பக்கங்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2013

மச்சகாரன் - கதை .......





பாலத்தின் நடுபகுதிக்கு வந்ததும் வண்டியை நிறுத்த சொல்லி சரணின் தோள் மீது கை வைத்து அழுத்திய படி இறங்கி கைப்பிடி சுவற்றிற்கு அருகில் ஓடினான் கார்த்தி. அங்கிருந்து பார்க்கும் பொழுது நீலத்திரை கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் நாகை மீன்பிடி துறைமுகமும், அங்கு அழகுற வரிசை படுத்தி நிற்க வைக்க பட்டிருக்கும் விசைப்படகுகளும் கண்ணுக்கு விருந்து வைத்தன. வங்ககடலில் புயல் மையம் கொண்டிருக்கும் நாட்களில் அதிகம் தொலைகாட்சிகளில் காட்டப்படும் அல்லது அதிகம் பேசப்படும் நாகை அக்கரைபேட்டையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் நின்று கொண்டு தான் கடலின் கவின்மிகு காட்சியை பார்த்து கொண்டிருக்கிறான் கார்த்தி.
 நம் வாழ்க்கையில் எத்தனை முறை பார்த்ததாலும் அலுக்காத சில விஷயங்களில் கடலுக்கு என்றுமே முதலிடம் உண்டு. அதுவும் மேற்சொன்ன பாலத்தின் மீது நின்றுகொண்டு பார்க்கும் பொழுது மனதை பறிகொடுக்காதவர் இருந்தால் அவர்களுக்கு அடிபடையில் எதோ ஒரு கோளாறு இருப்பது உறுதி.
 “இந்த இடத்துல நின்னு இதோட லட்சித்தி ஒருதடவையாவது இதேமாதிரி பாத்திருப்ப அப்டி என்னதான் இருக்கோ” என்று தன் ஆசை காதலனை செல்லமாக கடிந்து கொண்டபடி வண்டியை நிறுத்தி விட்டு அருகில் வந்தான் சரண்.
“சும்மாவா சொன்னாங்க முத்தத்துல காவேரி முழுவ மாட்டா மூதேவின்னு” எதுமே நமக்கு ரொம்ப கிட்ட இருந்தா அதோட மதிப்பே தெரியாதுடா........... எப்பவாவது பாக்குரவங்களுக்குதான் அதோட மதிப்பு தெரியும் என்று சரணை பார்த்து கூறி விட்டு மீண்டும் ரசிக்க தொடங்கிவிட்டான் கார்த்தி.
கரையில் நின்று ரசிப்பவர்களுக்கு பலவித ஆச்சர்யங்களை கொடுக்கும் கடல், நித்தம் நித்தம் பலவித இன்னல்களுக்கு இடையில் சான் வயிற்றிற்காக ஊன் உறக்கம் இன்றி உழைக்கும் மீனவர்களுக்கு அதே ஆச்சர்யங்களை தருவதில்லை. எனவே அத்தகைய மீனவர்களில் ஒருவனான சரணுக்கு மேற்குறிப்பிட்ட காட்சி ஆச்சர்ய படுத்தாததில் எந்த வித வியப்பும் இல்லை.
சரி….. காதல் பறவைகள் இரண்டும் கடலின் அழகை ரசித்து முடிப்பதற்குள் இவர்களை பற்றிய சிறு விளக்கத்தை கொடுத்து விடுகிறேன்.
நாகபட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பணியில் இருக்கும் கார்த்தியின் தந்தை கரூரில் இருந்து  ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாற்றலாகி இங்கு வந்து ஆறுமாதங்களாகி விட்டது. பொறியியல் பட்ட தாரியான கார்த்திக்கு அவன் வேலை பார்த்த உர தொழிற்சாலை சூழல் ஒத்து கொள்ளாததால் அந்த வேலைக்கு முழுக்கு போட்ட தருணத்தில் தான் மேற்சொன்ன மாற்றல் அரங்கேறியதால் கார்த்தியும்  தாய் தந்தையரோடு நாகை வந்து தங்கும் சூழல் உருவாயிற்று. அமைதியான,அழகான கரூரிலிருந்து புதிதாக குடிவந்திருக்கும் நாகை கொஞ்சம் கூட மனதை கவரும் வகையில் இல்லை என்றும் வெளியில் செல்ல துணையாக நண்பர்கள் இல்லாததாலும் வந்த புதிதில் எங்குமே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கொண்டு முகநூல் மூலம் நண்பர்களுடன் உரையாடி கொண்டும் வேலை தேடி கொண்டும் இருப்பான் கார்த்தி. எங்காவது வெளிமாநிலத்தில் சென்று தங்கி அங்கேய பணியாற்ற வேண்டும் என்பதுதான் கார்த்தியின் கனவு  அதற்காக இணையத்தின் மூலமாக அனைத்து பகீரத பிரயத்தனங்களையும் மேற்கொண்டும் இருந்தான்.
பெரும்பாலும் அசைவத்தை விரும்பாத கார்த்தியின் வீட்டிற்கு வேளாங்கண்ணிக்கு நேர்த்திகடன் நிறைவேற்ற சென்ற கார்த்தியின் அத்தை குடும்பம் ஒருநாள் தங்கும்  முடிவுடன் திடீரென்று வந்ததது. அன்று மனுநீதி நாள் என்பதால்
“அம்மா என்ன கேக்குறாலோ கிட்டருந்து வாங்கி குடு தம்பி.......”  என் தங்கச்சி நல்லா சாப்ட்டு போகட்டும்
 என்று கூறி விட்டு எப்போதும் செல்லும் நேரத்தை விட முன்கூட்டியே சென்றுவிட்டார் கார்த்தியின் தந்தை. அத்தை மகள் ஸ்ரீவதிக்குதான் கார்த்தியை மனம் முடிக்க வேண்டும் என்று அரசல் புரசலாக பேசி கொள்ளுவதாலும் அதையே சாக்காக வைத்து அவள் அடிக்கடி இவனிடம் வழிவதும் கார்த்திக்கு பிடிக்காத ஒன்று. அதனாலேயே பெரும்பாலும் இவர்களின் வருகையை விரும்பாதவன், தாயின் நச்சரிப்பின் காரணமாக நாம் தொடக்கத்தில் பார்த்த மீன் பிடி துறைமுகத்துக்கு மீன் வாங்க சென்ற பொழுதுதான் முதன் முதலாக சரணை பார்த்தான்.
