பக்கங்கள்

சனி, 7 பிப்ரவரி, 2015

உளியின் ஓசை (நிறைவு பாகம்)

                                   21
                      இதென்ன காவிஉடை

தஞ்சை நகரத்து வீதிகளில் ஆடம்பரம் வழிந்தோடியது, அழகுடை ஆரணங்குகள் அணிவகுப்போ என்று தோன்றும் வண்ணம் பெண்கள் சுதந்திரமாக கடைவீதிகளில் உலாவி கொண்டிருந்தனர். ஆங்காங்கு நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் இருந்து இன்பமயமான ஓசைகள் கேட்டுகொண்டிருந்தன. மாடமாளிகைகளின் கோபுர பகுதியில் புலிக்கொடி பட்டொளி வீசி கொண்டிருந்தது. ஆனால் இவற்றை எல்லாம் கண்டு களிக்கும் மனம் சொக்கனுக்கு இல்லையாதலால் சோர்வாக பெரியகோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தான். மாறனும் சொக்கனும் எடுத்துக்கொண்ட உறுதியின்படி பூவுலகில் அவர்களுக்கு மிச்சமிருப்பது இன்றய ஒருநாள் இரவு மட்டும்தான் என்பதால் கூட அந்த மனக்கலக்கம் அவனிடத்தில் இருக்கலாம். மனதிற்கு விருப்ப பட்டவருடன் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரது கனவாக இருக்க முடியும், ஆனால் இருவரும் சாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் யாருக்குதான் மனக்கலக்கம் உண்டாகாது? இவ்வாறாக மனதில் தோன்றிய விஷயங்களை எல்லாம் அசை போட்டுக்கொண்டே சென்றவனுக்கு சித்திரை மாதத்தின் உச்சி வெயில் சுள்ளென்று உரைத்தது. சிறிது நீர் மோர் அருந்தினால் தேவலாம் என்றிருந்தது. வழி நெடுகிலும் ஏராளமானோர் தளிகுளத்து மகாதேவருக்கு வேண்டிய படி எண்ணற்ற சுவையுள்ள பதார்த்தங்களை வழங்கி கொண்டிருந்தாலும், நீர்மோர் எங்கு வழங்கப்படுகிறது என்று அவன் மனம் தேடியதால் மேலும் சிலதூரம் நடந்தான்.

“உலகத்து உயிர்க்கெல்லாம் தொண்டாற்றும் சமணப்பள்ளி” என்ற பதாகை தாங்கிய கட்டிடம் ஒன்று அவன் கண்களில் பட்டதோடு அதன் வாசலில் நீர்மோர் வழங்கும் பந்தல் அமைந்திருப்பதும் தெரிந்தது. அங்கு காவிஉடை தரித்த மொட்டை தலை ஆண்களும், பெண்களும், சில நீள்குழல் பெண்களும் அளவளாவி கொண்டிருந்தனர். விரைந்து சென்று மோர் வாங்கி பருகியவன் அவர்களெல்லாம் சமண சமய துறவிகள் என்றும், விழாக்கால கூட்டத்திற்கு சேவை செய்து அப்படியே சமண சமய கருத்துகளை பரப்பும் நோக்குடன் தற்காலிக குடிலமைத்ததாகவும் தெரிந்து கொண்டான். மேலும் அவர்களிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தவன் எதேச்சையாக உள்ளே நோக்கிய பொழுது கண்களுக்கு புலப்பட்ட ஒருபெண்ணின் உருவம் வர்ணிக்க முயாத திகைப்பில் ஆழ்த்தியது. அங்கு ஒருபெண் காவிஉடை தறித்து உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தாள். சற்றுநேரம் உற்றுநோக்கியவன் நிச்சயம் அது யசோதைதான் என்பதை தெளிவுபடுத்தி கொண்ட பின் மேலும் அதிர்ச்சிகுள்ளான படியே அவளை நோக்கிய பொழுது யசோதையும் சொக்கனை காண நேர்ந்தது. ஆனால் அவளது முகத்தில் எந்தவித சலனமும் ஏற்படவில்லை. ஒருவித விரக்தி புன்னகையை உதிர்த்தவாறே அவனது அருகில் வந்து “வாருங்கள் ஐயா!! உணவு அருந்துகிறீர்களா?” என்றாள்

“யசோதை!! இதென்ன கோலம்?, ஏன் காவிஉடை அணிந்திருக்கிறாய்?” அதிர்ச்சி விலகாமல் கேட்டான் சொக்கன்.

“அலைபாய்ந்த மனதிற்கு அணைபோட வழிதேடினேன். அருனரின் போதனைகள் பேரின்பத்தை காட்டியது, அவர் வழி சென்றுவிட்டேன்” உதடுகள் புன்னகைத்தாலும் அது உள்ளிருந்து வரவில்லை என்று காட்டியது அவளது முகம்.

“என்ன? யசோதை.. இந்த இளம்பிராயத்தில் பேசவேண்டிய பேச்சுகளா இவை?, உனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துதர உன் தந்தை எவ்வளவு பிரயத்தன படுவார், கணவர் குழந்தைகளுடன் வாழவேண்டிய நீ, காவிஉடை தறிக்க வேண்டிய அவசியம் என்ன?”

“ம்ம்ஹும்... எனக்கென்று வாழ்க்கையா? வேடிக்கைதான்!, ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தபிரான் அருளி இருக்கிறார். அவ்வண்ணமே நான் ஆசைபட்டு ஏமாந்த ஒன்றின் காரணமாக விரக்தியின் உச்சத்தில் இருந்த எனக்கு வழிகாட்டியது சமணம். நான் விருப்பப்பட்ட வாழ்வு எனக்கு இல்லாத போது, நான் விரும்பியவர் என்னை ஏற்காத பொழுது எனக்கேது இனி வாழ்க்கை?” அமைதியாக அவள் வீசிய சொல்லம்புகள் முள்ளம்புகளாய் தைத்தது சொக்கனின் மனதில்.

“என்ன யசோதை!! அப்படியானால் உன் துறவற வாழ்க்கைக்கு நான்தான் காரணமா?” இறைஞ்சும் குரலில் கேட்டான் சொக்கன்

“என் துறவறத்திற்கு யாருமே காரணம் இல்லை!! என்னை தவிர; ஒருவர்  மனதில் நாம் இருக்கிறோமா இல்லையா என்று அறியாமல் அவரை கணவராக எண்ணி காதல் கொண்டது என் தவறு, அவர் மனதில் வேறொருவர் இருக்கிறார் என்பதை அறியாமல் அவரது உள்ளத்தை காயபடுத்திய பெரும்பாவத்துக்கு நான் பரிகாரம் தேடவேண்டாமா??, அதான் உலக உயிர்களுக்கு தொண்டாற்றி எனது பாவத்தை கழிக்க உள்ளேன்” மிகுந்த பண்பட்ட வார்த்தைகள் யசோதையிடம் இருந்து வெளிப்பட்டு சொக்கனின் மனதை கிழித்தது. அவனுக்கு பேசுவதற்கு சொல்லேதும் கிடைக்கவில்லை, தினறி கொண்டு நின்றவன் செய்வதறியாது திகைத்த பொழுது

“சரி ஐயா!! நான் வருகிறேன்” என்று கூறி திரும்பி பார்க்க மனம் இன்றி உள்நோக்கி நடந்தாள் யசோதை.

