பக்கங்கள்

சனி, 7 செப்டம்பர், 2013

உளியின் ஓசை ........ (சரித்திர குறுநாவல்) ( பகுதி 1 )

முன் குறிப்பு: சோழமன்னன் ராஜராஜசோழன் தமிழகத்தை ஆட்சி செய்யும் போது கதை நடப்பதாக புனைய பட்டுள்ளது. கதையில் வரும் பாத்திரங்களும்,சம்பவங்களும் முழுதும் கற்பனை என்பதை மனதில் இருத்தி எனது கரங்களை பற்றுங்கள். உங்களை ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்கிறேன்.
                                              
                             
                           1

                                         அரசர் வருகை
       






   திரவன் தன் கனக மணிகிரனங்களை தஞ்சை நகரின் மீது வீச தொடங்கி மூன்று நாழிகை நேரம் கடந்த நிலையில் மேரு மலைகொப்பாக விண்ணோக்கி வீற்றிருக்கும் ராஜராஜேசுரம் என பெயரிட பட்டு மும்முடி சோழனால் கட்ட படும் பெரிய கோயிலின் கட்டுமான பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக தத்தமது பணிகளை தொடங்கி கொண்டு இருந்தனர். சென்ற மாதம் தான் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திர கல் எனப்படும் பெரிய பாறை ஏற்றும் வேலை நிறைவடைந்ததால், அதனை ஏற்றுவதற்காக கோபுரத்தை சுற்றி அமைக்க பட்டிருந்த சாரங்கள் பிரிக்க பட்டன. இதுநாள் வரை உயர்ந்த கோபுரம் முழுவதையும் மண் சாரமும், யானைகளும், பணியாட்களும் செல்லும் பாதையும் மறைத்து இருந்ததால் தற்பொழுதுதான் கோபுரத்தின் கம்பீரமும் அழகும் முழுதும் வெளிப்பட்டு இருந்தது. வெளியூர்களிலிருந்து தலை நகருக்கு அலுவல் காரணமாக வந்த மக்கள்தான் கோபுர அழகை வியந்து பார்த்து கொண்டு இருந்க்கின்றனர் என்றால் அவர்களுடன் போட்டி போட்டு கொண்டு தஞ்சையிலேயே வாழும் மக்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து நின்று கொண்டு அங்கு நடக்கும் பணிகளையும் கோபுரத்தின் சிறப்பையும் பார்த்து கொண்டே இருந்தனர். பகற்பொழுது தொடங்கி விட்ட காரணத்தால் பல்வேறு சிற்பிகள், பாரம் இழுக்கும் காளைகள், பளுதூக்கும் யானைகள் அவற்றின் பாகன்கள், கல்லுருட்டும் கடைநிலை பணியாளர்கள், பொறியாளர்கள், தலைமை சிற்பிகளின் அடைப்பை காரர்கள்(வெற்றிலை சுமப்பவன்), மரவேலை செய்பவர்கள், பணியாட்களின் தகையாற்றும் பெண்டிர்கள், பணியாட்களின் சிறுகாயங்களுக்கு முதலுதவி அளிக்கும் மருத்துவர்கள் அவர்களின் உதவியாளர்கள், காவலர்கள், என பலதர பட்ட பணியாளர்களும் சாரை சாரையாக வந்து நேற்று விட்டு சென்ற பணிகளை செய்ய தொடங்கி இருந்தனர். பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் ஆலயத்தின் வாயிற் கோபுரங்கள் இரண்டு அமைக்க பட்டு சுற்று மதில் எழுப்பும் வேலையும் முடிவடையும் தருவாயில் இருந்தது. குடமுழுக்குக்கு எதிர் வரும் சித்திரை மாதம் முதல் வாரத்தில் நாளும் குறிக்கப்பட்ட நிலையில் அரசன் அருண்மொழி தேவனின் என்ன ஓட்டத்தை பிரதி பலிக்கும் வகையில் கோயிலை வடிவமைத்த மூன்று தலைமை சிற்பிகளில் முதலாமானவன் வீரசோழ குஞ்சர மல்லன் எனும் இராசராச பெருந்தச்சன் கோபுரத்தின் முதல் தளத்தில் ஈசன் ஆடல் வல்லானாக வெளிபடுத்திய நூற்றெட்டு முத்திரைகளை காட்டும் சிற்பங்களை வடித்து கொண்டு இருந்தார். சிற்பிகளின் வேலைகள் முடியும் தருவாயில்தான் கோபுரம் முழுவதும் பொன் வேய முடியும் என்பதால் அரசன் மேற்குறிப்பிட்ட சிற்பியை வேலை தாமதம் காரணமாக நேற்று சற்று கடிந்து கொண்டார்.


எனவேதான் கருவறை சுற்றில் நான்கு திசைகளிலும் சிவனின் நான்கு வடிவங்களை செதுக்கும் பணியை தனது நம்பிக்கைக்கு பாத்திரமான திறமை மிகுந்த, அழகு மிகுந்த நமது நாயகன் ஏழிசைமாறனிடம் ஒப்படைந்து இருந்தார். ஏனெனில் கம்மிய கலை எனும் சிற்பகலையை முறையாக பயின்றவனும் பார்த்ததை பார்த்த படி செதுக்கும் வல்லவனாகவும் ஏழிசைமாறன் இருந்ததால்தான்.

கையில் உளியை எடுத்து விட்டால் காட்டாற்று வெள்ளம் வந்தால் கூட கவலை இன்றி செதுக்கும் மாறனுக்கு பொழுது விடிந்ததிலிருந்தே மனம் தன் உள்ளம் கவர் கள்வனின் நினைவால் வாடுவதும் அதனால் வேலையில் ஒரு சிரத்தை இல்லாததும் வியப்பளித்தது. போதாகுறைக்கு அங்கு பாரம் சுமக்கும் யானைகளின் “களீர்” “களீர்” எனும் மணியோசை அடிக்கடி திரும்பி பார்க்க வைத்தது.

“என்ன மாறா?? இன்று வேலையில் ஒன்றும் நாட்டமில்லை போல தெரிகிறதே ?” என்று மேலிருந்து தலைமை சிற்பி கேட்கும் குரல் கேட்டு தன் செவ்விதழ் திறந்து பணிவுடன் பதில் கூற தொடங்கினான்.

“ அப்படிஎல்லாம் ஒன்றும் இல்லை பிரபு சிறிது சிந்தனையில் லயித்து விட்டேன் அவ்வளவுதான் என்று கூறி விட்டு தென் திசைகுரிய சிவாம்சமான அகோர சிவனின் கரங்களை தன் உளியால் தட்ட தொடங்கினான். இது நாள் வரை சிற்பங்கள் செதுக்க எத்தனையோ இடங்களில் சென்று தங்கிய பொழுது எத்தனயோ ஆண்களை தழுவி இன்பம் கண்டிருக்கிறான் நமது மாறன். அவர்களை எல்லாம் மீண்டும் நாடாத  மாறனின் மனது நேற்று இரவு அவன் கண்ட வீரனை நோக்கியே சென்றது.

