பக்கங்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2013

உளியின் ஓசை (பகுதி இரண்டு )


                          


                                   6
                          மருத்துவ சாலை

இந்த காதல்நோய் படுத்தும் பாடு இருக்கிறதே... எதிர்ப்பு வரும் போது கடுவாய் புலியைக்கூட கடுகை போல என்ன வைக்கும். பிரிவு வரும் பொழுது நடக்கும் தொலைவை கூட நாலாயிரம் அடி போல எண்ணி தவிக்க வைக்கும். அப்படி பட்ட நோய் தாக்கிய சொக்கன் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?
 “யாரிடம் கேட்பது, யார் மாறனின் நண்பன் என்று தெரியவில்லையே?, அப்படியே கண்டு பிடித்து நாம் போய் விசாரித்தால் நம் மேல் சந்தேகம் வராதா?”  என்று நினைத்து நினைத்து  பொழுதெல்லாம் தேடி விட்டு பொழுது சாய்ந்ததும் இலுப்பை தோப்பில் சென்று காத்திருந்து ஏமாந்து திரும்பினான் சொக்கன். அன்றைய இரவு, படுக்கையின் அருகில் இருந்த முக்காலியின் மீது மாறனுக்காக அவன் வாங்கிய திரவிய குடுவை இவனை பார்த்து ஏளனமாக பல் இளித்து சிரித்தது.
அதனை கண்டு மனம் நொந்தவன் ,
“ஒருவேளை நம்மை பிடிக்க வில்லையோ? அதனால் தான் நம்மை காணமல் தவிர்த்து விட்டானா?” என்று யோசித்த பொழுது கண்கள் கலங்கியது. பின் சமாளித்து இல்லை இருக்காது காத்திருப்போம் நிச்சயம் ஏதாவது வேலையாக் வெளியூர் சென்றிருப்பான் என்று கருதிக்கொண்டு கிடந்தவன் இரவு கடந்து உறங்க துவங்கினான்.
மறுநாள் பொழுது விடிந்ததும் கூட வரும் நண்பர்களுக்காக கூட காத்திருக்காமல் முதல் ஆளாக கோயிலுக்கு சென்றான் நேற்றை போலவே இன்றும் ஏமாற்றமே மிஞ்சியது. தாகம் தீர்க்க வந்த யசோதையும் அவனிடம் பேசவும் முடியாமல், நம்மைத்தான் பார்கிறானா இல்லை வேறு சிந்தனையில் இருக்கிறானா? என்று குழப்பத்துடன் மோகம் கொண்டு திரும்பினாள். இப்படியே ஏமாற்றத்துடன் மூன்று நாள் ஓடியது.
நான்காம் நாள் காலையும் தன்னம்பிக்கையுடன் கிளம்பியவனை தடுத்து நிறுத்தினான் சொக்கனின் நண்பன் தீபசந்திரன்
“தம்பி எங்க அவசரமாக புறப்படுறிங்கனு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டான்
“என்னடா அர்த்தம் இல்லாம கேக்குற? கோயிலுக்குத்தான்”
“இல்லை நான் அறியாமல்தான் கேட்கிறேன் கடந்த மூன்று நாட்களாகவே உன் நடவடிக்கை எதுவுமே சரி இல்லையே!, சரியாக உணவருந்த மறுக்கிறாய், உறங்க மறுக்கிறாய், அதோடு மட்டுமல்லாமல் இன்று ஆறுமாதத்திற்கு பின்னான மருத்துவ பரிசோதனை நாள் என்பதயும் மறந்து விட்டாய்!! இதற்கெல்லாம் என்னடா பொருள்?”
“என்னடா உளறுகிறாய்.? என்ன மருத்துவ பரிசோதனை யாருக்கு?”
