதங்களின் உதவியோடு இவ்வணையை கரிகாலர் கட்டியதாக கூறப்படுகிறதே!!”
“இல்லை!! அதெல்லாம் சுத்த கட்டு கதைகளடா சொக்கா!! கடற்கரையில் நாம் கால் நனைத்தால் பாதத்தின் அடியில் உள்ள மண் அரிக்கபட்டு நாம் கீழே அமிழ்கிறோம் அல்லவா? அந்த தத்துவத்தின்படி சுழன்று ஓடும் காவிரியில் நீரில் கரையாத கல்லொட்டும் கலவை பூசிய பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக போடப்பட்டு பலமான அஸ்த்திவாரம் அமைத்து இந்த அணையை உருவாக்கி உள்ளனர் நமது மூதாதையர்கள்” என்று ஒரு சிற்பிக்குரிய தெளிவுடன் கூறினான் மாறன்.
இன்னும் பலகதைகளை பேசி அன்றைய பொழுதை அங்கேயே கழித்தபின், மறுநாளான அமாவாசை தினத்தில் உறையூர் வெக்காளியம்மனின் ஆலயத்தை அடைந்தனர் இருவரும். ஆலயம் அவ்வளவாக பெரியதாக இல்லை என்றாலும் அம்மனின் கருவறையை சுற்றி மட்டும் கல் மண்டபம் அமைக்க பட்டு மேற்கூரைக்கு பதில் வெட்டிவேரில் பந்தல் அமைக்க பட்டு இருந்தது.
அமாவசை தினம் என்பதால் தேவிக்கு சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டன. திரையை விளக்கி தீபாராதனை கட்டிய பொழுது குங்கிலிய புகையின் வெள்ளத்தில் சிவப்பு நிற பட்டுடுத்தி, எண்ணற்ற ஆபரணங்களுடன் எழிலுற தரிசனம் அளித்த அம்மனை கண்டதும் மாறனுக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது, சொக்கனும் பயபக்தியுடன் தேவியை தரிசித்தான். பின் ஆலயத்தை வலம் வந்த பொழுது வாசலில் ஒரு மரத்தில் எண்ணற்ற பனையோலை சுருள்கள் கட்டபட்டிருந்தன. அருகிலேயே ஒரு சிறிய கல்மேடையும் இருந்தது. அதனை காட்டி
“அன்னையிடம் வேண்டும் காரியங்களை ஓலையில் எழுதி கட்டினால், இரவு நேரத்தில் இந்த மேடை மீது அமர்ந்து கொண்டு அன்னை இந்த ஓலைகளை வாசித்து விட்டு மக்களின் குறைகளை தீர்த்து விடுவாராம்” என்று .மாறன் கூறியதை கேட்டு சொக்கன் அதிசயித்தான். தொடர்ந்து அருகில் இருக்கும் சிறிய கடையில் ஒரு ஓலை நறுக்கும், எழுத்தாணியும் வாங்கிய மாறன்,


அம்மா தாயே!!
          பணிவுடன் சொக்கன், மாறன் எழுதி கொள்வது, இன்று உன் சன்னதிக்கு நாங்களிருவரும் சேர்ந்து வந்துள்ளது போலவே என்றும் சேர்ந்தே இருக்க வேண்டும், நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்வின் இறுதி வரை ஒன்றாக இருக்க அருள் புரித்தாயே!! என்று அந்த ஓலையில் கீறி சொக்கனின் கைகளால் அந்த மரத்தில் கட்ட செய்தான்.
“சரி மாறா புறப்படுவோமா?”
“ஆம் சொக்கா!! தஞ்சை இந்நேரம் விழாக்கோலம் பூண்டிருக்கும், இனி வேகமாக செல்ல வேண்டும்”
“ஆஹா!! நல்ல கதை. என்ன விளையாடுகிறாயா மாறா? இவ்வளவு தூரம் வந்து சீரபள்ளி செல்லாமல், உனது இல்லத்தை காணாமல் எப்படி செல்வது?”
“எனது இல்லத்திற்கா?” அதெல்லாம் வேண்டாம் மாறா!!”
“ஏன்? நான் உங்கள் இல்லத்திற்கெல்லாம் வரக்கூடாதா?, உனது தாய் தந்தையர் யாரென்று கேட்டு ஏதேனும் வசை பாடுவார்களா?”
“ஐயோ!! அதெல்லாம் இல்லை சொக்கா !!” என்று திணறி நின்றான் மாறன்.
“பிறகு என்ன? சரி, புறப்படு உனது இல்லத்திகு சென்று விட்டு உடனே புறப்பட்டு விடலாம், ஆலயத்திற்குத்தான் வந்தோம் தஞ்சை உடனடியாக தஞ்சை புறப்பட வேண்டும் என கூறி விட்டு புறப்பட்டு விடலாம் வா!!” என்று அவனே சீரபள்ளி நோக்கி குதிரையை செலுத்தினான்.