ஆம் நேற்று இரவு உணவு உண்டபின் சற்று காலாற நடக்கலாம் என்று சிற்பிகளின் பாசறை விட்டு வெளியே வந்த போதுதான் அந்த வீரனை சந்திக்க நேர்ந்தது. பாசறையை விட்டு நடக்க ஆரம்பித்த மாறன் ஆணைக்காடுவார் வீதியின் அருகே வரும்பொழுதுதான் அங்கு இரண்டு வீரர்கள் நின்று உரையாடுவது தெரிந்தது. நெருங்கி செல்லும் பொழுது அதிலொருவன்

“சரி  “சொக்கா”  நாளைக்கு பெரியகோவில்ல பாக்கலாம்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்று விட்டான். 

தெருவில் வெளிச்சத்திற்காக ஆங்கங்கு கம்பத்தின் மீது ஏற்றி வைக்க பட்டிருந்த தீ பந்தங்கள் நல்கிய வெளிச்சத்தில் அந்த வீரனின் முகம் தெளிவாக தெரிய வில்லை என்றாலும் அவனது கட்டுடல் மேனியும் அவனது கையில் அங்குசம் போல வைத்திருந்த கோலும் தெரிந்ததை வைத்து அவன் ஒரு போர் வீரனாகவோ அல்லது யானை பாகனாகவோ இருக்க வேண்டுமென்று மட்டும் தீர்மானித்து கொண்டான் மாறன். வெகு அருகில் செல்லும் போது அந்த வீரனின் அழகும் ஆண்மை பொருந்திய உடலும் அவன் மீது வீசிய புனுகின் நறுமணமும் மாறனை நிமிர்ந்து பார்க்க தூண்டினாலும் அவன் தரித்திருந்த உடையில் உள்ள புலி சின்னம் அவன் ஒரு படை வீரன் என்பதை உணர்த்தியதால் எதற்கு வம்பு என்று அவனை பார்க்காமல் கடந்து சென்றான் மாறன். நள்ளிரவு வேலையில் அதுவும் அரண்மனையின் அணுக்க தொண்டர்கள் (அரச குடுபத்தினர்களின் மிக நெருங்கிய உதவியாளர்கள்,செல்வாக்கு மிகுந்தவர்கள்) வசிக்கும் இந்த ஆணைக்காடுவார் தெருவில் தனியாக செல்லும் நம்மை அந்த வீரன் கள்வன் என நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான் மாறனை பயம் கொள்ள செய்தது. இருந்தாலும்,  மாறன் அந்த வீரனை கடந்துஇரண்டடி தாண்டிய பொழுது,

“ நில்லுங்கள் யார் நீங்கள் ஏன் இந்த நடு சாமத்தில் இங்கு உலவுகின்றீர் ?” என்று அந்த வீரனின் கணீர் குரலால் திடுக்கிட்டு  நின்றான் மாறன்

அரசு முத்திரையுடன் தலைமை சிற்பியின் ஒப்புதளிட்டு அவனுக்கு வழங்க பட்டிருந்த அடையாள ஓலை இடுப்பில் இருப்பதை தடவி பார்த்தவன் பின் தைரியம் வந்தவனாக திரும்பி நின்று பேச துவங்கினான்.

“என் பெயர் ஏழிசைமாறன் பெரியகோவில் கட்டுமான பணிகளின் முதன்மை சிற்பிகளில் ஒருவனாக பணி செய்கிறேன்” தாங்கள்? என்று கேட்டான்.

“ அப்படியா நான் சொக்கநாதன். படைவீரனாக இருக்கிறேன் இரவு நேரத்தில் தனியாக செல்கிரீரே என்று கேட்டேன். ஏன் உறக்கம் வர வில்லையா?

“அதிகார தோரணை மறந்து சற்று அனுசரணையாகவே வார்த்தைகள் வந்து விழுந்தன இவனிடமிருந்து. அதற்கு காரணம் இப்பொழுதுதானே மாறனின் முகத்தை இவனும் பார்த்திருக்கிறான்!!!. கருமேகங்களை கிழித்து கொண்டு செல்லும் மின்னல் போல பளீரென்று இருந்த மாறனின் முகம் கண்டு தன்னை மறந்து பேச துவங்கினான் சொக்கன்.

  “ஆம் ஏன் உங்களுக்கும் உறக்கம் வரவில்லையா? என்ன”

முன் பின் அறிமுகம் இல்லையென்றாலும் மாறனும் சற்று உரிமையோடு கேட்பது சொக்கனுக்கு எதையோ உணர்த்தியது. இருந்தாலும் காட்டிகொள்ளாமல் .

“ அப்டி இல்லை இப்போது தான் பணிகள் முடிந்தது அதனால் தான் பாசறைக்கு செல்கிறேன் அதுவும் ஒரு வகையில் நல்லது தான் முன்பே நிறைவடைந்திருந்தால் உங்கள பார்த்திருக்க  முடியாதே? என்று நேரடியாகவே பொடி வைத்தான் சொக்கநாதன்.    

“ஆகா... சரிதான்......” என்று மனதிற்குள் நினைத்து கொண்டே

“அடேங்கப்பா பெரிய ஆளாய் இருப்பீர்கள் போல சரி நான் வரட்டுமா” என்று பொய்யாக கிளம்ப எத்தனித்தான் மாறன்.

உடனே சற்றும் யோசிக்காமல் அவனுடன் சேர்ந்தே நடக்க துவங்கிய சொக்கன்

ம்ம் கெளம்ப வேண்டியது தான் நீங்க மனசு வெச்சா.!!!

என்று மீண்டும் பொடி வைத்தான்.

இந்த மாதுளங்கனியனை இன்று இரவு விருந்தில் புசித்து விட வேண்டியது தான்

என்று நினைத்து கொண்டே நெஞ்சம் படபடக்க சற்று தூரத்தில் இருந்த சுமைதாங்கியின் மீது அமர்ந்து பேசலாமா என்று மாறன் கேட்க்கும் .போது தெருவிளக்குகளுக்கு எண்ணெயிடும் பணியாளர்கள் அங்கு வந்து கொண்டிருந்தனர்.

“இல்லை மாறா...... நாளைக்கு ஒரு புதிய பணி இருக்கிறது இப்பொழுதே நேரம் நள்ளிரவை தாண்டி விட்டது நான் புறபடுகின்றேன். என்று கூறி விட்டு கிளம்பியே விட்டான் சொக்கன். இதனை சிறிதும் எதிர்பார்க்காத மாறன் சிதறிய உண்டியலை கண்ட சிறுமி போல விக்கித்து போய் நின்றான். கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாமல் போனதை கூட மாறனுக்கு வருத்தம் அதிகமில்லை.  இது வரை தான் கண்ட ஆண்களிளெல்லாம் இல்லாத எதோ ஒன்று சொக்கனிடம் இருப்பதை உணர்ந்து

“அவனுடன் இன்னும் சிறிது நேரம் பேச முடியாதா ....? அவனது உடலில் வீசும் அந்த நறுமணம் மீண்டும் நமக்கு கிடைக்காதா.......? எத்தனை கம்பீரம், எத்தனை அழகு , எத்தனை கனிவு அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா”?

