பக்கங்கள்

வியாழன், 9 ஏப்ரல், 2015

கெட்டிமேளம் – ஓரினக்காதல் சிறுகதை



கதையில் வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் முழுதும் கற்பனையே.

திருமண மண்டபத்தின் கலவையான ஓசையிலிருந்து ஆனந்தபைரவி இராகத்தில் கெட்டிமேளச்சத்தம் புறப்பட்டபோது வாசலில் நின்றுகொண்டிருந்தான் கௌதம். இன்பமான வேளைகளில் ஆனந்தத்தை தரும் பொருட்டு இசைக்கப்படும் கெட்டிமேளம் கௌதமுக்கு பெரும்வேதனையை தருகிறது என்றாலது மிகையாகாது.

ஆண்டுகள் ஐந்தில் அன்பாய் பண்பாய் ஆதரவாய் கோபமாய் அழுகையாய் உரிமையாய் அனைத்துகிடந்த தன் அன்புகாதலனின் மார்பில் இன்று வேறொரு பெண் சாய்ந்துகொள்ள போகிறாள் எனும்போதும் எந்நேரமும் தன் கைகளை பற்றியிருந்த ஆசைகாதலனின் கரங்கள் இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்டும் போதும் எழுப்பப்படும் கெட்டிமேளம் சத்தம் உங்களுக்கோ எனக்கோ ஆனந்தத்தை நிச்சயம் தராது எனும் பொழுது கௌதம் மட்டும் விதிவிலக்கா என்ன?

நின்ற இடத்திலேயே ஆதுரமாக மண்டபத்தின் கேட்கம்பியை பற்றி கொண்ட கௌதம் ஒருமுறை திருமணமண்டபத்தினை நோக்கினான். எல்லோரும் மகிழ்ச்சியும் சிரிப்புமாக இருந்தனர். ஆனால் அங்கும் ஒரு உள்ளம் தன்னை போல் துடித்துகொண்டிருக்கும் என்று உணராதவன் இல்லை அவன். காதல் பொய்த்துபோனதை எண்ணி வாய்விட்டு கதறி அழுவதற்காவது தனக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உள்ளே தாலிகட்டி மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் ரகு எனும் தன் அன்புகாதலனுக்கு அதற்கும் வழியில்லாமல் வெற்று சிரிப்புடன் மனைவியை நெருங்கிநின்று புகைப்படத்திற்காக போஸ் கொடுக்கவேண்டிய நிலைதான் என்பதால் தற்பொழுது கூட ரகுவின் வேதனையை நினைத்து வருந்தினான் கௌதம்.

எப்பொழுது பல்வேறு தடைகளை தாண்டி தங்கள் கனவுகளை உடைத்து தூள்தூளாக்கி விட்டு ரகுவிற்கு திருமணம் நிச்சயம் செய்யபட்டதோ அன்றே போதிய அளவுக்கு சோர்ந்துவிட்ட அவன் பெரிதும் மதிக்கும் ரகுவின் தாய் ஓடிவந்து

கௌதம் உன் கால்ல வேணும்னாலும் விழுறேன் ஏன் மொவனவிட்டுட்டு போய்டு, அவன் எங்களுக்கு வேணும் அவனுக்கு ஒருகல்யாணம் பண்ணி புள்ள பொறந்து எங்க குடும்பம் தழைக்கனும், அது உன் கையிலதான் இருக்கு அவன விட்டுடு

என்று கதறி காலில் விழுந்த பொழுது தங்கள் காதல் கனவுகளுக்கு மூடுவிழா நடத்தினான் கௌதம்.

சரி இருங்கள் கௌதமின் செல்போன் அடிப்பது போல் இருக்கிறது என்னவென்று பார்ப்போம்

அதனை எடுத்து பார்த்த கௌதமுக்கு தன்வீட்டு லான்ட்லைனில் இருந்து அழைப்பு வருவதை அடுத்து தன்னை பெற்றவள்தான் அழைக்கிறாள் என்பதை உணர்ந்து “சொல்லுமா” என்றான் கண்களை துடைத்த படி

எதிர்முனையிலும் அழுகுரல்தான். தன்தாய் அழுகிறாள் என்பதை வைத்து செய்தி என்னவென்பதை ஒருவாறு யூகித்தறிந்தான் கௌதம் இருந்தாலும்
“என்னமா? ஏன் அழுவுற? சொல்லு என்றான்.