“ஏன் இப்படி தயங்குகிறான்?” என்று சொக்கனின் மனதிற்குள் ஒரு கேள்வி இருந்தாலும் அதனை காட்டி கொள்ளாமல் மாறனிடம் பேசிக்கொண்டேதான் வந்தான் சொக்கன். மாறனும் முகத்தில் அவ்வளவாக சுரத்தை இன்றிதான் பேசி கொண்டுதான் வந்தான்.
ஏற்கனவே பலமுறை வந்ததாலோ என்னவோ மாறனின் குதிரை அவனது இல்லத்தில் சரியாக போய் நின்றது. நல்ல பெரிய மச்சு வீடுதான். மிகுந்த கலை நயத்துடன் கட்ட பட்டிருந்தது. குதிரையின் குளம்படி கேட்டு வெளியில் வந்த பொன்னிகர் பெண்ணொருத்தி படீரென மின்னல்போல முகம் காட்டி
“அத்தை!! அத்தான் வந்திருக்கிறார்!!” என்று வேகமாக உள்ளே ஓடினாள்
மாறனுக்கோ படபடப்பு, சொக்கனுக்கோ எதிர்பார்ப்பு!!
மஞ்சள் பூசியதால் நெற்றிக்கு மேல் உள்ள நரை முடியெல்லாம் மஞ்சள் நிறத்துடனும், வகிட்டில் குங்குமத்துடனும், ஆடம்பரமில்லாத தெய்வீக அழகுடன் நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி ஒருவர் வெளிபட்டார்.
பார்த்ததும் இவர்தான் தன் உள்ளகோயிலை ஆட்சி செய்யும் மாறனை ஈன்றெடுத்த மாதரசி என்று விளங்கி கொண்ட சொக்கன்,
“வணக்கம் தாயே!! என்னை ஆசிர்வதியுங்கள்” என்று கால்களில் விழுந்தான்.
“ஆஹா!! பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் மகனே!!
நன்றாக இரு” என்று வாழ்த்திய அப்பெண்மணி “மாறா!! யாரடா இந்த பண்பு மிக்க பிள்ளை?” என்றார்
“எனது நண்பன் அம்மா!! பெயர் சொக்கநாதன்”
“அப்படியா? என்ன பொருத்தமான பெயர்!! வா மகனே! உள்ளே வாருங்கள் இருவரும்.”
உள்ளே சென்று கூடத்தில் அமரவைக்க பட்ட சொக்கனிடம் ஒரு பழக்குவளையும், சிறிது நீர் மோரும் வைக்க பட்டது. மகிழ்வுடன் ஏற்று கொண்ட சொக்கனிடம் மேளும் பல விசாரணைகளை போட்டார் மாறனின் தாயார். ஆனால் அவரது பேச்சில் மாறனை பற்றிய ஆதங்கம்தான் அதிகம் வெளிப்பட்டது.
“என்ன? அம்மா யார் வந்தாலும் ஒரே பாட்டுத்தானா? போய் உள்ளே சமையல் வேலையை கவனியுங்கள், உணவருந்தி விட்டு நாங்கள் உடனே புறப்பட வேண்டும்.
“ஓஹோ!! அப்படியென்றால் இது போல நிறைய நண்பர்களை இவன் அழைத்து வருவான் போலிருக்கிறதே!!” மனதிற்குள் விசன பட்டான் சொக்கன்.
சிறிது நேரத்தில் வாசலில் ஒரு குதிரை வண்டி ஓசை கேட்டது. தொடர்ந்து ஐம்பது வயது மதிக்க தக்க இரண்டு ஆடவர்கள் உள்ளே நுழைந்தனர். அதிலொருவர் நேரடியாக சொக்கனை பார்த்து வா!! அப்பா!! என்று அழைத்து விட்டு புழக்கடைக்கு சென்றார், மற்றொருவர் மருமகனே!! என்று மகிழ்ச்சி பொங்க மாறனை விசாரித்து விட்டு, பின் சொக்கனை யார், என்னவென்று விசாரித்தார். மாறனின் முகத்தில் எண்ணற்ற குழப்ப ரேகைகள் சீறி பாய்ந்து கொண்டிருந்தன. சொக்கனுக்குத்தான் ஒன்றும் பிடிபடவில்லை.
“ஏன் இவன் கடுக்காய் விழுங்கிய கள்ளன் போல விழிக்கிறான்?” என்று உள்ளுக்குள் கேட்டுகொண்டான்
தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது, மாறனின் தாயார் பதார்த்தங்களை எடுத்துவைக்க, அடிக்கடி மதிவதனி!! மோர் கொண்டு வாம்ம்மா!! வற்றல் கொண்டுவாம்மா!! என்று விளித்து கொண்டிருந்தார், அந்த பெண்வந்ததும் தெரியாமல், போவதும் தெரியாமல், ஓசையும் படாமல் வந்து சென்றாள், மாறனும், சொக்கனும் குனிந்த தலை நிமிராமல் உணவருந்தி கொண்டிருந்தனர். மாறனின் தந்தையும், மாமாவும் ஏதேதோ பேசிக்கொண்டு உணவருந்தினர், அவ்வப்பொழுது அவனது தந்தை கோயில் பணிகளை பற்றியும், தஞ்சை நிலவரங்களையும் கேட்டதற்கு மட்டும் பதில் அளித்து கொண்டிருந்தான் மாறன்.