ஏன் மீன் வாங்க நேராக அங்குதான் செல்ல வேண்டுமா,,,? கடைதெருவில் வாங்க முடியாதா,,,,,,? என்று நீங்கள் கேக்கலாம். கார்த்தியின் தாய்க்கு கிடைத்த புது நட்பான பக்கத்து வீட்டு பத்மாதான்
“நாம நேரா அக்கரபேட்டக்கி போன கொஞ்ச விலையிலேயே நெறைய மீன் வாங்கலாம். எங்கூட்டு காரர்லாம் அங்கதான் போய் வாங்குவார்’” என்று ஆலோசனை வழங்கியவள். ஆனால் அவள் கூறியது போல அங்கு மீன் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை கார்த்திக்கு.
நேரம் காலை எட்டுமணி என்பதால் அதிகாலையிலேயே நாட்டு படகுகளில் சென்ற மீனவர்கள் அபோழுதுதான் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாட்டு படகிலும் படகுக்கு சொந்தகார மீனவர் ஒருவரும் கூலிக்கு பணியாற்றும் ஐந்தாறு மீனவர்களும் கடலுக்குள் செல்லுவது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இன்று அதிக பாடு விழுந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் கூடிய ஆரவரங்களுக்கு இடையே ஒரே சத்தமாகவும் ஏராளமான கூடை சுமந்த பெண்களுடனும், வியாபாரிகளுடனும் காட்சி அளித்தது அந்த இடம்.  
கடற்கரையோரம் வலையில் சிக்கியிருக்கும் மீன்களை மீனவர்கள் தரம்பிரித்து கொண்டிருந்தனர். தரம் பிரித்த மீன்களை தங்கள் வீட்டு பெண்மணிகள் இருக்கும் இடத்தில் வந்து கொட்ட, தொடர்ந்து அந்த பெண்கள் துள்ளுகெண்ட ஏறனறூ... எரநூறு....., பார நானுறு..... நானுறு...... கோலா கூட நூறு..... நூறு......... என்று வகை வகையாக ஏலம் போட.... வாங்க வந்த பெண்கள் கூடைகளுடன் ஏலம் எடுத்து கொண்டு இருந்தனர். அந்த பரபரப்பான சூழலில் யாரிடம் மீன் வாங்குவது?, யாரை பார்ப்பது? என்று குழம்பி தவித்த கார்த்திக்கு பிறகுதான்  மீன் வாங்க வந்திருக்கும் பெண்களுக்கு தெரிந்தவர்கள் மட்டும் அங்கு மலிவு விலையில் மீன் வாங்கி கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அப்படி யாரையும் இவனுக்கு தெரியாதால் தவித்து போய் நின்ற பொழுதுதான் அருகில் நிற்கும் ஒரு பெண்கள் கூட்டத்தில் மீன்களை கூடையில் சுமது  வந்து கொட்டினான் சரண்.
காசை கொடுத்து காய்ந்து காய்ந்து கட்டுடல் மேனிக்காக உடற்பயிற்சி நிலையத்தில் தவம் கிடக்கும் இன்றைய இளைஞர்களை போலல்லாமல் உழைத்து உழைத்து உரமேறி கிடந்தது சரணின் உடல். அவன் அகன்ற தோளும் விரிந்த மார்பும், முறுக்கேறி புடைத்து நிற்கும் நரம்புகளை தாங்கிய கரங்களும், கறுத்த நிறமும், கடைந்தெடுத்த முகமும், கார்த்தியை கவரவே வந்த வேலையை மறந்து சரனை சைட் அடிக்க தொடங்கி விட்டான் கார்த்தி.
மேலுமிரண்டு முறை சென்று வந்து மீன்களை கொட்டியபின் கீழே அமர்ந்து நல்ல மீன்களை தரம் பிரித்த கொண்டிருந்த சரணுக்கு சிறிது நேரம் கழித்ததுதான் தெரிந்தது அவனை ஒருவன் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பது. “பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல முதல் பார்வையிலேயே கார்த்தியை புரிந்து கொண்ட சரன், தொடர்ந்த பார்வை படலங்களுக்கு முற்று புள்ளி வைத்து, அவன் பையுடன் வந்திருப்பது மீன் வாங்கதான் என்பதை அறிந்தவனாய் மெல்ல சென்று பேச்சு கொடுத்தான். பின் அவனுக்காக மலிவு விலையில் மீன் கொடுத்தான், பின் கைபேசி எண் கொடுத்தான் அவன் சென்ற பின் அவனிடம் அவன் மனதையும் கொடுத்தான். காற்று வாங்க போனவன் கவிதை  வாங்கியதை போல மீன் வாங்க போன கார்த்தி ஆங்கொரு ஆண் வாங்கி வந்து விட்டான்.
. தொடர்ந்த பல பேச்சுகளும், மறைமுக உறவுகளும், அவர்களுக்கு இடையே காதலை வளர்க்க, நண்பர்கள் என்ற போர்வையில் அவர்கள் காதலிக்க ஆரம்பித்து இன்றோடு ஐந்து மாதம் ஓடிவிட்டது. இந்த ஐந்து மாத காலத்தில் சரணுக்கு கார்த்தியை பிடித்ததை விட சரணின் தங்கை ஈஸ்வரிக்குதான் கார்த்தியை மிகவும் பிடித்து விட்டது. எப்போது பார்த்தாலும் கார்த்திண்ணா.........!!. கார்த்திண்ணா..........!! என்று அவள் உரிமையுடன் அழைப்பது இவனுக்கும் பிடிக்கும்.