“போச்சுடா.?!! அதுவும் மறந்து போய்விட்டாயா? யானைகளுக்குடா!! யானைகளை போய் பரிசோதித்து மருத்துவ சான்று பெற வேண்டும். அதுவும் இந்த முறை ஆலய பணிகளில் பயன் படுத்த படும் பிராணிகளுக்கான பெரு மருத்துவர் நித்தவினோத மதுசூதன பூபதி என்பவரிடம்தான் காண்பிக்க வேண்டுமாம்.!!
“ஸ்ஸ்ஸ்..... ஆமாமடா நான் கூட மறந்து விட்டேன் சரி சரி நீ புறப்பட வில்லையா? எனக்கு புத்தி கூறி விட்டு இன்னும் நீராடாமல் கூட அமர்ந்திருக்கிறாய்!?”
“இல்லை சொக்கா.. எனக்கு இன்று வேறு ஒரு முக்கிய பணி இருக்கிறது அதனால் நான் அடுத்த வாரம் சென்று காண்பித்து கொள்கிறேன்”
“அப்படியானால் இன்று ஆலய பணிகளுக்கும் செல்ல போவதில்லையா? இது எவ்வளவு பெரிய புரட்டு தெரியுமா?? சிக்கினால் காராகிருகம் தான்.”
“ஒரு வாரத்தில் என்னடா ஆகி விட போகிறது?” அதெல்லாம் பார்த்து கொள்ளலாம்.... அலட்சியம் மிகுந்து காணப்பட்டது அவனது பேச்சில்
மாறன் இன்றாவது வந்திருப்பானா? என்று காணும் ஆவலுடன் ஆலயத்திற்கு கிளம்பினாலும் அரசின் ஆணையை மீறுவது கடும் குற்றம் என்பதாலும் சரியான நேரத்தில் பரிசோதனை செய்யாமல் போனால் யானையின் உடல் நிலை பாதிப்படய கூடும் என்ற எண்ணத்திலும் விருப்பமே இல்லாமல் சக வீரர்களுடன் யானையை ஒட்டி கொண்டு காவிரி கரையோரம் அமைந்திருந்த மருத்துவர் இல்லத்திற்கு விரைந்தான் சொக்கன்.
கோசாலை போல காட்சி அளித்த அந்த இடத்தில் ஒரு பக்கம் முழுவதும் நூற்று கணக்கில் பசுக்கள் வரிசையாக கட்ட பட்டிருந்தது, ஒரு பக்கத்தில் பட்டிகளில் ஆடுகள் அடை பட்டிருந்தன. ஏராளமான வாத்துகள், புறாக்கள், வான்கோழி களுடன் ஒன்றிரண்டு மயில்கள் கூட அங்கு விளையாடி கொண்டிருந்தன, ஒரு பக்கத்தில் யானைகளை மருத்துவர்கள் பரிசோதித்து கொண்டிருந்தனர், அருகில் அந்த யானைகளை உரிமை கொண்ட வீரர்கள் உதவி கொண்டிருந்தனர். பரிசோதிக்க பட்ட யானைகள் பற்றிய குறிப்புகளை சுவடிகளில் மருத்துவர்கள் எழுத; அதனை எடுத்து சென்று அங்குள்ள பூவரசு மரத்தடியில் அமர்ந்து இருக்கும் நித்தவினோத மதுசூதன பூபதி எனும் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து கொண்டிருந்தனர் வீரர்கள்.
ஆநிரை (பசுக்கள்) மேய்த்தலையே தொழிலாக கொண்ட முல்லை நில மக்கள் எனப்படும் வேளிர் குலத்தை சேர்ந்த மருத்துவர், முதலில் நோய்வாய் பட்ட பசுக்களுக்காகத்தான் மருத்துவம் கற்று கொண்டார். பின் ஆர்வம் மிகுதியால் மனிதன் பழக்கியுள்ள அனைத்து விலங்குகளை பற்றியும் ஆராய்ச்சி செய்து அவற்றில் ஏற்படும் நோய்களை களைவது எப்படி? அதற்கான ஔடதங்களை (மருந்துகள்) உருவாக்குவது எப்படி? என்று பலவித மருத்துவ நூல்களையே இயற்றி இருக்கிறார். இவரது திறமைக்கு பரிசாகத்தான் பேராலய பணிகளுக்கு பயன் படுத்த படும் விலங்கினங்களின்  மருத்துவத்தை இவரிடம் ஒப்படைத்துள்ளார் அரசர்.
                         