தம்பி அப்பா போய்ட்டாருடா என்று கதறினாள் அவள். இது என்றைக்கோ வரவேண்டிய செய்திதான் இன்றைக்கு வந்துவிட்டது. என்றாலும் எல்லா இடியும் ஒரேநேரத்தில்தானா வந்து தலையில் விழவேண்டும்? பாவம் ஒருமனிதன் எத்துனை வேதனைகளைத்தான் ஒரே நேரத்தில் தாங்குவான்.?

தன் தாயின் அழுகுரல் கௌதமுக்கும் அழுகையை பெருக்கியது இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கி கொண்டு
அழாதம்மா நான் வந்துட்ருக்கேன் என்று தொடர்பை துண்டித்தான். இப்பொழுது தந்தையின் மரணம் ஓரளவிற்கு ரகுவின் திருமண கவலையை ஈடுசெய்திருந்தது. மெல்ல நடந்து சாலையை கடந்து பேருந்து ஒன்றை பிடித்து ஏறியமர்ந்தான். அது குலுங்கிக்கொண்டு கிளம்பியது அவனது ஊர் நோக்கி. அவன் ஊருக்கு போய் சேர்வதற்குள் அவனது கடந்தகால காதல் வாழ்க்கையை சுருக்கமாக பார்த்து விடுவோம்.

ரகுவும் கௌதமும் காதலர்கள் அவர்கள் எப்படி காதலிக்க துவங்கினார்கள் எப்படி சந்தித்தார்கள் என்பதெல்லாம் கதயின் ஓட்டத்திற்கு தற்பொழுது அவசியமில்லாத காரணத்தால் அவைகளை விளக்கிவிடுவோம்.

எல்லோர் போலவும் தேடலில் துவங்கி கூடலில் வளர்ந்து ஊடலில் குழைந்த காதல்தான் இவர்களது காதலும்.
காதலர்கள் இருவரும் தத்தமது குடும்ப சூழ்நிலைக்கு தக்கபடி வாழ்க்கையை புரிந்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவது என்று முடிவு செய்திருந்தனர்.

வீட்டு சூழ்நிலை என்பதுதான் இங்குமிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகிறது. ஏனெனில் இந்த கதையின் அடிப்படையே குடும்ப உறவுகள்தான் என்றாலது மிகையாகாது.

கெளதமை பொறுத்தவரை பெற்றத்தாயும் நோய்வாய்பட்ட தந்தையும் தான் குடும்பம், மேலுமங்கு அவன் வைத்ததுதான் சட்டம், கேள்விமுறை எல்லாம் ஒன்றும் கிடையாது. கௌதமின் தாய் பெரும்பாலான தமிழ்த்திரை படங்களில் வரும் ஏழைத்தாய்களை போன்ற தோற்றமும் சுபாவமும் கொண்டவர் அதிர்ந்துகூட பேசாதவர்,

ஆனால் ரகுவின் குடும்பம் பெரியது அவனுடன் உடன் பிறந்த அண்ணன் ஒருவன் தங்கை ஒருத்தி, மாடுமனை வண்டிவயல்களோடு இருக்கும் குடும்பம். கௌதமின் வீட்டில் நோய்வாய்பட்ட தந்தை என்றால் ரகுவின் வீட்டில் நோய்வாய்பட்டத்தாய் எனக்கூறலாம்.
குடும்பத்திற்கு அடுத்ததாக ஒரு ஆண்வாரிசை உருவாக்கவும் தான் இல்லையென்றாலும் தன் பெற்றோர் மற்றும் தங்கையை கவனித்துக்கொள்ள அண்ணன் ஒருவன் உண்டு என்ற எண்ணமும் ரகுவுக்கு கெளதமுடன் காலம் வரை சேர்ந்துவாழ வேண்டும் என்ற எண்ணத்தை எளிதாக்கியது.

மனித மனங்கள் போடும் கணக்குகள் சரியாக அமைந்தால் காலம்போடும் கணக்குகளுக்கு மதிப்பென்ன?
 அடுத்த ஆண்டு தங்கைக்கு திருமணம் அதற்குப்பின் அண்ணனுக்கு திருமணம் அதுமுடிந்த கையோடு தங்கள் உறவு குறித்து வீட்டில் சொல்வது வெளிநாடு கிளம்புவது என்று முடிவு செய்திருந்தனர் ரகுவும் கௌதமும். பாவம் சோதனை ஒரு லாரியின் ரூபத்தில் வந்தது என்றால் நம்புவீர்களா?