வாழ்வளிக்கும் கடல் மாதாவே சாவளிக்கும் சவக்குழியாய் மாறி  சுனாமி என்ற பெயர் தாங்கி கடலோர மக்களை காவு வாங்கிய பொழுது சரணும் ஈஸ்வரியும்தான் அவர்கள் குடும்பத்தில் தப்பித்தனர். உலகில் தாய்ப்பாசத்திற்கு இணையான பாசம் தங்கை பாசம். சரணின் மீது உயிரையே வைத்திருக்கும் ஈஸ்வரி தனக்கு இணையாக தன் அண்ணன் மீது கார்த்தியும் பாசம் காட்டுவதால் தான் கார்த்தியையும் ஓரு அண்ணனாக ஏற்று கொண்டிருந்தாள். கடந்த ஒரு மாதமாக அமலில் இருக்கும் தடைக்கால மறியலால் சரண் அதிகம் பாடுக்கு செல்லமல்  கார்த்தியுடன் சுற்றி வருகிறான்.
 தற்பொழுது மீன்கள் இனபெருக்க காலம் என்பதால் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிப்பதற்கு நாற்பத்தி ஐந்து நாட்கள் அரசு தடை விதித்துள்ளது. இந்நாட்களில் விசைப்படகுகளை பழுது பார்க்கவும், புது வர்ணம் தீட்டவும் பயன்படுத்தி கொள்வர் அதனதன் உரிமையாளர்கள். புதிதாக விசைப்படகு கட்டி கொண்டிருப்பவர்கள் தடைகாலம் முடியும் போது கடலில் படகை இறக்கிவிடும் முடிவோடு முனைப்பாக செயல்படுவர். விசைப்படகில் ஊதியதிற்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலை கட்டுவது, வலைக்கு செல்வதுமாக (நாட்டு படகில் மீன்பிடிக்க செல்வது) இருப்பர், வெல்டிங் தெரிந்தவர்கள் படகு கட்டும் சாலைகளுக்கு சென்று வேலை பார்ப்பதும் உண்டு. வியப்படைய வேண்டாம்!!, இன்றைய மீனவர்களில் முக்கால்வாசி இளைஞர்கள் டிப்ளமா அல்லது ஐடிஐ முடித்தவர்கள்தான்.  வருமானம் மிகையாக கிடைப்பதால் வேறுவேலைகளுக்கு செல்லாமல் கடலில் பாடுக்கு செல்கின்றனர். வேறு வேலைகளுக்கு செல்வோரும் உண்டு. ஏன்? நமது சரண் கூட மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தவன்தான்.
சரி பாலத்தின் மீது நிற்கும் காதலர்கள் எதோ பேசிகொள்வது போல் தெரிகிறது வாருங்கள் என்னவென்று பார்ப்போம்.!
“பாத்தது போதும் சீக்கிரம் கெளம்பு வயிறு வேற பசிக்குது, ஈசு உனக்கு புடிச்ச வட்லாப்பம் செஞ்சி வெச்சிருக்கணு போன் பன்னுணுது
என்று துரித படுத்திய சரணின்  கைபேசி அழைத்தது. எடுத்துபார்த்த பொழுது திரையில் ராஜ், காலிங் என்று ஒளிர்ந்ததால். அதுவரை சரணின் கைகளை தழுவி கொண்டிருந்த செல்போன் இப்போழுது அவனது காதை தழுவி கொண்டது.
  “ ஹலோ...... சொல்லு மச்சான்......”
“ எங்கடா இருக்க முக்கியமான விஷயம் பேசனும்டா”
“ம்ம்ம்..... இங்கதாண்டா பாலத்துகிட்ட இருக்கோம் நானும் கார்த்தியும் ஏன்டா என்ன விஷயம்”
“இல்ல மச்சான் ஒரு ஹெல்ப் பண்ணனும்டா........ உன்னால முடியுமா தெரியல.....!!!!”
“சொல்லாம எப்டிடா தெரியும் சொல்லு முடிஞ்சா செய்யிறன். அத்த எப்டிடா இருக்கு.?“
“ம்ம் நல்லாருக்குடா........ ரெண்டு வாரமா அதுக்கு ஆஸ்பத்திரி செலவு அது இதுன்னு ஒன்றலட்சம் கிட்ட தட்ட செல்வாயிட்டுடா..... இப்ப போட்டுக்கு ராடார், நோய்சர் (ஆமைக்கூட்டங்கள் வலையில் சிக்கி விடாமல் விரட்டும் சாதனம்) வக்கிறது, வயரிங் செலவுன்னு பாக்கி வேலக்கி சுத்தமா காசு இல்லடா..... மறியல் முடிஞ்சதும் போட்ட ஏறக்குறது கஷ்டம் போல இருக்குடா........ அதான் உனக்கு தெரிஞ்ச இடத்துல எங்கியாவுது ஒரு ரெண்டு லட்சம் பொரட்டி குடுக்கமுடியுமா......னு கேக்கலாம்னு........?!!!!”
 “நான் எங்கடா பொரட்டுறது? என்று சற்று யோசித்தவன் சரிடா.......... ஈசு கல்யாண செலவுக்குன்னு ஒரு அஞ்சு லட்சம் பேங்க் ல போட்டு வெச்சிருக்கன். அதுல வேணா எடுத்து தரன்டா..... உன்னால முடியிரப்ப குடு போதும்.” என்று இன்னும் சிறிது நேரத்தில் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான்.