                                     7
                       யசோதையின் கண்ணீர்

முன்னரிமை அடிப்படையில் முதலில் வந்த யானைகளுக்கு பரிசோதனை நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் காத்திருந்த சொக்கன் பின் தனது களிற்றை பரிசோதிக்கும் மருத்துவரிடம் அழைத்து சென்று அதனை படுக்க சொல்லியும், எழ சொல்லியும், கால்களை தூக்க சொல்லியும் கட்டளைகளை பிறப்பித்தான், பின் மருத்துவர் எழுதிய குறிப்புகளை பெற்று கொண்டு தலைமை மருத்துவரை நோக்கி சென்றான்.
அவர் வீரர்கள் கொண்டு வரும் குறிப்பு ஓலையை பார்த்து மருந்துகளையும், உணவுகளையும் பரிந்துரைத்தும், சில நபர்களுக்கு மறு வருகை நாளையும் அருகில் அமர்ந்திருந்த உதவியாளரை கொண்டு எழுத பணித்து கொண்டிருந்தார். இந்நிலையில் சொக்கனுக்கு முன் நின்ற வீரன் காட்டிய குறிப்பை பார்த்தவுடன் அவரின் மனதில் ஏதும் ஐயம் எழுந்திருக்கும் போல, அதனை களையும் பொருட்டு அருகில் இருந்த உதவியாளரை மருத்துவ சுவடி ஒன்றை கொண்டு வருமாறு பணித்து அனுப்பினார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவர் பின் தெளிந்தவராய் உதவியாளரை அனுப்பியதை மறந்து அவருக்கு எழுத கட்டளை பிறப்பித்தார்.
“ஓஹோ.. வாசுதேவன் அங்கு சென்றுள்ளானா?” என்று யோசித்தவர் பின் அருகில் இருக்கும் தனது இல்லத்தை நோக்கி.
“யசோதா.....!!! அம்மா யசோதா....!!!  என்று உரத்த குரலில் தன் மகளை அழைத்தார்
“இதோ வருகிறேன் அப்பா......” என்று யசோதை உள்ளிருந்து வெளிபட்டாள். ஆனால் முகம் சுணக்கமாக காணப்பட்டது.
“என்ன அம்மா இன்னும் கோபம் தீர வில்லையா உனக்கு? நமக்கு இருக்கும் செல்வாக்கிற்கு நீ மோர் விற்க ஆலயத்திற்கு செல்வதே எனக்கு பிடிக்க வில்லை. இருந்தும் தோழிகளுடன் நீ செல்ல விரும்புகிறாய் என்று அனுப்புகிறேன், இன்று ஒருநாள் வேலை அதிகம் உள்ளதால் போக வேண்டாம்  கூறினேன், இதற்கு போய் இன்னும் எவ்வளவு நேரம் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருப்பாய்?” என்று தன் செல்ல மகளை செல்லமாக கடிந்து கொண்டார் மருத்துவர்.
“இன்றாவது அந்த யானை வீரருடன் பேசி விட மாட்டோமா? அல்லது அவரின் கவனத்தையாவது பெற்று விட மாட்டோமா? என்று எண்ணி ஆலயத்திற்கு புறப்பட்ட யசோதை தந்தையின் கோரிக்கையால் தங்கி விட்டாள். அதனால் வாடி போயிருந்த முகத்துடன் வந்தவள் தந்தை அருகில் இருக்கும் ஆண்களை எதேச்சயாக கண்டாள். அங்கு நின்ற சொக்கனை கண்டவுடன் தொய்ந்து போயிருந்த அவளது முகம் கருமேகம் கண்ட கானமயிற்தோகை போல விரிந்தது.