 என்றுதான் ஏங்கினான். அந்த ஏக்கம்தான் பொழுது புலர்ந்து இத்தனை நேரம் கழித்தும் மாறனை வேலையில் கூட நாட்டமில்லாமல் செய்கிறது.

‘””சொக்கநாதன்என்ற பெயருக்கேற்றார் போல சொக்க வைக்கும் நாதனாக தான் இருக்கிறான்........ தாயே.!!!! வெக்காளி....... எனது என்ன ஓட்டத்தை நிறைவேற்று அம்மா.......’” “

என்று வேண்டிய படி    சிறிது நேரம் நேற்றைய நினைவை மறந்து பணியில் கவனம் செலுத்திய பொழுது அங்கு காற்றை கிழித்து கொண்டு கேக்கும் உளிகளின் களீர் களீர் ஓசையும் தாண்டி கட்டியங்காரனின் குரல்

 சிவபாத சேகரன்............

 க்ஷத்திரிய சிகாமணி,...........

  நிகரிலிச் சோழன்,..................

 இராஜேந்திர சிம்மன்...........  சோழ மார்த்தாண்டன்...........  இராஜ மார்த்தாண்டன்........... நித்திய விநோதன்.............  பாண்டிய லோசனி................ கேரளாந்தகன்,.......... சிங்களாந்தகன்............. இரவிகுலமாணிக்கம்...........  தெலிங்கர் குல காலன்.......... தஞ்சை பெருவளநாட்டின் மும்முடி சோழன்........ ராஜராஜ சோழ சக்கரவர்த்திகள் வருகிறார். வருகிறார் வருகிறார் 

என்று ஏற்ற இறக்கத்துடன் கேட்டது.

                          

        

                                           2
                   இலுப்பை தோப்பு
             


பணிகளில் ஈடு பட்டிருந்தவர்களில் பாதிக்கும் மேலானோர் போட்டதை போட்ட படி போட்டு விட்டு அரசனை காணும் ஆவலுடன் அங்கிருந்து அகன்றனர். சொக்கனை காண வேண்டிய ஆவல் இருப்பதால் அதில் நாட்டமில்லாமல் செதுக்கி கொண்டிருந்த மாறன் தலைமை சிற்பி கீழிறங்கி வருவது கண்டு எழுந்து நின்றான்.

“மாறா...... அரசபெருமான் எழுந்தருளியுள்ளார் போலிருக்கிறது நான் சென்று எனது வணக்கங்களை தெரிவித்து வருகிறேன் நீயும் வருகிறாயா.....?”

“இல்லை பிரபு தாங்கள் செல்லுங்கள்............. ஆனால் ஒரு சந்தேகம்?”

“என்ன கூறு.......”

“அரச பெருமான் நாளைதானே விஜயம் செய்வார்? இன்று என்ன திடீரென்று வந்திருக்கிறார்? இதுபோல முன்னறிவிப்பின்றி வந்தாலும் மாலை வேளைகளில் தானே வருவார்....? இன்றென்ன புதிதாக இருக்கிறது.?”

“அதுதான் எனக்கும் விளங்கவில்லை போய் தரிசித்து விட்டு வந்து கூறுகிறேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார் அவர்.

சற்று நேரத்தில் அரசனின் அதிகார பூர்வ வருகையை அறிவிக்கும் இசைக்கருவிகள் விண்ணதிர ஒலித்து அடங்கின

“மன்னர் எழுந்தருளி வாயிற் மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார் போல.

 கூடிய விரைவில் ஆலயத்திற்குள் பிரவேசிக்க கூடும்””

 என்று எண்ணியவாறே உளியினால் ஓசை எழுப்பி கொண்டிருந்தவனை திடீரென்று காது நரம்புகள் கிழியும் அளவு கேட்ட ஒரு யானையின் பிளிறல் ஓசை திடுக்கிட்டு நிமிர வைத்தது. வெகு அருகில் ஒரு களிறின் தும்பிக்கை நீட்டி கொண்டிருப்பதை கண்டு கோபத்துடன் மேலே அமர்ந்திருக்கும் பாகனை உற்றுநோக்கினான் மாறன்.

களிறின் பிளிறல் காரணமாக சுருட்டி எரியபட்ட காகிதம் போல சுருங்கியிருந்த மாறனின் முகம், யானை மீது அமர்ந்திருந்த ஆணை கண்டதும் ஆதவனை கண்ட ஆம்பல் போல விரிந்தது.

ஆம்.!!! அவன் முகம் விரிய ஆனந்த பட காரணம் சொக்கநாதன் யானை மீது அமர்ந்திருந்ததால் தான்.

அவனிடம் பேசலாம் என்று ஆவலுடன் எழுந்த மாறனும், காலையிலேயே ஆலய வளாகத்திற்குள் வந்திருந்தாலும் தலைமை சிற்பி இருந்ததால் நெருங்க முடியாமல் தவித்த சொக்கனும், அரசர் வளாகத்திற்குள் நுழைகிறார் என்ற அறிவிப்பு கேட்டு தவித்து விலகினார். இருந்தாலும் முன்னேற்பாடுடன் வந்திருந்த சொக்கநாதன் சற்றும் தாமதியாமல் இடுப்பில் இருந்த பனையோலை கீற்று ஒன்றை எடுத்து சுருட்டி மாறனிடம் வீசி விட்டு யானையை ஒட்டிக்கொண்டு அகன்று விட்டான்.

“நேற்றிரவிலிருந்து சொக்கனின் நினைவலைகள் எனும் தேர்க்காலில் சிக்கி தவித்தோம், இப்பொழுது இவ்வளவு நெருங்கியும் பேச முடியவில்லையே..!!! என்று அலுத்து கொண்டவாறே அந்த ஓலை சுருளை எடுத்து விரித்தான், பின் அதில் எழுதியிருந்த வாசகத்தை படித்து உள்ளுக்குள் சிரித்தான்.      

அன்புடை ஏழிசை மாறா........

                         இன்று மாலை கதிரவன் கண்ணுறங்கும் சமயம்  குடந்தை (இன்றைய கும்பகோணம்)  செல்லும் ராஜபாட்டையில் தஞ்சையிலிருந்து ஐந்து காத தொலைவில் இருக்கும் இலுப்பை தோப்பில் உன்னுடன் தனியாக உரையாட விரும்புகிறேன். நீ வருவாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

                            -அன்பை  எதிர்நோக்கும் சொக்கநாதன்.