தன்காதலனின் பேச்சை வைத்தே ஒருவாறு கணித்த கார்த்தி
“யாரு தங்கம்!!........ராஜியா.......? என்று சரியாக கேட்டான்
“ஆமாண்டா........ போட்டு செலவுக்கு பணம் வேணுமாம் அதான்......... நாளைக்கு பேங்க்ல போய் எடுத்துகுடுக்கணும்”
“கல்யாணத்துக்குனு வெச்சிருக்குற பணத்த யோசிக்காம குடுக்குறியே.... ஒரு வேளை சமயத்துல அவன் தருலனா என்னடா.....பண்னுவ?
ஆமா இப்ப என்ன நாளா வெச்சிருக்கு அடுத்த வருஷம் தானடா....... கல்யாண பேச்சே தொடங்கணும். அபடியே அவன் தரலைனா நான் என்ன செத்த போ போறான் அதுக்குள்ள சம்பாரிச்சிட மாட்டனா.....? என்று கேட்டவனின் கன்னத்தில் பொளேரென ஒரு அறை விழுந்தது.
கையை உதறி கொண்டே
“உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புத்தியே வராதா..? என்ன டென்ஷன் ஆக்கி பாக்கலைனா உனக்கு தூக்கம் வராதா.......?”
 என்று கூறி விட்டு கோபத்துடன் நடையை கட்ட ஆரம்பித்து விட்டான் கார்த்தி. கார்த்தியை அடிக்கடி இப்படித்தான் உசுப்பேத்தி ரசிப்பான் சரண். இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை மூண்டுவிடும். சரி இவனுங்க இப்ப சமாதானம் ஆக இன்னும் கொஞ்சம்நேரம் ஆகும். அதுக்குள்ள போனவாரம் இதே காரணத்தால் நடந்த ஒரு சிறு சண்டையை பற்றி கூறிவிடுகிறேன்.
சற்று முன்பு போனில் பேசினானே ராஜ் அவன் சரணின் நண்பன், தனது தந்தை காலத்தில் சொந்தமாக ஐந்தாறு விசைப்படகு வைத்திருந்த குடும்பம். ஆழிப்பேரலையின் போது அந்த படகுகள் எல்லாம் சிதைந்து விட்டது. அந்த கவலையிலேயே அவனது தந்தையும் போய் சேர்ந்து விட்டார். நன்றாக வாழ்ந்த குடும்பம் அன்றாட வாழ்விற்கே அல்லாடிய பொழுதுதான் சொந்தமாக விசைப்படகு கட்டுவது என்ற குறிக்கோளுடன் சிறுக சிறுக பணம் சேர்த்து லட்ச கணக்கில் செலவு செய்து படகு கட்டி வருகிறான் இன்னும் இரண்டு வாரத்தில் கட்டுமானம் முடிந்து கடலை முதல் முறை பார்க்க இருக்கிறது அந்த புதிய படகு. இந்நிலையில் சென்றவாரம் ஏற்கனவே நீரிழிவால்  பாதிக்க பட்டிருந்த ராஜின் தாயாருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் அறுவை சிகிச்சைக்காக அப்போலோ வில்  அனுமதிக்க பட்டிருந்தார். அவரை காணும் சாக்கில் சரனும் கார்த்தியும் சென்னைக்கு சென்று அறை எடுத்து தங்கி நன்றாக ஊர் சுற்றி பார்த்து  காதலாகி கசிந்துருகி உரையாடி கொண்டிருக்கும் பொழுது
    “கார்த்தி என்ன ஏன்டா நீ இவ்ளோ லவ் பண்ற.......? நான் திடீர்னு உன்ன விட்டுட்டு போய்ட்டா.........? என்னடா பண்ணுவ,..........?”
என்று கேட்டான் சரண்.
“இப்புடி மொட்டயா கேட்டா எப்புடி....? விட்டுட்டு எங்க போவ......? என்னய ஏமாத்திட்டு வேற எதாவது ஜிகிடிய கூட்டிகிட்டு ஓடிடுவியா......?”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி அப்டிதான் வச்சுகியேன்.....”
“ஓத வாங்க போறான் பாரு ஒருத்தன்....!!! அப்டியே நீ ஓடுனாலும் என்ன தவிர வேற ஒருத்தனும் உன்னைய ரெண்டு நாளுக்கு மேல வெச்சுக்க மாட்டான்”  நக்கலாக சொல்லிவிட்டு சிரித்தான் கார்த்தி.
“சரி அப்ப அதுவேணாம், நான் செத்து போயிட்டா என்ன பண்ணுவ......?”
இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி அருகில் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து உள்ளங்கையில் சரேலென கிழித்தான்..... ரத்தம் அதிலிருந்து பீறிட்டு கிளம்பியது.ரத்தம் வழிய வழிய வலியால் துடித்த படி இப்புடி கிழிச்சுகிட்டு செத்துடுவண்டா....? நீ இல்லாத என் வாழ்க்கைய என்னால நெனச்சு கூட பாக்க முடியாதுடா.. என்று கண்ணீர் மல்க கூறி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
.அதன் பின் அவனை நாகை வருவதற்குள் சமாதன படுத்தவே சரணுக்கு நேரம் போத வில்லை. விளையாட்டாக கேக்க போய் வினையாக முடிந்ததை எண்ணி சரணுக்கு வருத்தம் என்றாலும் தன் மீது உயிரையே வைத்திருக்கும் கார்த்தியை எண்ணி பெருமையாக இருந்தது.
எவ்வளவு கோபமிருந்தாலும் சரண் தனது இரும்பு கரம் கொண்டு கார்த்தியின் இடுப்பை அணைத்தால் அதில் சொக்கி அனைத்தையும் மறந்து விடுவான் கார்த்தி. இதேபோன்ற நிகழ்வொன்றை நாம் பேசிகொண்டிருக்கும் இவ்வேளையில் நமக்கு தெரியாமல் சரண் நடத்திவிட்டதால் இருவரும் சமாதனம் ஆகி வண்டியில் ஏறி படகு கட்டும் தளத்திற்கு விரைந்தனர்.