உள்ளூர மகிழ்ந்து நானம் கருதி வெளிகாட்டி கொள்ளாமல் “சொல்லுங்கள் அப்பா எதற்கென்னை அழைத்தீர்கள்” என்று உரிமையுடன் வினவினாள் தந்தையை.
“இங்கு வந்து அமர்ந்து கொண்டு நான் கூறும் குறிப்பை இந்த ஓலை சுவடியில் எழுது அம்மா!” என்றார் அவர் சொக்கனை நேரடியாக பார்க்க முடியாத இக்கட்டான சூழல் இருந்தாலும் தன்னால் இயன்ற வரை அவனை பார்த்து கொண்டே எழுதினாள். அவளிடம்
“அம்மா வாசுதேவன் வரும் வரை இங்கு அமர்ந்திரு” என்று கூறி விட்டு சொக்கனுக்கு முன் நின்ற வீரனிடம்
“வீரரே உமது யானை எங்கு நிற்கிறது வந்து காட்டுங்கள் நான் காண வேண்டும்” என்று கூறி அங்கிருந்து எழுந்து சென்றார் அவர்
 முன்னின்ற வீரன் மருத்துவருடன் சென்றதால் அந்த இடத்தை நகர்ந்து சென்று நிரப்பினான் சொக்கன். அவனது பின் நிற்கும் வீரன் சற்று தொலைவு தள்ளியே நின்றான். பின்
“ஆஹா....மருத்துவர் மகள் தனியாக இருக்கும் பொழுது அருகில் நெருங்கி விட்டோமே” என்று விலக முற்பட்டான் சொக்கன் உடனே யசோதை, மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் பேச துவங்கினாள்.
“நில்லுங்கள் வீரரே உங்களுக்கு என்னை உண்மையில் தெரிய வில்லையா?”
நிமிர்ந்த சொக்கன் சற்று நேரம் யோசித்து “இல்லையே தேவி தாங்களுக்கு என்னை ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டான்.
சற்றே அதிர்ந்தவள் “ நல்ல நடிப்பு வீரரே! கடந்த மூன்று நாட்களாக உங்களயே ஆலயத்தில் சுற்றி வருகிறேன், நான் நிற்கும் இடத்திற்கே நீங்களும் வந்து வந்து நின்றீர்கள். இன்று எதுவும் தெரியாதவர் போல பிதற்றுகிறீரே!!??” என்று கண்கள் கலங்க கேட்டாள்.
சொக்கனுக்கு அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது ஆனால் அதற்குள் மருத்துவர் வந்து விடவே இருவராலும் மேற்கொண்டு பேச முடியாமல் போயிற்று.
வந்தவர் சொக்கனின் கையிலிருந்த ஓலையை வாங்கி பார்த்து விட்டு சில மருந்துகளை பரிந்துரைத்தார். அதனை யசோதை எழுதினாள். பின் அந்த ஓலையை வாங்கிகொண்டு அவளை பார்த்தும் பார்க்காதது போல ஒரு பார்வையை வீசி விட்டு மருத்துவருக்கு வணக்கம் கூறி அங்கு கொடுக்க பட்ட மருந்துகளை பெற்று கொண்டு மறு வருகை தேதியை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து எண்ணற்ற குழப்பத்துடன் அகன்றான் சொக்கன், கூடிய விரைவில் அவனை தனிமையில் சந்திக்க ஒரு ஏற்பாட்டை யசோதை செய்து விட்டாள் என்பதை அறியாமல். ஆனால் சிறிது நேரம் தான் யசோதை பற்றிய நினைவு அவனிடம் இருந்ததே தவிர பிறகு வழக்கம் போல மாறன் மீண்டும் வந்து ஆக்ரமித்து கொண்டான்.
                     