ரிலேட்டிவிட்டி தியரி என்பது இவர்கள் வாழ்க்கயில்தானா விளையாட வேண்டும்? ரகுவின் அண்ணன் வேலைக்கு செல்லும் பொழுது லாரி ஒன்றின் மீதுமோதி உயிருக்கு போராடி இரண்டுநாட்களில்  ஒரு மல்டிசெபெஷலிட்டி மருத்துவமனையின் வாயிலாக சிவலோகம் போய்சேர்ந்தான். அண்ணன் இறந்தது ஒருபக்கம் தாளமுடியாத வேதனையளித்தாலும் மறுபக்கம் நடக்க இருக்கும் பின்விளைவுகளை நினைத்து மிகவும் பொருமினார்கள் ரகுவும் கௌதமும்.

ஓராண்டுக்கு குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டது. பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் அருமையான மாப்பிள்ளையை பிடித்து ரகுவின் தங்கையை மணம் செய்தது கொடுத்துவிட்டு மொத்த குடும்பமும் ரகுவின்பக்கம் திரும்பியது.

ஏற்கனவே நோய்வாய் பட்டிருந்த ரகுவின் அம்மா மூத்தமகன் இறந்துபோன துக்கத்தில் முற்றிலும் படுக்கையில் விழ, தானும் போய் சேர்வதற்குள் இளையமகனுக்கு ஒருகல்யாணம் காட்சி பேரபிள்ளை என்று ஆரம்பித்து விட்டார்.

ரகுவும் கௌதமும் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள் நேரம் பெண் வீட்டார் பலர் போட்டிபோட்டு கொண்டு முன்வந்தனர்.
திருமணம் வேண்டாம் என்று எத்தனையோ முறை மறுதளித்த ரகுவின் வாய்ச்சொல் தகுந்த காரணமில்லாததால் நிராகரிக்கப்பட்டது.

நீதானே கூடவே இருக்க கௌதம்!! அவன் யாரயாது லவ் பண்றானா? என்ன எதுன்னு சொல்லேன் யாரா இருந்தாலும் பேசி முடிச்சுடுவோம் என்று ரகுவின் குடும்பத்தார் கௌதமிடமே கேட்க துவங்கிய பொழுது வேதனையின் உச்சத்திற்கு சென்றான் கௌதம்.

ஏனென்றால் கௌதம் தன்னுடைய உயிர் நண்பன் என்ற அளவில் குடும்பத்தினரிடமும் நன்கு அறிமுக படுத்தி வைத்திருந்தான் ரகு.
சரி ரகு என் ஒருத்தனோட சந்தோசத்துக்காக நீ உன் குடும்பத்தோட சந்தோசத்த கெடுக்காத நீ அவங்க சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்க நான் விலகிடுறேன் என்று கட்டிபிடித்து அழுதான் கௌதம்.

இனியும் பொறுப்பது தகாது என்பதால் ஆவேசமாக வீட்டுக்கு சென்ற ரகு ஆதியோடு அந்தமாக அவனுக்கும் கௌதமுக்கும் இருக்கும் காதலை பற்றி வௌிப்படுத்தி, வாழ்ந்தால் கௌதமோடு இல்லையெனில் மண்ணோடு என்று கூடத்தில் போட்டு உடைத்த குழம்புசட்டி போல விஷயத்தை போட்டு உடைத்தான்.

வீடு இரண்டுபட்டது அப்பா ஓடிவந்து அறைந்தார் மிகுந்த வசைமாரிகள் பொழியப்பட்டது அதில் அடிக்கடி ஒன்பதாம் எண்ணும் உபயோகிக்கப்பட்டது. புழுவாய் துடித்தான் ரகு.

இப்படியே விடுதல் சரியாக இருக்காது என்பதால் வலுகட்டாயமாக இரகுவின் வீட்டிற்கு அழைத்து வரபட்டான் கௌதம். முக்கியமான சொந்தபந்தங்கள் மட்டும் ஆலமரத்தடி பஞ்சாயத்து போல கூடத்தில் குழுமியிருக்க கைகட்டி நின்றான் கௌதம் ஒரு ஓரமாக ரகுவும்தான்.

அதிகபட்சமாக ஐந்துலட்சங்களுக்கு கௌதமின் காதலை விலை பேசினர் ரகுவின் குடும்பத்தார். ரகுவும் கௌதமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு விரக்தி புன்னகை செய்தனர்.

ஒருகோடி கொடுத்தாலும் எங்களபிரிக்க முடியாது நான் எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று  வாய்விட்டு கத்தினான் ரகு, கௌதம் அமைதியாக நின்றான்.