 தடைக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கார்த்தியின் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது... அதனை வாங்கி பார்த்த கார்த்தியின் தந்தைக்கு முகமெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சியில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எறிந்தன.......!!! ஆனால் தற்பொழுது கார்த்தியும் சரணும் படகு கட்டும் தளத்தில் ராஜ்குமார் அக்கரைபேட்டை என்று தேசியக்கொடி போன்று மூவர்ணத்தில் எழுதப்பட்ட ராஜின் புதியபடகின் அருகில் நின்று கொண்டு எதையோ படு தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்தனர் அதில் ராஜ் யின் முகம் மட்டும் சற்று கவலையுடன் இருந்தது.
“இதுக்கு போய் ஏண்டா வருத்த படுற...... ரெண்டுநாள்தான....!!! “ என்று கேட்டான் சரண்.
“அப்புறம் என்னடா பண்ண சொல்லுற.. இவ்ளோ நாளா கஷ்ட்ட பட்டு கடன உடன வாங்கி போட்ட கட்டுனா...... கடல்ல இறங்குற நாள்ல போய் எவ்ளோ பிரச்சன இருக்குறப்ப டீசல் விலையேறுனதுக்காக ஸ்ட்ரைக் பண்ண போறங்குரானுகளே இது நியாயமாடா......?” என்றான் ராஜ்.
“அப்புறம் என்னடா பண்ண சொல்லுற....? இதுமாதிரி எதாவது பண்ணத்தான் நம்ம கவர்மெண்ட்க்கு புரியும் இதுவும் நல்லதுதான்னு நெனச்சிக்க.” இது கார்த்தி.
“இல்ல கார்த்தி... இந்த ஸ்ட்ரைக்லாம் வேலைக்கு ஆவாதுடா......போட்டுக்கு போறவன் வேலைநிறுத்தம் பண்ணுனா....... வலைக்கு போறவன் (நாட்டு படகு மூலம் மீன் பிடிக்க செல்வது) புடிக்கிற மீன் கெடைகிறதால நம்மளோட ஸ்ட்ரைக் தடம் தெரியாம போய்டுது. இதுக்காக தீர்வு கெடைக்கிற வரைக்கும் வலைக்கு போவாம இருந்தா வயித்துக்கு என்ன பண்றது....? எல்லா போராட்டத்தையும் ஒருங்கினைக்கிறதுக்கு ஒரு ஆள் இல்லைனா எல்லாம் வீண் வேலைதான்....... எங்க பிரச்சனைக்காக போரடுறதுக்காக ஒரு தலைவர்னு யாருமே கெடயாது, அதுமாதிரி யாராவது இருந்து எல்லா மீனவர்களையும் இணைச்சு போரடுனாதான் டீசல் பிரச்சனயிலேருந்து, சிலோன்காரண்ட்ட அடிவாங்குறது வரைக்கும் தீர்வு கெடைக்கும்” மடைதிறந்த வெள்ளம்போல பேசிய தன் காதலனின் சமூக விழிப்புணர்வு வார்த்தைகள் கேட்டு பெருமித பட்டான் கார்த்தி.
“சரி மாமா..... நாளன்னைக்கு போட் மொத வலைக்கு போவும்போது நீயும் வேலைக்கு வரணும் நீ இருந்தா எனக்கு எல்லாமே நல்லதா நடக்கும்டா என்று சரணை பார்த்து ராஜ் கூறும் போது கார்த்தியின் செல்போன் ஒலித்தது.
“சொல்லுங்கப்பா.......”
“கார்த்தி எங்கருந்தாலும் உடனே வீட்டுக்கு வாடா...ஒரு சந்தோசமான விஷயம் காத்திருக்கு.” என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்தார் அவர்
வீட்டிற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த கார்த்தியிடம் மேற்சொன்ன கடிதம் தரப்பட்டது. பிரித்து படித்தான்.
அவன் எப்பொழுதோ எழுதிய ரயில்வே தேர்வில் வென்று விட்டதாகவும் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் அகமதாபாத்தில் பணியேற்க வேண்டும் என்று கடிதம் வழங்கிய செய்தி கார்த்தியின் தலையில் இடியாக இறங்கியது.
தாய் தந்தையருக்காக பொய்யாக மகிழ்ச்சி காட்டி உடனே சரணை காண புறபட்டான் கார்த்தி.
கடிதத்தை சரணிடம் காட்டிவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் கார்த்தி.
“ஹேய்ய்ய்ய்........இந்த வேலைக்கு போனா.......என்னோட இருக்க முடியாதுன்னு வருத்த படுரியா.....?” இதுக்கு வருத்தப்பட என்னடா இருக்கு?” என்று கேட்டான் சரண்
“அப்பனா........நான் போனா உனக்கு கவலை இல்லையா?”
“அப்பனா..... எனக்காக இந்த வேலைக்கு போகாம இருக்க போறியா,?”” அடிவாங்குவ.... உங்கப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரயும்ல.....?”
“அதுக்காக என்னோட ஆசா பாசத்தலாம் வெருக்கனுமா நீ இல்லாம நான் எப்டிடா இருப்பன்...? அங்க போய்ட்டா நாம இப்ப இருக்குற மாதிரி பேச முடியாது பழக முடியாதுடா?”
“தங்கம் புரிஞ்சிக்கடா... எனக்காகடா....ஒரு வருஷம்தான் அதுக்குள்ள ஈசுக்கு ஒரு நல்ல மாப்புளையா பாத்து கல்யாணம் பண்ணி குடுத்துடுவண்டா... அப்புறம் கண்டிப்பா..... உன்கிட்ட வந்துடுவண்டா.....!!!!!!!! நாம அப்புறம் ஒன்னாவே இருக்கலாம் டா.... வேணா வெளிநாடு கூட போய்டுலாம்டா...எனக்காக இந்த வேலைக்கு நீ போடா..!!” என்று ஒரு வழியாக சம்மதிக்க வைத்தான்.