                                    22
                    வீழ்ந்தாலும் உன்னோடு
“நம்மால் ஒரு பெண் வாழ்கையை இழந்து வாடுகிறாளே, இறைவா!! என்னை ஏன் இப்படி குற்ற உணர்வுக்குள் ஆழ்த்தி வேடிக்கை பார்க்கிறாய்??”. என்று தன்னையே நொந்து கொண்டான் சொக்கன். மாறனை பற்றிய எண்ணம் கூட அவனுக்கு தற்பொழுது ஏற்படவில்லை, யசோதையின் இந்த முடிவுக்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவனை மேலும் மேலும் வாட்டி வதைத்தது. இருந்தாலும் எந்த குற்றமும் செய்யாமல் இந்த பழிக்கு அவன் ஆளாவதும் அவனுக்கு மிகுந்த வேதனை அளித்தது. மனதில் தோன்றிய பல்வேறு எண்ணங்களை அசைபோட்ட படியே ஆலயத்திற்குள் நுழைந்தவனை மாறன் எதிர்கொண்டு அழைத்தான். எப்பொழுதும் அன்றலர்ந்த முகையாய் இருக்கும் மாறனது முகமண்டலம் மிகுந்த வாட்டமுடனும், எதையோ சொல்ல துடிக்கும் அவசரத்துடனும் காணப்படுவதை அறிந்து துணுக்குற்றான் சொக்கன்.

எத்தனை இன்னலான நிகழ்வானாலும் எதிர்கொள்ளும் திறம் படைத்த சொக்கன் பொலிவற்ற முகத்தோடு இருப்பது மாறனுக்கு மனக்கவலையை மேலும் கூட்டியது. இருவரும் தத்தமது கவலைகளை சொல்ல வேண்டி ஓரமாய் ஒரு இடத்தில் போய் அமர்ந்த பொழுது தன்னை மீறி மாறனின் கண்கள் நீரை சொறிந்தது. மெலிதாக குலுங்கி அழத்துவங்கிய அவனை அவனது தோள்களில் கைவைத்து

“மாறா!! என்ன ஆயிற்று ஏன் இப்படி அழுகிறாய் என்னவென்று கூறு” என்று பதற்றத்துடன் உலுக்கிய சொக்கன் யாரேனும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான், மக்கள் கூட்டம் யாகசாலையில் இருந்ததால் அவ்வளவாக நடமாட்டம் இன்றி காணப்பட்டது ஆலய வளாகம்

சிறிது நேர அழுகையை தொடர்ந்து, சொக்கனின் அதட்டலான, கெஞ்சலான கோரிக்கைகளுக்கு பின் நீண்ட அழுகையினால் மூக்கிலிருந்து ஒழுகிய நீரை துடைத்து கொண்டு பேசலான மாறன், வடிவழகியுடன் அவனுக்கு பெரியகோயில் வளாகத்தில் நடக்க போகும் திருமணத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்த பொழுது சொக்கன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு போயிருந்தான்.

“என்ன சொல்கிறாய் மாறா!! நாளையேவா??”

“ஆமாமடா.. எல்லாம் நாம் கைக்கு மீறி போய்விட்டது, அவர் திருமணத்திற்கு அரசரை அழைப்பதாக வேறு கூறி சென்றுள்ளார், நாளைய தினம் மிகமுக்கிய தினமாக இருப்பதால் அரசரும் சம்மதம் தெரிவித்து எழுந்தருள வாய்ப்பு உள்ளது. என்னடா செய்வது? சொக்கா.. நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நரகமாகி விடுமடா.. ஒரு பெண்ணை மணந்து கொண்டு உன்னை மறந்து விட்டு என்னால் வாழமுடியுமா.. ஐயோ தாயே!! வெக்காளி என்னை ஏன் இந்த பாடு படுத்துகிறாய்? நான் என்ன பாவம் செய்தேன்??” மெலிதாக தலையில் அடித்து கொண்டு அழுதான் மாறன்.

சொக்கனுக்கும் வெடித்து கதற வேண்டும் போல இருந்தது. ஆனால் அதற்கு இது இடம் இல்லை என்று உணர்ந்தவனாய் மாறனின் தோள்களில் கையை வைத்து தேற்றியபடியே அவனை பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சன்னத்திக்கு பின்புறம் அழைத்து சென்று அமரவைத்தான், மக்கள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடம் சிரத்தை எடுத்து பார்க்க விருப்பம் உள்ளவர்களை தவிர மற்றவர் கண்களுக்கு புலப்படாத வகையில் இருந்தது. அருகருகே இருவரும் செய்வதறியாது திகைத்த படி மௌனமே உருவாய் அமர்ந்திருந்தாலும் மாறனின் கண்கள் மட்டும் ஆடி மாத காவிரி போல கண்ணீரை சொரிந்து கொண்டே இருந்தது. சில நேரம் விசும்பலோடு நிறுத்தி கொண்டவன் அவ்வப்பொழுது சிறிது தேம்பவும் செய்தான் சொக்கனால் அழாமல் இருக்கும் படி விண்ணப்பிக்கதான் முடிந்தது. ஆனால் அவனது மனம் பலவகையில் சிந்திக்க துவங்கியது.. பால்யகாலத்தில் தன்னையொத்த சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது இவன் மட்டும் தன் தந்தை மூலம் சிலம்பம் கற்று கொண்டது பிறகு பலவித போர் பயிற்சிகளில் ஈடுபட்டது. தன் பாட்டன் அருள்மொழிதேவரின் படையில் சேர்ந்து ஈழமண்டல போரில் ஈடுபட்டு வீரசுவர்க்கம் புகுந்தது. தன் தந்தை காந்தளூர் சாலை கலமறுத்த பொழுது வீரசுவர்க்கம் எய்தது, பெருந்தநாட்டு ஆணையாட்கள் படைபிரிவில் சேர்ந்தது, கடுமையான பயிற்சிகளில் ஈடு பட்டது, மாறனை கண்டது, காதல் கொண்டது,  ஆனை அடக்கியது, யசோதையின் துறவற காட்சி, என்று நானாவித காட்சிகளும் கண் முன்னர் தோன்றி தோன்றி மறைந்தது அவனுக்கு. இத்துணை சம்பவங்கள் மனக்கடலில் மூழ்கியுள்ள முத்துகளாய் இருந்தாலும் நீரின் மேற்பரப்பில் தோன்றும் நுரையை போல மாறனின் கண்ணீருக்குத்தான் அவனது சிந்தனை முதலிடம் கொடுத்தது. சொக்கன் திடமாக எதையோ முடிவெடுத்தவனாய் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்ட பொழுது மெலிதாக இருள் பரவத்துவங்கி இருந்தது. அடிக்கடி ஒன்று இரண்டு ஆட்களும் கண்களுக்கு தென்பட துவங்கி இருந்தனர். இப்படியே இருந்தால் இதற்கு முடிவுதான் என்ன? என்று மனதில் தோன்றியதாலோ என்னவோ மாறன் சொக்கனின் தோள் மீது கைவைத்து உலுக்கிய படியே பேசலானான்  

“என்ன செய்ய போகிறாய் சொக்கா.. நாம் இன்றைய இரவுக்குள் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.. நாளை நிச்சயிக்க பட்ட நிகழ்வுகள் மட்டும் நடந்தால் நான் உயிர் தறிப்பது அரிது, என்ன சொக்கா.. ஏன் அமைதியாக இருக்கிறாய் ஏற்கனவே எடுத்த முடிவில் ஏதும் மாற்றம் செய்து விட்டாயா.. என்னை தவிக்க விட போகிறாயா?”