பார்த்தீர்களா? கடந்த மூன்று நாட்களுக்கு முன்னாள் நார்த்தாமலை சென்ற மாறனை பற்றி நாம் கூட மறந்து விட்டோம். 
தஞ்சையிலிருந்து அதிகாலை புறப்பட்ட மாறனும், மற்ற சிற்பிகளும் பொழுது மங்கி இரண்டு நாழிகை  கடந்து நார்த்தாமலையை அடைந்து பின் அவர்கள் சிற்பிகளின் வசதிக்காக போட பட்டிருந்த கீற்று கொட்டகையில் தங்கி ஓய்வெடுத்து கொண்டிருந்த. அந்த இருட்டு வேளையில் ஆஜானு பாகுவான பல ஆண்கள் நல்லெண்ணெய் குடங்களை தோளில் தங்கி கொண்டும் சிலர் தீபந்தங்களை ஏந்தி கொண்டும் எதையோ சாதிக்க போகும் வெறியுடன் மாறனும், சிற்பிகளும் தங்கியிருந்த கீற்று கொட்டகை நோக்கி விரைந்தனர்.
                             
                                             8
                                         நார்த்தாமலை


பால் நிலா தேனமுதாய் பொழியும் அந்த நார்த்தாமலையில் சிறிதும் பெரிதுமாக ஆங்காங்கு பாறைகளும், குன்றுகளும் தலை தூக்கி அந்த இருட்டிலும் தங்களது இருப்பை உணர்த்தி கொண்டிருந்தது. உடைக்க பட்ட கற்கள் தஞ்சை கொண்டு செல்லுவதற்காகவே சிறப்பாக அமைக்க பட்ட கருங்கற் பாதையில் தீ பந்தங்கள் வெளிச்ச விதை விதைத்து கொண்டிருந்தன. ஆங்கங்கு யானைகள் கஜகர்ணம்* போட்டு கொண்டிருந்தன. அவற்றின் பாகன்கள் சமதள பாறைகளில் அமர்ந்து உருளாயம், சொக்கட்டான், வெட்டுபுலி என்று காலம் கழித்து கொண்டிருந்தனர். எண்ணெய் குடங்களை தாங்கி வந்தவர்கள் எதிர்காலத்தில் உடைக்கப்பட இருக்கும் பாறைகளின் மீது அந்த எண்ணெயை ஊற்றி மெழுக ஆரம்பித்தனர். சிலர் சில பாறைகளின் மீது தீப்பந்தங்களால் ஒற்றடம் கொடுத்து கொண்டிருந்தனர்.
உடைக்கப்பட இருக்கும் பாறைகள் எளிதில் உடைவதற்கும் விரும்பிய வடிவத்தில் வெட்டுவதற்கும், சிதறாமல் இருப்பதற்கும் அக்கால சிற்பிகள் கடை பிடித்த வழிதான் இது. இரவில் பாறைகளின் மீது பூசபட்ட எண்ணெய் பகல் முழுவதும் வெயிலில் காய்வதால் அந்த எண்ணெய் பாறையால் மெல்ல உட்கிரகிக்கபடும். பின் மீண்டும் பிறிதொரு இரவில் தீப்பந்தங்கள் கொண்டு பாறையை சூடேற்றும் பொழுது உட்கிரகிக்க பட்ட எண்ணெய் முழுவதும் மெல்லிதாக வெளியேறி விடும். இதே செயல்முறையை தொடர்ந்து செய்யும் பொழுது பாறையின் கடின தன்மை குறைந்து எளிதாக உடைந்து விடும்.
அதிகார நந்தி வடிப்பதற்காக தேர்ந்தெடுக்க பட்ட பாறையின் மீது கடந்த இரண்டு வாரமாக இந்த நடைமுறை செயல் படுத்த பட்டதால் அதன் மீது இருக்கும் எண்ணெய்  அங்கு கொளுத்த பட்டிருந்த தீ பந்த ஒளியில் பட்டு தங்க நிறத்தில் காட்சி அளித்து கொண்டிருந்தது, தஞ்சையில் இருந்து வந்திருந்த தலைமை சிற்பிகளும், அவர்களோடு வந்த நமது மாறனும் அந்த பாறையின் அருகில் நின்று கொண்டிருந்தனர். கற்களை உடைக்கும் உளிகளுடன் பணியாட்கள் அவர்களுக்கு அருகில் காத்திருந்தனர்.
 வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவரும், கம்மியகலை எனப்படும் சிற்ப சாத்திர நூல்களை ஐயம் திரிபர கற்றவரும் ஆன குணவன் மதுராந்தக நித்தவினோதப் பெருந்தச்சனர், தேர்ந்தெடுக்க பட்ட பாறையின் அருகில் சென்று புறங்கை விரல்களால் தட்டி பார்த்தார். பின்