கண்ணீருடன் படுத்துகிடந்த ரகுவின் தாய் அவனது குரலை கேட்டு எழுந்து வெளியே வந்தார். நேரடியாக போய் கௌதமின் கால்களில் விழுந்து

கௌதம் உன்கால்ல வேணும்னாலும் விழுறேன் என் மொவனவிட்டுட்டு போய்டு, அவன் எங்களுக்கு வேணும் அவனுக்கு ஒருகல்யாணம் பண்ணி புள்ள பொறந்து எங்க குடும்பம் தழைக்கனும், அது உன் கையிலதான் இருக்கு அவன விட்டுடு” என்று அதிரடியாக இறங்கினார்.

கூனிக்குறுகி போனான் கௌதம்

எழுந்திரிங்கமா!! ஏற்கனவே நீங்க எல்லோரும் திட்டுற திட்டுலையே நான் வேண்டியமட்டும் அனுபவிப்பேன் இதுல கால்லவேற விழுந்து என் பாவத்த கூட்டாதிங்க. இன்னைக்கு சொல்றேன் என் ரகுதான் எனக்கு உயிர் ஆனா அவன் குடுபத்த கஷ்டபடுத்திதான் அவன நான் அடயனும்னா அவன் எனக்கு வேணாம். ரகு..! நான் ஏற்கனவே சொல்லிட்டேன் நீ கல்யாணம் பன்னிக்கன்னு இதுக்கு அப்பறமும் நீ எதாவது மக்கார் பன்னுநீன்னா என்ன உயிரோட பார்க்க முடியாது. என்னபத்தி உனக்கு தெரியும், ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்க. என்று கதறிய படி சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

இடிந்துபோய் அமர்ந்தான் ரகு. அதன்பிறகு அவனது சம்மதத்தை யாரும் கேட்கவில்லை ஒரு பெண்ணை பலிகடாவாக தேர்ந்தெடுத்து அனைத்து திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டபொழுது. ஒரே ஒரு நிபந்தனை விதித்தான் ரகு.

குடும்பத்தாரே சென்று நேரடியாக கௌதமை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் அவனை கட்டாயம் திருமணத்திற்கு அழைத்து வரவேண்டியது உங்கள் பொறுப்பு என்பதுதான் அது.

அவர்களும் வேறுவழியின்றி போய் அழைக்க கௌதம் மறுக்க உன்னால் நிகழும் திருமணம் உன்னலையே நிக்கவேணாம் கொறஞ்சது தாலிகட்டுற வரைக்குமாவது இருதம்பி என்று கெஞ்சினர் ரகுவின் குடும்பத்தார்.
திருமணத்திற்கு முதல் நாளன்று இரவு கௌதமின் மொபைலுக்கு, நீ வந்தாதான் நான் தலிகட்டுவேன் இல்லனா கல்யாணம் நின்னுடும் என்று ஒரேஒரு மெசேஜ் மட்டும் அனுப்பியிருந்தான் ரகு.

மிகுந்த பிராயாசைப்பட்டு வேதனையை மறைத்து கொண்டு அன்றுகாலை மண்டபத்திற்குள் நுழைந்த பொழுது மணமேடையில் ராஜாவை போல மிளிர்ந்தான் ரகு. பட்டுவேட்டி சட்டையில் அவனை மனக்கோலத்தில் பார்க்கும் பொழுது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது கௌதமுக்கு. ரகு நேரடியாக ஒரே ஒருபார்வைதான் பார்த்தான் கௌதமை. அதில் இப்புடி பண்ணிடியேடா பாவி.. நீயாவது நல்லாருடா என்பது போலஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது. கண்கள் கலங்கியது இருவருக்கும்,

மாங்கல்யம் மாப்பிள்ளைக்கு அருகே கொண்டுவரப்பட்ட போது. இனியும் அங்கு இருந்து அந்த கோரகட்சியை காண இயலாதவனாய் அங்கிருந்து வெளியேறினான் கௌதம். வாசலுக்கு வந்தபொழுது கெட்டிமேளம் கொட்டியது. அதன் பிறகு தந்தையின் மரண செய்தி வந்ததும் அவன் பேருந்தில் செல்வதும் நாம் அறிந்த செய்தியே.