“ச்சே.. ச்சே .. என்ன சொல்கிறாய் மாறா!! உன்னை தவிக்க விடுவதா.. வாழ்ந்தாலும் உன்னோடு வீழ்ந்தாலும் உன்னோடு என்று நான் முடிவெடுத்து பலநாட்கள் ஆகிறது” வா செல்லுவோம் என்று அவனது கைகளை பிடித்து இழுத்து கொண்டு ஆலய வளாகத்திலிருந்து வெளியேறினான் சொக்கன்.
                                   22
                       ஓவியனின் திகைப்பு

வழக்கத்தை விட அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்திருந்தது வீதிகளில், ஆற்றாமையின் வேகம் அவர்களை குடந்தை செல்லும் சாலைக்கு கொண்டு போய் சேர்த்தது, கூட்டம் கூட்டமாக வண்டிகளில் குடந்தையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த வண்ணம் இருந்த மக்களை எதிர் கொண்டபடி இருவரும் இலுப்பை தோப்புக்கு நடந்து கொண்டிருந்த பொழுது அவர்களை கடந்து சென்ற ஒரு கும்பலில் இருந்து “மாறா...!!” என்ற குரல் கேட்டு நின்றனர் இருவரும். ஓசை வந்த திசை நோக்கிய பொழுது நடுத்தர வயதையொத்த ஆண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை கண்டதும் மாறன் இயல்பாய் இருக்க முயற்சித்தவனாய் மலர்ந்த முகத்துடன் பேச்சு கொடுத்தான். “ஏதோ தெரிந்தவர் போல நாம் அங்கு நின்றால் ஏதேனும் வாயை கொடுக்க நேரிடும்” என்று உணர்ந்தவனாய் சொக்கன் அவருக்கு மெலிதாக ஒரு வணக்கத்தை போட்ட படி சிறிதுதூரம் தள்ளி போய் நின்ற பொழுது நகரின் எல்லை புறத்தில் இருக்கும் காளிதேவி சன்னதியின் நந்தவனம் புலப்பட்டது. அதில் பூத்து குலுங்கிய வண்ண வண்ண மலர்களை வாஞ்சையின்றி பார்த்த சொக்கனின் கண்களுக்கு சாலை ஓரத்திலேயே வளர்ந்திருந்த அரளி புதர் ஒன்று அகபட்டது. அதிலிருந்து கண்களை விளக்கியவன் மாறனின் பக்கம் பார்வையை செலுத்திய பொழுது அவன் அந்த புதிய மனிதரிடமிருந்து விடை பெற்று திரும்புவதும் அவரது முகத்தில் ஒரு திருப்தியின்மையும் தெரிந்தது பிறகு சொக்கன் அந்த புதரின் அருகில் சென்று சில அரளிக்காய்களை பறித்து தன் இடுப்பு வேட்டியில் பத்திர படுத்தி கொண்டான். இக்காட்சியை கண்ட மாறனுக்கும் சொக்கனின் உள்ளக்கிடக்கை விளங்கியது போலும், அவனது முகத்தில் ஒரு நிம்மதி கலை ஊடாடியது

Permalink  


பத்தாம்கால யாகபூஜை தொடங்க இருக்கும் முன்னிரவில் நகரின் முக்கிய வீதிகள் அனைத்திலும் மக்கள் வெள்ளமாய் காட்சி அளித்தது. “தன்னிலை உணராத வாலிபர்களை இத்துணை நாள் கவனிக்காமல் இருந்து விட்டோமோ, கடைசி நேரத்தில் தேடுவதால் ஏதேனும் பலன் இருக்குமா..?? இறைவா எப்படியாவது சொக்கனையும் அவனது நண்பனையும் எனது கண்களில் காட்டிவிடு என்று நினைத்தவாறே ஓவியன் நரேந்திரன் தஞ்சை வீதிகளில் தேடிகொண்டிருந்தான். பொழுது சாயும் நேரத்தில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த நரேந்திரனை சொக்கனின் நண்பன் அதிவீரன் தற்செயலாக சந்தித்த காரணமே அவன் நம் நாயகர்களை தேட வேண்டிய சூழ்நிலையானது. மூவருமே ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் வெகுநாட்கள் கழித்து தன் ஓவிய நண்பனை கண்டு மகிழ்வுடன் அளவளாவிய அதிவீரனிடம் ஒரு அவசரம் தெரிந்ததால் “என்ன வீரா!! வெகுநாட்கள் கழித்து சந்திக்கிறோம் ஏன் இந்த அவசரம்??” என்றான் நரேந்திரன்

“எனக்கும் உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்ற ஆசைதானடா.. ஆனால் அதற்கு நேரமில்லையடா.. நமது சொக்கன் இருக்கிறானே அவனிடம் ஒரு முக்கிய செய்தியை கூறவேண்டும், நானும் பிற்பகலிலிருந்து அவனை தேடுகிறேன் எங்கு சென்றான் என்று தெரியவில்லையடா...”

“அப்படியா. அப்படி என்ன செய்தியடா அவனிடம் கூறவேண்டும் ஏதுனும் அசுபமா..??” சற்றே தயக்கத்துடன் வினவிய நரேந்திரனை இடை மறித்து அசுபம் இல்லையடா.. எளிதில் கிடைக்காத பேரு ஒன்று சொக்கனுக்கு கிடைத்திருக்கிறது. இப்பொழுதுதான் அரண்மனையில் நடந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்ட தளபதியார் வந்து எங்கள் உபதளபதியிடம் அந்த செய்தியை கூறினார் என்றவன் அந்த விவரத்தையும் அவனிடம் கூறிய பொழுது உண்மையில் நரேந்திரனின் முகம் மலர்ந்தாலும் உடனே சோகமும் குடி கொண்டது.

“சரி சொக்கன் எங்கடா சென்றிருக்கிறான்?”

“அதுதான் எனக்கும் ஒன்றும் தெரியவில்லையடா.. நேற்றிலிருந்து அவன் முகமே கலையிழந்துதான் காணப்பட்டது, சரி நரேந்திரா நான் வரட்டுமா??” என்று கிளம்ப எத்தனித்தவனை தடுத்து நிறுத்தியவன்

“சொக்கனை பார்த்து விட்டாயானால் பிறகு நீ எங்கு இருப்பாய் வீரா?? உன்னை எங்கு பார்க்கலாம்.” என்று வினவினான்

“நான் அவனை பார்த்தாலும், பார்க்கவில்லை என்றாலும் யாக சாலையில்தான் இருப்பேன்” என்று கூறிவிட்டு சிட்டாய் பறந்தான் அவன்.

அதிலிருந்து சொக்கனை தேடிய ஓவியனுக்கு கூடிய பலன் கிடைக்காததால் மனதில் ஆயிரம் சிந்தனைகளை ஓடவிட்டு யாக சாலைக்கு சென்றவன் அதிவீரனை பார்த்து சொக்கனை பற்றி ஏதேனும் தகவல் உண்டா என்று விசாரித்தான்.

“தேடிபார்த்தேன் கிடைக்கவில்லை அடிக்கடி கும்பகோணம் செல்வதாய் சொல்வான், ஒருவேளை அங்குகூட சென்றிருக்கலாம் எப்படியும் இரவுக்குள் வந்துவிடுவான், நீ ஏன் அவனை தேடுகிறாய்” என்று விசாரித்தான் அவன்

“இல்லை இல்லை ஒன்றும் இல்லை!! நீ உன் வேலையை கவனி என்று அவனிடம் இருந்து விலகியவனுக்கு உடல் பட படத்ததோடு அன்று புதர் மறைவில் நின்ற பொழுது அவர்கள் பேசி கொண்டது நினைவுக்கு வந்தது. தளிகுளத்து மகாதேவரை மனதில் நினைத்தவன் “இறைவா! அப்படி ஏதும் நடந்திருக்க கூடாது” என்று மனதிற்குள் பிரார்த்தித்து அவனது இருப்பிடத்துக்கு விரைந்து வந்து சில பொருட்களை எடுத்து கொண்டு குதிரையில் ஏறி நகரின் முக்கிய வீதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் முடிந்த அளவுக்கு தேடினான். அதே சமயத்தில் நாளை திருமணம் நடக்க இருக்கும் நிலையில் மதியத்திலிருந்து மாப்பிள்ளையை காணாதபடியால் மாறனது இல்லத்து மாந்தர்களிடமும் பரபரப்பு தொற்றி கொண்டது. திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்கள் அந்த “உமாபதியின்” மீது பாரத்தை போட்டு மாறனை தேடும் பணியில் இறங்கி இருந்தனர்.