“ ம்ம்ம்ம்,,...... பாறை சரியான முறையில் இளகி இருக்கிறது” என்று கூறி விட்டு அருகில் இருக்கும் மாறனிடம்
“மாறா அரசர் குறிப்பிட்ட அளவு உனக்கு தெரியுமல்லவா? பாறையின் மீது ஏறி அதன்படி சுன்ன சாந்தால் வெட்டுவதற்கு ஏற்ற வண்ணம் கோடிட்டு வா.!!” என்றார்
கையிலிருந்த ஓலை குறிப்பில் உள்ளது போல தேவையான அளவிற்கு பாறையின் மீது கோடுகளை வரைந்தான் மாறன்.
பிறகு பழுக்க காய்ச்சி பின் குளிர்ந்த எண்ணெயில் இட்டு கடினமாக்க பட்ட இரும்பு உளிகள்,* மற்றும் குடை பாரைகளின் உதவியுடன் கடைநிலை சிற்பிகள் மாறன் கோடிட்ட பகுதிகளில் வெட்ட துவங்கினர். ஒரு பெரிய பாறையில் இருந்து துருத்தி கொண்டு இருக்கும் சிறிய பாறை தான் தேர்ந்தெடுக்க பட்ட பாறை என்பதால் இணைந்திருக்கும் ஒரு பக்கத்தை வெட்டினாலே பாறை துண்டாகும் வண்ணம் இருந்தது அந்த சிற்பிகளுக்கும் அதிகம் சிரமம் இல்லாமல் போயிற்று. சந்திரன் தோன்றி இரண்டு நாழிகைகள் கழித்து துவங்க பட்ட பணி ஆதவன் தோன்ற ஒரு நாழிகை இருக்கும் தருவாயில் நிறைவு கட்டத்தை எட்டி கொண்டிருந்தது.
இன்னும் ஐந்து விரல்கடை அளவு வெட்டி விட்டால் பாறை முழுவதும் துண்டாகி விடும் என்பதால் அதுவரை ஆங்கங்கு சோர்வுடன் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து வந்து அந்த பகுதியை சூழ துவங்கினர். இறைவனுக்கு இணையாக அவனது எதிரில் அமைக்க பட இருக்கும் நந்தியெம்பெருமானுக்குரிய கல் ஆதலால் தலைமை சிற்பிகள், மாறன் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த பய பக்தியுடனும், எதிர்பார்ப்புகளுடனும் பாறை விழ இருப்பதை ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர். அதிகாலையின் தென்றல் மெல்ல வருடும் அந்த வேலையில் கல்லின் மீது இரும்பு மோதும் “களீர்” “களீர்” என்ற ஒசை மட்டும் கேட்டு கொண்டிருதது.
அனைவரும் எதிர்பார்த்த அந்த இனிய வேளையில் கல்லுக்கும் பாறைக்கும் இருந்த தொப்புள்கொடி அறுந்து இறைவனுக்கு வாகனமாக பிறக்கப்போகும் அந்த கல் தரயில் “டங்”. என்று விழுந்தவுடன்
“ஹர ஹர மகாதேவா.!!”
“தென்னாடுடைய சிவனே போற்றி”
“என்னாட்டவருக்கும் இறைவா போற்றி “
“மும்முடி சோழ சக்கரவர்த்திகள்!! வாழ்க!! வாழ்க!!”
“ராஜ ராஜேஸ்வரத்தின் புகழ்! வாழ்க! வாழ்க !!” என்று விண்ணை பிளக்கும் வகையில் கோஷங்கள் எழுந்தன.
அந்த இடமே பக்தி பரவசத்தில் ஆரவாரத்துடன் இருந்தது, பின் கல்லின் அடிபகுதியை சமமாக பொளிந்தனர். அபோழுதுதான் உருளை கட்டைகளை அடியில் கொடுத்து உருட்டும் பொழுது சிரமமின்றி இடம்பெயரும். பின் பொளிய பட்ட கல் பெரிய பெரிய சங்கிலியால் பிணைத்து பலம் பொருந்திய யானைகள் இழுக்கும் படி அவைகளுடன் இணைத்தனர். இந்த பணிகளை மாறன்தான் மேற்பார்வை இட்டு நெறிபடுத்தினான். அதற்குள் இந்த காட்சியை நோக்கும் ஆவலுடன் ஆதவன் கீழ் வானத்தில் இருந்து மேலேறி விட்டான்.
தஞ்சைக்கு செல்லும் கற்பாதையில் பாகன்கள் யானைகளை விரட்ட, கல்லுருட்டும் பணியாளர்கள் கல் நகர நகர அடியில் உருட்டு கட்டைகளை போட்டு கொண்டே வர மெல்ல, பிரதோஷ வேளையில் பலரின் விண்ணப்பங்களை கேட்கவிருக்கும் நந்தியெம்பெருமான் புதைந்திருக்கும் அந்த கல் தஞ்சை நோக்கி தன் பயணத்தை துவங்கியது.
                        