என்று எழுத பட்டிருந்த அந்த ஓலை நறுக்கை சுருட்டி இடுப்பில் செருகி கொண்டு நிம்மதியுடன் சொக்கனால் ஏற்பட்ட மன பாரத்தை இறக்கி வைத்து விட்டு வேலையில் கவனம் காட்ட ஆரம்பித்து விட்டான்.

ஆனால் காதல் தேவதைகள் கோடிபேர் சேர்ந்து வந்து மாறன் இறக்கி வைத்த பாரத்தை தூக்கி கொண்டு சொக்கனின் மனதில் ஏற்றிவிட்டு சென்று விட்டனர்.

“ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் லிகிதத்தை கொடுத்து விட்டோம்.!!! ஆனால் அவன் வருவானா.? வந்தால் என்ன செய்ய போகிறாய் ? வரவில்லை என்றல் இனி என்ன செய்வாய்....?”

 என்று ஆயிரம் கேள்விகளை தனக்குள் கேட்டு கொண்டே மாலை நேரத்தில் மேற்குறிப்பிட்ட இலுப்பை தோப்பிற்கு தன் குதிரையை செலுத்தி கொண்டிருந்தான் சொக்கநாதன். குறிப்பிட்ட இடத்திற்கு வந்து குதிரையை  அங்கொரு மரத்தில் கட்டிவிட்டு சற்று சாய்ந்த வண்ணம் வளர்ந்திருந்த இலுப்பை மரத்தின் மீது அமர்ந்த பொழுதுதான்

“உன் விருப்பத்திற்கு இவ்வளவு தூரமாக வர சொல்லிவிட்டாயே அவனிடம் குதிரை இருக்குமா அவன் எப்படி வருவான்?”

என்று அவனை மேலுமொரு கேள்வி வாட்ட தொடங்கியது.

                                                           
                             
                                             3
                    
                                  அதிவீரனின் அவசரம்


அந்த அடர்ந்த இலுப்பை தோப்பு பகுதி குடந்தை சாலையில் இருந்து சற்று தள்ளி இருந்தாலும், அந்த பகுதியில் மோகினி நடமாட்டம் இருப்பதாக மக்கள் நம்புவதாலும் வெளியாட்கள் வர வாய்ப்பில்லை என்பதாலும்தான் சொக்கன் அந்த பகுதியை தேர்ந்தெடுத்தான். மலைகள் மீது ரவி அடங்கும் நேரத்தில் அந்த இலுப்பை வனத்தின் அமைதியை குளைத்த வண்ணம் வரும் புரவி ஒன்றின் குளம்படி ஓசை கேட்டு எழுந்து நின்று பார்த்தான் சொக்கன். அங்கு குதிரை மீது அமர்ந்த வண்ணம் மாறன் வருவது கண்டு, காவிரி புது வெள்ளம் போல பொங்கிய மனதை கட்டு படுத்தி கொண்டு நின்றான்.

ஏதோ ஒரு ஆவலில் அவனும் அழைத்து விட்டான்; இவனும் வந்து சேர்ந்து விட்டான்; ஆனால்! அடுத்து என்ன நடக்க போகிறது? என்பதை இருவரும் எண்ணிய வாறே படபடப்பில் தவித்தனர்.

குதிரையை மரத்தில் பிணைத்து விட்டு சொக்கனின் எதிரே வந்து நின்றான் மாறன். வந்து நின்றானே தவிர அச்சமும் வெட்கமும் போட்டி போட்டு கொண்டு அவனை பிடுங்கி தின்றது. பின் சமாளித்து கொண்டு மாறனே துவங்கினான்.

“ என்ன வீரரே இங்கு என்னை வர சொல்லிவிட்டு பிடித்து வைத்த பிள்ளையார் போல அமர்ந்திருக்கின்றீர்?” காரணம் கூறுங்கள்.”

“ காரணம் புரியாமலா இவ்வளவு தூரம் வந்தாய்.?””

என்று சொக்கன் கேட்ட கேள்விக்கு மாறனிடம் பதில் இல்லை.

“சரி!! முழுதும் நனைந்த பின் முக்காடிட்டு என்ன பயன்? நேரடியாகவே சொல்கிறேன். நேற்றிரவு உன்னை பார்த்ததிலிருந்து என் மனம் உன்னையே நாடுகிறது. உனக்கும் என்னை பிடித்து விட்டது என்பதை நான் நேற்றே உணர்ந்து விட்டேன்”.”

 என்று கூறியவாரே சற்றும் தாமதிக்காமல் மாறனின் கன்னத்தை இருகரங்களாலும் பற்றி தூக்கி இதழில் ஒரு முத்தத்தை பதித்தான் சொக்கன். இதை எள்ளளவும்  எதிர்பாராத மாறன் நிலை குலைந்து பின் ஆமோதிப்பது போலவும், அந்த தேன் போன்ற இதழின் ஸ்பரிசமும் மாதுளை முத்து போன்ற பற்களின் கவ்வலும் இன்னும் வேண்டும் என்பது போல சொக்கனின் அகன்ற தோளை மாலை போல வளைத்து இறுக்கினான்.

காமதேவனின் கடைக்கண் பார்வை பட்டாலே காதல் வயப்படும் மானிடர்கள் அனுக்ரக பார்வை கிடைக்கும் போது சும்மாவா இருப்பார்கள்? தொடர்ந்து அங்கு படர்ந்திருந்த புல் வெளியை மெத்தயாக்கி இமைகளை போர்வையாக்கி சொர்க்கத்தின் வாயிலை தட்டி கொண்டிருந்தனர் இருவரும்.

இலுப்பை இலைகளின் ஊடாக வெண்ணிலா பால் மழை பெய்து கொண்டு  இருந்த தருணத்தில் ஒருவழியாக காமதேவனின் பிடியில் இருந்து தங்களை விடுவித்து கொண்டு காதல் தேவனின் பிடிக்குள் சென்று கொண்டிருந்தனர் இருவரும்.

 சொக்கனின் அகன்ற மார்பின் மீது தலை வைத்த படி பேச துவங்கினான் மாறன்  .

“ சரி சொக்கா....... நீ படைவீரன் என்று கூறினாயே பின் ஏன் ஆலய பணிகளில் பங்கேற்றாய் அதுவும் யானை பாகனாய்?”

“ ஹோ அதுவா.....?  நமது சோழ தேசத்தின் முப்பது வகையான படைபிரிவுகளில் முதலாவதான “பெருந்த நாட்டு ஆணையாட்கள் “ எனும் பலம் பொருந்திய படைபிரிவில் புதிதாக சேர்ந்திருக்கும் வீரன் நான். எனக்கு சொந்த ஊர் திருவாரூர் அருகே குடவாயில். பயிற்சி காலம் கடந்த வாரம்தான் நிறைவடைந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெறும் சாளுக்கியர்களுடனான போருக்கு செல்வதற்கான பணியானைக்காக காத்திருக்கிறேன்.  பணியானை வரும் வரை பெரியகோவில் கட்டுமான பணிகளில் வீரர்கள் தங்கள் களிற்றுடன் பங்கேற்க வேண்டும் என தளபதி அவர்கள் கட்டளையிட்டதால் தான் வந்தேன்.” என்று தன்னை பற்றி ரத்தின சுருக்கமாக கூறி முடித்த சொக்கன்,

“உன்னை பற்றி கூறவே இல்லையே உனக்கு சொந்த ஊர் தஞ்சை தானா? தாய் தந்தையர் எங்கிருகின்றனர்? “ என்று கேட்டான்.