 தஞ்சை நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் சல்லடை போட்டு பார்த்து விட்ட ஓவியன் இலக்கில்லா அம்பு போல குதிரையை குடந்தை சாலைக்கு விரட்டினான். நகரத்தின் வீதிகளை கடந்ததும் ஓரளவுக்கு மக்கள் கூட்டம் குறைந்திருந்தாலும் விடிந்தால் நிகழ இருக்கும் கும்பாபிஷேகத்தை காண மக்கள் மட்டுவண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும் தஞ்சை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து காணப்பட்ட அந்த அடர்ந்த இலுப்பை தோப்பிற்கு அருகில் அவன் சென்று கொண்டிருந்த பொழுது சாலையில் இருந்து தனியாக தென்புறம் பிரிந்து செல்லும் பாதை  “இதென்ன தனியாக ஒரு பாதை!! யாருமற்று செல்கிறது?, ஓ அங்கு ஒரு அடர்ந்த தோப்பு இருக்கிறதே!!. ஒருவேளை இதற்குள் இருக்க வாய்ப்பிருக்குமா? போய் பார்க்கலாமா??” என்று விதவிதமான கேள்விகளை உண்டு பண்ணியதோடு, அந்த இருண்ட பகுதியின் அந்தகாரம் மனதில் ஒரு பீதியை உருவாக்கியது. வானத்தில் தெரியும் வளர்பிறை சந்திரனை துணைக்கு அழைத்து கொண்டு குதிரையை இலுப்பை தோப்பிற்கு செல்லும் பாதையில் செலுத்தினான். வெட்டவெளி மறைந்து நெட்டையாய் வளர்ந்த மரங்களின் அடர்த்தி அதிகரிக்கவே குதிரையின் முதுகில் இருந்த சிறிய பை ஒன்றிலிருந்து சிறிய சுளுந்து ஒன்றையும், தீ உண்டாக்கும் கற்களையும் எடுத்து கொண்டு இறங்கியவன், சந்திரனை கைவிட்டு விட்டு சுளுந்த்தின் வெளிச்சத்தை துணை கொண்டு சிறிது தூரம் நடந்த பொழுது அவன் கண்ட காட்சி அவனை அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது

                                24
                 கன்னத்தில் விழுந்த பளார்

ஆம்!! அங்கு சொக்கனும் மாறனும் சுவாதீனம் இன்றி அருகருகே கிடந்தனர். நடுக்கத்தை சமாளித்த படி அருகில் சென்ற ஓவியன், அங்கு அரளி விதை அரைக்கப்பட்ட சுவட்டுடன் ஒரு கல் கிடந்ததோடு, இருவரது வாயிலிருந்தும் ஒரு வெண்மை நிற திரவம் வழிந்தோடியிருப்பதையும் கண்டான். மூச்சு இருக்கிறதா என்று அறிய முற்பட்டு சொக்கனின் மூக்குக்கு அருகில் கையை கொண்டு சென்றவனின் புருவங்கள் இரண்டும் மேலே எழும்ப, விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது

நாடே விழாகோலம் பூண்ட நள்ளிரவு ஒன்றில் ஆளரவம் இல்லாத காட்டுப்புறமதில் உற்ற நண்பனும் அவனது உயிர் நண்பனும் பிணமாக கிடக்கும் காட்சியை கண்ட நரேந்திரனின் விழிகள் வெள்ளமாய் வழிந்தோடியது. ஒப்பற்ற வீரன் சொக்கனை இழந்தது ஒருபக்கம் வலியாக இருந்தாலும் இணையில்லா ஒரு சிற்பியை சோழநாடு இழந்தது கண்டுதான் நரேந்திரனுக்கு நெஞ்சம் பதைத்தது. பெரியகோயிலின் பிரகாரத்தில் மாறன் வடித்துள்ள நாற்றிசை காவலர் சிற்பங்களின் நேர்த்தியும் உயிரோட்டமும் கலைஞர்கள் மத்தியிலும் கலையார்வம் கொண்ட சாதரண மக்கள் வரையிலும் அவனை பெரிய அளவுக்கு பிரசித்தம் செய்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சொக்கனுடன் அடிக்கடி சேர்ந்து சுற்றுவதால் பழக்கம் இல்லாத போதிலும் ஓரளவுக்கு மாறனை பற்றி நரேந்திரனும் அறிந்து வைத்திருந்தான். சுளுந்தை கையில் பிடித்தபடியே சற்று தொலைவில் கிடக்கும் இரண்டு ஆண் சடலங்களை நோக்கி கனத்த சோகத்துடனும் எதிர்பார்ப்புடனும் சென்றபொழுது அங்கு நிலவிய குறைந்த வெளிச்சத்தில் இரண்டு முகங்களும் நிச்சலணமாய் புலப்பட்டது.

“அடப்பாவிகளா உங்கள் இருவரின் அருமையை நீங்களே அறியாமல் இப்படி மாண்டு போய்விட்டீர்களே!!” என்று எண்ணியபடியே மெலிதாக விசும்பினான். அதேகணம் அவனது உள்ளுணர்வு அவனையே குறித்து தாக்கி பேசியது “ நீ ஏன் அழுகிறாய் நீ ஒரு கையாலாகாதவன், இருவரும் தற்கொலை முடிவெடுத்த செய்தி உனக்கு தெரிந்திருந்தும் அதனை தடுக்க ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்துவிட்டாய் இன்று இரண்டு உயிர்கள் போனதற்கு முக்கிய காரணம் நீதான், சிறிதேனும் வெட்கம் இன்றி, யாரிடம் உனது துக்கத்தை வெளிப்படுத்த இந்த நீலிகண்ணீர் வடித்து கொண்டிருக்கிறாய்” துக்கம் ஒருபக்கம் தொண்டையை அடைத்த போதிலும் இம்மாதிரியான நினைவுகள் வேறு அவனை படாதபாடு படுத்தியது.

“விடிந்தால் நாடே எதிர்பார்க்கும் மகாவைபவம் நிகழ இருக்கும் நாளில்தானா இந்த மரணங்கள் நிகழ வேண்டும்? இதை எப்படி நகருக்குள் கொண்டு செல்வது என்று எண்ணி கொண்டிருந்த நேரத்தில் அவனது மனம் இவ்வாறு சிந்தித்தது: “வந்ததிலிருந்து அழுது கொண்டே இருக்கிறோமே முதலில் அவர்களுக்கு உயிர் இருக்கிறதா அல்லது உண்மையில் மாண்டு விட்டார்களா ஏதேனும் முதலுதவிக்கு வாய்ப்பு உண்டா என்று பரிசோதித்து பார்க்கலாமே”

கைவிரல்களை சொக்கனின் முகத்தருகே கொண்டு மூச்சு வருகிறதா என்று சோதித்தவனுக்கு வியப்பில் விழிகளிரண்டும் விரிந்த நிலையில் புருவங்கள் உயர்ந்ததிலிருந்து சொக்கன் மூச்சு விடுகிறான் என்று நாம் அறிந்து கொள்ள இயலும். அவசர அவசரமாக மாறனிடமும் மூச்சு வருவதை அறிந்து கொண்ட நரேந்திரன் இனி ஒருகணமும் தாமதித்தல் தகாது என்றெண்ணியவனாய் அந்த காட்டு பகுதியிலிருந்து சிறிது தொலைவில் இருந்த குடந்தை செல்லும் பிராதான சாலையை நோக்கி ஓட்டமெடுத்தான். ஏற்கனவே முன்னிரவு முடிந்து பின்னிரவு தொடங்கிவிட்டபடியால் கும்பாபிஷேகம் காண தஞ்சைக்கு செல்லும் கூட்டமும் குறைந்து கால்நாழிகைக்கு ஒரு வண்டி வீதமும் சில நேரத்தில் அதுவும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது அந்த சாலை பகுதி.

கையில் தீப்பந்தம் கூட இல்லாத நிலையில் முதலில் வந்த ஒரு கூண்டு வண்டியை மறைத்தான் ஆனால் வண்டியிலிருந்தவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை வண்டியை நிறுத்தாமல் “ஜல்” “ஜல்” என்று கடந்து விட்டனர். இவ்வாறே அடுத்ததடுத்த இரண்டு வண்டிகளும் கடந்து சென்றன.