பேருந்தில் இருந்து கண்ணீரும் கம்பலையுமாக நடந்து சென்ற கௌதமின் வீட்டில் அக்கம் பக்கத்தினர் குழுமியிருந்தனர். ஏடிஎம் கார்டை எடுத்து நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து பணம் எடுத்து செலவழிக்க சொன்னான். அங்கு உக்கார்ந்து அழுது கொண்டிருந்த தன்தாயை பார்த்தான்.

அவளது கழுத்தை எப்பொழுதும் ஒற்றை மஞ்சள் கயிறுதான் அலங்கரிக்கும் இனி அதற்கும் வேலை இல்லை என்று நினைத்து கொண்டான் ஆனால் கொடுமைக்கார தந்தையிடம் இருந்து அவளுக்கு விடுதலை ஏற்பட்டதில் ஒரு பெரியநிறைவு அவனுக்கு.

உண்மையில் வினவு தெரிந்த காலத்தில் இருந்தே அவனுக்கு அவன் தந்தை தாயை அடிப்பதுதான் மனதில் பதிந்துபோன படக்காட்சி. காரணம் ‘சந்தேகம்.’

கௌதமின் தாய் ஒரு நல்ல புடவைக்கட்டினாளா சந்தேகம்!, முகம் கழுவி பொட்டு வைத்தாளா சந்தேகம்! கடைக்கு போனாளா சந்தேகம்! என்று எப்பொழுதும் அடிஉதைதான் அவளுக்கு. பெரியவனாகி ஒருமுறை கொடுமைக்கார தந்தையை கண்டித்து அடிக்க கைஓங்கினான் கௌதம், அவ்வளவுதான் அந்த பத்தினி தங்கத்துக்கு எங்கிருந்துதான் வந்தது அத்துனைக்கோபம் எனதெரியவில்லை. எங்களுக்குள்ள எவ்வளவோ இருக்கும் நீ ஏன் தலையிடுற.? என்று பொரிந்து தள்ளிவிட்டாள் மகனை

தமிழகத்தில் உள்ள மற்ற தாய்களை போலவ சராசரியாக நடந்துகொண்டாள் சாரதா! அவன் ஒதுங்கிகொண்டான்.

ஒரு நல்லநாளில் ததையாகிய படுபாவி படுக்கையில் விழுந்தான் கௌதமும் நல்ல வேலைக்கு செல்லத்துவங்கினான் குடும்பம் ஓடியது.

பிணத்தை குளிப்பாட்டி பாடையில் கிடத்தபோகும் சமயம் சாரதா மகனை அழைத்து பின்பக்க பரணில் ஒரு பெட்டி இருக்கிறது அதில் பட்டு வேட்டி இருக்கும் எடுத்துட்டு வா என்றாள்.

கௌதம் மெதுவாகசென்று எக்கி பரணில் இருக்கும் பெட்டியை எடுத்தான் கூடுதலாக வேறொரு பெட்டியும் விழுந்து சிதறியது அதிலிருந்து ஒரு கடிதகட்டும் விழுந்தது.

ஆவலுடன் எடுத்து பார்த்தான் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து போனமாதம் வரை வந்திருந்த கடிதங்களின் கட்டு அது. வியப்பாக பிரித்தான்.

அன்புள்ள சாரதாவுக்கு உன்காதலை என்றும் மறவாத... என்று துவங்கியது அது. அதிர்ச்சியில் உறைந்து போனான் கௌதம். அடுத்தடுத்த கடிதங்களை புரட்டி பார்த்தான் எல்லாம் காதல் கடிதங்கள் தன் தாய்க்கு வந்தவைதான்.

அவனது பெயரை அழைத்துக்கொண்டே யாரோ வருவது போல தெரியவே அந்த கடிதச்சுருளை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்துவிட்டு பட்டுவேட்டியை எடுத்துகொண்டு போய் ஈமசடங்கை முடித்தான்.

இரண்டுநாள் கழித்து ரகு தனது புதுவண்டியில் விஷயம் கேள்விப்பட்டு கௌதமைக்காண வந்தான்.

என்னனே தெரில தம்பி ரெண்டுநாளா என்கிட்டே சரியாவே பேசல. நேத்துநைட் திடீர்னு பையும் கையுமா எங்கயோ கெளம்புனான் என்னனு கேட்டேன் மைசூர் போறேன்ன்னு மட்டும் சொல்லிட்டு போய்ட்டான் என்று கூறினார் சாரதா..