“அடுத்த வாரம் கழிச்சு சென்னைக்கு செர்டிபிகேட் காட்ட நாம் ரெண்டு பேரும்தான் போகணும் புரியிதா..? என்றுகூறி விட்டு இல்லத்திற்கு சென்றான் கார்த்தி.
அன்றிலிருந்து இரண்டாம் நாள் தடைகாலம் முடிந்து விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கடலுக்குள் சென்று கொண்டிருந்தன....புதிய படகுகள் எல்லாம் புதுமணப்பெண் போல அலங்கரிக்க பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு தயாராக இருந்தது.
ஐஸ் பெட்டிகள், உணவு பொருட்கள், டீசல் கேன்கள், உடைகள், வலைகள் என்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றி கொண்டு குறைந்தது பத்து பணியாளர்களையும் கூடுதலாக ராஜியும், சரணையும் ஏற்றி கொண்டு கரைக்கு விடை கொடுத்து மூவர்ண்ண கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டு கடலுக்குள் தன் முதல் பயணத்தை துவங்கியது ராஜின் புதிய படகு. கரையில் இருந்து தன் காதலனுக்கு கையசைத்து வழியனுப்பினான் கார்த்தி. கரை மறையும் வரை காதலன் நின்ற திசையை நோக்கி கொண்டிருந்த சரண் தன் செல்போனில் அலைவரிசை கிடைக்கும் வரை கார்த்தியிடம் பேசிகொண்டிருந்தான், இவனை போல மற்ற பணியாளர்களில் சிலரும் போனில் பேசிய படி இருந்தனர் சிலர் உறங்கி கொண்டு இருந்தனர்..
எங்கும் நீர்! எதிலும் நீர்! என்ற நீல கடலில் குறிப்பிட்ட தொலைவுகளில் பல விசைபடகுகள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். மீன்பிடி தடைகாலம் தற்பொழுதுதான் முடிவடைந்திருப்பதால் மத்திய பகுதிகளில் மீன்குஞ்சுகள் கூட்டம் கூடமாக நீந்தி கொண்டிருந்தை படகின் அடிபகுதியில் பொறுத்த பட்டிருக்கும் கருவிகள் காட்டி கொண்டிருந்தன.... பெரியமீன்கள் கூட்டம் எல்லாம் மன்னார் வளைகுடா பகுதியில்தான் இருக்கும் என்பதால் முதல் நாள் முழுவதும் வலையை கடலுக்குள் இறக்காமல் மன்னர் வளைகுடாவின் தொடக்க பகுதியான ஜெகதாபட்டினம் வரை விசை படகுகள் சென்றன. அங்கிருந்து வலையை இறக்கி தெற்கு நோக்கி பயணித்தால் பாடு அதிகமாக இருக்கும் என்பது அனைத்து மீனவர்களும் அறிந்த ஒன்று. அவ்வகையில் நம் படகிலிருந்தும் வலைகள் இறக்க பட்டு விட்டன....வலை முழுவதும் மீன் நிரம்ப இன்னும் மூன்று மணிநேரமாவது ஆகும் இதுதான் பணியாளர்களின் கடைசி ஒய்வு. வலை நிரம்பினால் மேலே இழுத்துவிட்டு அடுத்த வலையை இறக்க வேண்டும். பின் அகப்பட்ட மீன்களை தரம் பிரித்து குளிர்பெட்டிகளில் அடைத்து சேமிக்க வேண்டும் அதற்குள் அடுத்த வலை நிரம்பி விடும்.... உட்கார கூட நேரம் இருக்காது!
தடைகாலம் தற்பொழுதுதான் முடிந்ததால் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே மீன்கள் கிடைத்திருந்தன.. மூன்று நாட்கள் விடாமல் உழைத்ததால் அனைவரும் உடல் சோர்வடைந்து காணப்பட்டனர்.
சரணுக்கு கையெல்லாம் ஊறி இருந்தது உடல் உறக்கத்தையும், உள்ளம் கார்த்தியையும் தேடியது.. இப்பொழுது இறக்கியுள்ள வலைதான் கடைசி வலை. இதோடு கரைக்கு திரும்ப வேண்டியதுதான் என்ற கட்டத்தில் சிறிது ஒய்வு நேரம் கிடைத்தது சரணுக்கு. படகின் முனை பகுதிக்கு சென்று அமர்ந்து கொண்டான்.....
கண்கள் சற்று அயல முற்பட்டது ஆனால் மனமோ கார்த்தியை பார்க்க விரும்பியது சட்டென சட்டை பையில் கையை விட்டான். அங்கு ஒளிந்திருந்த செல்லுக்கு விடுதலை கொடுத்து அதில் சேமிக்க பட்டிருந்த கார்த்தியின் புகைப்படத்தை பார்த்தான்........ மனதுக்கு இதமாக இருந்தது..... உடனே அவனை கட்டி அணைக்க வேண்டும் போல இருந்தது. அந்த செல்போனையே கார்த்தியாக எண்ணி நெஞ்சில் அனைத்து கொண்டான் கண்கள் மூடியிருந்தும் ஓரங்களில் ஈரம் கசிந்ததது. கரைக்கு திரும்பியதும் கார்த்தியுடன் சேர்ந்து சென்னை செல்லயிருப்பதை எண்ணி மனதிற்குள் சுகபட்டான். ஆனால் இந்த சுகத்தை மேலும் அனுபவிக்க விடாமல் “கடார்” என்று படகின் மீது எதோ மோதும் சத்தம் கேட்டது....
பாறை ஏதும் மோதி விட்டதா.... என்று எண்ணி திடுக்கிட்டு எழுந்த பொழுது சக ஊழியர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி கொண்டு நிற்பது தெரிந்தது..