ஆச்சர்யமாக தொடர்ந்து வந்த இரட்டை குதிரைகள்  பூட்டிய வண்டி ஒன்று இவனது கெஞ்சலான வேண்டுதல்களுக்கு செவிசாய்த்த படி நின்றது. வண்டியில் ஓட்டுனர் தவிர இரண்டு ஸ்திரீகளும் ஒரு வயதான புருஷனும் காட்சி அளித்தனர்.

இளமை துடிப்புடன் சாரதி வேலை பார்த்து கொண்டிருந்த இளைஞன் “ஏனப்பா இந்த அந்தகாரத்தில் இப்படி மறைக்கிறாய் உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான்

“தெய்வம் போல வண்டியை நிறுத்தியதற்கு நன்றிகள் கோடி அய்யா!! எனது நண்பர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருகின்றனர், பெரியமனது பண்ணி உதவ வேண்டும் உங்களது வண்டியில் அவர்களை ஏற்றி கொண்டீர்களானால் தஞ்சைக்கு கொண்டு சென்று அவர்கள் பிழைத்திருக்கும் வழியை தேடிவிடலாம், இரண்டு பேரின் உயிரை காப்பற்றிய புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும்”

உடனே ரதசாரதியான இளைஞன் வண்டியிலிருந்த அந்த வயதான புருஷரிடம் ஏதோ பேசினான், முடிந்த மட்டிலும் அமைதியாக பேசினாலும் அவனது குரல் நரேந்திரனுக்கு கேட்காமலில்லை

“தந்தையே!! இவன் ஏதோ வழிப்பறி கொள்ளைகாரன் போலிருக்கிறது, இதற்கு முன் சென்ற வண்டிகள் எதையும் இவன் மறைத்திருக்க மாட்டானா அவர்கள் யாரும் நிறுத்தாதில் இருந்தே நாம் இதனை அறிந்து கொள்ள முடியும், இருட்டு வேளையில் இப்படித்தான் ஒருவன் சோமன் குடும்பத்தை மன்னார்குடியில் நிறுத்தி உதவி கேட்டு ஒரு காட்டுக்குள் அழைத்து சென்று வழிப்பறி செய்தானாம்” என்று கூறிய பொழுது அந்த பெரியவரும் இதனை ஆமோதிப்பவராய் தலை அசைத்தார்.

முன்பு சென்ற வண்டிகள் அனைத்தும் நிறுத்தாமற் போன காரணமும் வழிப்பறி கொள்ளை பயம்தான் என்று நரேந்திரன் யூகித்திருந்த படியால் மேற்கண்ட சம்பாஷனை அவனுக்கு பெரிதாக ஒன்றும் வியப்பேற்படுத்தவில்லை.

“அய்யா!! நீங்கள் நினைப்பது வாஸ்தவம்தான், ஆனால் நான் கொள்ளைக்காரன் இல்லை விஷகண்டரான அந்த பினாகபாணியின் மீது ஆணையாக எனது நண்பர்கள் இருவர் உயிர்போகும் தருவாயில் கிடக்கின்றனர் நான் வேண்டுமானால் இங்கேயே நிற்கிறேன் நீங்கள் மட்டுமானால் போய்பார்த்து வாருங்கள்” என்று இறைஞ்சும் குரலில் வேண்டினான். இது அந்த வண்டியில் இருந்த அம்மாளுக்கு மனதை பிசைந்திருக்க வேண்டும் போலிருக்கிறது அந்த இளைஞனிடம் ஏதோ கீச்சு குரலில் கூறினாள் போல் தோன்றியது ஆனால் எவ்வளவு கூர்மையாக காதை தீட்டியிருந்தாலும் அந்த சத்தம் நரேந்திரனுக்கு எட்ட வில்லை

“சரி உங்களுக்கு நாங்கள் உதவி செய்கிறது என்று முடிவு செய்துள்ளோம் அவர்கள் எங்கு இருகின்றனர்??”

“அதோ அந்த இலுப்பை தோப்பினுள்தான் உள்ளனர்” என்று காரிருளுக்கு மை பூசியது போன்ற அந்த பகுதியை காட்டிய பொழுது வண்டியில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்,

“அய்யா!! இன்னும் என்ன தயக்கம் அந்த இருண்ட பகுதியை பார்த்து அச்சமா?? பெரியகோயிலின் தலைமை சிற்பிக்கு மிகமுக்கியமாக வேண்டப்பட்ட ஒரு சிற்பியான எனது நண்பனும் அந்த இருவரில் ஒருவன் இனியாவது வருவீர்களா?” என்று கேட்டபடி ஓவெண்று அழத்துவங்கி விட்டான் அவன்.

இனியும் பொறுக்க இயலாத அந்த பெரியவர் வண்டியிலிருந்த தன் மகள் போன்ற மற்றொரு ஸ்திரீயையும் அந்த இளைஞனையும் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு முக்கிய நகைகளை கழற்றி வைத்துவிட்டு வண்டியிலிருந்து இறங்கிய பொழுது அவரது கையில் சில தழை கட்டுகளும், ஒரு பிரம்பு கூடையும் இருந்தது. அந்த அம்மாளின் கையில் ஒரு தைலபாத்திரமும் சிறிய செப்புக்குடமும் இருந்தது. அவர்களை அழைத்து கொண்டு இருளினுள் புகுந்து மறைந்தான் நரேந்திரன்.

முதலில் ஒருவித தயக்கத்துடனே நடை போட்ட அந்த வயதான தம்பதியினர் நரேந்திரனின் அவசர ஓட்டத்தை வைத்து இவன் கூறியது உண்மைதான் போலிருக்கிறது என்று எண்ணியபடியே அவனை பின் தொடர்ந்த வண்ணம் அந்த இருவரும் என்ன காரணத்தினால் உயிருக்கு போராடுகின்றனர் என்று விசாரித்து கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு சென்று சேர்ந்த உடன் கையில் இருந்த தீப்பந்தத்தை நரேந்திரனிடம் கொடுத்துவிட்டு அந்த பெரியவர் விரைந்து செயல்பட துவங்கினார், தரையில் கிடக்கும் இருவரது மணிகட்டையும் பிடித்து நாடி சோதனை பார்த்தவரின் முகத்தில் தோன்றிய கவலை குறி குறைந்துள்ளதையும் ஏதோ ஒரு மூலிகை பெயரை அந்த அம்மாளிடம் அவர் கூறியதையும் சலனமின்றி கவனித்து கொண்டிருந்தான் நரேந்திரன். பிறகு அங்கு இறைந்து கிடக்கும் இலுப்பை குச்சிகளை  ஒன்று சேர்ந்து தீ மூட்ட துவங்கினார் அந்த பெரியவர். இதற்கிடையில் பிரம்பு கூடையில் இருந்த சிறிய கல்உரல் ஒன்றில் ஏதோ ஒரு மூலிகையை அரைத்து கொண்டிருந்தார் அந்த பெரியம்மாள்.

தான் கொண்டுவந்திருந்த ஒரு தழைகட்டிலிருந்து சிறிய வேர்துண்டை கனன்று கொண்டிருந்த நெருப்பில் அந்த பெரியவர் வீசிய பொழுது நெருப்பு அணைந்து’ அதிலிருந்து ஒரு கசந்த புகை வெளியேறியது உடனே தன்மேல் துண்டை எடுத்து புகையானது நோயாளிகளின் மீது படும்படி விசிறினார் அவர். சிறிது நேரத்தில் மெல்லிய இருமலுடன் சொக்கனும் மாறனும் அசைய துவங்கி இருந்தனர். இதற்குள் வண்டியிலிருந்து அந்த இளம்பெண்ணும் ஆணும் வந்து சேர்ந்துவிட்டனர். அந்த அம்மாள் அரைத்து கொண்டிருந்த பச்சிலையை தைல பாத்திரத்தில் இருந்த ஏதோ ஒரு திரவத்துடன் கலந்து கரைத்த இளம்பெண் அதனை பெரியவரிடம் கொடுத்தாள். அந்த இளைஞன் இருவரையும் தூக்கி பிடித்து கொள்ளவே அரை மயக்கத்தில் இருந்த இருவருக்கும்  வலுகட்டாயமாக அந்த மருந்து புகட்டப்பட்டது. மருந்து விழுங்க பட்ட உடன் குடலே புரண்டு விட்டதோ என்று தோன்றும் வண்ணம் சொக்கனும் மாறனும் குமட்டி கொண்டு வாந்தி எடுத்து ஓய்ந்தனர். பின்னர் அவர்களுக்கு செப்பு குடத்தில் இருந்த நீர் நிரம்ப பருக கொடுக்கபட்டது. நீர் பருகிய இருவரும் சோர்வாக மீண்டும் தரையில் சாய்ந்தனர்.