                                 9
                         மாறனின் தவிப்பு

தன்னிடம் ஒப்படைக்க பட்ட மேன்மை பொருத்திய பணி நிறைவைடைந்ததால் அதுவரை உள்ளத்தின் கட்டிலில் தூங்கி கொண்டிருக்கும் சொக்கனின் நினைவுகளை தட்டி எழுப்பினான் மாறன். வந்த வேலை ஒரே இரவில் முடிந்து விடும் என்று அவன் எதிர்பார்த்து இருக்க வில்லை. கல்லை உடைக்கும் பணி நிறைவடைந்தாலும் அதனை தஞ்சை கொண்டு சேர்க்கும் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டுமே?? அதனால் மாறனும் மற்ற சிற்பிகளும் குதிரையின் மீது அமர்ந்து கொண்டே மெல்ல பின் தொடர்ந்தனர். குதிரையில் அமர்ந்து கொண்டு வருவதால் அதிகம் மற்றவருடன் பேசும் வாய்ப்புகள் குறைவாக் இருந்தது மாறனுக்கு. குதிரை தஞ்சை நோக்கி நடைபோட, மாறன் மனமோ தஞ்சையில் இருக்கும் சொக்கனை நோக்கி நடை போட்டது.
“நேற்று முழுவதும் சொக்கன் நம்மை தேடியிருப்பானா?, இலுப்பை வனத்திற்கு சென்று ஏமார்ந்திருப்பானா? இல்லை நம் நினைவே அவனுக்கு இல்லாமல் இருந்திருக்குமா? எப்படி இருந்தாலும் தஞ்சை சென்றதும் முதல் வேலையாக அவனிடம் நமது காதலை சொல்லி விட வேண்டும்.”
 என்று மனதிற்குள் தீர்மானித்து கொண்டான். ஆங்காங்கு அமைக்க பட்டிருக்கும், சத்திரங்களிலும், சாவடிகளிலும் பணியாட்களும் யானைகளும் ஓய்வெடுத்து கொண்டே நார்த்தா மலையில் இருந்து கிளம்பி நான்காம் நாள் விடியும் தருவாயில்  தஞ்சையிலிருந்து பத்து காத தொலைவில் இருந்தனர். அனைவரும்
இங்கிருந்து நகர் துவங்க இருப்பதால் இனி எந்த கவலைக்கும் இடம் இல்லை என்பதால் மாறன் உட்பட மற்ற தலைமை சிற்பிகளும் அவரவர் இல்லத்திற்கு சென்றனர். எப்படியும்  முற்பகலுக்குள் கல் ஆலயத்தை அடைந்து விடும் என்ற நம்பிக்கையில் மூவரும் புறப்படவே மாறனும் வேக வேகமாக பாசறைக்கு வந்து நீராடி ஆலயத்தில் மாறனை சந்திக்கும் ஆவலுடன் தன்னிடம் இருக்கும் ஆடைகளிலேயே சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு ஆடியில் தன் அழகை பார்த்து ஒருமுறை வியந்து விட்டு ஆலயம் நோக்கி விரைந்தான். தன் ஆசை காதலனை மூன்று நாட்கள் கழித்து பார்க்க போகும் ஆவலில் எதிரே யானை படை வீரர்கள் கூட்டம் கூட்டமாக எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை கூட கவனிக்காமல் சென்று கொண்டிருந்தான் மாறன்.
ஆலய வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. நந்திக்கான மேடையில் கல்லை ஏற்றும் வன்னம் சிறிய சாரம் அமைக்க பட்டிருந்தது. ஆங்கங்கு சிவாச்ரியார்கள் பூரண கும்பங்களுடன் தயார் நிலையில் இருந்தனர் அரசரின் வருகைக்காக. கல்லை எதிர்கொண்டு வரவேற்கும் பொருட்டும் அதற்கு நடை பெற இருக்கும் சிறப்பு ஆராதனைகளில் கலந்து கொள்ளுவதற்கும் அரசர் வர இருப்பதால் பாதுகாப்பும் சற்று பல படுத்த பட்டிருந்தது. ஆனால் பணிகள் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தன.
வேகமாக ஆலயத்தின் உள்ளே சென்ற மாறன் ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்று சொக்கன் இருக்கிறானா என்று பார்த்தான். வெகுவாக யானை படை வீரர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது.
 “வரும் பொழுது கூட யானை படை வீரர்கள் எங்கோ சென்று கொண்டிருந்தனரே!! எங்கு சென்றார்கள்,? அவர்களில் சொக்கனும் ஒருவனா? அப்படியானால் நான் எப்படி கவனிக்காமல் வந்தேன்.?” என்று யோசித்து கொண்டே இருக்கும் பொழுது எதிரில் வந்த பணியாளர் ஒருவரை மறித்து
“அய்யா இங்கு பணிக்கு வந்த யானை படையை காணுமே எங்கே?” என்று விசாரித்தான்
“யானை படை போருக்கு போயிருக்கும்” என்று நக்கல் தொனிக்க கூறி விட்டு சென்று விட்டான் அவன். ஆனால் இதனை கேட்டவுடன் மாறனின் மனம் அடைந்த கவலை சொல்லி மாளாது.
“அப்படியானால் இனிமேல் சொக்கனை காண முடியாதா? அவனுடன் ஒட்டி உறவாடி உள்ளம் களிக்க வேண்டும் என்று நான் கண்ட கனவெல்லாம் பகற் கனவாய் போய்விட்டதா? “ என்று அவன் என்னும் பொழுது கண்ணீர் தாரை தாரையாக ஓடி தரையை நனைத்தது.  
பின் தலைமை சிற்பியின் அழைப்பால் அவரிட்ட வேறு பணிகளில் மனகவலையுடன் ஈடு பட்டான். பின் கல்லுக்கு நடந்த பலத்த வரவேற்பிலும், அரசரின் வருகையிலும் கூட அவனது மனம் நாட்டம் கொள்ள வில்லை.
ஒருவழியாக பொழுது சாய்ந்த பொழுது சொக்கனை இறுதியாக பார்த்த இலுப்பை தோப்பிற்கு சென்று அங்கு தனிமையில் சொக்கனின் நினைவுகளை அசைபோட்டு காதலாகி கசிந்துருகி கொண்டிருந்தான் மாறன்.       
                              