அதிர்ச்சியுடன் அவர்கள் நோக்கிய திசை நோக்கும் பொழுது அங்கு, இலங்கை கடற்படை ரோந்து படகுகள் இரண்டு அவர்களை சுற்றி வளைத்திருக்க ஒரு படகு இவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தது. சுற்றி வளைத்திருக்கும் படகுகளில் இருக்கும் சிங்கள வீரர்களின் கரங்களில் வீற்றிருந்த துப்பாக்கிகள் துப்பிய மேலும் சில குண்டுகள் படகில்  மீண்டுமொருமுறை “கடார் “கடார் என்று ஓசையுடன் மோதிய இடத்தில் இருந்த தகரம் பொத்து கொண்டு கடல்நீர் படகினுள் குடியேற துவங்கியது!!. அதை பார்த்த ராஜின் கண்நீர் வெளியேற துவங்கியது.!! அதற்குள் அந்த படகு நெருங்கி வர அதிலிருந்த ஒரு சிங்கள வீரன் ஒருவன் சிங்களத்தில் எதோ கத்தும் குரலில் கூறினான்
ஓயாட்ட சிறிலங்கன் ஆண்டுவ போட்டிங் லைசன்ஸ் தியனுவாத? – (உங்களிடம் இலங்கை எல்லைக்குள் படகோட்ட அனுமதிப்பத்திரம் உள்ளதா?)
ஒயாட்ட ஆதார பலாபத்திர தியனுவாத? –( உங்களிடம் வாகனத்திற்கான வரிப்பத்திரம் உள்ளதா?)
பின் தமிழில் பேச துவங்கினான்.
 “உங்கட ஆளுகளுக்கு எத்தன தரம் சொன்னாலும் விளங்காதா..?” நீங்க அனைத்து பேரும் இந்திய எல்லைய தாண்டி இலங்கை எல்லைக்குள்ள ஊடாயிட்டிங்க. உங்கட அனைவரையும் இலங்கையின்ட கடற்காவல் படை கைது செய்யிது மரியாதையா சரணடயிங்க இல்லையிண்டா சுட்டு பிடிக்க வேண்டி வரும்”.
என்று அந்த ஆர்மிக்காரன் சொல்லி முடிக்கும் பொழுது, அனைவரும் பரிதவிக்கும் வேலையில் சற்றும் யோசிக்காமல் சரண் மட்டும் படகின் ஓட்டுனர் அறைக்குள் நொடி பொழுதில் நுழைந்து அங்கு எதையோ சோதித்து விட்டு திரும்ப வெளியில் வரும்பொழுது கடற்படை வீரர்கள் அனைவரும் இந்த படகிற்கு தாவி இருந்தனர். மிகுந்த எரிச்சலுடன் அதிலொருவன் சரணை ஓங்கி ஒரு அறை விட்டான்.
“எங்கேயடா போன?”
“எங்க ராடார் ல இன்னும் அஞ்சு நாட்டிகல் மைல் தாண்டுனாதான் இலங்கை எல்லை இருக்குனு சொல்லுது நீங்க எங்கள அரெஸ்ட் பண்றது தப்பு.
 என்று கூறி முடிப்பதற்குள்” அருகில் இருந்த சிங்களவன் ஒருவன் “என்னடா அதிகமா பேசுற? நெருங்கி வந்துட்டிங்கல்ல? அப்புறமென்ன? என்று பேசிக்கொண்டே தன் கையில் இருந்த துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்த அதிலிருந்து வெளிப்பட்ட தோட்டா சிறிதும் ஈவு இறக்கம் இன்றி சரணின் நெஞ்சை துளைத்து கொண்டு வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தவனை தாங்க முற்பட்ட ராஜின் தோளில் ஒரு குண்டு சென்று பதுங்கி கொண்டது. இதற்குள் குதிகால் நனையும் அளவிற்கு படகில் நீர் புகுந்ததால் மாண்டு போனதாக கருதிய சரணையும் ராஜையும் மட்டும் விட்டு விட்டு ஏனைய மீனவர்களை கைது செய்து ஏற்றி கொண்டு, நான்கு நாட்களாக உயிரை வெறுத்து பிடித்த மீன்களை பெட்டிகளோடு தூக்கி கொண்டு, வலைகளை அறுத்து சின்னாபின்னமாக்கி விட்டு சிங்கள வீரர்கள் சென்று விட்டனர். இதே நிகழ்ச்சி அங்கு மேலும் சில படகுகளுக்கும் அரங்கேறியது.
சிறிது நேரத்தில் வலியால் துடித்த படி கண்விழித்த ராஜூ இடுப்பளவு தண்ணீர் படகில் இருப்பதை உணர்ந்தான் பின் அருகில் பிணமாக சரண் செத்து மிதப்பது கண்டு அதிர்ந்தான்,அழுதான். இன்னும் சிறிது நேரத்தில் கடலில் மூழ்கி இறக்க போகிறோம் என்ற வேதனையை விட சரணின் மரணம்தான் அவனை வாட்டியது. தண்ணீர் தோளளவு வரும்பொழுது “கடல் புறா காரைக்கால் ” என்று எழுத பட்டிருந்த படகு அவரகளை நெருங்கியது. நிலைமையை உணர்ந்த காரைக்கால் மீனவர்கள் ராஜுவையும் சரணின் உயிரற்ற உடலையும் ஏற்றி கொண்டு நாகை நோக்கி பயணமானார்கள்.
ஆசையாசையாய் பார்த்து பார்த்து கட்டிய புதுபடகு கடலில் மூழ்கிய காட்சிதான் ராஜுவிற்கு கடைசியாக தெரிந்தது. பின் அதிக ரத்த போக்கால் மயக்க நிலையை அடைந்து விட்டான்.