“ம்ம் உறையூர் அருகே இருக்கும் திரு சீரபள்ளிஎனும் சிற்றூர்தான் எனக்கு சொந்த ஊர். ஆலய பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக தஞ்சையில் தான் இருக்கிறேன். அவ்வப்பொழுது இல்லதிற்கும், அன்னை வெக்காளியை தரிசிப்பதற்கும் சென்று வருவேன்.” என்று கூறினான். பின்

“சொக்கா..... நீ பூசியிருக்கும் வாசனை திரவியம் என்ன? அதனை எங்கு வாங்கினாய் உன் வியர்வை வாடையுடன் கலந்து மனதை மயக்குகிறதே?” என்று கேட்டான்.

“அப்படியா.....!! இது என் நண்பன் எனக்கு வாங்கி வந்து கொடுத்தான். எங்கு வாங்கினான் என்று தெரிய வில்லையே!!  கண்டிப்பாக தஞ்சையில்தான் வாங்கியிருக்ககூடும்” என்று கூறி கொண்டே அவனை மேலும் இறுக்கினான்.

  கலவி  இன்பம் கண்டவர்களுக்கு பால்நிலா பொழியும் கானகம் கசக்கவா செய்யும்? நேரம் போவதே தெரியாமல் பேசி கொண்டிருந்தவர்களின் காதுகளுக்கு முதல் சாமம் தொடங்கும் மணியோசை  அரண்மனையிலிருந்து கேட்டது. கலவி வேகத்தில் கழற்றி வீச பட்ட உடைகளை தேடி கண்டு பிடித்து உதறி உடுத்தி கொண்டு பிரிய மனமின்றி நாளை மீண்டும் இதே இலுப்பை வனத்தில் சந்திக்கும் முடிவுடனும் காலை ஆலயத்தில் பார்க்க போகும் ஆவலுடனும் தத்தமது குதிரைகளை விரைந்து செலுத்தி விடை பெற்றனர் விடியபோகும் நாளில் இருவருக்குமே ஏமாற்றமே மிஞ்ச போகிறது என்பதை அறியாமல்.

“ பாசறை பின் புறத்தில் இருக்கும் லாயத்தில் குதிரையை பிணைத்து விட்டு அறைக்கு வந்து கொண்டிருந்த  மாறனை நோக்கி தனது சக சிற்பியான அதிவீரன் அவசரமாக ஓடிவந்தான்.

                                
                         
                                            4
                                      திரவிய பரிசு

“ என்ன வீரா ஏன் இப்படி ஓடிவருகிறாய் அப்படி என்ன அவசரம்?”


“அவசரம் தான் இத்தனை நேரம் எங்கே சென்றாய் உன்னை உடனடியாக் வந்து பார்க்க சொல்லி நமது தலைமை சிற்பி இரண்டு முறை ஆளனுப்பி விட்டார். நானும் உன்னை தேடி கடை தெரு, ராஜவீதி, ஆலயம், அரண்மனை வாயிற்பகுதி, சிவகங்கை பூங்கா என்று அலைந்தால் கடைசியில் லாயத்திலிருந்து வருகிறாய்!!! சரி உடனே புறப்படு.”

என்று துரித படுத்தியவன் சொல் கேட்டு நடக்க துவங்கினான் மாறன்

அறிவில் சிறந்த சான்றோர்களும், கலைகளில் சிறந்த வல்லுனர்களும், கல்லூரி மற்றும் பாடசாலைகளில் உபாத்தியாயராக பணிபுரிவோர்களும் அதிகம் வசிக்கும் இராசராச வித்யாதர பெருந்தெருவில்தான் தலைமை சிற்பியின் இல்லம் அமைந்திருப்பதால், நடக்கும் தொலைவில் இருக்கும் அந்த தெருவிற்கு விரைந்து நடந்தே சென்று அவருடைய இல்லத்தின் வாயிற்பகுதி கடக்காமல் வெளியிருந்து அழைத்தான் நமது மாறன். சிற்பியும் வெளிப்படவே கரம் கூப்பி வணங்கி பேசலானான்.

“ பிரபு எதோ அவசர வேலையாக அழைத்தீர்களாமே......?”.”

“ஆம் மாறா......!! வா உள்ளே வந்து பேசலாம்”

“இல்லை பிரபு எனக்கு சொந்த வேலை காரணமாக குளிப்பு கடமை உள்ளது இப்படியே சொல்லுங்கள்”.”

அதென்ன குளிப்பு கடமை என்று கேட்கிறீர்களா?

இரண்டு ஆண்கள் கட்டி பிடித்து ஒழுக்கு ஏற்படுவதால் உண்டாகும் தீட்டும், மாடுகள் பூட்டிய வண்டியில் உடலுறவு கொள்வதால் ஏற்படும் பாவமும், கட்டிய உடையுடன் நீரில் மூழ்கும் போது போய்விடும் என்று அன்றைய நாட்களில் பெரிதும் மதிக்கபட்டு பின்பற்ற பட்ட மனுதர்ம சாஸ்திரமும், வசிஷ்ட்ட நீதியும் சொல்கிறது. சொக்கனுடன் உறவு கொண்டதால் ஏற்பட்ட தீட்டு நீங்காமல் உள்ளே பிரவேசித்தால் மனை தூய்மை கெட்டு விடும் என்று அஞ்சிய மாறன், இதனை நேரடியாக சொல்ல முடியாததால் குளிப்பு கடமை என்று சமாளித்து விட்டான். அழைத்திருக்கும் வேலை அவசரமான ஒன்று என்பதால் சிற்பியும் அதை பற்றி அதிகமாக கேட்டு கொள்ளவில்லை. சரி கதைக்கு வருவோம்.

“சரி மாறா......!!!. இப்படியே கூறுகிறேன். ஆலயத்தில் இறைவனை நோக்கி அமைக்க படவிருக்கும் அதிகார நந்திக்கான கல் உடைக்கும் பணி நாளை நார்த்தாமலையில் துவங்க இருக்கிறது. இதனை மேற்பார்வை இட்டு பாதுகாப்பாக தஞ்சை கொண்டு வருவதற்காக நானும், ஏனைய தலைமை சிற்பிகளான, குணவன் மதுராந்தக நித்தவினோதப் பெருந்தச்சனாரும், .இலத்திச் சடையரான கண்டராதித்தப் பெருந்தச்சனாரும்  அதிகாலை புறப்பட இருந்தோம். ஆனால் அரசரிட்ட வேறு பணிகாரணமாக என்னால் தற்பொழுது செல்ல இயல வில்லை. அதனால் எனக்கு பதில் நீயே சென்று வா.... நான் அரசரிடம் கூறி இதற்கு அனுமதி வாங்கி விட்டேன்.