அதனை கண்டு பதறிய நரேந்திரனை பார்த்து அந்த பெரியவர் இவ்வாறு கூறினார்: “அப்பனே!! இனி ஐயப்பட ஒன்றும் இல்லை குமட்டல் காரணமாக சோர்வாக இருக்கின்றனர் அரை நாழிகையில் புது பொலிவுடன் எழுந்துவிடுவார்கள் இருவரும்”

உடனே கையில் இருந்த தீப்பந்தத்தை அந்த இளைங்கனிடம் கொடுத்துவிட்டு நெடுசான் கிடையாக அந்த பெரியவர் முன்பு தரையில் விழுந்து வாங்கினான் நரேந்திரன்

“அட!! என்ன பிள்ளையப்பா நீ!!! மகராஜனாய் இரு எழுந்திரு இதற்கெல்லாமா காலில் விழுவார்கள்”

“இல்லை சுவாமி புள்ளிருக்குவேளூரில் தைல பாத்திரம் தாங்கி தையல் நாயகியாய் வந்த உமையன்னை போலவும் மருந்து கட்டு தாங்கி வந்து வைத்தீச்வரனாய் காட்சி அளித்த என்னப்பன் ஈசனை போலவும் தக்க சமயத்தில் தங்களும் இந்த மாதர்குல மாணிக்கமும் வரவில்லையெனில் இவர்களை உயிரோடு பார்ப்பதே கேள்விக்குறியாக போயிருக்கும், இந்த உதவியை பிராணன் போகும் வரையில் மறக்கமாட்டேன்”

“ஒரு சாதாரண வைத்தியனை அந்த மாகா வைத்தியனுடன் ஒப்பிட்டு என்னை பாவியாக்காதே அப்பா!! உனக்கு புண்ணியம் உண்டு” என்று சிரித்த அவர் “ஆமாம்!! நீங்களெல்லாம் யார்?? இவர்கள் ஏன் இப்படி அத்துவான காட்டில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டிருகின்றனர்” என்றார்

“அய்யா!! தாங்கள் தக்க சமையத்தில் புரிந்த இந்த பேருதவி மறக்க வொன்னாததாய் இருந்தாலும் நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல இயலாத இக்கட்டில் நான் இருக்கிறேன்!! மேற்கொண்டு இது குறித்து நீங்கள் விசாரித்த போதிலும் நான் பொய்தான் சொல்ல வேண்டி இருக்கும்”

“நீ பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அப்பனே!! நாளை காலை தஞ்சைக்கு புறப்பட வேண்டியிருந்த நாங்கள் எனது மகளின் வற்புறுத்தல் காரணமாகவே இப்பொழுது புறப்பட்டு வந்தோம், ஆனால் இறைவனின் சித்தம் இரண்டு உயிர்களை காப்பாற்றும் பணி எங்களுக்கு வழங்கியிருப்பதால்தான் நாங்கள் புறப்பட்டு வந்துள்ளோம் என்று விளங்குகிறது. தெற்கு அலங்கத்தில் விரிசடையப்பர் இல்லத்தில்தான் நாளை எங்களுக்கு இருப்பிடம், முடிந்தால் நாளை இவர்களின் நலம் குறித்து எனக்கு தெரிவி அப்பனே நாங்கள் புறப்படுகிறோம் என்று தங்களது பொருட்களை எடுத்து கொண்டு புறப்பட்ட அவர்களை நன்றி பெருக்கோடு பார்த்தவன் சிறிது தூரம் அவர்களுடனே நடந்து சென்று வழி அனுப்பி விட்டு வந்த பொழுது

இருட்டினுள் நடந்தவை என்னவென்று உணர்ந்தவர்களாய் சொக்கனும் மாறனும் எழுந்து அமர்ந்திருந்தனர். யாரோ நம்மை காப்பற்றி இருக்கிறார்கள் அருகில்தான் சந்தடி கேட்கிறது நிம்மதியாக நம்மை சாகக்கூட விட மாட்டார்கள் போலிருக்கிறது என்று அழும் குரலில் பேசிகொண்டிருந்தனர் இருவரும் பேசுவதற்கு திராணியுடைய இருவருக்கும் எழுந்து நடந்து செல்லா வண்ணம் உடல் சோர்வாக இருந்தது. மருத்துவ குடுமபத்தை வழி அனுப்பிய நரேந்திரன் அவசரவசரமாக ஓடிவந்த பொழுது சொக்கன் எழுந்து நின்று

“யாரது?? ஏன் எங்களை காபந்து செய்தீர்கள் இதன் மூலம் எங்களுக்கு நீங்கள் பெரிய பரோபகாரம் செய்து விடவில்லை”” என்று கூறி கொண்டிருக்கும் பொழுதே சொக்கனின் கன்னத்தில் “பளார்” என்ற சத்தத்துடன் பலமாக ஒரு அறை விழுந்தது.

                                   25
                      நினைவு சின்னம்

அறையின் சத்தம் கீழே அமர்ந்திருந்த மாறனுக்கும் அதிர்ச்சியை கொடுக்கவே அவனும் எழுந்து நின்ற பொழுது கையில் இருந்த தீப்பந்த வெளிச்சத்தில் அறைந்தது தன் பால்ய சிநேகிதன் நரேந்திரன் என்று அறிந்து கொண்ட சொக்கன்

“வீரா நீயா எண்களை பிழைக்க வைத்தது”” என்பதற்குள்

“சீ.. வை மூடு என்ன காரியம் செய்தீர்கள் இருவரும் வெட்கமாக இல்லை உங்கள் இருவருக்கும் ஆண் பிள்ளைகளா நீங்கள்?? உங்கள் உடலில் சோழ நாட்டின் வீர குருதிதான் ஓடுகிறதா இல்லை வேறு ஏதேனும் கழிவு நீர் ஓடுகிறதா? போர்களத்தில் வீரமரணம் எய்த வேண்டிய நீ இப்படி பேடியை போல அரளிவிதையை அரைத்து குடித்திருகிறாயே இந்த அநியாயம் தகுமா??”

“வீரா எங்களது நிலைமை உனக்கு என்னவென்று புரியாது, நீதான் எனது விருப்பை அறிவாய் அல்லவா அவ்வகையில் நானும் மாறனும் மனதார விரும்புகிறோம். கடைசி வரை ஒன்று சேர்ந்து வாழ ஆசைபட்டோம். வாழவழி இல்லாத பொழுது சாவதுதானே ஒரே வழி”

“ஏன் உங்களுக்கு அப்படி என்ன குடிமுழுகி போய்விட்டது”

“மாறனுக்கு நாளை கலியாணஞ்செய்வதாய் ஏற்பாடாகியுள்ளது, அவனால் கலியாணம் செய்யவும் முடியாது, அப்படியே செய்தாலும் என்னால் அவனை பிரிந்து ஒரு கனம் கூட இருக்க இயலாது, நாங்கள் சேர்ந்து வாழ்வதென்றாலும் இந்த சமூகத்தின் பழி சொல்லுக்கு ஆளாக விரும்ப வில்லை எனவேதான் இந்த முடிவை மேற்கொண்டோம் அதையும் வந்து கெடுத்துவிட்டாயே பாவி” என்ற பொழுது தலைகுனிந்து விசித்துகொண்டிருந்த மாறனை பார்த்து பேசத்துவங்கினான் நரேந்திரன்

“ஓஹோ! நீங்கள் கெட்டுபோவது மட்டுமல்லாமல் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் சேர்த்து வீணடிக்க போகிறீர்களா, மாறா! உன் சம்மதத்துடந்தானே திருமணத்திற்கு ஏற்பாடாகியுள்ளது?”