மறுநாள் காலை எப்பொழுது தான் ஆசை நாயகன் வருவான், வந்த உடன் அவனை கூட்டி கொண்டு சென்னை போகும் போது என்ன என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டிருந்த கார்த்தி செய்தி தொலைக்காட்சிகள் அனைத்தும் “சற்று முன் : இலங்கை கடற்படை அட்டூழியம்; நாகை, காரைக்கால்,ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் சுட்டு கொலை, ஐம்பதுக்கும் அதிகமானோர் கைது, வலைகள், படகுகள் சூறையாடல் என்ற செய்தியை கண்டு அதிர்ந்தான். பின் அவசர அவசரமாக  வெளியேறிய பொழுது அதுவரை தூறி கொண்டிருந்த வானம் அடித்து பெய்ய துவங்கியது. மழையில் நனைந்து கொண்டே வண்டியை செலுத்தியவனுக்கு இதயத்தின் ஓசை இடி போல காதுக்கு கேட்டது, பழைய பேருந்து நிலையத்தை தாண்டும் பொழுது பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் தென்பட்டது
“ஐயோ நெல்லுகட மகமாயி என் தங்கத்துக்கு ஒன்னும் ஆயிருக்க கூடாது அவன் நல்ல படியா வந்திருக்கணும், “ என்று பிடித்த தெய்வம் பிடிக்காத தெய்வம் என அனைத்து தெய்வங்களுக்கும் கோரிக்கை விடுத்த படி துறை முகத்தை அடைந்தான். நகரே பரபரப்பாக இருந்தது. துறைமுக அலுவலக வளாகத்தில் கூட்டம் கும்மி அடித்தது உயிரை கையில் பிடித்து கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தான்.
அங்கு தலைவிரிகோலமாய் அழுது கொண்டிருந்த ஈஸ்வரி, கார்த்தியை பார்த்ததும் “அண்ணே! அனாதயாயிட்டன்னே!!! அண்ணன் நம்மாள விட்டு போய்ட்டுன்னே....!! என்று ஓடி வந்து கார்த்தியை கட்டி பிடித்து கொண்டு அழுதாள்.
அதிர்ந்து நின்ற கார்த்திக்கு அழுகை கூட வரவில்லை!! பின் போய்டியாடா? என்ன விட்டு போய்ட்டியாடா......? கேட்டமாதிரியே போய்ட்டியாடா? இனிமேல் நான் என்னடா பண்ண போறன்? என்று அங்கு கிடந்த கல்லும் கரையும் படி கண்ணீரை கொட்டி தீர்த்தான். நம்மை விட அதிக நீரை மண்ணுக்கு தருகிறான் என்று வானம் நினைத்ததோ என்னவென்று தெரியவில்லை பெய்த மழை கூட நின்று விட்டது.
வெட்டுக்கத்தி போல கடலுக்குள் சென்று இப்பொழுது கட்டுத்துணியால் சுற்ற பட்டிருக்கும் சரணின் முகத்தை மண் மூடும் வரை கண் மூடாமல் பார்த்து கதறி விட்டு தன் உயிரை உதறி விடும் நோக்கத்தில் கடைசியாக ஈஸ்வரியை பார்க்க காதலன் வாழ்ந்த கனவு மாளிகை நோக்கி சென்றான். இவனை கண்டதும் ஈஸ்வரி மீண்டும் ஓடி வந்து கட்டியணைத்து அழுதாள்.
“கார்த்திண்ணே...... எனக்கு இனிமே யாருண்ணே இருக்கா? “ எனக்கு ஒரு பாசாலம் வாங்கி குடுண்ணே நானும் செத்து போயிடுறன்
இந்த வார்த்தை கார்த்தியின் காதுகளில் சுடுநீரை ஊற்றுவது போல இருந்தது. இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு தானே அவ்வளவு கஷ்ட்டபட்டான் இப்ப இவள நிராதரவா விட்டுட்டா என் சரண் என்ன பத்தி என்ன நெனைப்பான். என்று மனதிற்குள் நினைத்தவன் ஈஸ்வரியை வண்டியில் ஏற்றி கொண்டு வீடு நோக்கி விரைந்தான். போகிற வழியில் அவுரிதிடலில் இலங்கை கடற்படைக்கு எதிராக பிரமாண்ட உண்ணாவிரத போராட்டம் துவங்க பட்டிருந்தது. அங்கு எதிர்பட்ட அவனது தந்தையிடம் ஈஸ்வரியை ஒப்படைத்து
“இன்னைலருந்து உங்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள். வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் பண்ண வேண்டியது என் பொறுப்பு “
என்று கூறி விட்டு உண்ணாவிரத பந்தலுக்கு சென்று அங்கு வைக்க பட்டிருந்த ஒலி வாங்கியில் இலங்கை ராணுவத்தையும், இந்திய அரசாங்கத்த்யும் கண்டித்து பேச துவங்கினான். சரணை இழந்த வெறியும், அப்பாவி மீனவர்கள் மீது இருக்கும் பரிதாபமும், காதலனை பறித்த கயவர்களின் மீதுள்ள கோபமும் வீரியம் மிகுந்த சொற்களாய் வெளிபட்டது. அவனது பேச்சு இன்று காற்றில் கரையலாம்; ஆனால் அது ஆதிக்கத்தின் கதவை உடைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. மணிப்பூருக்கு ஒரு இர்ரோம் ஷர்மிளாவை போல, தண்டகாரண்யத்துக்கு ஒரு மேத்தா பட்கர் போல, இடிந்த கரைக்கு ஒரு உதயகுமார் போல நசுக்கப்படும் மீனவர்களுக்கு சரண் ஆசை பட்டது போல ஒரு கார்த்தி கிடைத்து விட்டான். வலிகள் விதைக்கும் விதையில்தானே போராளிகள் முளைக்கிறார்கள். ஏன் அது காதல் வலியாக இருக்ககூடாதா?

                   -நிறைந்தது


























































































1 கருத்து:

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..