                                   10
                         சொக்கனுக்கு ஆபத்து

யானைக்கான மருத்துவ பரிசோதனைக்காக சென்று பாசறைக்கு திரும்பியவுடன் கட்டிலில் படுத்து மாறனின் நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்த சொக்கனுக்கு எப்பொழுது உறக்கம் வந்தது என்றே தெரிய வில்லை. மதிய உணவிற்கு கூட எழாமல் மாலை பொழுதில் எழுந்தான். எழுந்தவுடன் ஆலயத்திற்குத்தான் சென்று பார்க்க முடிய வில்லை. இலுப்பை தோப்பிற்காவது சென்று
“மாறன் வருவானா? என்று காத்திருப்போம்?
 என்ற எண்ணத்துடன் நீராடி புறப்பட்டு குதிரையின் மீதமர்ந்து இலுப்பை தோப்பிற்கு அதனை விரட்டினான் சொக்கன்.
“சொக்கன் வருவானா?”
 என்று ஆவலுடன் நெஞ்சை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்த மாறனுக்கு குதிரையின் குளம்படி சத்தம் கேட்க துவங்கியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுந்து வந்து பார்த்த மாறனின் கண்களில் இருந்த துயர கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறும் வண்ணம் சொக்கன் குதிரயில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
சிரத்தை இல்லாமல் சோர்வுடன் குதிரையை செலுத்திய சொக்கனோ மாறனை கண்டதும் ஒரு உந்து உந்த குதிரை மின்னலென பறந்து மாறன் அருகே வந்தது. குதிரயில் இருந்து இறங்கியவுடன் நேருக்கு நேர் இருவரும் பார்த்து கொண்டனர். ஆனால் அங்கு பேச்சு எழ வில்லை. ஆயிரம் ஆயிரம் உணர்சிகளை வெளிபடுத்தி அதில் ஆறுலட்சம் கேள்விகளை மாறி மாறி கண்களாலேயே கேட்டு கொண்டனர் இருவரும். கண்ணீர் வழிந்து காட்டை நனைத்தது. பின் உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடிவந்து அனைத்து கொணடனர். இந்த அணைப்பில் காதல் தீ கொழுந்து விட்டு எறிய துவங்கியது. எறிந்த தீயில் ஏற்பட்ட வெப்பம் அவர்களின் கட்டுகடங்காத காமத்தை தூண்டி விட, காதல்தீயும் காமத்தீயும் சேர்ந்து அந்த காட்டை கொளுத்தி கொண்டிருந்தது. காமக்கடலில் மூழ்கி முத்தெடுத்து நள்ளிரவு வரை மூன்று நாள் கதையையும் பேசிய பொழுது சொக்கன் தான் ஆசை காதலனுக்கு வங்கி வைத்திருந்த பரிசை கொடுத்தான்.
இதே வேளையில் மருத்துவர் மாளிகையில் சொக்கனை எண்ணி உறங்காமல் கிடந்தாள் யசோதை.
காதல் கொண்ட மனங்கள் என்றுமே எதிர் காலத்தை பற்றி எண்ணுவதில்லை. காலங்கள் மாறும் பொழுது காட்சிகள் மாறும் என்பதையும் அது அறிந்திருப்பதில்லை.
 விடிய போகும் அந்த நாளில் மாறனின் கண் முன்பே சொக்கன் மிகப்பெரிய ஆபத்தில் சிக்க போகிறான் என்பதை அறியாமல் மாறனும், மாறன் தன்னிடம் ஒரு மிக பெரிய உண்மையை மறைத்திருக்கிறான் அது தெரிய வரும்பொழுது காதல் கொண்ட சொக்கனின் மனம் சுக்கு நூறாக சிதறும் என்பதை அறியாமல் சொக்கனும், சொக்கன் வேறொருவனுக்கு சொந்தமானவன் என்பதை அறியாமல் காதல் கொண்டுள்ள யசோதைக்கு காலம் பல பரிசுகளை தர காத்திருக்கிறது என்பதை அறியாமல் யசோதையும் அந்த இரவுக்கு விடை கொடுத்தனர்.



சில விளக்கங்கள்

* கஜகர்ணம்- யானையை கட்டி போட்டிருக்கும் பொழுது அது நிலையாக நிற்காமல், கால்கள், துதிக்கை, தலை முதலானவற்றை அசைத்து கொண்டே இருக்கும். இதனைத்தான் கஜகர்ணம் என்பார்
* கற்றுளி- இரும்பை பழுக்க காய்ச்சி உடனடியாக எண்ணெயில் குளிர்விக்கும் பொழுது அதன் கடின தன்மை அதிகபடும். இவ்வகை இரும்பால் செய்த உளிகளை தான் கற்களை பொளிய பயன் படுத்தினர் அக்கால சிற்பிகள்.

பின்குறிப்பு: எண்ணெய் மற்றும் தீபந்தம் கொண்டு கல்லை இளக்கும் முறையை நான் முன்னெப்போதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அது ஒரு வார இதழ். அதை ஆதாரமாக கொண்டுத்தான் இங்கு எழுதியுள்ளேன். மேலும் ஆதரங்கள் இருந்தால் குறிப்பிடலாம் மாற்று கருத்து இருந்தாலும் குறிப்பிடலாம்.

                                                      -ஓசை கேட்கும்