“ஆம்..!!”

“ம்ஹஊம்.. நன்றாக இருக்கிறதடா உங்கள் காதல், காதல் என்பது வாழவைக்க வழி செய்ய வேண்டும், அது வாழவழி இல்லாத பொழுதும் தைரியத்தை ஊட்டி கொள்ள ஒருவருக்கொருவர் பயன்படுத்தும் காப்புகருவி, அதனை இப்படி உங்களையும் அழித்து அடுத்தர்வர்கள் குடியையும் கெடுக்கும் கொலைகருவியாய் ஆக்கியிருகிறீர்களே, நான் வேறொரு நபரை காதலிக்கிறேன் எனக்கு திருமணம் தேவை இல்லை என்று பிரஸ்தபிக்க இயலாத உனக்கு தற்கொலை முடிவெடுக்கும் அளவுக்கு தைரியம் எப்படி வந்தது, சுயநலம்தானே! ஒன்று நாம் வாழ வேண்டும் இல்லை என்றால் எல்லோரும் வீழ வீண்டும் அதானே உங்கள் எண்ணம், திருமணத்திற்கு முதல்நாள் இத்தகைய செயல் செய்ய துணிந்திருகிறாயே அந்த பெண்ணின் உணர்வுகளுக்கும், அவளது குடும்பத்தையும் எண்ணிபார்த்தாயா??”

“அப்படியானால் நாங்கள் காதலிப்பது குற்றமா?”

“காதலிப்பது என்றுமே குற்றம் இல்லையடா.. கொண்ட காதலுக்காக கொலைகளத்தில் கூட உறுதியாக இருக்க வேண்டும் அதுதான் உண்மை காதல், உங்களது காதலை நேரடியாக அனைவர் முன்னிலையிலும் வெளிபடுத்த வேண்டியது தானே!! என்ன செய்து விடுவார்கள்? அரச தண்டனை கிடைக்குமா? யாருக்கும் தெரியாமல் அத்துவானத்தில் உயிரைவிட முடிவெடுத்த நீங்கள் காதலுக்காக கொலைகளத்தில் உயிரை விட்டிருக்கலாமே!!! உண்மை காதலிது என்று உலகம் தன் வரலாற்று பக்கத்தில் உங்களது காதலை பொறித்து கொள்ளுமே, அதைவிட அமரத்துவம் உங்களுக்கு எப்படி வாய்க்கும்? ஏன் இதை செய்ய வில்லை தெரியுமா??வெட்கம்!! உங்களுக்கு வெட்கம் தாளவில்லையாட உலகத்தின் பழி சொல்லுக்கு அஞ்சி உயிரைவிட முனைந்து விட்டீர்கள்!! இதைவிட கேவலம் வேறுண்டா.. இதுவா உண்மை காதல் உங்கள விருப்பத்திற்காக அடுத்தவர் நலனை அழிக்கிறீர்களே இதுவா உங்கள் அன்பின் லட்சணம்”

கேள்விகளின் நியாய சூடு பொறுக்க முடியாமல் சொக்கனும் மாறனும் தகித்து போயினர், வார்த்தைகள் தொண்டை குழியிலிருந்து வெளியேற மறுத்தன.

ஆவேசத்துடன் நரேந்திரன் தொடர்ந்தான்

“சொக்கா.. நீ எதற்காக தஞ்சையில் வந்து தங்கியுள்ளாய் என்று உனக்கு நினைவு இருக்கிறதா?”

“....”

“ஏன் இந்த மௌனம்?? நம்மையொத்த நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் சாதிக்கும் பொழுது நீ போர்கைலையை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என்னவென்று மறந்து விட்டாயா?? உன் தந்தையும் பாட்டனும் சோழ நாட்டிற்காக போர்களத்தில் வீர சுவர்க்கம் புகுந்தனரே அதே வழியில் நாட்டிற்காக போராடுவதற்காகத்தானே வந்தாய்? அதற்காத்தானே இரண்டு ஆண்டுகளாக உனக்கு நட்டு மக்களின் வரி பணத்தில் போர் பயிற்சிகள் வழங்க பட்டது? அதையெல்லாம் மறுதலித்து விட்டு இன்று உன் சுயநலத்துக்காக உயிரை விடப்போகிறாயா? அவ்வளவு கோழையா நீ? ஒரு போர்மறவனுக்கு விழுப்புண் படாத நாட்கள் எல்லாம் வீணான நாட்கள் என்பதை மறந்துவிட்டாயா??” என்று காய்ந்த பயித்தஞ்சங்காயம் போல படீர் படீரென்று வெடித்த அவன்

“நாட்டிற்காக போராடவும், சோழநாட்டின் பாதுகாப்பிற்காகவும், கோணாத கோலுடைய செம்பியன் வேந்தர்களின் நலனுக்காகவும் போராடும் உன்னத வாய்ப்பு சொக்கனுக்கு வந்திருப்பது தெரியுமா மாறா உனக்கு?? என்ன விழிக்கிறாய் வடதிசை மகாதண்ட நாயக்கரான இளவரசர் இராஜேந்திரர் பெரியகோயில் குடமுழுக்கிற்காக போர்முனையில் இருந்து தஞ்சை வந்திருக்கிறார் தெரியுமா உனக்கு? அவர் விழா முடிந்ததும் பெரும் படையுடன் மீண்டும் வடதிசை பயணப்படப்போவது தெரியுமா உனக்கு? சொக்கனுடன் பயிற்சி பெற்ற அனைவரும் அந்த பெரும்படையுடன் புறப்படுவதாவது தெரியுமா? இல்லை அந்த மறவர் படையில் ஒரு குழுவுக்கு சொக்கன் உபதளபதியாய் இருந்து வழிநடத்த போகிறான் என்பதுதான் தெரியுமா??” என்று நிறுத்தினான்

உண்மையில் இத்துணை செய்திகளும் மாறன் அறியாத செய்திதான்

“என்ன? என்ன??  உபதளபதியா சொக்கனா??” அதிர்ச்சி விலகாமல் கேட்டான் மாறன்

“ஆம் தேவிமார்கள் முன்னிலையில் யானையை அடக்கினானாமே, அந்த வீரத்தினை மெச்சி காலையில் மன்னரிடம் பெரிய குந்தவை பிராட்டியார் சொக்கனை பரிந்துரைத்திருக்கிறார், அதன் பொருட்டுதான் எளிதில் எட்ட முடியாத வீரர்களின் கனவு பதவி சொக்கனுக்கு வாய்த்திருக்கிறது, உனது வீரத்தின் மீது அவர்களுக்கு எத்துனை மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருந்தால் இத்தகைய பேரு உனக்கு வாய்த்திருக்கும்அந்த நம்பிக்கையை வீணடித்து அதற்கு நான் லாயக்கற்றவன் என்று அவர்களுக்கு உணர்த்த போகிறாயா, உன் சுயநலத்துக்காக இத்தகைய வாய்ப்பை நிராகரிக்க போகிறாயா சொல் சொக்கா சொல்”

இளவரசர் வந்திருப்பதும், பெரும்படையுடன் புறப்பட போவதும் சொக்கன் அறிந்த செய்திதான் என்ற போதிலும் உபதளபதி விஷயம் புதியதுதான் அவனுக்கு. என்றாலும் நரேந்திரனின் கேள்விகள் சொக்கனிடம சலனத்தை உண்டு பண்ணியிருந்தது.