“பிரபு ஒரு சந்தேகம்”

“என்ன கூறு மாறா?”

“இல்லை பிரபு இன்று காலை அரசரின் திடீர்விஜயத்திற்கு காரணம் அறியலாம் என்றுதான்”

ஒருவேளை அரசரின் வருகைக்கும் சிற்பிக்கு இட்ட பணிக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ என்ற எண்ணத்தில்தான் மாறன் இவ்வாறு கேட்டான்.

“அதுவா.... வடதிசையில் இளவரசர் ராஜேந்திர சோழர் தலைமையில் நடைபெறும் சாளுக்கியர்களுடனான போரை பற்றிய முக்கிய கலந்துரையாடலுக்காக நாளை மன்னர் காஞ்சிபுரம் வரை செல்ல இருக்கிறாராம், அதற்குத்தான் இன்றே வந்து விட்டார்,

 மேலும் அவர் நகரில் இல்லாத நாளில் ஆலய பணிகளை கவனிக்கும் நாங்களும் நார்த்தாமலை போய்விட்டால் பணிகளை கண்காணிக்க யாருமில்லாமல் போய்விடுவார்கள் அல்லவா? அதனால் தான் என்னை இங்கிருந்து ஆலய பணிகளை கண்காணிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்” ஒரே மூச்சில் கூறி முடித்தார் சிற்பி.

மிகவும் மேன்மை பொருந்திய பணியினை தன் மீதுள்ள நம்பிக்கையால் சிற்பி அளித்துள்ளதால் மறுக்க முடியாமல் சரி என்று மேலும் சில தகவல்களை  கேட்டு கொண்டும் அங்கிருந்து விடை பெற்று நடக்க துவங்கினான்.

மூன்று பக்கம் கழனிகளாலும் ஆறுகளாலும் சூழ பட்ட தஞ்சையில் அடி முதல் நுனிவரை உயர்ந்த ரக செவ்வரியோடிய கருங்கற்கள் கொண்டு இப்படி ஒரு கோயிலை வடிவமைக்க கற்களை வாரி வழங்கிய நார்த்தாமலை இன்றைய திருச்சியின் தெற்கே அமைந்திருகிறது.

அத்தகைய நார்த்தா மலைக்கு செல்வதில் மாறனுக்கு விருப்பம்தான்........ இருந்தாலும்

“நாளைக்கு சொக்கன் நம்மை தேடுவானே... எப்படி அவனிடம் தகவலை தெரிவிப்பது? அவன் படைவீரர் பாசறையில் தங்கி இருக்கிறானா.? இல்லை பேராலய பணிக்கான ஆணைபாகர் பாசறையில் இருக்கிறானா........? என்று கூட விசாரிக்க வில்லையே.!!!! எதிலிருந்தாலும் இரண்டுமே இங்கிருந்து நடக்கும் தொலைவில் இல்லை. அப்படியே நடந்து போனாலும் அதற்குள் நள்ளிரவு ஓடிவிடும் மேலும் இரண்டுமே காவலர்கள் சூழ்ந்த பகுதி என்ன செய்யலாம்??”

 என்று யோசித்து கொண்டே பாசறைக்கு திரும்பி விட்டான். என்ன செய்வது? அவன் நாளை நம்மை தேடி அலைவானா.? நமக்காக இலுப்பைதோப்பில் காத்திருப்பனா…….? எப்படி இருந்தாலும் நாம் தஞ்சை திரும்ப இன்னும் மூன்று நாட்கள் ஆகுமே.!!! நாம் எப்படி அவனை காணாமலிருக்க போகிறோம்….?”

 என்று தனக்குள் கேள்விகளை கேட்ட படியே நீராடிவிட்டு வந்து பஞ்சணையில் உறங்க நெஞ்சனயாமல் கிடந்தான். பின் சேவல் கூவும் ஓசை கேட்டு எழுந்து தலைமை சிற்பிகளுடன் பயணமானான் மேற்கு நோக்கி.

ஊருக்கே படியளக்கும் உழவர்கள் கலப்பைகளுடனும் உழவு மாடுகளுடனும் தத்தமது கழனிகள் நோக்கி பயனாமாகும் அந்த புலர்காலை வேலையில் சொக்கநாதன் தன் ஆசை நாயகனுக்கான பரிசு பொருள் ஒன்று வாங்குவதற்காக பாசறைக்கு அருகில் இருக்கும் கொங்காள்வார் அங்காடி யில் கடை கடையாக ஏறி இறங்கினான். பின் அங்குள்ள கடைகளில் தேடி வந்த பொருள இல்லாததால் பட்டத்து அரசிகளின் பெயரில் அமைக்க பட்டிருக்கும் தஞ்சை நகரின் மத்தியில் இருக்கும் திருபுவன மாதேவி பேரங்காடி யில் தேடி அங்கும் கிடைக்காததால் பின் அரண்மனை அருகில் இருக்கும் வானவன் மாதேவி பேரங்காடியில் நேற்றிரவு வாஞ்சையுடன் மாறன் மனம்கவர்ந்து கேட்ட, அந்த “புனுகு” வாசனை திரவிய குடுவையை வாங்கினான். அதற்குள் பொழுது புலர்ந்து மூன்று நாழிகை கடந்து விட்டதால் விரைந்து சென்று யானையை ஒட்டி கொண்டு தன் ஆசைநாயகனுக்கு தேடிகண்டு பிடித்த பரிசை கொடுக்கும் ஆவலுடன் ஆலயத்திற்குள் நுழைந்தான்.

                                   
                                   
                      5


                                   மோர்காரி

பேராலய கருவறை சுற்றில் நேற்று மாறன் சிலை வடித்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். அங்கு அகோரசிவத்தின் கல்லுருவம் நாத்திகரை கூட ஆத்திகராக்கும் வகையில் அழகுற அமைக்க பட்டிருந்தது.

“ஒஹ்......... சிலை வடித்து முடித்து விட்டான் போல மேற்கு பக்கத்தில்தான் இருக்க கூடும்”

 என்று விரைந்து சென்று மேற்கு புறத்திற்கு வந்தான் அங்கு தத்புருஷ மூர்த்தியின் சிலை வடிப்பதற்காக முதற்கட்ட வேலை நடந்து அப்படியே விட்டு செல்ல பட்டிருந்தது கண்டு

“ இன்னும் வரவில்லை போல” என்றெண்ணி கொண்டான். பின் “சற்று நேரம் கழித்து வந்து பார்க்கலாம்” என்று அதே மேற்கு பகுதியில் அனுக்க திருவாசல் அமைக்கும் பணியில் ஈடுபடும் கட்டுமான பணியாளர்களுக்கு யானையுடன் உதவி கொண்டிருந்தான் சொக்கன் களிற்றின் மீதமர்ந்து அதற்குரிய கட்டளைகளை அவன் பிறப்பித்து கொண்டிருந்தாலும் பார்வை அடிக்கடி மாறன் வந்து விட்டானா? இல்லையா? என்று மட்டும் பார்த்து கொண்டிருந்தது. ஏறுவரிசையில் இருந்த ஆதவன் கூட மெல்ல உச்சிக்கு வந்து விட்டான் ஆனால் மாறனைத்தான் காணவில்லை.