விரைவாக உண்டு முடித்த சொக்கன் எழுந்திருக்கவே!! அவனுக்கு புழக்கடை பக்கம் தண்ணீர் இருப்பதாக வழிகாட்ட பட்டது. அவன் எழுந்து சென்ற மறுவினாடியே இலையை மூடி விட்டு மாறனின் மாமா பின்னாலேயே ஓடினார்.
இருவரும் ஒன்றாகவே கைகளை கழுவினர், பின் அவரே பேச்சு கொடுத்தார்
“சொக்கநாதா!! மாறன் உனக்கு உற்ற நண்பனா?”
“ஆம் அய்யா!! ஏன் கேட்கிறீர்கள்?”
“நீ எதை வேண்டினாலும் உனக்காக செய்வானா?”
“நிச்சயம் செய்வான், கூறுங்கள் என்ன கேட்க்க வேண்டும்?”
“தம்பி!! எனது மகள் மதிவதனி, மாறனின் மீது உயிரையே வைத்திருக்கிறாள், சிறு பிராயம் முதலே இருவருக்கும் திருமணம் செய்வதாக முடிவு, ஆனால் மாறன் இந்த திருமணத்திற்கு ஒப்ப மறுக்கிறார். கடந்த ஐப்பசி மாதம் கட்டாய படுத்தி இருவருக்கும் முகூர்த்த ஓலை எழுதி விட்டோம், ஆனால் பெரிய கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாய் கூறியிருந்தார், ஆனால் இப்பொழுது நாட்டமில்லாதது போல இருக்கிறார், தாங்களே கூறுங்கள் அவர் வயதிலும், என் மகள் வயதிலும் யாரேனும் திருமணம் செய்யாமல் இருகிறார்களா? ஏன் உங்களுக்கு கூட இந்நேரம் திருமணம் முடிந்திருக்கும், எனக்காக பெரிய கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் அவரை திருமணம் செய்து கொள்ளும் படி கூறுங்கள் தம்பி!! இல்லை என்றால் என் மகளை உயிரோடு பார்ப்பதே அரிதுதான், என்று கண்களில் நீர் விட துவங்கினார். அதற்குள் மாறன் வந்து விட்டான்.
“எது நிகழ கூடாது என்று எண்ணினோமோ அது நிகழ்ந்து விட்டது” என்று எண்ணிய படியே பதற்றத்துடன் சொக்கனின் அருகில் மாறன் வர அவனது மாமன் உள்ளே சென்றார்.
கண்களில் நீர் கொப்பளிக்க, கடு கடு என்று நின்று கொண்டிருந்தான் சொக்கன் , அருகில் வந்த மாறன் அவனது தோளில் படபடப்பாக கைகளை வைத்தான். “சொக்கா!!”
“உன்னை நம்பியதற்கு நல்ல பாடம் கற்று கொடுத்து விட்டாய் மாறா!! ஏமாந்து விட்டேன்!! ஏமாந்து விட்டேன்!! காலம்முழுவதும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்தேனே!! எல்லாம் பாழாய் போய்விட்டது. இனி இங்கு எனக்கென்ன வேலை? நான் செல்கிறேன்” என்று வேகமாக புறப்பட்டு, அவனது தாய் தந்தையரிடம் பணிவுடன் வணக்கம் கூறி குதிரையில் ஏறி தஞ்சை நோக்கி. விரைந்தான் சொக்கன்.
படபடப்பில் ஒன்றும் புரியாதவனாக திகைத்து நின்றான் மாறன்,
கண்ணீரை காற்றில் கரையவிட்டு சொக்கன் தஞ்சை சென்றாலும் “எப்படியும் மாறன் நமக்குத்தான் சொந்தம், அவன் அனைத்தையும் உதறி விட்டு எனக்காக வருவான்.” என்று எண்ணியபடிதான் அவன் சென்று கொண்டிருந்தான்.
காதலன் “மனம் நோகும் படி ஆகி விட்டதே? எத்தனையோ முறை உன்னிடம் இதனை சொல்ல வந்து தயங்கி போய் நின்றிருக்கிறேனடா சொக்கா!!, நீ என்னை புரிந்து கொள்வாய், என் உயிர் போகும் வரை உன்னோடுதனடா நான் இருப்பேன். நீதானடா எனது உயிர்” என்று நினைத்து கொண்டு மனதில் எதையோ உறுதி செய்தவாறு வீட்டுக்குள் நுழைந்தான் மாறன்’.
 மனித மனங்களுக்கு கனவுதான் காணத்தெரியும்’ காலம் வேறுமாதிரியான கோலம் போட இருப்பது தெரியுமா? .அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்
                                 


ஓசை கேட்கும்