“இருவருக்கும் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன், இனியும் தற்கொலை செய்து கொண்டு, ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து உங்களோடு உங்கள காதலையும் அழித்து கொள்ள போகிறீகளா இல்லை நீங்களும் வாழ்ந்து நாட்டுக்காக உழைத்து நல்லபல கலைகளையும் வளர்த்து உங்கள் காதலை அமரத்துவம் எய்த வைக்க போகிறீர்களா என்பதை முடிவெடுத்து கொள்ளுங்கள் நான் வருகிறேன்” என்று தனது உபதேசங்களை முடித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் நரேந்திரன்; சிறிதுநேரம் சலனமின்றி நின்ற இருவரில் முதலாய் சொக்கன் பேசலானான்.

“மாறா எனக்கு உபதளபதி பதவியும் வேண்டாம், நாட்டு மக்களும் வேண்டாம், போர்களமும் வேண்டாம், உனது மகிழ்ச்சியே வேண்டும், வா உன்விருப்ப படியே இறந்து போகலாம்”  என்ற படியே அங்கு சிதறி கிடந்த அரளி விதைகளை மீண்டும் எடுத்து அரைக்க ஆயத்தமானான். உடனே அதனை தட்டிவிட்ட மாறன் சொக்கனை கட்டி கொண்டு ஓவென்று குரலெடுத்து அழத்துவங்கவே சொக்கனும் பரஸ்பரம் கட்டி கொண்டு அழுதான்.

“சொக்கா நீ அழக்கூடாது உனக்காக போர்களம் காத்திருக்கிறது, இந்த அர்பனுக்காக நீ உன் உயிரை விடலாகாது, நீ புறப்படு போர்களத்துக்கு”

“வேண்டாம் மாறா போர்களத்தில் இருந்து நான் திரும்புவேன் என்பது நிச்சயம் இல்லாத ஒன்று, எனக்காக நீ காத்திருப்பது அபத்தமாகி விடும் நாம் முடிவெடுத்த படியே செய்வதுதான் நலம், நீ காத்திருக்கிறாய் என்பதற்காக உயிருடன் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னால் உண்மையாக போரிட முடியாது எனவேதான் சொல்லுகிறேன் வா அரளிவிதை நமக்காக காத்திருக்கிறது”

“நில் சொக்கா நான் முடிவெடுத்துவிட்டேன் நம்முடைய காதலுக்காக நாட்டின் நலத்தை இழக்க நான் விரும்ப வில்லை, அதோடு ஒரு பெண்ணின் வாழ்க்கையும் என்னால் பறிபோவதை தடுக்க விரும்புகிறேன், நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் இனியும் உனக்கு வேண்டாம், நான் வடிவழகியை மணந்து கொள்ள போகிறேன் நீ எண்ணை பற்றிய எண்ணங்களை விடுத்து படையுடன் புறப்படு, நாம் சேரவில்லை என்றால் என்ன? நம்காதல் நாம் வாழும் வரை வாழும்  அது போதும்”

“என்ன மாறா தெரிந்துதான் சொல்கிறாயா?? இன்னொருவரை மனமார விரும்பி விட்டு வடிவழகியுடன் எல்லா விதத்திலும் உன்னால் மகிழ்ச்சியாக வாழமுடியுமா, நம் காதலை நினைத்து நீ உருகி உருகி அவளது மகிழ்வையும் போக்கி விடுவாய் வேண்டாம் மாறா, நான் போர்களத்திற்கு போனாலும் நிம்மதியாக உலகை துறந்துவிட ஆயிரம் வழி இருக்கிறது, ஆனால் நீ வாழ்க்கை முழுவதும் எண்ணி எண்ணி எங்க வேண்டி இருக்கும்”

“என்னை பற்றி நீ கவலை கொள்ள தேவை இல்லை சொக்கா நீ நாட்டை பற்றி கவலைப்பட பிறந்தவன், உனக்கு என்னை பற்றியோ நம் காதலை பற்றியோ நினைக்க தேவை இல்லை!! இதோ உனக்கு சத்தியம் செய்கிறேன், எனக்கு மனம் ஒப்பவில்லை என்றாலும் அந்த பெண்ணின் மனதிற்காக அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன், முடிந்த மட்டும் அவளை என் சொக்கனாக எண்ணி கொண்டு இல்லறம் நடத்துவேன், தற்கொலை என்ற பதத்தை கனவிலும் என்ன மாட்டேன், எனது குறிக்கோள் இதுதான்!! என் காதல் வாழவேண்டும் என் காதலன் என்னை பற்றிய நினைவுகள் இன்றி வெற்றி வாகை சூட வேண்டும், இன்னும் பல போர்களில் பங்கேற்று பார் போற்றும் புகழடைய வேண்டும். அதனை காதால் கேட்கும் பொழுது அந்த இன்பத்தேன் என் வாழ்வில் உள்ள துன்பத்தை எல்லாம் விளக்க வேண்டும்” என்று கூறிய படியே கதறி அழுத மாறன் ஏற்கனவே கதறி கொண்டிருக்கும் சொக்கனை இறுக கட்டி கொண்டான்

 “நானும் சத்தியம் செய்கிறேன் மாறா என் நெஞ்சில் இருந்து இமை பொழுதும் உனது நினைவுகள் நீங்காது, ஒருவேளை போர்களத்தில் இருந்து மீண்டு வந்தாலும் திருமணம் என்பது என் வாழ்வில் இல்லை உயிர் விடும் நாள் வரை என் மாறனின் நினைவுதான் எனக்கு உத்வேகம் அளிக்கும் மனையாள், இது சத்தியம்”

அவர்களுடைய முதல் இரவை இன்பமாய் ஆக்கி அளித்த அதே இலுப்பை தோப்பு அவர்களுடைய கடைசி இரவை சிறிது சிறிதாக நழுவ விட்டு கொண்டிருதது, இலுப்பை சருகுகளுக்கிடையே கட்டி தழுவிய படி படுத்து கிடந்தவர்களின் காதுகளில் அரண்மனையில் இருந்து மூன்றாம் ஜாமத்திற்கான மணி ஒலிப்பது கேட்டது. எழுந்து நடக்க துவங்கிய இருவரும் கைகளை இருக்க பற்றியபடியே ஊர் எல்லை வரை நடந்து பிறகு வெவ்வேறு வழியில் மீளாத்துயருடன் பிரிந்து அவரவர் இருப்பிடம் செல்ல துவங்கினர், தெரு திரும்பும் வரை திரும்பி திரும்பி பார்த்து கொண்டனர் அவர்களது கண்களில் கண்ணீர் இப்பொழுது இல்லை அது சற்று நேரம் ஓய்வெடுத்து கொள்ளட்டும் பாவம் இனி காலம் முழுவதும் அதற்கு வேலை இருக்கும்.

அன்றைய நாளின் பிற்பகலில் பெருவிழாவிற்கு வந்திருந்த இளவரசரை வழி அனுப்ப வந்திருந்த அரசரின் கையில் இருந்து புலிக்கொடி அசைந்த உடன் தயாராக நின்றிருந்த பெரும்படை தஞ்சையில் இருந்து புறப்பட்டது. காலாட்படை, குதிரைப்படை, தேர்படை, யானைப்படை என்று அணிவகுத்திருந்த பெருங்கூட்டத்தின் மத்தியில் இருந்து தஞ்சை நகரை நோக்கிய சொக்கனுக்கு தங்கத்தகடு போர்த்த பட்ட பெரியகோயில் கோபுரத்தின் மீது பொற்கலசம் தர்ப்பைகட்டு பட்டுத்துணி சகிதம் பளிச்சிடுவது புலப்பட்டது.

அதோடு மாறன் சொக்கனுக்காக எழுப்பிதந்த காதல் சிற்பத்தினை தாங்கிய முதல் திருவாயிலும் தெரிந்தது, அது சென்று வா!! சென்று வா!! உங்கள் காதலுக்கு என்றும் அழியாத சாட்சியாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நான் நிலைத்து நிற்பேன் என்று கூறுவது போல இருந்தது


உளியின் ஓசை நிறைந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..