ரகு கௌதமை தன்மொபைலில் தொடர்புகொண்டான் அது ஸ்விட்ச்ஆப் என்றது.
மறுநாள் காலைநேரத்தில் கௌதமின் வீட்டு வாசலில் ஒரு கார்வந்து நின்றது. உள்ளிருந்து கௌதமும் சுடிதார் அணிந்த நடுத்தரவயது பெண்மணி ஒருவரும் இறங்கினர். வெளியில் வந்து பார்த்த சாரதா அதிர்சியில் உறைந்து போனார்.

அவருக்கு பேச நா எழவில்லை. ஆனால் இந்த அதிர்ச்சி மகனை பார்த்தல்ல வந்திருக்கும் பெண்ணை பார்த்து. அவர் சாரதாவுடன் கல்லூரியில் படித்த சுமதி. சாரதாவின் காதலி!!

கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசிவரை ஒன்றாக இருக்க விரும்பி பழகியவர்கள். இந்த காலத்திலேயே ஆணாக பிறந்த இருவரே சேர்ந்து வாழ முடியாத பொழுது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் இருவர் சேர்ந்து வாழ்வது என்பது கனவிலும் நடக்க முடியாத ஒன்று என்பதால். கோழைபெண்ணான சாரதா வீட்டிற்கு பயந்து கௌதமின் தகப்பனை திருமணம் செய்து கொண்டார், தைரியமான பெண் சுமதியோ வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு, எத்தன வருஷமானாலும் உனக்காக காத்திருப்பேண்டி என்று திருமணமே செய்துகொள்ளாமல் தனியாளாக இருந்து கொண்டு ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தை மைசூரில் நடத்திவருகிறார்.

அவர் அங்கிருந்து அனுப்பிய நூற்றுகணக்கான கடிதங்கள்தான் கௌதம் பரணில் கண்டது. இதில் முதல்முதலாக வந்த கடிதத்தை அரைகுறையாக படித்த கௌதமின் தந்தை அன்றுமுதல் சாரதாவின் மீது சந்தேக யுத்தத்தை துவங்கினார்
பாவப்பட்ட சாரதாவோ மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அடிஉதை வாங்கிக்கொண்டே எப்பொழதாவது வரும் கடிதத்திற்காக காத்திருப்பார். அதனை தபால் நிலையத்தில் நேரடியாக சென்று பெற்று கொண்டு படித்துபிறகு பரணில் ஏற்றுவர். ஆனால் ஒரு கடிதத்திற்குக்கூட சாரதா பதில் எழுதியது இல்லை.

தன் தாயும் தன்னை போல ஒரு தற்பால் விரும்பி அதிலும் காதல் தோல்வி அடைந்தவள் என்பதில் கௌதமுக்கு அடக்கவொண்ண துக்கம் ஏற்பட்டது. தான் படும் துயரம் தன் தாயும் அனுபவிக்கிறாள் என்பதை அறிந்தான்.

கடிதத்தில் கண்ட விலாசத்தை கொண்டு சுமதியை பார்க்க சென்றான். அவருக்கு இவனை ஏற்கனவே தெரிந்திருந்தது கூடுதல் ஆச்சர்யம். காதலியின் குடும்ப சூழலைக்கூட கவனித்தபடி காத்திருக்கும் சுமதியின் காதலுக்கு முன்பு தன்னுடைய காதல் தூசி போல தெரிந்தது அவனுக்கு.

மறுநாள் காலையில் மைசூர் நோக்கி புறப்பட்ட காரில் சுமதியும் சாரதாவும் இருந்தனர். முதலில் மறுத்த சாரதா மகனின் அன்பான அதட்டலுக்கு அடிபணிந்து தன் ஆசைகாதலியுடன் புதிய வாழ்வை துவங்க புறப்பட்டார். வண்டி புறப்படும் நேரத்தில் அருகில் இருக்கும் கோயிலிலிருந்து கெட்டிமேள ஓசை கேட்டது.

இந்த முறை ஒரு உண்மையான காதலை சேர்த்து வைத்த ஆனந்தம் அவன் மனதில் பெருகியது.
தன் தாய்க்கு கிடைத்த நல்வாழ்வு போல தனக்கும் ஒருநாள் வாய்க்கும் என நம்பினான் அவன்.

தன்னுடைய ரகுவும் என்றாவது ஒருநாள் வரக்கூடும் என்ற நினைப்பில் காத்திருக்க துவங்கினான் கௌதம்.

நிறைந்தது.

பின்குறிப்பு : கதையில் தாயும் மகனும் தற்பால் விரும்பிகளாக சித்தரிக்க பட்டுள்ளதால் தற்பால் விழைவு குணம் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரும் என்று கொள்ளக்கூடாது