“ஏன் மாறன் வரவில்லை.? ஒருவேலை வேறு எங்காவது பணி புரிகிறானா? இருந்தால் எப்படி சென்று பார்ப்பது? என்று யோசித்து கொண்டிருக்கும் போது

“ தம்பி பாரம் ஏற்றப்பட்டு விட்டது சங்கிலியை இழுக்கும் படி யானைக்கு ஆணையிடுங்கள்”  என்று மேலிருந்து ஒரு பணியாளர்  கூவினார்.   

 கால்கள் யானையின் காதுகளுக்கு இடையில் குத்தி கட்டளை பிறப்பித்த அந்த நேரத்தில் உச்சி வெயிலின் உக்கிரத்தை தவிக்கும் பொருட்டு தாகம் ஆற்றும் பெண்டிர்கள் மோர் பானைகளுடன் வந்தனர். மோர் பருகுவதற்காக அனைத்து பணியாளர்களும் சில கனம் வேலைகளை நிறுத்தி விட்டு வந்து, ஆங்காங்கு அமர்ந்து கதைத்து கொண்டும் மோர்கொண்டு வந்த பெண்களுடன் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இதெல்லாம் கவனிக்க மனம் இல்லாதவனாய் சொக்கன், மாறனை எங்காவது நிற்கிறானா என்று தேடி கொண்டிருந்தான்.

“சரி நாம் இங்கேயே நின்று கொண்டிருந்தால் அவனை தேட முடியாது நிச்சயம் அவன் ஆலயத்துக்குள் தான் எங்கோ இருக்க வேண்டும் ஆலயம் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு வருவோம்”

 என்று எண்ணியவன் அருகில் கிடந்த கல் ஒன்றில் யானையின் சங்கிலியை பிணைத்து விட்டு அங்குசத்தை அதற்கு முன் எறிந்து விட்டு புறப்பட எத்தனிக்கும் பொழுது அவனது முகத்திற்கு நேராக ஒரு மோர் கலயம் நீட்ட பட்டது. தொடர்ந்து

“என்ன வீரரே தங்களுக்கு மட்டும் தாகம் ஏற்படவில்லையா?” என்று குழலை ஒத்த குரலில் பெண்ணொருத்தி கேட்டாள்.

“ம்ம்ம்ம் தாகமாகத்தான் இருக்கிறது ஆனால் அதை தனிக்கும் நீரைத்தான் காணவில்லை” என்று தன்னை மறந்து கூறி பின் வெடுக்கென்று சுதாரித்து அந்த பெண்ணின் முகத்தை நோக்கினான் சொக்கன்.

 சொக்கனின் நேரடி பார்வையை தாங்கவொண்ணாமல் தலையை கவிழ்ந்து கொண்டது அந்த தாமரை மொட்டு. பின் நிமிர்ந்து

“சுவையான மோர் இருக்கும் பொழுது வெறும் நீரை தேடி போகிறீர்களே இது நியாயமா?” என்று கேட்டாள் அந்த பெண். இதனை இரட்டை பொருளில் நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கு நானோ அல்லது அந்த பெண்ணோ பொறுப்பல்ல.

“சரி சரி கொடுங்கள் என்று சிரித்து கொண்டே முகத்திற்கு நேராக நீட்ட பட்ட அந்த மோர்கலயத்தை வாங்கி வாயில் ஊற்றினான் சொக்கன்”

சுக்குத்தூள், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, மாவடு, இஞ்சி, உப்பு போட்டு தாளித்த அந்த பசுமோரை நாமாக இருந்தால் இந்நேரம் மூன்று கலயம் வாங்கி வாயில் கவிழ்த்திருப்போம். ஆனால் இத்தனை சுவை மிக்க மோரை ருசிக்கும் மனநிலையோ அல்லது அருகில் நிற்கும் பேரழகு சுந்தரியை ரசிக்கும் மனநிலையோ சொக்கனுக்கு இப்பொழுது இல்லை. அவன் மனம் தேடும் மார்க்கம் எல்லாம் மாறன்!மாறன்! மாறன்!

மடக்... மடக்..... என்று சொக்கன் மோரை குடிக்கும் பொழுது அவனது கண்டத்து சங்கு ஏறி ஏறி இறங்குவதையும் அங்கு மூன்று நாட்களுக்கு முன் சிரசேதம் செய்ய பட்ட தாடி மயிர்கள் கீரை விதை போல முளை விட்டிருப்பதையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் அந்த பெண்.

அவள் வைத்த கண் வாங்காமல் அவனை பார்ப்பது கூட அறியாமல் வாயில் வழிந்த மோரை துடைத்து கொண்டு கலயத்தை அவளின் கரங்களில் தினித்து விட்டு அவளது முகத்தை கூட பார்க்காமல் சொக்கன் அந்த இடத்தை காலி செய்தான்.

ஞாயிரை ஒத்த நிறமும், திங்களை ஒத்த முகமும், செவ்வாயை ஒத்த இதழும், புதனை ஒத்த பொலிவும், வியாழனை ஒத்த விரிந்த நெற்றியும், வெள்ளியை ஒத்த அல்லிமலர் விழிகளும், சனியை ஒத்த கருங்குழலும் கொண்டு பேரழகு பதுமையாக இருக்கும் இந்த மோர்காரியின் கையிலிருக்கும் மோர்குடமாகவாவது நாம் சிறிது நேரம் இருக்க மாட்டோமா? என்று ஆலய பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் எண்ணுவதுண்டு. விலகி சென்றாலும் வழிந்து வழிந்து பேச முயலும் எத்தனயோ ஆடவர்களின் மத்தியில் சொக்கன் புது விதமாகவும், மனதை மயக்கும் மதுக்குடமாகவும் தெரிந்தான் அவளுக்கு.

“ஒரு பார்வை கூட வீசாமல் போகிறார் கொஞ்சம் திமிர் பிடித்தவர்தான் போலிருக்கிறது” என்று அவள் எண்ணி கொண்டிருக்கும் பொழுது 

 “என்னடி சோதை...... யசோதை!! மெய்மறந்து நிற்கின்றாய் போலிருக்கிறது” என்று அவளது கரத்தில நறுக்கென்று கிள்ளினால் இவளின் அன்பு தோழி ருக்மணி.

“ஸ்ஸ்ஸ்அஹ்ஹ்ஹ்ஹ...... பாவி ஏனடி இப்படி கிள்ளினாய் உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கையை தேய்த்த்து கொண்டு இவள் பங்கிற்கு ஒரு முறை திருகினாள்.

“ஸ்ஸ்ஸ்ஸ் வலிக்கிறதடி உன்னிடம் போய் வைத்து கொண்டேன் பார் என்னை சொல்ல வேண்டும்.” என்று கூறியவள் சாரி வா செல்லலாம் என்று கூறி கொண்டே யசோதையின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.

காதலனை தேடி சென்ற நமது சொக்கன் ஆலயத்தின் முதல் பகுதியான இராசராசன் திருவாயிலில் பொளிந்து கொண்டிருக்கும் சிற்பிகளில் தொடங்கி பின் பகுதியில் இருக்கும் அனுக்க திருவாசலில் வேலை செய்யும் சிற்பிகள் வரை ஒருவர் விடாமல் பார்த்து வந்து விட்டான். எப்படியாவது நம் கண்களில்ருந்து தப்பியிருக்க கூடும் என்று நினைத்தவன் மேலும் மூன்று முறை சுற்றி வந்து பார்த்து விட்டு நந்தி வாகனம் அமைக்கப்படவிருக்கும் மேடை மீது சோர்ந்து போய் அமர்ந்தான்.

“எங்கு சென்றிருப்பான்? ஒரு வேளை வரவே இல்லையோ?

இல்லை உடலுக்கு ஏதும் ஊறு வந்திருக்குமா? அப்படியானால் அவன் எங்குதங்கி இருப்பான்? இல்லை அவசர வேலையாக உறையூர் சென்றிருப்பானா? என்ன இருந்தாலும் மாலையில் சந்திப்பதாக கூறினானே அதற்கும் வராமல் போய்விடுவானா?” ஆசை ஆசையாக அவன் விருப்பபட்ட திரவியம் வாங்கி வந்தோமே?!! இப்படி தவிக்க விட்டு விட்டானே!!?”

என்று ஆயிரம் கேள்விகளை தனக்குள் கேட்டு கொண்டு நொந்து போய் அமர்ந்திருந்தவனை ஒரு பெண் கவனித்து கொண்டிருகிறாள் என்பதை கூட அறியாமல் அமர்ந்திருந்தான் சொக்கன்.

ஆலயத்தின் தென்கிழக்கு பகுதியில் பேராலய கட்டுமான ப்ணி கணக்கனிடமும், அவனது கீழ் கணக்கனிடமும் மோர் கொண்டு வந்த பெண்கள் எத்தனை குடம் மோர் கொண்டு வந்தோம் என்று போட்டி போட்டு கொண்டு கணக்கு காட்டி கொண்டிருந்தனர். இந்த கணக்குகளை சரிபார்த்து பெரிய பண்டாரத்திடம் காட்டினால் தான் மோருக்குரிய பணம் கைக்கு வரும், பேராலய கட்டுமான பணிகளால் கூட மக்கள் பயன் பெற வேண்டும் என்று கருதிய மாமன்னனின் ஏற்பாடு இது. தன்னோடு வந்த பெண்கள் எல்லாம் நீ முந்தி நான் முந்தி என கணக்கு எழுத. யசோதை மட்டும் தன்னைத்தான் காண வந்திருக்கிறான் அந்த வீரன் என்று எண்ணி கொண்டு அவனை பார்த்து கொண்டிருந்தாள். இதனை கண்டுவிட்ட ருக்மணி

“மோரை கொடுத்து விட்டு அவரது மனதில் ஆழமாக ஏரை ஒட்டி விட்டாய் போலிருக்கிறது” என்று சீண்டினாள்.

“என்ன...? இல்லை...!!! என்னது ஏரா..? என்னடி.....உளறுகிறாய்?.”

“ஆமாம் நான்தான் உளறுகிறேன். இன்றுதான் முதல் முதல் பார்த்தாய் அதற்குள் வேலையை விட்டு வந்து இப்படி உனக்கு முன் அமரும் படி செய்து விட்டாயே அவரை!!! அப்படி என்னடி கலந்தாய் அந்த மோரில்”

“உனக்கு வர வர வாய் கொழுப்பு அதிகமாகி விட்டதடி அவர் எதோ வேலையாக வந்து அமர்ந்திருக்கிறார் போல! ஏனடி.... இப்படி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாய்?” என்று கூறினாள் யசோதை

உண்மையில் ஈடு பாடு இல்லாதவள் போல பேசினாலும்

ஆஹா..... என்ன ஒரு கம்பீரம், எவ்வளவு அழகாக அந்த மீசையை முறுக்கி விட்டிருக்கிறார்! உண்மையாகவே ருக்கு சொல்வது போல எனக்காகத்தான் இங்கு வந்து அமர்ந்திருகிறாரா? அப்படி இருந்தால் இந்த பேரழகன் எனக்குத்தானா?” என்று கற்பனை வானில் காதல் சிறகடித்து பார்க்க துவங்கி விட்டால் அந்த காரிகை.

அதற்குள் கணக்கு கொடுத்து விட்டு அனைத்து பெண்களும் கிளம்ப எத்தனித்தனர். கூட வந்தவர்கள் எல்லோரும் கிளம்புவதை கூட அறியாமல் சொக்கனை பார்த்து கொண்டிருந்த யசோதையை

“ஏதேது விட்டால் இப்பொழுதே அவர் உடன் சென்று விடுவாய் போலிருக்கிறதே?!!, இல்லத்திற்கு திரும்பும் எண்ணம் இருக்கிறதா? இல்லை இங்கேயே உக்கார்ந்து கொண்டு பார்த்து கொண்டிருக்க போகிறாயா? வேண்டுமென்றால் நான் உன் தந்தையிடம் கூறி விடுகிறேன் யசோதை அங்கு ஒரு ஆனைக்கார ஆணிடம் மனதை பறி கொடுத்து விட்டு அமர்ந்திருக்கிறாள் என்று.”  

கவனம் திரும்பி குடத்தை எடுத்து கொண்டு சொக்கனையும் ஒரு பார்வை பார்த்து விட்டு

“ஏனடி... இப்படி அபாண்டமாக பேசுகிறாய்? சரி வா போகலாம்” என்று அவளை இழுத்து கொண்டு கிளம்பினாள் யசோதை. இதே நேரம் மேடையில் அமர்ந்திருந்த சொக்கனும் எழுந்து ஆலயத்தின் பின் பகுதிக்கு செல்ல துவங்கினான்.

“பார்த்தாயாடி உனக்காகத்தான் அவர் வந்து இங்கு அமர்ந்து இருந்திருப்பார் போல சரியான கள்ளியடி நீ!! என்று யசோதையை சீண்டினாள் ருக்மணி.     

                                                                                                          -ஒசைகேட்கும்